தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இனியும் இந்தியாவில் தடை விதிப்பது உண்மையில் அது விடுதலைப் புலிகள் மீதான தடை அன்று. தமிழகத்தில் எழும் தமிழ்இன உரிமைக் குரல்களை நசுக்கவும் போராட்டங்களை ஒடுக்கவும் ஈழத் தமிழ் மக்களைத் தலைதூக்க விடாமல் தாக்கவும் போடப்படும் தடை அது. 

“விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பது சரியா?” எனக் கேட்டு நையாண்டி நாடகமொன்றை இந்திய அரசு அரங்கேற்றி வருகிறது. இந்த விசாரணை மன்றத்தில் விடுதலைப் புலிகள் மட்டுமே வந்து கருத்துக் கூற உரிமையுண்டாம். 

விடுதலைப் புலிகள் இங்கு வந்தால் தடைச் சட்டப்படி அரசு தளைப்படுத்தி சிறையில் அடைக்குமாம். என்ன நயவஞ்சக விளையாட்டு? 

ஒன்றுமறியாத உத்தமர் போல் தமிழக அரசு ஊமை வேடம் போடுகிறது இந்த நாடகத்தில். இந்திய, தமிழக அரசுகளின் கூட்டுச் சதியே விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு விசாரணை. 

2009 மே மாத “இறுதிப் போருக்குப்” பின் விடுதலைப் புலிகளின் அமைப்பு வழிப்பட்ட செயல்பாடுகள் எதுவும் இல்லை. விடுதலைப் புலிகளை முற்றாக ஒழித்து விட்டோம் என்று சிங்கள அரசு கொக்கரிக்கிறது. அந்தச் சாதனைக்காக இலங்கை அரசுத் தலைவரையும் இதரச் சிங்களக் கணபூதங்களையும் அடிக்கடி புது தில்லிக்கு அழைத்து விருந்து கொடுத்து பூரித்துப் போகிறது இந்திய அரசு. 

பிறகு விடுதலைப் புலிகள் மீதான தடையை மீண்டும் புதுப்பிக்க வேண்டிய தேவை என்ன? 

சட்டப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓர் அமைப்பை ஓர் அறிவிப்பின் கீழ் இரண்டாண்டு வரைதான் இந்திய அரசு தடை செய்ய முடியும். இரண்டாமாண்டு முடிவில் மீண்டும் தடையாணை போட்டால்தான் தடை நீடிக்கும். அச்சட்டப்படி 1992 மே மாதம் முதன் முதலாக விடுதலைப் புலிகள் மீது தடை விதித்த பின் ஒவ்வொரு இரண்டாண்டின் முடிவிலும் தடையைப் புதுப்பித்து வருகிறது இந்திய அரசு. இப்பொழுது ஒன்பதாவது முறையாக விடுதலைப் புலிகள் மீது தடை விதித்துள்ளது. 

சட்டப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப்படி, தடையைப் புதுப்பிக்கும் போது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தீர்ப்பாயம் அமைத்துப் பொது மக்களிடம் விசாரணை நடத்த வேண்டும். தடை நீடிப்பது தேவையா, சட்டப்படி சரியா என்ற அடிப்படையில் அந்த விசாரணை நடைபெற வேண்டும். 

நீதிபதி விக்ரம் ஜித் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்திய அரசின் தீர்ப்பாயம் முதலில் புது தில்லியிலும் இரண்டாவதாக சென்னையிலும் மூன்றாவதாக உதகையிலும் விசாரணை நடத்தியது. 

புது தில்லி விசாரணையில் நீதிபதி விக்ரம் ஜித், விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக உள்ளவர்தாம், தடையை எதிர்த்துப் பேச உரிமையுள்ளவர் என்றும் வைகோ போன்ற மற்றவர்களுக்கு உரிமையில்லை என்றும் கூறினார். கடந்த காலங்களிலும் இதே கருத்தைக் கூறித்தான் இதற்கான தீர்ப்பாயங்கள் நம் கருத்துகளை ஏற்க மறுத்தன. 

சென்னையிலும் உதகையிலும் நடந்த தீர்ப்பாய நாடகத்தில் மீண்டும் அதே கருத்தை விடுதலைப்புலி அமைப்பில் உறுப்பினராயில்லாதவர்கள் அந்த அமைப்பிற்காக வாதாட உரிமையில்லை என்று கூறிய விக்ரம் ஜித் வைகோவையும், திரு. பழ. நெடுமாறனுக்கான வழக்கறிஞரையும், வழக்கறிஞர் புகழேந்திக்கான வழக்கறிஞரையும் பேச அனுமதித்தார். 

உதகை விசாரணையில் (20.10.2010) ஒரு படி முன்னேற்றம் ஏற்பட்டது. தடையை ஆதரித்துப் பேசிய இந்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டுக் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் பி.கே.மிஸ்ராவை குறுக்கு விசாரணை செய்வதற்கு திரு. வைகோவை அனுமதித்தார். 

தடையை நீடிப்பதற்கான காரணங்களாக இரண்டைக் கூறினார் பி.கே. மிஸ்ரா. 1. 2008க்குப் பிறகு, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இந்தியாவில் சிலர் சிக்கல்களை உருவாக்கினர். 2. நாடு கடந்த தமிழீழ அரசில் உறுப்பினர்களாக உள்ள 115 பேரில் பலருக்கு விடுதலைப் புலிகள் தொடர்பு இருக்கிறது. அந்தப் புதிய அமைப்பு தமிழீழத்துடன் தமிழகத்தின் ஒரு பகுதியையும் இணைத்திருக்கிறது. அவர்களில் சிலர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்துள்ளனர். 

இந்த இரண்டு காரணங்களையும் குறுக்கு விசாரணையில் மறுத்தார் வைகோ. 

நாடு கடந்த தமிழீழ அரசு தடைசெய்யப்பட்ட அமைப்பு அன்று. அமெரிக்க நாட்டில் அது தொடங்கப் பட்டது. அந்நாடு அதைத் தடை செய்யவில்லை. வேறு ஐரோப்பிய நாடும் தடை செய்யவில்லை. 

தமிழீழத்துடன் தமிழ் நாட்டுப் பகுதியை இணைத்து விடுதலைப் புலிகள் எந்தக் காலத்திலும் வரைபடம் போட்டதுமில்லை, பேசியதுமில்லை. 

பொய்க் குற்றச் சாட்டுகள், போலித் தீர்ப்பாயம் என சனநாயக நாடகமாடுகிறது இந்திய அரசு. ஆனால் நீதிபதி விக்ரம்ஜித் துணிச்சல் மிக்க நேர்மையாளராக இருந்தால் தடை தேவை இல்லை என்று முடிவு செய்து இந்திய அரசுக்கு அறிவிக்கலாம். 

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடை செய்யப்பட்டது. இது போன்ற தீர்ப்பாயம் தடை தேவை இல்லை என்று அறிவித்தது. உடனடியாகத் தடை நீக்கப்பட்டது. 

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதற்காதரவாகப் பல்வேறு “சான்றுகளைத்” தமிழக அரசு இந்திய அரசிடம் கொடுத்துள்ளது. இப்போது தமக்கு அத்தடையில் தொடர்பில்லை என்பது போல் நயவஞ்சக நாடகமாடுகிறது தி.மு.க. ஆட்சி. 

1992 இல் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்யத் தாம் தூண்டுகோலாக இருந்ததாகவும், இப்பொழுதும் அத்தடையை நீடிக்க அ.இ.அ.தி.மு.க. ஆதரவு தருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவி செயலலிதா கூறி 8.10.2010 அன்று ஏடுகளில் வந்தது. 

அவர் எப்பொழுதும் தமது தமிழின எதிர்ப்பை மறைத்துக் கொள்வதில்லை. அவரின் கூட்டணித் தலைவர்கள்தாம் அவரது தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகளைக் கண்டு கொள்ளாமல் மறைக்கின்றனர். 

இந்திய ஏகாதிபத்தியத்திற்குக் கங்காணி வேலை பார்ப்பதில் தி.மு.க. ஒரு வகை, அ.இ.அ.தி.மு.க. இன்னொரு வகை. தடை குறித்துக் கருத்துச் சொல்லாமல் அமைதி காக்கும் கட்சிகள் வேறொரு வகை. 

தமிழின உணர்வாளர்கள் - அமைப்புகள் ஒன்றை உணர வேண்டும். விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது நடைமுறையில் தமிழகத்தில் தமிழ் இன உணர்வு அமைப்புகள் மீதான மறைமுகத் தடையாகும். 

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று காரணம் சொல்லி இந்த ஒடுக்கு முறையை இந்திய அரசும் தமிழக அரசும் அரங்கேற்றும். 

கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியற்றுக்குத் தடை விதிப்பது, விழுப்புரம் குண்டு வெடிப்பு போல் போலி குண்டு வெடிப்புகளை நடத்தி உணர்வாளர்களை ஒடுக்குவது போன்றவை தொடரும். இவற்றை எதிர் கொள்ள அணியமாக வேண்டும். 

ஈழத் தமிழ்க் குடிமக்களை மேலும் மேலும் நசுக்கிச் சிதைத்திட சிங்கள அரசுக்குத் திட்டம் தரவும் துணை புரியவும் இந்திய அரசுக்கு இந்தத் தடை ஒரு கருவியாகும். ஈழத்தின் வடக்கு கிழக்கு மாநிலங்களில் இந்திய அரசு தூதரகங்கள் திறந்து, அவற்றில் உளவுத் துறையினரைக் குவித்துத் தமிழர்களைக் கண்காணிக்கவும் கருங்காலிகளை ஊக்குவிக்கவும் இந்தத் தடை தேவைப்படுகிறது. 

புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில், காயம்பட்ட உணர்வோடு தமிழ் ஈழத்திற்காக ஒருங்கிணையும் தமிழர்களைச் சிதைத்திட, ஒடுக்கிட, ஏற்கெனவே அந்நாடுகளில் உள்ள தடைச் சட்டங்களை நீடிக்கச் செய்ய இந்தத் தடை தனக்கொரு ஆயுதம் என்று கருதுகிறது தில்லி ஏகாதிபத்தியம். 

எனவே இந்தத் தடை என்பது விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை அன்று. தமிழகம் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன அடிப்படையில் எழுச்சி கொள்ளாமலும் ஒருங்கிணையாமலும் தடுப்பதற்கானத் தொலை நோக்குத் திட்டத்தின் படியான தடையாகும். 

தமிழகத் தமிழர்களும், தமிழீழத்திலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்களும் இந்தியாவின் இந்தத் திட்டத்தைப் புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் துணை என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அடக்குமுறைகளை எதிர் கொள்ள வேண்டும்.

Pin It