நமது "குடி அரசு'ப் பத்திரிகை ஆரம்பித்து ஆறு மாதங்களாகின்றது. அது முக்கியமாய் நமது நாட்டுக்கு சுயராஜ்யமாகிய ‘மகாத்மா'வின் நிர்மாணத் திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வரவும், தமிழர்களாகிய தீண்டாதார் முதலியோருடைய முன்னேற்றத்துக்கென்று உழைக்கவுமே ஏற்படுத்தப்பட்டது. இத்தொண்டில், ‘குடி அரசு' சிறிதுங் கள்ளங் கபடமின்றி யாருடைய விருப்பு வெறுப்பையும் பொருட்படுத்தாது, தனது ‘ஆத்மா'வையே படம் பிடித்தாற்போல் தைரியமாய் வெளிப்படுத்தி தொண்டு செய்து வந்திருக்கின்றது வரவும் உத்தேசித்திருக்கின்றது.

‘குடி அரசு' குறிப்பிட்ட கருத்தைக் கொண்ட பிரச்சாரப் பத்திரிகையே அல்லாமல் வெறும் வர்த்தமானப் பத்திரிகை அல்லவாதலால், வியாபார முறையையோ பொருள் சம்பாதிப்பதையோ தனது சுய வாழ்வுக்கு ஓர் தொழிலாகக் கருதியோ, சுய நலத்திற்காக கீர்த்தி பெற வேண்டுமென்பதையோ ஆதாரமாய்க் கொள்ளாமலும், வாசகர்களுக்கு போலி ஊக்கமும், பொய்யான உற்சாகமும் உண்டாகும்படியாக வீணாய் கண்ட கண்ட விஷயங்களையெல்லாம் கூலிக்கு எழுதச் செய்வித்தும், குறிப்பிட்ட அபிப்பிராயமில்லாமல் சமயத்திற்கேற்றார்போல் ஜனங்களின் மனதைக் கலங்கச் செய்து வருவதுமான பொறுப்பில்லாத ஓர் வேடிக்கைப் பத்திரிகையுமன்று.

உண்மையில், ‘குடி அரசு'க்கு எந்தப் பார்ப்பனரிடத்திலும், குரோதமோ வெறுப்போ கிடையாதென்பதை உறுதியாகச் சொல்லுவோம். ஆனால், பார்ப்பான் உயர்ந்தவன் என எண்ணிக் கொண்டிருப்பதிலும், மற்றவர்கள் தீண்டத்தகாதவர்கள், பார்க்கக் கூடாதவர்கள், ‘இழிவான' மிருக உரிமைக்கும் பாத்திரமில்லாதவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணத்தினிடத்திலும், தங்கள் வகுப்பார்தான் முன்னணியிலிருக்க வேண்டும்; மேன்மையுடன் பிழைக்க வேண்டும்; மற்றவர்கள் என்றென்றைக்கும் தங்களுக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டும், அதற்காக மற்றவர்களை உபயோகித்துக் கொண்டும் செய்யும் கொடுமையான சூழ்ச்சிகளிடத்திலுந்தான், ‘குடி அரசு'க்கு வெறுப்பு இருப்பதுடன், அதை அடியோடே களைந்தெறிய வேண்டுமென்று ஆவல் கொண்டு உழைத்து வருகிறது.

பார்ப்பனர்களின் தியாகமென்று சொல்லப்படுவதும், பார்ப்பனரல்லாதாரின் கெடுதிக்காகவே செய்யப்படுவதாய்க் காணப்படுகிறது. இந்நிலையில், தேசத்தின் பெரிய சமூகத்தாரான, பார்ப்பனரல்லாதாரைப் பலி கொடுத்து பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகளாய் நடக்க வேண்டும் என்கிற எண்ணம் கொஞ்சமும் தோன்ற மாட்டேனென்கிறது. அல்லாமல், இவற்றைப் பற்றிய கவலை எடுத்துக் கொள்ளாமல் எப்படியோ போகட்டும் என விட்டுவிடுவதற்கும் மனம் ஒருப்படுவதில்லை.

இதை ஆரம்பத்திலேயே ‘குடி அரசு' முதலாவது இதழ் தலையங்கத்தில் ‘மக்களுக்குள் தன் மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும்; மக்கள் அனைவரும் அன்பின் மயமாதல் வேண்டும்; உயர்வு, தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்துவரும் சாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும்; சமயச் சண்டைகள் ஒழிய வேண்டும். ஆனது பற்றியே, ‘நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற் சென்றிடித்தற் பொருட்டு' எனும் தெய்வப் புலமைத் திருவள்ளுவரின் வாக்கைக் கடைப்பிடித்து, ‘நண்பரேயாயினுமாகுக, அவர்தம் சொல்லும், செயலும் தேச விடுதலைக்குக் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்தொதுக்கப்படும்' என நமது அபிப்பிராயத்தைத் தீர்க்கமாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.

பெரும்பாலும், பார்ப்பனர், செல்வந்தர், முதலாளிகள், வைதீகர் முதலியோருடைய குற்றங்களை எடுத்துச் சொல்லி வருவதால், அவர்கள் நமது பத்திரிகையை ஆதரிப்பார்களென்று எதிர்பார்ப்பது, பயித்தியக்காரத்தனமாகவே முடியும். ஆதலால், நமது பத்திரிகையை ஆதரிக்க வேண்டியது பார்ப்பனரல்லாதார், ஏழைகள், தொழிலாளிகள், தீண்டாதாரெனப்படுவோர் முதலிய ஒடுக்கப்பட்ட சமூகத்தாருக்கு ஏற்பட்ட முக்கிய கடனாகும். அந்தப்படி இக்கூட்டத்தார், நமது ‘குடி அரசு'வை ஆதரிக்கவில்லையானால், ‘குடி அரசு' தானாகவே மறைந்து போக வேண்டியதுதான் அதனுடைய கடமையே அல்லாமல், முன் சொன்னது போல் சுய நலம் முதலியவைகளுக்கென்று இப்பத்திரிகையை நடத்துவதில் பிரயோஜனமில்லை.

ஏனெனில், ‘குடி அரசு'வானது தன்னுழைப்பினாலும், தனது தியாகத்தினாலும் மக்கள், சிறப்பாய் பார்ப்பனரல்லாதார், தீண்டாதார் முதலியோர் விடுதலை பெற்று சுயமதிப்புடன் வாழ்ந்து தேசம் உண்மையான சுயராஜ்யமடைய வேண்டுமானால், தாழ்த்தப்பட்டவர்களெல்லாம் சம நிலைக்கு வர வேண்டுமானால் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இன்றியமையாததெனக் கருதி, அதை எல்லா வகுப்பாரும் அடைய வேண்டுமென எதிர்பார்க்கிறதே ஒழிய, பொது மக்கள் வாழ்வால் ‘குடி அரசு' வாழ வேண்டுமென்று அது கருதவேயில்லை. ஆதலால், ‘குடி அரசு'வின் வாழ்வைக் கோருகிற ஒவ்வொருவரும் தங்களாலியன்ற அளவு போதிய சந்தாதாரர்களைச் சேர்த்துக் கொடுத்தும், மற்றும் தங்களால் கூடிய உதவி செய்தும் இதனை ஆதரிக்க வேண்டுகிறோம்.

(‘குடி அரசு' இதழின் தலையங்கம் 1.11.1925)