‘சக்கிலியனைத் தொட்டால் தீட்டு, புதிரை வண்ணானைப் பார்த்தாலே தீட்டு’ என்கிறது ஒரு சொல் வழக்கு. இது மாதிரியான சாதியச் சொல் வழக்குகளை உருவாக்கியதும் அதைப் பின்பற்றுவதும் ஆதிக்க சாதியினரே என்றாலும், குறிப்பிட்ட இந்த சொல் வழக்கு தலித்துகளாலும் பயன்படுத்தப்படுவதுதான் வேதனையின் உச்சம். ‘காலம் மாறிப் போச்சு! இப்பல்லாம் யாருங்க ஜாதி பாக்குறாங்க’ என்ற புளுகுக்கும், ‘ஜாதியால கஷ்டப்படுற தலித்துகளே ஜாதி பார்ப்பாங்களா?’ என்ற சப்பைக் கட்டுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை. தலித் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஊர்களில், ஒன்றிரண்டு குடும்பங்களாக வாழ்ந்து ஊர்தோறும், சேரிதோறும் சாதிய சவுக்கடிகளை வாங்கியபடி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் புதிரை வண்ணார்கள்.

Puthirai Vannar
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கலில் சுமார் ஆயிரம் புதிரை வண்ணார் குடும்பங்கள் வசிக்கின்றன என்ற தகவல், நம்முள் வியப்பை ஏற்படுத்தியது. சாதியின் அழுத்தத்தையும் அடக்குமுறையையும் தாங்க முடியாமல் சொந்த மண்ணை விட்டு ஓடி வந்தவர்கள், வேலைவாய்ப்பு நகரமான சிவகாசி அருகில் உள்ள திருத்தங்கலிலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் குடியிருக்கத் தொடங்கி, இன்று அவர்களுடைய எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. அதோடு மட்டுமின்றி, புதிரை வண்ணார்களின் குலத் தொழிலாகக் கருதப்படும் துணி வெளுத்தல், சவரம் செய்தல், பிணத்தைக் கழுவுதல் போன்றவைகளைச் செய்ய மறுத்த திருத்தங்கல் புதிரை வண்ணார்களில் பெரும்பான்மையானோர் பட்டாசுத் தொழில் மற்றும் விவசாய வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

கல்வியறிவு பெற்றவர்கள் ஆசிரியர் பணியிலும் இருக்கிறார்கள். இதில் குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால், திருத்தங்கலில் இருக்கும் எல்லா குழந்தைகளுமே பள்ளிக்கூடம் செல்கின்றன. இதிலென்ன ஆச்சர்யம் என சிந்திக்கிறவர்கள், புதிரை வண்ணார்களின் வாழ்நிலை அவலத்தையும் அவர்கள் காலங்காலமாக அனுபவித்து வரும் சாதிய ஒடுக்குமுறைகளையும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பள்ளர், பறையர் மற்றும் அருந்ததியர்கள் ஆதிக்க சாதியினருக்கு அடிமைத் தொழில் செய்கிறார்கள். அந்த அத்தனை அடிமை வேலைகளையும் தலித்துகளுக்கு செய்வதே புதிரை வண்ணார்களின் வேலை. ஊர் முழுவதும் சுற்றி மூட்டை மூட்டையாக அழுக்குத் துணிகளை எடுத்து வந்து, பளிச்சென வெளுத்துக் கொடுத்தாலும் கூலி என்று எதுவும் இவர்களுக்கு கிடைக்காது. பழைய கஞ்சி கொடுத்தால் அதுவே பெரிய விஷயம். தவிர, தலித் மக்களுக்கு சவரம் செய்ய வேண்டியது புதிரை வண்ணார்களின் ‘சமூகக் கடமை'(!) தலித் மக்களின் பிணத்தை குளிப்பாட்ட வேண்டியது புதிரை வண்ணார்கள் மறுக்கக் கூடாத ‘பொறுப்பு.' பள்ளப்பய, பறப்பய, சக்கிலியப்பய என சாதிப் பெயர்களால் தலித்துகள் தாழ்த்தப்படுவது போல, ‘புதரப்பய' என்ற சொல், தலித்துகள் மத்தியில் மிகச் சாதாரணமாகப் புழக்கத்தில் உள்ளது.

நெல்லை மாவட்டம் இளைச்சநேந்தலில் இருந்து வந்து திருத்தங்கலில் குடியேறியிருக்கும் அருள்ராஜ், ‘ஒரு மனுசன் செத்துப் போயிட்டாங்கறத எத வச்சு கண்டு பிடிப்பீங்க? கண்ணு வெளிய தள்ளிறும். மலம் வெளியேறும். எங்க வேலை அத சோதிச்சு, சுத்தம் செய்றது; பிணத்தை சவரஞ் செஞ்சு, பாடை தூக்கி எல்லா வேலையும் செய்யணும். பொம்பளைங்க வயசுக்கு வர்றப்ப உடுத்துற துணிய முட்டுத் துணினு சொல்வோம். ரத்தக் கறையோட இருக்குற துணியை வண்ணான் தான் துவைக்கணுங்கறது சம்பிரதாயம். எங்க ஊர்ல எங்க அம்மா, அப்பா எல்லாம் இந்தத் தொழிலைதான் செஞ்சுட்டிருந்தாங்க. நான் பள்ளிக்கூடம் போய் படிச்சதால என்னால அந்த வேலைய பார்க்க முடியல. மாட்டேனு சொன்னதுக்கு வண்ணானுக்கு அவ்ளோ திமிரானு எதுத்தாங்க. நாங்க ஊரவிட்டு காலி பண்ணி இங்க வந்துட்டோம். இப்போ எங்க குடும்பத்துல யாரும் இந்த தொழில் பார்க்கல’ என்கிறார். அருள்ராஜ், தற்போது திருத்தங்கலில் இருக்கும் ‘புதிரை வண்ணார் முன்னேற்ற சங்க'த்தின் செயலாளர்.

சாதி ஒடுக்குமுறைகளைத் தாங்க முடியாமல் ஊரைவிட்டு ஓடி வந்தாலும், காற்றைப் போல எங்கும் நிறைந்திருக்கும் சாதியின் பிடியிலிருந்து அவ்வளவு எளிதாகத் தப்பித்துவிட முடியுமா என்ன? திருத்தங்கலில் இருக்கும் புதிரை வண்ணார் வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு குழந்தையும் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை சாதிச் சான்றிதழ். ‘புதிரை வண்ணார் என்ற சாதியே கிடையாது’ என மறுப்பது அதிகாரிகளின் வழக்கமாக இருக்கிறது. ‘வண்ணானுக்கு கழுதை இருக்கணும், துணி மூட்டை இருக்கணும், கார வீட்ல இருக் கிறவனுக்கும், தங்கச் சங்கிலி போட்டிருக்கவனுக்கும் எப்படி ஜாதி சர்டிபிகேட் குடுக்கறது?'ன்னு சிவகாசி தாலுகா ஆபீஸ்ல அதிகாரி கேக்குறாங்க. நான் கேக்குறேங்க, எல்லா ஜாதிக்காரங்களும் அவங்களோட குலத் தொழிலதான் செய்யுறாங்களா? பாப்பானுங்க பூசாரி வேலைய மட்டும்தான் பாக்குறாங்களா என்ன? அவங்கள போய் நீ குடுமி வெக்கல, கற்பூரம் தட்டு இருக்கா வீட்லனு இதே அதிகாரிங்க கேப்பாங்களா?’ என்று ஆதங்கத்தோடு கேட்கிறார் அருள்ராஜ்.

புதிரை வண்ணார்கள் தங்கச் சங்கிலி போட்டிருந்தாலும், அவர்களுடைய சாதியை பிறப்புதானே தீர்மானித்திருக்கிறது. அவர்கள் வீட்டில் கழுதை இல்லை எனினும், இந்த சமூகம் அவர்களை புதிரை வண்ணாராகத்தானே அங்கீகரித்திருக்கிறது? இதே சமூக அங்கீகாரத்தை சட்ட ரீதியாக (சாதி சான்றிதழ்) கொடுத்தால்தான், சில உரிமைகளைப் பெற முடியும் என்று கோரினால், அதற்கு இந்த சமூகமும் அரசும் திமிரோடு கேட்கும் கேள்வி : ‘நீ தான் தங்கச் சங்கிலி போட்டிருக்கியே; கழுதை வளர்க்கலையே'. நாமும் இந்து சமூகத்திடமும் அரசாங்கத்திடமும் அதைத்தான் சொல்கிறோம், வலியுறுத்துகிறோம்

பிறப்பால் புதிரை வண்ணார்களாக்கப்பட்ட ஆனால் கழுதையில்லாத, தங்கச் சங்கிலி அணிந்திருக்கின்றவர்களை ‘மேல் ஜாதி'க்காரன் என்று அங்கீகரி. அதற்குத் துப்பில்லாத வரை, அவர்கள் அய்.ஏ.எஸ். அதிகாரிகளாகப் பதவி வகித்தாலும், அவர்களுக்கும் அவர்களுடைய குழந்தைகளுக்கும் சட்டப்படி சாதிச் சான்றிதழ் கொடு. சமூக நீதி பற்றி வாய்கிழிய பேசும் தி.மு.க. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். 69 சதவிகித இடஒதுக்கீட்டைப் பற்றி பேசுவது மட்டுமே சமூகநீதி அல்ல. திருத்தங்கல்லில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் பெரும் போராட்டத்துக்குப் பின்னரே சாதிச் சான்றிதழ் பெற்று பள்ளிக்குச் செல்கின்றன. பெரும்பான்மையாக இருந்து, ஏதோ சங்கம், முன்னேற்றம் என்று இருக்கிற இடத்திலேயே இப்படி என்றால், ஓரிரு குடும்பங்கள் இருக்கிற ஊர்களில் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

‘ஏதோ இங்க கொஞ்சம் படிச்சவங்களும் விழிப்புணர்வும் இருக்குறதுனால இதெல்லாம் பேச முடியுதுங்க. மத்த இடத்துல இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. எங்க ஊரு கீழ முடிமன்னார்கோட்டை. அங்க பறையருங்க மெஜாரிட்டி. அவுங்களுக்கு நாங்க அடிமை வேலை பார்த்துட்டிருந்தோம். அப்போ எல்லோருக்கும் பட்டா வீடு கொடுத்தாங்க. நாங்க 15 குடும்பம் இருந்தோம். எங்களுக்கும் பட்டா வீடு குடுங்கன்னு கேட்டதுக்கு, நீங்க ஊருக்குள்ளயா இருக்கிறீங்க? வெளிலதான இருக்கீங்க... தர முடியாதுனு சொல்லிட்டாங்க. எங்களுக்கும் வீடு வேணும்னு தகராறு பண்ணோம். உடனே பறையருங்க எங்கள அடிக்க வந்தாங்க. அந்தப் பிரச்னைல ஊரவிட்டு ஓடி வந்து, இதோ இப்ப வரைக்கும் அந்த ஊரு பக்கமே போகல’ என்கிறார் கமுதி சுப்பையா.

‘புத்த களம்' என்ற அமைப்பின் கீழ் புதிரை வண்ணார்களை ஒன்று திரட்டும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் இவர், ‘தலித்துகளுக்கு எல்லா உரிமையும் சாதி சான்றிதழ் அடிப்படையிலதான் குடுக்குறாங்க. விதியேனு இந்தத் தொழில பார்க்காம, படிச்சு முன்னேறணும்னு நினைக்கிறவங்களுக்கு சாதிச் சான்றிதழை கொடுக்கணுமா இல்லையா? நாங்க வண்ணார் இல்லேன்னா யாருனு சொல்லுங்க? பொன்னு பொருளோட நாங்க மாட மாளிகைலயா குடியிருக்கோம்? நாள் பூரா உழைச்சுட்டு, உழைப்புக்கேத்த கூலி கிடைக்காம, அம்மா தாயேனு பிச்சை மாதிரி கஞ்சி வாங்கிக் குடிக்கிறவங்க. லட்சக்கணக்குல பணத்தை கட்டி தனியார் பள்ளிக்கூடத்துலயா படிக்க வைக்க முடியும்?

அரசுப் பள்ளியில சாதிச் சான்றிதழ் கேக்குறாங்க. ஒரு தடவை ரெண்டு தடவை முயற்சி பண்ணிட்டு மறுபடியும் வெளுக்குற தொழிலுக்கே போயிடுறவங்க அதிகம். ‘பள்ளர், பறையர், அருந்ததியர்னு இவங்க மட்டும்தான் தலித்துகளா? இடஒதுக்கீட்டுல ஆரம்பிச்சு கிடைக்கிற உரிமைகள் எல்லாத்தையும் அவங்களே பிரிச்சுக்குறாங்க. மீதமுள்ள உதிரி சாதிகள் என்ன செய்றது? ஆதிக்க சாதிகள் செய்றது மாதிரி எங்களை ஒடுக்கி, உழைப்பை உறிஞ்சுறது மட்டுமில்லாம, எங்களோட உரிமைகளையும் சூறையாடுறாங்க. சமூக விடுதலையில், ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் பணியில் எங்களையும் இணைச்சுக்கங்க என்பதுதான் எங்களோட ஒரே கோரிக்கை. அப்படி ஒண்ணு சேர்ந்துட்டா, நீங்க எங்களுக்காகவும் நாங்க உங்களுக்காகவும் இருப்போம். அப்போ நம்ம அணி இன்னும் வலுவானதா இருக்கும்’ என்கிறார் கமுதி சுப்பையா.

அவர் சொல்வது போல எந்த தலித் அமைப்புகளும், கட்சியும் புதிரை வண்ணார்களைத் திரட்டுவதில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. சங்கரன்கோயில் அருகில் உள்ள துரைசாமிபுரத்தில் இருந்து திருத்தங்கலுக்கு திருமணம் முடித்து வந்திருக்கும் சந்தனமாரி, ‘நாங்க இப்போ வெளுக்குற தொழில் செய்றதில்லங்க. அதனால யாரு வீட்டுக்கும் சோறு வாங்கப் போறதில்லை. சட்டியைத் தூக்கிட்டு ஒவ்வொரு வீட்லயும் போய், அம்மா வண்ணாத்தி வந்துருக்கேன் கஞ்சி ஊத்துங்கனு நிக்கும்போது அவமானமா இருக்குது. ‘ஒழுங்கா வெளுக்கத் தெரியாது, கஞ்சிக்கு மட்டும் வந்துருவீங்களே'ன்னு பேசுவாங்க. கஞ்சி வாங்க போக மாட்டேனு அடம் பிடிச்சாலும் அப்புறம் பசி வந்ததும் என்ன செய்யுறது? நாங்க செய்யற வேலைக்கு கூலி கிடைக்காது. வீட்ல சமைக்கிறதுக்கு சாமானோ, பொருளோ இருக்காது. அவங்க நஞ்சதோ, நொஞ்சதோ எதப் போட்டாலும் திங்கணும். இந்த ஊருக்கு வந்ததுக்கு அப்புறம்தான் வீட்டுல சமைக்கிறோம்’ என்கிறார் நிம்மதியாக.

உடுத்துவதற்கு ஓர் ஆடையும் சோறு வாங்க வைத்திருக்கும் ஒரு சில பாத்திரங்களும் தவிர, எதுவும் சொந்தமில்லாத புதிரை வண்ணார்கள், திருத்தங்கலில் தாங்களே பணம் சேர்த்து சமூகக் கூடம் கட்டியிருக்கிறார்கள். திருமணம், திருவிழா, கூட்டங்கள் மாதிரியான நிகழ்வுகளுக்கு இது பயன்படுகிறது. ஆனால், அதற்கும் பல சோதனைகள் வந்தது என்கிறார் புதிரை வண்ணார் முன்னேற்ற சங்கத்தின் தலைவரான ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்து. ‘புதிரை வண்ணார்னா எல்லோரும் கேவலமா பேசுறாங்க. ‘புதிர' என்றால் ‘பூர்வீகம்'னு தமிழ் அகராதி சொல்லுது. ‘வண்ணான்' என்றால் வண்ணம் தீட்டுபவர், வண்ணக் கலைஞர்.

Puthirai vannar
அந்தக் காலத்தில் துணிகளுக்கு வண்ணம் தீட்டும் வேலையைத் தான் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். சாதி வந்த பின் அழுக்குத் துணியையும் முட்டுத் துணியையும் துவைப்பது, எங்களுக்கு விதிக்கப்பட்டது. சவரத் தொழில், பிணம் கழுவுதல் போன்றவை எங்கள் மீது திணிக்கப்பட்ட தொழில்கள். ‘வண்ணான் கழுதை பொதி சுமக்கும்' என பாடப் புத்தகங்களே ஜாதியை போதிக்குது. பள்ளிக்கூடத்துல பசங்க கிண்டல் பண்ணுவாங்க. உங்க வீட்டு சோறு மட்டும் ஏன் கலர் கலரா இருக்குனு கேப்பாங்க. நாங்க யாரு கூடவும் சேர மாட்டோம்’ என்கிறார் வேதனையாக.

அத்தனை அடக்குமுறைகளையும் கடந்து படித்து ஆசிரியர் பணியில் சேர்ந்ததோடு, குழந்தைகளை தேடித் தேடி பள்ளியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார் முத்து. ‘படிப்பு ஓரளவுக்கு கவுரவமா வாழ வைக்குதுங்கறதால, எங்க சமூகப் பிள்ளைகளுக்குப் போராடி சாதிச் சான்றிதழ் வாங்கி படிக்க வச்சுட்டு இருக்கோம். ஆனா சாதியை உதறிட்டு வெளியே வர கல்வி மட்டும் போதாதுங்கறதுதான் என்னோட அனுபவம். எந்த சமூக அறிவும் இல்லாத அன்றைக்கு ஒதுக்கப்பட்டோம். ஓரளவு விழிப்புணர்வு அடைஞ்ச பிறகு, இன்றைக்கும் ஒடுக்கப்படு றோம். அவங்க சரியில்ல, இவங்க சரியில்லன்னு சொல்றத விட்டுட்டு சாதியை அழிக்க எல்லாருமே பாடுபடணும்’ என்கிறார்.

அவரவர் ஊரில் நடந்த வன்கொடுமைகளை சகிக்க மாட்டாமல் திருத்தங்கலில் வந்து குடியேறியபோதும், சாதி தன்னிலிருந்து புதிரை வண்ணார்களை விடுவித்து விடவில்லை. சாதி சான்றிதழ், இரட்டை டம்ளர், இழி தொழில் என எல்லாமே இங்கும் இருக்கிறது. தலித் மக்கள் கல்வியறிவு பெற்றால் சாதி ஒழிந்துவிடும் என்றால், இந்நேரத்துக்கு ஓரளவுக்கு ஒழிந்திருக்க வேண்டும். அரசியல் அதிகாரம், தலித் விடுதலைக்கு வழிவகுக்கும் என்றால், இந்நேரத்துக்கு வகுத்திருக்க வேண்டும். இடஒதுக்கீட்டாலும் புரட்சி மலர்ந்துவிடவில்லை. சட்டத்தால் சாதியை புதிதாக ஆக்கவும் முடியாது, அழிக்கவும் முடியாது என்பதே உண்மை. இடஒதுக்கீடு தலித் விடுதலைக்கு ஓரளவுக்கு வலு சேர்க்கலாம்; ஒரு சில உரிமைகளை கைப்பற்ற வழிவகுக்கலாம். ஆனால், சாதியை முற்றிலுமாக ஒழித்துவிடுமா என்றால் இல்லை என்பதே ஆணித்தரமான ஒரே பதில்.

நமது போராட்டங்களும், கவனமும், உழைப்பும் இந்த உரிமைகளைப் பெறுவதிலேயே செலவிடப்படுகின்றன. ஆனால், தலித் மக்களின் அத்தனைப் பிரச்சனைகளுக்கும் காரணம், இந்து சமூக அமைப்பு தான் என்ற புரிதல் இங்கு இன்றளவும் வளர்த்தெடுக்கப்படவில்லை. அம்பேத்கரோடும், பெரியாரோடும் அந்தப் பிரச்சாரம் முற்றுப் பெற்று விட்டது. சில ஆதாயங்களுக்காக நாம் செய்து கொள்ளும் சமரசங்கள், இந்து அமைப்பை இன்னும் ஆழமாகவும் நீளமாகவும் வளர வழி செய்து கொண்டிருக்கின்றன. தனக்கு விடுதலை வேண்டும் என்று நினைக்கிற ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய முதல் கடமை, இந்து சமூக அமைப்பையும் அதன் வெளிப்பாடுகளையும் எதிர்ப்பதுதான். இந்து மதத்தை விட்டு வெளியேற வேண்டும் என்பதற்குப் பொருள் சான்றிதழ்களில் இந்து என்கிற இடத்தை, பவுத்தம் கிறித்துவர், முஸ்லிம் என்று நிரப்புவது மட்டும் அல்ல; இந்து மதம் நம் வாழ்க்கையோடு, உணர்வோடு, நம்பிக்கைகளோடு இரண்டறக் கலந்திருக்கிறது. மனதளவில், சிந்தனையளவில் நாம் அதிலிருந்து பளிச்சென விடுபட்டாக வேண்டும். அப்போதுதான் சாதியின் அடித்தளம் ஆட்டம் காணும்.

திருத்தங்கலில் ஒன்று சேர்ந்திருக்கும் புதிரை வண்ணார்களின் பிரச்சனைகள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தலித் மக்களின் பிரச்சனைகளும், போராட்டங்களும் வெறும் சாதிச் சான்றிதழுக்காகவும் வீட்டுமனைப் பட்டாவுக்குமாக திசை திருப்பப்படுகின்றன. தலித் மக்களின் கல்விக்கும், பொருளாதாரத்துக்கும் ஓரளவு கவுரவமான வாழ்வுக்கும் இடஒதுக்கீடு வழி செய்கிறது. ஆனால், ஒட்டுமொத்த சமூக அங்கீகாரத்தையும், சுயமரி யாதையையும் அது கொடுத்து விடாது.

உண்மையில் தலித் மக்களின் போராட்டங்கள், ஜனநாயகத்துக்கானது. இந்த சமூகத்தை, மனிதர்களைப் பண்படுத்தும் பணியில் தலித் மக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கிறார்கள். ‘நான் அடிமை இல்லை’ என்ற போர்க் குரல் ‘யாரும் யாருக்கும் அடிமையல்ல’ என்ற சமத்துவக் கொள்கையையே வலியுறுத்துகிறது. இந்த சமூகத்தில் சமத்துவத்தை மலரச் செய்வதற்காகவே அவர்கள் வன்கொடுமைகளை சந்திக்கிறார்கள்; செத்து மடிகிறார்கள். ஓர் அடிமையின் அடிப்படைக் கோரிக்கை என்னவாக இருக்கும்? அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதுதானே! நீங்கள் கோடி ரூபாய் கொடுத்தாலும், சுதந்திரத்திற்கும் சுயமரியாதைக்கும் அது ஈடாகுமா?

இனவெறி, பெண்ணடிமைத்தனம், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம் என உலகின் எந்த அடிமைத்தனத்தை விடவும் வலுவானது, கொடுமையானது சாதியப் பாகுபாடு. காரணம், அதில் மேற்குறிப்பிடப்பட்ட எல்லா பாகுபாடுகளுமே உள்ளடங்கி விடுகிறது என்பதே உண்மை. சாதி இனப் பிரச்சனைதான்; சாதி பெண்களின் பிரச்சனைதான்; சாதி ஏழைகளின் பிரச்சனைதான். ஆனால் இனவெறியோ, பெண்ணடிமைத்தனமோ, ஏழைகளின் பிரச்சனையோ சாதிக் கொடுமையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்றத் தாழ்வை உயிர் மூச்சாகக் கொண்டுள்ள சாதியத்தை நிலைநிறுத்தும் கோட்பாட்டை அழித்தொழித்து, ஜனநாயகத்தை முன்மொழிந்து -இம்மக்களை மானமும் அறிவும் உள்ள சமத்துவமிக்க மக்களாக மாற்றும் வரலாற்றுக் கடமையில் தலித்துகள் ஈடுபட்டிருக்கின்றனர். புதிரை வண்ணார்களின் போராட்டமும் அதற்கானதே!

-மீனா மயில்
Pin It