சபர்மதி ஆச்சிரமத்தில் மகாத்மா காந்தி முன்னிலையில் சுயராஜ்யக்கக்ஷிக்கும் பரஸ்பர ஒத்துழைப்புக் கக்ஷிக்கும் ராஜி ஏற்பட்டுவிட்டதாம். ஆனால், மகாத்மா அதில் கலந்து கொள்ளவே கிடையாது. மகாத்மா காந்திக்கு முன்னிலையில் சபர்மதி ஆச்சிரமத்தில் ராஜியேற்பட்டுவிட்டதென்று சொன்னால், அதில் ஒரு பெருமையும், பொதுஜனங்களுக்கு ஒரு நம்பிக்கையும் ஏற்பட்டுவிடுமென்ற எண்ணத்தினால் செய்த சூழ்ச்சியேயல்லாமல் வேறல்ல. ராஜியால் விளைந்த பலன், நாளுக்கு நாள் நகர்ந்துதடி அம்மானே என்றபடி சுயராஜ்யக் கக்ஷியார் உத்தியோகம் ஒப்புக்கொள்ளுவதுதான். அதாவது,

“மந்திரிகள் தங்களுடைய கடமைகளைச் சரியாக நடத்துவதற்கு அவசியமான அதிகாரம், பொறுப்பு, சுயமாகச் செய்வதற்கு சக்தி முதலியவை கொடுக்கப்பட்டால் கவர்ன்மெண்ட் போதுமான அளவு இணங்கிவிட்டதாகக் கருதி சுயராஜ்யக் கக்ஷியார் மந்திரி பதவிகளை ஒப்புக்கொள்ளலாம். மந்திரி பதவிக்கு அவ்வித பொறுப்பும் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்களா இல்லையா என்கிற விஷயம் அந்தந்த மாகாண சட்டசபை மெம்பர்களே தீர்மானித்துக் கொள்ளவேண்டியது. திரு. ஜெயகரும் திரு. நேருவும் இதை ஊர்ஜிதம் செய்ய வேண்டியது.”

ஒப்பம்:- சரோஜனி நாயுடு, மோதிலால் நேரு, லஜபதிராய்,எம்.ஆர். ஜெயகர், என்.சி. கெல்கர், பி.எஸ். ஆனே, டி.வி. கோகலே, ஓகலே.

முதலில் கவர்ன்மெண்டார் இணங்கி வந்தால் உத்தியோகம் ஒப்புக்கொள்வது என்று காங்கிரஸில் தீர்மானித்தார்கள். சர்க்கார் இணங்கி வரவில்லை; சட்டசபையை விட்டு வெளிவந்தாய் விட்டது. இப்போது மந்திரிகளுக்கு அதிகாரம் கொடுத்தால் ஒப்புக்கொள்ளுவது என்று தீர்மானித்தாய் விட்டது.

குடி அரசு - செய்தி விளக்கம் - 25.04.1926