jayalalitha

இன்று தெற்காசியத் தமிழர் அரசியல் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது. இலங்கையில் கடந்த 25 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் தமிழீழப் விடுதலைப் போர் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறது. அது தமிழகத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அதிர்வலைகள் தமிழ்நாட்டு அரசியலையும் நெருக்கடிக் குள்ளாக்கியிருக்கிறது.

கடந்த நூற்றண்டின் தமிழக அரசியல், சமூக மாற்றத்தை காங்கிரஸ், திராவிடர், பொது உடமை இயக்கங்கள் தீர்மானித்தன. கடந்த நூற்றாண்டில் முதல் 65 ஆண்டுகளில் தமிழகத்தின் தேர்தல் அரசியலை பெரும்பாலும் காங்கிரஸ் ஆக்கிரமித்திருந்தது. அடுத்த 40 ஆண்டுகளாக திராவிடர் இயக்கத்திலிருந்து உருவான கட்சிகள் ஆட்சியதிகாரத்தில் இருந்து வருகின்றன. திராவிட இயக்கத்தின் உள்ளிருந்து உருவான கட்சிகள் தம் கொள்கைகளிலிருந்தும், நோக்கத்திலிருந்தும் பெருமளவு நீர்த்துப் போயுள்ளதை பெருங்கட்சிகளான தி.மு.க.வும், அ.தி.மு.கவும் ஈழத்தமிழர் பிரச்சினையில் மேற்கொண்டிருக்கும் நிலைப்பாடுகளை தெளிவாக புலப்படுத்துகின்றன. ஒரு காலத்தில் ஈழ விடுதலைப் போருக்கு ஆதரவாக நின்ற எம்.ஜி.ஆர். தோற்றுவித்த அ.தி.மு.க கட்சியின் தலைமை இன்று “ஈழத்தமிழர்கள் என்பவர்களே இல்லை” என்றும், “போரில் சாதரண மக்கள் சாவது சகஜம்” என்றும் கூறும் இரக்கமற்ற ஜெயலலிதாவின் இறுக்கப்பிடிக்குள் இருக்கிறது. எம்.ஜி.ஆரின். இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகள் ஜெயலலிதாவின் காலடியிலும், அவருடைய காரின் சக்கரத்தடியிலும் பணிந்துக் கிடக்கின்றனர்.


தமிழரின் வீரதீரப் பிரதாபங்களை, அருமைப் பெருமைகளை, வாய் ஓயாமால் பேசியும், கை ஓயாமல் எழுதியும் வருகின்ற தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி குறுகியகால அரசியல் ஆதாயத்திற்காக ஈழத்தமிழர் மீதான ஒடுக்குமுறைக்கு துணைபோகும் இந்திய அரசுக்கு அடிபணிந்து செயலிழந்து கிடக்கிறார். அக்கட்சியின் அடுத்த தலைமுறைத் தலைவர்கள் என அடையாளம் காட்டப்பட்டிருக்கும் தி.மு.க. தலைவரின் வாரிசுகளான மு.க. ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி கருணாநிதி, தயாநிதி மாறன் போன்றவர்களோ இப்பிரச்சினைப் பற்றி ஒரு கருத்தை வெளியிடும் திராணிகூட இல்லாமல் கட்சியையும், அரசியல் அதிகாரத்தையும் குடும்பத்துக்குள் பங்குபிரித்துக் கொள்ளும் முயற்சியில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

திராவிடக் கட்சிகளிடம் அதிகாரத்தை இழந்த காங்கிரஸ் கட்சி என்னென்ன பெயரில் வந்தாலும், எத்தனைத் தலைமைகள் மாறியபோதும் மீண்டு எழ இயலவில்லை. அக்கட்சி அதற்கான காரணங்களை ஆய்ந்தறியும் திறனின்றி ஒரு புறம் இந்திரா காந்தி குடும்பத்துக்குக் காவடி தூக்கிக்கொண்டும், இன்னொரு புறம் ஏதாவதொரு திராவிடக் கட்சியின் முதுகிலேறி சவாரி செய்துகொண்டுமே கடந்த 40 ஆண்டுகளாக தன் இருப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. தொண்டர்களைவிடத் தலைவர்களை அதிகமாகக் கொண்ட ,தமிழகத்தில் அந்நியமாகிப்போன காங்கிரஸ் கட்சி டெல்லியில் பெற்றுள்ள அதிகார மமதையின் காரணமாகத் தமிழர்களுக்கு இன்னுமொரு வரலாற்றுத் துரோகத்தை இழைத்துக் கொண்டிருக்கிறது.

இப்போது தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. இவ்வெற்றிடம் தனிப்பட்ட தலைவர்களால் நிரப்பப்படப் போவதில்லை. சுமார் 20 ஆண்டுகளாக, தி.மு.க.வின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக அ.தி.மு.கவையும், பிறகு அ.தி.மு.க. மீதுள்ள அதிருப்தியின் காரணமாக தி.மு.க.வையும் தமிழக மக்கள் மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்த்திக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியின் மீதுள்ள நம்பிக்கை, நல்லெண்ணத்தைவிட ஆளும் கட்சியின் மீதான நம்பிக்கையின்மையே அப்போதைய எதிர்க்கட்சியை ஆளும் கட்சியாக மாற்றும் காரணமாக அமைந்துவிடுவது அவலம். ஆகவே, பணபலமிக்க இந்த இரு கட்சிகளை விட்டால் தமிழ்நாட்டுக்கு வேறு வழியில்லை என்பதான ஒரு தோற்றம் நிலவி வரும் சூழ்நிலையில், உங்களைப் போன்ற சிறிய கட்சியினர் இவ்விரு பெரிய கட்சிகளுடன் மாறி மாறி கூட்டு சேர்ந்து அவர்கள் மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர உறுதுணையாக இருக்கிறீர்கள். இதனால் உங்களுக்குச் சிறிதளவு அரசியல் அதிகாரம் கிட்டலாம். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்குப் பெருமளவு பயனில்லை. இவ்விரு கட்சிகளுக்கும் ஒரு மாற்று தேவையாக இருப்பது வெள்ளிடைமலை. ஆனால் சரியான மாற்று இல்லாமல் கடந்த பத்தாண்டுகளாக ஒரு வெற்றிடம் நிலவி வருகிறது. 

அந்த வெற்றிடத்தை நிரப்ப பல்வேறு சக்திகள் முயன்றவண்ணம் இருக்கின்றன. 1990களில் மூப்பனார் முயன்று தோற்றார். திரைப்பட நடிகர் ரஜனிகாந்த் அரசியலில் இறங்கி தமிழ்நாட்டை உய்விக்க வேண்டும் என்று சில சக்திகள் பலகாலமாக முயன்று வருகின்றன. மற்ற நடிகர்களான விஜயகாந்த், சரத் குமார் போன்றவர்கள் சொந்தமாக கட்சிகள் ஆரம்பித்துச் செயல்படுவதும் தி.மு.க. - அ.தி.மு.க. அரசியற்கட்சிகளில் நம்பிக்கை இழந்த தமிழர்களின் ஆதரவைப் பெறும் பொருட்டே. இந்திரா காந்தி குடும்ப விசுவாசியான மூப்பனாரானாலும் சரி, அரசியல்வாதிகளாக மாற முயலும் நடிகர்கள் ஆனாலும் சரி, அவர்களுக்குத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, முன்னேற்றத்திற்கான நம்பிக்கை தரும் தெளிவான கொள்கை-செயல் திட்டங்கள் இல்லாத காரணத்தால் அவர்களால் புதிய அரசியல் சக்தியாக உருவெடுக்க இயலவில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும், தேர்தலின் போதும் நடந்த சூழலை சிறிது நினைவுகூருங்கள். ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக இருந்தார். எதிர்க்கட்சிகளின் மீது வன்முறை, ஊடகங்களின் மீது அடக்குமுறை, சில சலுகைகளுக்காக வேலை நிறுத்தம் செய்த அரசு அலுவர்களைக் கூண்டோடு பணி நீக்கம் செய்தது, மதமாற்றத் தடை, சிறுதெய்வ வழிபாட்டில் விலங்குகள், பறவைகளைப் பலி கொடுக்கத் தடை என்று பல்வேறு காரணங்களுக்காக அ.தி.மு.க. அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருந்தது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக ஈழப் போரட்டத்தை ஆதரித்துப் பேசிய வைகோ, பழ. நெடுமாறன் போன்றோரைச் சிறையிலடைத்து, நீதிமன்றத்திற்கும், சிறைச்சாலைக்கும் அல்லாட வைத்தார். எதிர்க்கட்சிகளின் முயற்சியால் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின் விடுதலை அடைந்தனர். எதிர்கட்சிகள் அனைத்தும் கூட்டணி கண்டு அ.தி.மு.கவை படுதோல்வி அடையச் செய்து 40 தொகுதிகளிலும் வென்றது. அ.தி.மு.க. வைத் தோற்கடிப்பது அப்போதைய தேவையாக இருந்தது. கூட்டணியின் வெற்றியில் ஈழத்தமிழர் பிரச்சினை பெரும்பங்கு வகித்தது.

ஆனால் அவ்வெற்றியின் பலனைப் பெருமளவு அனுபவித்த தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளோ இன்று ஈழத்தமிழருக்கு மாபெரும் துரோகமிழைத்துக் கொண்டிருக்கின்றன. ஈழத் தமிழர் பிரச்சினை கடந்த தேர்தலின் போது இருந்ததைவிட இப்போது பன்மடங்கு உக்கிரமடைந்திருக்கிறது.

தற்போதைய இலங்கைப் போர்ச்சூழலில் மிகவும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு வரும் ஈழத்தமிழர்களின் கொடூரமான மரணங்களும், உயிரோடிருப்பவர்களின் சிதைவுண்ட வாழ்வும் தமிழகத் தமிழரிடையே பேரெழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறன. மைய அரசின் அதிகாரத்திற்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சி இந்த எழுச்சியை உதாசீனப்படுத்தித் தமிழர்களைக் கொல்லும் இலங்கை அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்துகொண்டிருக்கிறது. காங்கிரஸின் தயவில் மாநில ஆட்சியதிகாரத்தை கையில் வைத்திருக்கும் தி.மு.க.வோ மக்கள் எழுச்சியைப் புரிந்துகொள்ளும் நோக்கமின்றி அல்லது புரிந்துகொண்டாலும் மைய அரசை அசைக்கும் திறனின்றி வெறும் பேச்சுகளால் காலம் கடத்தி தமிழர்களின் இறப்புகளையும், இழப்புகளையும், இன்னல்களையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இவ்வெழுச்சிகளால் தற்போதைய ஆளுங்கட்சிகள் மீது மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி தானாக தன்னை ஆட்சியில் அமர்த்திவிடுமென்ற மமதையில் சொகுசாக அமர்ந்திருக்கிறது அ.தி.மு.க. 

இந்நிலையில் தமிழகத்தின் எழுச்சியை, தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டுள்ள நீங்கள் அவர்களுக்குத் தலைமையேற்று வழிநடத்திச் செல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள். அந்த வகையில் நீங்கள் அனைவரும் ஒன்று கூடி “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு’ என்ற அமைப்பை உருவாக்கிச் செயல்படுவது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது. ஆனால் ஆறுதல் என்பது குறுகியகாலத் தேவைதான். நம்பிக்கை என்பதே நெடுங்காலத் தேவை. ஆகவே ஆறுதலை நம்பிக்கையாக மாற்றவேண்டிய கட்டாயம் உங்கள் கையில்.

ஈழத்தமிழர் பிரச்சினையையொட்டிப் பல்வேறு அறப்போராட்டங்கள் அண்மைகாலமாக தமிழ்நாடெங்கும் நடந்துவருகின்றன. இப்போராட்டங்களின் நோக்கம் இப்பிரச்சினையை நோக்கி மக்களின் கவனத்தைக் கவர்வதும், அரசுகளின் போக்கை மாற்றுவதுமாகும். ஆனால் மக்களின் கவனத்தைக் கவர்ந்த அளவுக்கு அரசுகளின் போக்கை மாற்ற இயலவில்லை. ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள், மனித சங்கிலிகள், மறியல்கள், கருப்புக் கொடிகள், கடையடைப்பு என்று எல்லாவிதமான மரபுவழிப் போராட்ட முறைகளையும் முயன்றுப் பார்த்துவிட்டீர்கள். இவை எதற்கும் அரசுகள் மசிவதாயில்லை. பிரச்சினையின் தீவிரத்தை உள்வாங்கிக் கொண்ட இளைஞர்கள் சிலரோ கையறு நிலையில் தம்மையே மாய்த்துக்கொள்வதும், கோபமுற்ற நிலையில் பொதுச் சொத்துக்களைச் சேதமாக்க முயல்வது நடக்க ஆரம்பித்துள்ளன. பெரும்பாலான மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாமல் குமைந்துக் கொண்டிருப்பர். போராட்டங்களை அரசுகள் சட்டை செய்யாத நிலையில் தொடர்ந்த போராட்டங்கள் அளிக்கும் பலன்களைவிடப் பாதகங்கள் ஏற்படக் காரணமாகலாம். இப்போரட்டங்களால் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்படுமானால் அவர்களுக்குச் சலிப்பு ஏற்படலாம். சலிப்பு வெறுப்பாக மாறலாம். 

Nallakannuஆகவே மக்களாதரவு உச்ச நிலையில் இருக்கும் இத்தருணத்தில் அதை அரசியல் சக்தியாக மாற்றியமைப்பதே அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்க முடியும். போராட்டங்கள் சாதிக்க முடியாததை, தேர்தலில் சாதிக்கலாம். சற்றும் மசியாத ஆளும் கட்சிகளுக்குத் தேர்தலிலே சரியான பாடம் கற்பிப்பதைவிட வேறு மாற்றுவழி இப்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் சரியான வாய்ப்பாக இருக்கும். ஆகவே, தலைவர்களே மக்களின் உணர்வுகளை மதிக்காத கட்சிகளுக்கு பாடம் கற்பிக்க, அவர்களின் உணர்வுகளை மதிக்கும் புதிய ஆட்சியை ஏற்படுத்த வாய்ப்பை ஏற்படுத்தித் தாருங்கள். இதன் முதல் படி இப்போது அமைந்துள்ள இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பை அரசியல் அமைப்பாக மாற்றுவதே.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அமைப்பு தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், போட்டியிடாத அமைப்புகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பு என்பதை அறிவோம். ஆயினும், இதில் உள்ள தேர்தல் அரசியல் கட்சிகள் கூட்டாக தேர்தலில் போட்டியிடுவது, அவர்களைப் பிற அமைப்புகள் ஆதரிப்பதும் இயலாததல்ல, அஃது இன்றியமையாதது. இவ்வமைப்பில் உள்ள பா.ம.க. மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலத்தில் தி.மு.க.வின் தோழமைக் கட்சியாக இருக்கிறது. ம.தி.மு.க. வும், சி.பி.ஐ.யும் அ.தி.மு.க.வுடன் கூட்டு வைத்துள்ளன. இருப்பினும் இந்த நான்கு கட்சிகளும் தற்போது கூட்டு வைத்துள்ள பெருங்கட்சிகளைக் கொண்டு ஈழத்தமிழர் பிரச்சினையில் எதுவும் செய்ய இயலவில்லை என்பது தெளிவாகிவிட்டது. ஆகவே, தொடர்ந்து அக்கட்சிகளோடு கூட்டணி வைத்துக்கொண்டு களநிலையில் மாற்றம் கொண்டுவர இயலாத இக்கூட்டமைப்பால் என்ன பயன் ஏற்படப்போகிறது?

வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் படுதோல்வி அடையப்போவது உறுதி. இக்கட்சிகளின் மீதுள்ள தீவிர எதிர்ப்பு அ.தி.மு.க.விற்கு சாதகமாக மாறுவதைத் தடுக்க வேண்டியது உங்களுடைய வரலாற்றுக்கடமை. ஆகவே, தலைவர்களே, இப்போதுள்ள கூட்டணிகளில் இருந்து விலகுங்கள். நீங்களே புதிதாக ஒரு கூட்டணியை உருவாக்குங்கள். பா.ம.க. காங்கிரஸ் கட்சியுடனான உறவை முறிக்க வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க.வுடன் தோழமை பாராட்டுவதை நிறுத்தவேண்டும். ம.தி.மு.க.வும், சி.பி.ஐ.யும் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகவேண்டும். காலச்சூழல் காரணமாக பா.ஜ.க.வில் இணைந்த திருநாவுக்கரசர் அங்கிருந்து விடுபட்டு புதிய கூட்டணியில் இணையவேண்டும். சி.பி.ஐ. தலைவர்கள் முடிந்தால் மார்க்சிஸ்ட் கட்சியில் உள்ள உங்கள் சகாக்களின் மனதை மாற்றி உங்களோடு வரச்செய்யுங்கள். அவர்கள் முடியாது என்று முரண்டு பிடித்தால் தைரியமாக அவர்களை உதறித்தள்ளுங்கள். தற்போது தனித்தியங்கும் புதிய தமிழகம் கட்சியும் இக்கூட்டணியில் சேரவேண்டும். பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., சி.பி.ஐ., புதிய தமிழகம், திருநாவுக்கரசர் இணைந்த கூட்டணியை உருவாக்குங்கள்.

எவ்வாறு காங்கிரஸ் கட்சியின் சகாப்தம் 1967 இல் முடிக்கப்பட்டதோ, அவ்வாறே தி.மு.க., அதிமுக, கட்சிகளின் தேவையும் இப்போது முடிந்துவிட்டது. அவற்றின் சகாப்தம் இந்த தேர்தலோடு முடிக்கப்பட வரவிருக்கும் தேர்தல் பிரகாசமான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இந்த அரிய வாய்ப்பை நழுவவிடாமல் புதிய சகாப்தத்தை துவக்குங்கள். இக்கூட்டணிக்கு யார் தலைமை ஏற்பது என்பது போன்ற சிறு பிரச்சினைகள் கூட்டணி உருவாவதற்குத் தடையாக இருக்க விடாதீர்கள். கருணாநிதியின், ஜெயலலிதாவின், சோனியா காந்தியின் தலைமையை ஏற்கும் மனப்பக்குவம் பெற்ற நீங்கள் உங்களில் ஒருவரின் தலைமையில் செயல்பட முடியாதா? ஒருவரே அல்லது ஒரு கட்சியே நிரந்தர தலைமை வகிக்காமல் சுழற்சி முறையில் கூட தலைமையை மாற்றலாமே. இப்போதைக்கு இக்கூட்டணியில் உள்ள மூத்த தலைவர்களான தோழர் நல்லக்கண்ணு அல்லது தோழர் தா. பாண்டியன் தலைமையில் செயல்படலாம். அல்லது தேர்தலில் போட்டியிடும் விருப்பமில்லாத ப. நெடுமாறன் தலைமையில் செயல்படலாம். இதனால் உங்கள் கட்சிகளின் தனித்தன்மைகளையோ, நோக்கங்களையோ இழக்கப்போவதில்லை.

தமிழ் மக்கள் நலனுக்காக தொலைநோக்குடன் ஒரு குறைந்தபட்ச திட்டத்தை வகுத்து அதனடிப்படையில் ஒரு நிரந்தரக் கூட்டணியாக ஒரு செயல்படலாம். இதுவரை நீங்கள் சேர்ந்த கூட்டணிகளில் இருந்து சாதித்ததை விட அதிகமாக சாதிக்கலாம். அது தேர்தல் வெற்றியானாலும் சரி, அரசியல் அதிகாரம் ஆனாலும் சரி. மக்கள் நலனை, உணர்வுகளைச் செயல்படுத்துவதானாலும் சரி முன்பிருந்ததை விட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கும்.

தலைவர்களே! மக்களின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் மீதே நம்பிக்கை வையுங்கள். மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அண்மையில் நீங்கள் அறிவித்த முழு அடைப்புப் போராட்டத்தின் முழுவெற்றியை உற்று நோக்குங்கள். அரசு எந்திரத்தின் மிரட்டல், மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆளுங்கட்சிகளின் எதிர்ப்பு, பிராதன எதிர்க்கட்சியின் ஆதரவின்மை இவற்றை எல்லாம் மீறி 90 சதவீத மக்கள் ஆதரவு நல்கியது சொல்லும் செய்தி என்ன? மக்கள் மாற்றத்திற்கு தயாராகி விட்டார்கள் என்பதையல்லவா இந்த தன்னெழுச்சியான பேராதரவு காட்டுகிறது. இதுகாறும் சிறு கட்சிகளாக, சிறு அமைப்புகளாக இயங்கி வந்த நீங்கள் இணைந்து செயல்பட்டால் உங்கள் பின்னால் அணிதிரள மக்கள் தயாராக இருப்பதையல்லவா காட்டுகிறது. ஆகவே, தலைவர்களே நம்பிக்கையுடன் புதிய தமிழகத்திற்கு அடிகோலுங்கள்.

தலைவர்களே! சிந்தியுங்கள். உங்கள் வரலாற்றுக் கடமையைத் தட்டிக் கழிக்காதீர்கள். மீண்டுமொருமுறை காங்கிரசையோ, தி.மு.க.வையோ, அதிமுகவையோ அரியணையிலேற்றித் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்காதீர்கள். நீங்கள் இன்று இந்த வரலாற்றுக் கடமையைச் செய்யத் தவறினால், உங்களுக்கு பதிலாக நாளை புதிய தலைமுறையிலிருந்து ஒரு புதிய இயக்கம் உருவாகும். புதிய தலைமை உருவாக, தற்போதைய நிகழ்வுகள் அதற்கான விதை ஊன்றப்பட்டு விட்டதையே எடுத்துரைக்கின்றன. அது உருவாக்கும் பேரலையில் இப்போதுள்ள பெரிய கட்சிகள் மட்டுமல்ல, அவற்றோடு சேர்ந்தால் நீங்களும் அடித்துச்செல்லப்படுவீர்கள். காலத்தின் தேவையை உணர்ந்து துணிவுடன் தலைமை ஏற்று தமிழ் மக்களை வழிநடத்துங்கள். மக்கள் சக்தி உங்கள் பின்னால் திரளும்.

- மாற்றம்நம்பி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It