எல்லோரும் பொதுவாக எண்ணிக் கொண்டிருப்பது வேதங்களைக் கற்கும் உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் என்றும். ஆனால் இது பற்றிய விவாதங்கள் பல நிகழ்ந்துள்ளன. வேதங்களை க்ஷத்திரியர்கள்தான் கற்பார்கள்; பார்ப்பனர்கள் அல்ல, என்ற கருத்தும் உள்ளது. இதன் காரணமாக க்ஷத்திரிய பார்ப்பன முரண்பாடுகள் இடம்பெற்றதும் உண்டு. இது பற்றிப் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன. இதனைக் காண்பதற்கு முன்னர் வேதங்கள் பற்றிப் பொதுவாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.

பௌராணிகர்களது கூற்றுக்களை ஒதுக்கி விட்டுப் பார்த்தால் வேதங்கள் என்பவை புராதன கால ஆரியர்களது துதிப்பாடல்கள் என்பது தெரிய வரும். ஆனால் அவற்றில் இன்று கூறப்படுவது போல தத்துவக் கருத்துக்கள் அதிகம் இல்லை. அவற்றில் பெரும்பாலானவை உணவு வேண்டியும், நல்ல வாழ்க்கை வேண்டியும் உள்ள பாடல்களே ஆகும். காலத்தால் பிற்பட்ட பாடல்களில்தான் தத்துவக் கருத்துக்கள் இடம்பெற்றன. வேதங்கள் அனைத்தும் ஆரிய இனக் குழுமக்களால் வாய் மொழியாகப் பாடப் பெற்றுப் பின்னர் எழுத்து வடிவம் பெற்றவையாகும்.

எனவே இவற்றில் பார்ப்பனர்கள் மட்டும் தான் இயற்றினார்கள் என்பது கேள்விக்குரிய விஷயம் ஆகும். இதன் காரணமாக வேதங்களைக் கற்கும் உரிமை பற்றிக் கூட சில விவாதங்கள் இடம் பெற்றன. ஆனால் இவை பல கதைகளின் வடிவத்தில் வேதங்களிலும், உபநிடதங்களிலும் உள்ளன. ஒரு வேடிக்கை என்னவென்றால் இன்று இந்து மதத்தின் புனித நூலாகக் கருதப்படும் கீதையை உபதேசித்தவரே யதுகுலத்தவரான (அல்லது பிறப்பால் க்ஷத்திரியரான) கிருஷ்ணர் ஆவார். ஆனால் இந்தக் கீதைக்குத்தான் ஆதிசங்கரர், ராமானுஜர் ஆகியோர் விளக்கம் எழுதியுள்ளனர்.

வேதங்களைப் பற்றிய பல குறிப்புகளை தேவிபிரசாத் சட்டோபாத்யாயா நமக்குத் தேடி அளித்துள்ளார். வேதங்களின் பெரும்பகுதி கூட்டு உழைப்பினை வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளது. எஸ்.டாங்கேயிள் கருத்துப்படி யாகம் என்பதே கூட்டு உழைப்பினைக் குறித்தது. ஆனால் உபநிடத காலத்தில் சாதிப்பிரிவினை தெளிவாக இடம்பெற்ற பொழுது பிரம்ம ஞானத்திற்கு உரியவர்கள் மேல் சாதியினரான இருபிறப்பாளர்கள் என்பது தெளி வாக்கப்பட்டது. அதாவது பார்ப்பனர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோருள் முதல் இரு சாதி யினரே இரு பிறப்பாளர்கள். அதாவது, பூணூல் அணியும் உரிமைபெற்றவர்கள். இவர்களுக்குத் தான் உபநிடத ஞானம் உரியது என்பதை மனுஸ்மிருதி போன்றவை வலியுறுத்தின.

ஆனால் இவர்களுக்குள்ளேயும் க்ஷத்திரியர் களுக்குத்தான் முதலிடம் என்ற வாதங்களும் எழுந்தன. இதற்குச் சில உதாரணங்கள் காண்போம். உபநிடத கால சமுதாயமானது அரசர்கள், பார்ப்பனர்கள் என்ற பாகுபாடு தெளிவாக இடம்பெற்ற காலம். அதற்கு முந்தியிருந்த இனக்குழு அமைப்பில் இந்தப் பாகுபாடு அதிகம் இல்லை. உதாரணமாக, துரோணர் பாண்டவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளிக்கும் குருவாக வருகிறார். ஆனால் அவர் பார்ப்பனர். உபநிடத காலம் இதிலிருந்து மாறுபட்டிருந்தது. க்ஷத்திரி யர்கள் உயர்நிலையிலும், பார்ப்பனர்கள் அடுத்த நிலையிலும் இருந்தனர். இந்தச் சூழ்நிலையில் பிரம்மஞானம் க்ஷத்திரியர்களுக்கு உரியது என்ற வாதமும் எழுந்தது.

பிரகத்தாரண்யக உபநிடதத்தின்படி உலகில் ஆரம்பத்தில் பிரம்மன் மட்டும்தான் இருந்தது. பிரம்மன் பிரிவடையாமல் இருந்தது. பிரம்மன் அதனைவிட உயர்ந்த க்ஷத்திரிய நிலையை உரு வாக்கியது. கடவுளர்கள்கூட க்ஷத்திரியர்கள் தாம் இந்திரன், வருணன், சோமன், ருத்ரன், பர்ஜன்யன், யமன், மிருத்யு, ஈசன் ஆகியோர் க்ஷத்திரியர்களே ஆவர். இதன் காரணமாக மிக முக்கியமான ராஜ சூய யாகத்தில் க்ஷத்திரியன் மேலே அமர்கிறான், பார்ப்பனன் கீழே அமர்கிறான்.

இது ஒரு கருத்து. இங்கு உபதேசிக்கும் நிலையில் க்ஷத்திரியனும், பெறும் நிலையில் பார்ப்பனனும் இருப்பதை இந்தப் பகுதி காட்டுகிறது. ஆனால் இதில் பல மாறுதல்கள் செய்யப்பட்டு, எல்லா வற்றிற்கும் பார்ப்பனர்கள்தாம் ஆதாரம் என்று காட்டப்பட்டது. இதனை க்ஷத்திரியர்களும் ஏற்றுக் கொண்டு சமரசம் செய்துகொண்டனர். ஆனால் உபநிடதகாலத்தில் அரசர்களும், பிரபுக்களும் வேதங்களைக் கற்பதிலும், அவற்றிற்கு விளக்க மளிப்பதிலும் தலையாய பங்கு பெற்றிருந்தனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. இன்று மிகப் பிரபலமாகக் கருதப்படும் காயத்ரி மந்திரம் என்பதே க்ஷத்திரியரான விசுவாமித்திரர் இயற்றியது என்று கூறப்படுகிறது.

பிரகத்தாரண்யக உபநிடதம், கௌசிதாகி உபநிடதம் ஆகியவற்றில் உள்ள கதை ஒன்று இதற்குச் சான்றாக உள்ளது. கார்கியா என்பவள் அஜாத சத்ரு என்ற அரசனுக்கு பிரம்மத்தின் தன்மையை விளக்க முற்பட்டாள். அவள் பல கொள்கைகளைக் கூறினான். ஆனால் அஜாதசத்ரு அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே கார்தியா கூறினான்: “அரசே நான் உங்கள் மாணவளாக இருக்கிறேன்.” இது சற்று மாறுபட்ட ஒன்றாகும். இருந்தாலும் அஜாதசத்ரு அந்தப் பார்ப்பனனுக்கு உபதேசம் செய்தாள். அந்த அரசனது உபதேசம் பிரம்மத்தினை அறியும் முறையைப் பற்றியது. படிப்படியாகப் புலன் உணர்வுகளைக் கட்டுப் படுத்தி, பிரக்ஞையற்ற நிலையை ஒருவன் அடைய வேண்டும். கனவு நிலைக்கு ஒருவன் செல்லவேண்டும். அதன் பின்னர் கனவற்ற நிலைக்கு. அந்த நிலையில் தான் பிரம்மத்தின் உண்மையான தன்மையைப் புரிந்துகொள்ள முடியும். ஒருவன் விழித்துக் கொள்ளும் பொழுது இந்தப் பிரம்மத்திலிருந்து உயிர்த் துடிப்பு ஏற்படுகிறது. புலன்கள் வேறு செய்கின்றன. உலகம் தோன்றுகிறது.

இந்தச் சுயத்தினை புரிந்துகொள்வதே வேதத்தின் சாராம்சம் என்று அந்த அரசன் கூறினான். அந்த அரசன் இதனை விளக்க பல உதாரணங்களை அளிக்கிறான். ஓர் உதாரணமாக இந்திரன் இந்த பிரம்மத்தினை உணர்ந்து கொள்ளவில்லை. அதன் காரணமாக அசுரர்கள் அவனை வென்றார்கள். இந்திரன் பிரம்மத்தினை உணர்ந்துகொண்டவுடன் அவன் அசுரர்களைத் தோற்கடித்தான்.

இதே கருத்து சாந்தோக்ய உபநிடதத்தில் சில மாறுதல்களுடன் விளக்கப்பட்டுள்ளது. கௌதமர் என்ற அந்தணர், பாஞ்சால தேசத்து அரசரிடம் சென்று பிரம்ம ஞானம் பற்றி அறிந்துகொள்ளச் சென்றார். அந்த அரசன் பின்வருமாறு கூறினான்: “அந்தணரே, இந்த அறிவு பெறுவது என்றுமே பார்ப்பனர்களுக்கு உரியது அல்ல. இது க்ஷத்திரியர் களுக்கு மட்டுமே உரியது ஆகும்.” இது போன்று பல உதாரணங்கள் உபநிடதங்களில் உள்ளன.

இதுபோன்ற கதைகள் அடித்தளத்தில் ஒரு சமுதாய உண்மையைப் புலப்படுத்துகின்றன. ஆளும் வர்க்கங்களுக்கு இடையில் நிகழும் அக முரண்பாடுகள் இந்தக் கருத்துப் போராட்டத்திற்கு அடித்தளம் ஆகும். நால்வர்ண அமைப்பில் மேல் தட்டு வர்க்கங்களான க்ஷத்திரியர்களும், பார்ப்பனர் களும் உடல் உழைப்பிலிருந்து விடுபட்டவர்கள்; ஓய்வுநேரம் அதிகம் உள்ளவர்கள். இவர்களுக்குச் சிந்திப்பதற்கு நேரம் உண்டு. இதன் விலை தத்துவம் பற்றிய பல நுணுக்கமான சிந்தனைகளை இவர்கள் வளர்த்தெடுத்தார்கள். இந்த விஷயத்தில் இவர் களிடையே ஒரு சமரசம் இடம்பெற்றிருந்தது. அதன் காரணமாகத்தான் உரிமைப் போராட்டம் இருந்தாலும் இந்த வர்க்கத்தினர் இறுதியில் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்துச் சென்றனர். ஆனால் இவர்கள் கூட்டாக, அடித்தள மக்களைச் சுரண்டினர் என்பது வரலாறு.

இதேபோன்ற ஒரு நிகழ்ச்சியை தமிழகச் சிந்தனை வரலாற்றிலும் காணலாம். பார்ப்பனிய மயமாக்கப்பட்ட கடவுளான சிவனுக்கு வேத மந்திரமான ‘ஓம்’ என்பதன் அர்த்தத்தினை முருகன் உபதேசித்தது ஆகும். முருகன் இனக்குழு மக்களின் கடவுளாக இருந்து வடநாட்டுக் கலப்பால் ஏற்றம் பெற்றவன். ஆனால் வர்க்க ரீதியாக சிவனுக்கு இணையானவன் அல்லன். ஆனால் முருகன் பிரணவ மந்திரத்தின் பொருளைச் சிவனுக்கு உபதேசித்தது என்ற கதைக்குள்ளாகவும் ஆளும் வர்க்கத்திற் குள்ளாக இடம்பெற்ற வர்க்கப் போராட்டம் இடம்பெற்றுள்ளதைக் காண முடிகிறது. இது போன்று சங்க இலக்கியத்தில் இடம்பெறும் தொன்மங்களையும் நாம் ஆராய்தல் வேண்டும்.

[மேற்கொண்டு விவரங்களுக்கு பார்க்க: Indian Philosophy: A Popular outline: Deviprasad Chattopadyaya]

Pin It