“கபடமற்ற பிஞ்சுகளைக் காவு கொண்ட காமுகனைச் சுட்டு, தமிழ் மண்ணில் கொடுஞ்செயல் தொடர்வதை நிறுத்தவும், தொடங்க நினைப்பவர்களை நடுங்கிடவும் செய்த தமிழக காவல் துறைக்கு – குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நன்றி''

மேற்கூறிய வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள், தமிழகத்தின் பல்வேறு இடங்களில், வெவ்வேறு பெயர்களில் வெளியிடப்பட்டிருந்தன. அக்டோபர் 29, 2010 அன்று, கோவையில் இரண்டு குழந்தைகள் கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இவர்களை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மோகன்ராஜ் என்பவரை, கோவை காவல் துறையினர் நவம்பர் 9, 2010 அன்று, போலி மோதலில் கொன்றனர். இதை ஆதரித்துதான் இத்தகைய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இச்சுவரொட்டிகளை காவல் துறையினரே வெவ்வேறு பெயர்களில்

வெளியிட்டு, சட்டத்திற்கு முற்றிலும் புறம்பான இக்கொலையை நியாயப்படுத்தி இருந்தனர். பொது மக்களும் இக்கொலையை வெளிப்படையாக வரவேற்று, இனிப்பு வழங்கியிருப்பது, கடும் அதிர்ச்சியை அளிக்கிறது.

"குழந்தையை கடத்திக் கொன்றவர்களை, உடனே தூக்கில் போட வேண்டும்' என்று புகழ் பெற்ற நடிகர் ஒருவர் ஆவேசப்பட்டிருந்தார். இதுபோன்ற கொடூரமான கொலைகளையும், கடத்தல்களையும், ஆபாசங்களையும், வக்கிரங்களையும் நாள்தோறும் திரைப்படங்களில் ஆழமாக விதைத்து, 24 மணிநேரமும் மக்களிடையே வன்முறைப் பண்பாட்டைத் திணித்து வரும் நடிகர்களுக்கு, எத்தகைய தண்டனையை அளிப்பது? நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்களுக்கு மறைமுகக் காரணிகளாக இருப்பவை, திரைப்படங்களில் முன்வைக்கப்படும் வன்முறைத் தீர்வுகளே என்பதை யார் மறுக்க முடியும்?

மோதல் படுகொலைகள் தொடர்பாக, 1993 முதல் 2010 மார்ச் வரை, தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் 1,560 புகார்கள் வந்துள்ளன. அதில் 856 படுகொலைகள், போலிமோதல் கொலைகள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 2006 முதல் இன்று வரை, 26 மோதல் படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. மோதல் படுகொலையில் உத்திரப்பிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது. 2009 இல் உத்திரப்பிரதேசத்தில் மட்டும் 83 மோதல் படுகொலைகள் நடைபெற்றுள்ளன. ஆசிய மனித உரிமைகள் மய்யம் வெளியிட்டுள்ள "இந்தியாவில் துன்புறுத்தல்கள் 2009' அறிக்கையின்படி, "1.4.2001 முதல் 31.3.2009 வரை – 1,184 பேர் இந்தியா முழுவதும் "காவல் படுகொலை' (Custodial death)யில் கொல்லப்பட்டுள்ளனர். மகாராட்டிரத்தில் மட்டும் 192 காவல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன.

தேசிய மனித உரிமை ஆணையம் அளித்திருக்கும் நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று, மனித உரிமையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். ஆனால், தேசிய மனித உரிமை ஆணையத்தின் தற்போதைய தலைவரும், முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுமான கே.ஜி. பாலகிருஷ்ணன் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து, கடும் கண்டனத்திற்குரியது: “சில நேரங்களில் மோதல் படுகொலைகள், தவிர்க்க முடியாததாகிவிடுகின்றன... சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகரித்து வருகிறது. குற்றவாளிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு, காவல் துறையினரையும் கூட தாக்கி விடுகின்றனர். காவல் துறை நிலைமையை கட்டுப்படுத்த வேண்டியிருக்கிறது.''

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் ஒருபோதும் தீர்வாகாது. மணிப்பூர், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் நடைபெறும் எண்ணற்ற மோதல் கொலைகள், ஏன் இன்னும் அமைதியை நிலைநாட்டவில்லை? காவல் துறைதான் குற்றவாளியை கொல்லும் அதிகாரம் கொண்டது எனில், இங்கு நீதிமன்றத்திற்கு மட்டுமல்ல, தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் வேலை இல்லை!

“அகிம்சை நம் நாட்டின் பழம்பெரும் பண்பாடு. மக்கள் தற்பொழுது தங்களின் வாழ்வியல் நெறியாக இதனைப் பின்பற்றாமல் இருந்தால்கூட, அகிம்சையை ஒரு நியாயத் தீர்ப்பாக முடிந்தவரை பின்பற்ற வேண்டும் என்று நம்புகின்றனர். இந்த உண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில், நாம் இந்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய சரியான பணி – மரண தண்டனையை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதுதான்'' என்கிறார் டாக்டர் அம்பேத்கர்.

இந்து கடவுளர்களிடம் இருக்கும் கொடூரமான ஆயுதங்களையோ, வன்முறையினாலான சாதிய சமூக அமைப்பையோ, காந்தி முன்வைத்த போலி அகிம்சையையோ – பழம்பெரும் பண்பாடாக அம்பேத்கர் சொல்லவில்லை. அம்பேத்கர் முன்வைத்தது, பவுத்தம் போற்றிய பழம்பெரும் ஜனநாயகப் பண்பாடு. அதில் வன்முறைக்கு இடமில்லை. இந்து சமூகம் மரண தண்டனையை ஆதரிக்கிறது எனில், நாள்தோறும் தீண்டாமைக் கொடுமையை இழைக்கும் சாதி இந்துக்களுக்கு மரண தண்டனையைத்தான் அளிக்க வேண்டியிருக்கும்! எனவே, இந்து சமூக அமைப்பு வலியுறுத்தும் வன்முறைப் பண்பாட்டுக்கு எதிராக, நாம் மனித உரிமைப் பண்பாட்டைத்தான் முன்வைக்க வேண்டும்.

Pin It