பேரன்புமிக்கத் தலைவர் அவர்களே! நண்பர் ஜீவரத்தினம் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே!

இந்த மீன் பிடிப்போர்களின் மாநாட்டில் நானும் கலந்து கொள்ள வேண்டும் என்று என்னை அழைத்து, வாய்ப்பு அளித்த மாநாட்டினர்களுக்கும், வரவேற்புகள் அளித்த ஊராட்சி மன்றத்தினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். மீனவர்களுக்கு உள்ள குறைபாடுகள் பற்றியும், அரசாங்கம் செய்துள்ள நன்மைகள் பற்றியும், தலைவர் அவர்களும் நண்பர் ஜீவரத்தினம் அவர்களும் நன்கு எடுத்து விளக்கினார்கள்.

periyar 34உங்கள் குறைபாடுகள் எல்லாம் நீங்கவேண்டும் என்ற ஆசை எனக்கு மிகவும் இருக்கின்றது. இந்தக் குறைபாடுகளுக்கு எல்லாம் இன்றைய நமது காமாசரர் அரசாங்கம் சரிவரப் பரிகாரம் செய்யும் என்ற திடமான நம்பிக்கையும் எனக்கு உண்டு. நாம் அரசாங்கத்தினரிடத்தில் விசுவாசமாக (நம்பிக்கையுடன்) இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட மாநாடுகள் மூலமே தங்கள் குறைபாடுகளை அரசாங்கத்துக்கு எடுத்துக்காட்டலாம். இப்படிச் ஜாதியின் பேரால் மாநாடுகள் கூட்டலாமா என்பது ஒரு பெரிய பிரச்சினை. நண்பர் ஜீவரத்தினம் அவர்கள் காலையில் என்னிடம் பேசிக் கொண்டு இருக்கும்போது இது ஜாதி பேரால் கூடும் மாநாடு அல்ல. மீன் பிடிக்கும் தொழிலைக் கொண்ட பல்வேறு வகுப்பாருக்கும் பொதுவானதுதான் என்றார். ஜாதியின் பேரால் ஒரு ஸ்தாபனம் (அமைப்பு) ஏற்படுவது கூடத் தப்பு அல்ல. ஜாதியானது நமது சமுதாயத்துக்கே கேடானது. குஷ்டரோகம் (தொழுநோய்) போன்றது. ஜாதிப் பேரால் உள்ள கொடுமைகளை எல்லாம் அனுபவிக்கின்ற நாம், ஜாதி மாநாடு கூட்டித்தானே அவைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல முடியும்? இப்படிக் கூடாது என்பவர்கள் ஜாதியின் பேரால் பிழைப்பவர்களே ஆவார்கள்.

நம்முடைய கொடுமைகளை எல்லாம் - கொடுமைகளை அனுபவிக்கும் ஜாதியர்களாகிய நாம் மாநாடுகள் கூட்டித்தான் சிந்தித்து அரசாங்கத்துக்கு உணர்த்த முடியும். இப்படிப்பட்ட ஜாதி மாநாடு கூடாது என்பது எல்லாம் சுத்தப் புரட்டு. ஒவ்வொரு ஜாதியாரும் மாநாடு கூட்டித் தங்கள் குறைபாடுகளை எல்லாம் எடுத்து அரசாங்கத்துக்குச் சொல்ல வேண்டும்.

என்னைச் ஜாதி மாநாடுகளுக்குக் கூப்பிட்டால் போவேன். கடைசியில் பேசிவிட்டு, "ஜாதி ஒழிய வேண்டும். ஜாதியின் காரணமாக ஒருவன் உயர்ந்தவன், ஒருவன் தாழ்ந்தவன் என்ற கொடுமைகள் ஒழியவேண்டும்" என்று கூறுவேன்.

தொழிலின் பேராலும் மாநாடுகள் நடத்தத் தான் வேண்டும். இது மீனவர்கள் மாநாடு. இந்தத் தொழிலையே விட்டுவிட நீங்கள் தீர்மானம் போட வேண்டும். நீங்களாவது பரவாயில்லை. கக்கூஸ்காரன்கள் (மலம் எடுப்பவர்) எல்லாம் கூடி மாநாடு கூட்டினால், உலகம் உள்ள வரையில் தங்கள் இனமே கக்கூஸ் எடுத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்றுப் பேச முடியுமா?

நீங்கள் வசதிகள் கேட்பது ஒருபுறம் இருந்தாலும், உங்கள் பிள்ளைகளை எல்லாம் உங்கள் தொழிலிலேயே பழக்காமல் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். வேறு தொழிலுக்கு எல்லாம் அனுப்ப வேண்டும்.

இப்படிப்பட்ட கஷ்டமான தொழிலைச் செய்கின்றவர்களுக்கு வீடு, வாசல், படிப்பு முதலிய வசதிகள் இல்லாததனால் அவர்களுக்கும் அவர்களின் தொழிலுக்கும் அந்தஸ்து (மேம்பாடு) இல்லை.

"செய்யும் தொழில்கள் எல்லாம் நெய்யும் தொழிலுக்கு நேராமோ" என்பான். இது சும்மா வார்த்தை அலங்காரம்தான். கை நெசவுக்காரன் உற்பத்தி செய்யும் சாமானுக்கும் மரியாதை இல்லை. தலைவரைப் போன்றவர்களும், நம்மைப் போன்றவர்களும் "வாங்குங்கள்! வாங்குங்கள்!" என்று பொது மக்களிடத்தில் சிபாரிசு செய்யணும். அரசாங்கமும் கைத்தறித் துணி வாங்குபவர்களுக்கு ரிபேட் (கழிவு) கொடுக்கணும். அப்போதுதான், ஏதோ ஓர் அளவு வாங்கப்படுகின்றது. இந்தத் தொழில் செய்கின்றவர்கள் குடும்பத்தோடு பிள்ளைக் குட்டிகள், மனைவி, கிழடு, கிண்டுகள் அத்தனையும் சேர்ந்துக் காலம் நேரம் என்று பார்க்காமலும் வேலை செய்தாலும்கூட அதன்மூலம் வருகின்ற கூலி வயிற்றுக்கே போதுமானதாக இருக்கின்றது இல்லை. கஷ்டப்படுகின்றார்கள்.

இந்த நிலைகளை எல்லாம் நான் பார்த்துப் பார்த்துத்தான், அவர்கள் கூட்டத்தில் பேசும்போது "நீங்கள் இந்தத் தொழிலைக் கட்டிக்கொண்டு மாரடிப்பது போதும். உங்கள் சந்ததிகளையாவது இதற்கு அனுப்பாதீர்கள், வேறு தொழிலுக்கு அனுப்புங்கள்" என்று கூறுவது வழக்கம்.

அரசாங்கம் இவர்கள் நலனில் அக்கறை காட்டுவதாக இருந்தால் இந்தத் தொழிலை ஒழித்துவிட்டு இவர்களுக்கு எல்லாம் வேறு தொழில்கள் கொடுக்க வகை செய்ய வேண்டும். அல்லது இவர்கள் இன்ன இன்ன இரகங்கள் நெசவு செய்கின்றார்கள். இவைகளை மில்களில் (ஆலைகளில்) நெய்யக் கூடாது என்றாவது உத்தரவு போட வேண்டும்.

தொழிலாளர்களுக்கு நாணயம் மிக முக்கியம். தொழிலாளர்கள் முன்னுக்கு வரக் கூலி உயர்வு மட்டும் பயன் இல்லை. இலாபத்தில் பங்கு வரவேண்டும். காமராசர் ஆட்சியானது தொழிலாளர்களுக்கு ஆற்றிவரும் நன்மைகள் அளவற்றவை.

-------------------------------------

18.05.1961 அன்று கொரடாச்சேரியில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு -"விடுதலை", 11.06.1961
தமிழ் ஓவியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)