1926 முதல் கடவுள்களையெல்லாம் இழிவுபடுத்தி வருகின்றேன். கடவுள் உருவங்ளை உடைத்திருக்கின்றேன். படங்களைக் கொளுத்தி இருக்கின்றேன். அப்படிச் செய்த நான் இன்னும் 93 வயதாகியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றேனே! அட முட்டாள்களா! இதைப் பார்த்தாவது கடவுள் இல்லை என்பதை உணர வேண்டாமா?

மனிதனை மடையனாக்கும் சாதனங்கள்தான் இந்தக் கோயில்கள், கடவுள்கள், உற்சவங்கள் யாவும், மனிதனை அறிவாளிகளாக்க இவைகளையெல்லாம் ஒழிக்க வேண்டுமென்கின்றோம்.

இது மதப்பிரச்சாரமல்ல; கடவுள் பிரச்சார மல்ல. கதாகாலட்சேபமல்ல; இவைகளுக்கு மாறான பிரச்சாரமாகும். இது உங்களுக்கு வெறுப்பாக இருக் கும். இதற்காக நீங்கள் எங்களை அடிக்கக்கூடத் தோன்றும். காரணம், வெகுகாலமாக அறிவற்று, மானமற்று இழிவினை ஏற்றுக் கொண்டிருக்கிற மக்களிடையே அவர்களின் மானமற்ற தன்மையையும், இழிவையும் எடுத்துச் சொல்லி அவர்களை அறிவு பெறும்படியாகச் செய்யும் மனித சமுதாயத் தொண்டினைச் செய்து வருகின்றோம்.

நாங்கள் கடவுள் அவதாரம், கடவுள் புத்திரர், கடவுளின் தூதர்; நாங்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று சொல்லவில்லை. நாங்கள் சொல்கிறோம்; உங்கள் அறிவைக் கொண்டு சிந்தித்து ஏற்கக் கூடியதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

கடவுளையும், மதத்தையும் குறை சொன்னால் மனம் புண்படுகிறது என்கின்றான். இந்தக் கடவுளும், மதமும்தானே எங்களைச் சூத்திரர்களாக, பார்ப் பானுக்கு வைப்பாட்டி மக்களாக ஆக்கி வைத்திருக் கிறது. இது எங்கள் மனத்தைப் புண்படுத்துமா? இல்லையா? இந்த இழிவை நீக்கிக் கொள்ள முயற்சிப்பது எப்படிக் குற்றமாகும்? நாம் கடவுளைக் குறை சொன்னால் பார்ப்பான் மட்டுமல்ல, அவனுடைய வைப்பாட்டி மகன் என்று நினைத்துக் கொண்டு நெற்றியிலே சாம்பலையும், மண்ணையும் பூசிக் கொண்டி ருக்கின்றானே, அவன்தான் நம்முடன் சண்டைக்கு வருகின்றான்!

நான் ஒரு இந்து என்பதை ஒப்புக் கொண்டால் சூத்திரன் என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். கடவுளை ஒப்புக் கொண்டால் (கிருஷ்ணன் கீதையில் நான்தான் 4 ஜாதியாக பிரித்தேன்) சூத்திரன் 4-ஆவது ஜாதி என்பதை நான் ஒப்புக் கொண்டுதானே ஆகவேண்டும்? இந்தக் கீதையையும், கிருஷ்ணனையும் செருப்பாலடிக்காவிட்டால் நான் சூத்திரன் தானே? இந்தக் கடவுளையும், மதத்தையும் நம் இழிவிற்கு ஆதாரமான மற்றவைகளையும் ஒழிக்காத வரை சூத்திரன்தானே!

இந்துவும், முஸ்லிமும், கிறிஸ்தவர் களும் தங்கள் மதத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் பலாத்காரத்தில்தான் ஈடுபட்டார்கள். அறிவுப் பிரச்சாரம் செய்த புத்தர் களையும் சமணர்களையும் கொலை செய்தார்கள், கழுவேற்றி னார்கள் வீடுகளுக்குத் தீயிட்டார்கள். இன்னும் எத் தனையோ கொடுமைகளைச் செய்து அவர்களை யெல்லாம் அழித்தார்கள். இப்போது மக்களிடம் கொஞ்சம் அறிவு வளர்ந்திருக்கிறது. ஆதலால் நாம் மிஞ்சி இருக்கிறோம். இல்லாவிட்டால் நம்மையும் ஒழித்திருப்பார்கள்.

பொய் இல்லாமல் மனிதத் தன்மைக்கு மேம்பட்ட சக்தியில்லாத மதம் எதுவுமே கிடையாது. மதம் என்றால் அதற்கொரு கடவுள் இருந்தாக வேண்டும். மனிதத் தன்மைக்கு மேம்பட்ட சக்தியுடையவன் இருந்தாக வேண்டும்.

இதுவரை இந்த அரசாங்கங்கள் யாவும் பார்ப்பான் சார்புடைய அரசாங்கமாக கடவுள், மத, சாஸ்திரங் களைக் காப்பாற்றக் கூடிய அரசாங்கமாக இருந்த தால் நமது கருத்துகள் பரவ முடியாமல் போய்விட்டது. இன்றைய ஆட்சி பகுத்தறிவுக் கொள்கை கொண்ட வர்களாட்சி யானதால் நமது கருத்துகள் தீவிரமாகப் பரவுகின்றன. தற்போது உலகம் வேகமாக மாறிக் கொண்டு போகிறது. எங்குப் போகுமென்று சொல்ல முடியாது. அதற்கேற்ப மனிதன் மாறியாக வேண்டும்.

கடவுள் வந்த பின்தான் மனிதன் மடையனானான். கடவுள் கதைகளைப் படித்ததினால், நம்பியதினால் முட்டாள் ஆனான், சூத்திரன் ஆனான், 4-ஆம் சாதி 5-ஆம் சாதி ஆனான். ஆனதனால் மனிதனை மனித னாக்க வேண்டுமானால், அவனை எந்தச் சாதனம் இழிவுபடுத்திற்றோ, அதனை ஒழிக்கணும். மனிதனுக்கு அறிவிருக்கிறது. என்றாலும் அவன் மனதில் கடவுள் எண்ணத்தைப் புகுத்தி விட்டதால் மடைய னாகி விட்டான். மதம் மனிதனை அறிவைக் கொண்டு சிந்திக்க விடாமல் தடுத்து விட்டது. நம் சூத்திரத் தன்மைக்கு, இழிவிற்குக் காரணம் என்ன வென்றால், கடவுள், மதம், சாஸ்திரம் என்கின்றான். இவைகளை ஒழிக்காமல் நம் இழிவை ஒழிக்க முடியாது என்பதால் தான் இவற்றை ஒழிக்கப் பாடு படுகின்றோமே தவிர வேறு எதனாலும் அல்ல என எடுத்துரைத்தார்.

-----------------------------------------

19, 20, 22, 24 25.6.1971 ஆகிய நாள்களில் எஸ்.ஆடுதுறை, விருத்தாசலம், மேட்டுப்பாளையம், அவினாசி, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய ஊர்களில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை (விடுதலை, 3.7.1971).

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா