ambedkar 216தீண்டாமையின் அடிமுலம் என்ன? ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று, இத்துறை முற்றிலும் ஆராயப்படவில்லை. சமூகவியல் ஆராய்ச்சியாளர் எவரும் இதில் எத்தகைய கவனமும் செலுத்தவில்லை. சமூகவியலாளர்கள் இவ்வாறு என்றால், இந்தியாவையும் அதன் மக்களையும் பற்றி எழுதியுள்ள எழுத்தாளர்களும் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறித்து அவர்களது கண்ணோட்டத்தின்படி கண்டித்துவிட்டு அத்துடன் நிறுத்திக் கொண்டுவிட்டனர். நான் ஆராய்ந்தவரை, தீண்டாமை எவ்வாறு தோன்றிற்று என்பது குறித்து ஒரே ஓர் ஆசிரியர்தான் ஓரளவு விளக்க முயன்றிருக்கிறார். திருவாளர் ஸ்டான்லி ரைஸ் என்பார்தான் அவர். திரு.ரைஸ் பின்வருமாறு கூறுகிறார். (இந்து பழக்க வழக்கங்களும் அவற்றின் தோற்றமும்: பக்கங்கள் 113-115)

“இந்த ஒதுக்கப்பட்டவர்கள் வெற்றிகொள்ளப்பட்ட மக்களில் எஞ்சிப் பிழைத்தவர்களாக இருப்பதற்கு வலுவான வாய்ப்பு உண்டு. இவர்கள் தொழிலுடன் இணைந்த சாதிகளைச் சேர்ந்தவர்களாகி, முரசுகொட்டும், தோல்பதனிடும், விவசாயக் கூலி வேலை செய்யும் சமூகங்களாயினர்; அடிமைகள் என்றமுறையில் ஆரம்ப காலம் முதலே இவர்கள் தாழ்ந்த நிலைக்கு, இழிந்த நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவர்கள் ஆரியர்களால் வெல்லப்பட்ட இனத்தினரல்லர்; பறையர்கள் பூர்வீகக் குடிகளைச் சேர்ந்தவர்கள்; திராவிடர்களால் வெல்லப்பட்டவர்கள். இவர்கள் பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களாதலால் எப்போதுமே திருமணத்தோடு நெருங்கிய பிணைப்புடைய ஒத்த குலங்களில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை; ஏனென்றால் அவ்வாறு செய்வது நெருக்கமாகப் பழகுவதற்கு இட்டுச் சென்று, படிப்படியாக இனம் இழிவுறுவதற்கு வழிவகுத்து விடும். எனினும் இந்தத் தடையை முற்றிலுமாக பிரயோகிக்க முடியாது; எப்போதுமே இதில் விதிவிலக்குகள் இருக்கவே செய்யும். நூற்றாண்டுக் காலத்தில் சுமார் நாற்பது அல்லது அதற்கு மேற்பட்ட தவிர்க்க முடியாத இனக்கலப்புகள் ஏற்பட்டு, பூர்வீகக் குடிகளுக்கும் ஆரம்ப காலத் திராவிடர்களுக்கும் இடையேயான இன பாகுபாடுகள் துடைத்தெறியப்பட்டிருக்கலாம். தாங்கள் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்த சூழ்நிலைக்கு மத்தியில் இந்த மக்கள் இந்து சமூக அமைப்பில் மிகக் குறைந்த அளவு பங்கெடுத்துக் கொள்ளும் வகையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஏனென்றால் இந்துமதம் சகிப்புத்தன்மை கொண்ட கோட்பாடுகளையும், சகிப்புத் தன்மையற்ற கோட்பாடுகளையும் ஒரு சேரக் கொண்டிருக்கிறது. அது மதமாற்றம் செய்வதில் ஈடுபடுவதில்லை; ஒரு முசல்மானாவது போல் நீங்கள் ஓர் இந்துவாகி விட முடியாது; அதன் அரவணைப்பில் இருப்பவர்கள் மிகக் கண்டிப்பான, கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டாக வேண்டும். ஆனால் தனது ஒழுங்கு முறைகளை ஏற்றுக்கொள்வதற்குச் சித்தமாக உள்ள ஆதி பழங்குடி மக்களை அணைத்துக் கொள்வதற்கு அது எப்போதுமே ஆர்வமாக இருக்கிறது. எனினும் அதேசமயம் இந்து மதம் அவர்களுக்கு மிகக்கீழான இடத்தையே ஒதுக்குகிறது; அவர்களைத் தூரத்திலேயே வைத்திருக்கிறது; கோவில்களுக்குள் அவர்களை அனுமதிக்க மறுக்கிறது. எனவே, இந்த அம்சங்களை நாம் கருத்திற்கொண்டு பார்க்கும்போது மனித இன ஆய்வு அடிப்படையிலான வாதங்கள் எவ்விதத்திலும் முடிவானதல்ல என்றே தோன்றுகிறது; ஏனென்றால் இந்த அம்சங்கள் மூல இன இயல்புகளைப் பெரிதும் மாற்றியிருக்கக்கூடும்; அவற்றின் கண்ணோட்டத்தையும் மாற்றியிருக்கும். ஆக, வெற்றி கொள்ளப்பட்ட குடியிருப்பாளர்கள்பால் ஆரியர்கள் கைக்கொண்ட அதே நடைமுறைகளையே பறையர்கள்பால் திராவிடர்கள் மேற்கொண்டார்கள். அவர்கள் அவர்களை அடிமைகள் நிலைக்குத் தாழ்த்தினார்கள்; தங்களது தகுதிக்கும் மதிப்புக்கும் கீழானதெனத் தாங்கள் கருதிய பணிகளை அவர்களுக்கு ஒதுக்கினார்கள்; திருமண விஷயமும் இதற்கு விதிவிலக்கல்ல.

சமூகக் கட்டுப்பாட்டில் அடங்கியிருந்த ஆன்மீக அம்சங்களாலும் பறையர்கள் மிகப் பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டனர். இத்தகையவர்களை குலமரபுச் சின்னம் கொண்ட குடும்பத்தில் அனுமதிப்பது சமூக விதிமுறைகளுக்குப் புறம்பானது மட்டுமல்ல, குலதெய்வத்தின் கோபத்துக்கும் ஆளாவதாகும். ஆனால் இவற்றை எல்லாம்விட வழிபாட்டுக்காக அவர்களைப் புனிதமான கோவிலுக்குள் அனுமதிப்பது இன்னும் பெரும் நாசத்தை உண்டுபண்ணும்; வானிலிருந்து நெருப்பு மழை பொழிந்து கிராமத்தைச் சுட்டெரித்துவிடும். இதேபோன்று கொராவும், தாதனும், அபிராமும் புனிதமற்ற முறையிலும் சாஸ்திர விரோதமாகவும் தீயவழிபாடு செய்வதும் புனிதத்தன்மையை மதியாது செய்யப்படும் அவச்செயலாகும். எனினும் இவ்வாறு வழிபாட்டில் தீவிர பங்குகொள்வதினின்று பறையர்கள் தடுக்கப்பட்டாலும், இது சம்பந்தமான எடுபிடி வேலைகளை அவர்கள் செய்யலாம்; ஆனால் அவர்களால் வழிபாட்டுத்தலத்துக்கு எவ்வகையிலும் மாசு ஏற்பட்டு விடக்கூடாது. கிறித்துவ மதப்பிரயோகத்தின்படி பறையன் என்பவன் பலிபீடத்தில் சமய வினைமுறைகளை ஆற்றவோ, சமயச் சொற்பொழிவுகள் செய்யவோ, ஏன் இன்னும் சொல்லப்போனால் திருக்கூட்டத்தில் ஒருவனாகக் கூட இருக்கக் கூடாது. எனினும் கோவில் மணியை அடிக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு நிபந்தனை உண்டு – அவன் தன்னை ஆன்மீகக் கூட்டுறவு கொண்டவனாகக் கருதக் கூடாது, உண்மையில் அவன் திருச்சபையிலிருந்து விலக்கப்பட்டவன்.

எனவே, அவன் ஆசாரப்படி தூய்மையற்றவன். என்னதான் தண்ணீரைக் கொண்டு சுத்தப்படுத்தினாலும், சுத்திகரிப்பு சடங்குகள் செய்தாலும் சமூகக் கட்டுப்பாடு உண்டு பண்ணியுள்ள துடைத்தழிக்க முடியாத கறையை அகற்ற முடியாது. அவனைத் தொடுவதோ, அவனுடன் எத்தகைய தொடர்பும் வைத்துக்கொள்வதோ, தோழமை பூணுவதோ கூடாது; அது ஒருவகையான தூய்மைக்கேட்டை, தீட்டைப் பரப்பும்; ஒரு தொற்றுபோல் ஆகிவிடும். உங்கள் வயலை உழுவதற்கு அவனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; ஏனென்றால் அது எத்தகைய தொடர்பையும் ஏற்படுத்தாது; கட்டளை பிறப்பிப்பதைத் தவிர அவனுக்கும் விலங்குகளுக்கும் மேற்கொண்டு வேறு எந்தத் தொடர்பும் இருக்காது. தீட்டு முத்திரை அவனது நெற்றியில் பதிக்கப்பட்டுள்ளது. அவனது குருதி நாளங்களில் இரத்தம் ஓடுவது போல் அந்தக் கறை அவனிடம் உள்ளார்ந்து பொதிந்திருக்கும். இந்தியர்களின் பார்வையில் இழிந்தவனாக, மதிப்பற்றவனாகக் காட்சியளிக்கும் அவன் தான் செய்யவேண்டியிருக்கும் தொழில்கள் காரணமாக மேலும் இழிந்தவனாக, அற்பனாக, நிந்தனைக்குரியவனாக ஆகிறான்.”

     திரு.ரைசின் கோட்பாடு இரு பகுதிகளைக் கொண்டது. அவரது கருத்துப்படி தீண்டாமையின் அடிமூலத்தை இரு சந்தர்ப்பங்களில் காணலாம் – இனம், தொழில் ஆகியவையே அவை. இந்த அம்சங்கள் தனித்தனியாகப் பரிசீலிக்கப்பட வேண்டியவை என்பது தெளிவு. இனப்பாகுபாடு தீண்டாமைக்கு அடித்தளமாக, அஸ்திவாரமாக அமைந்துள்ளது என்ற அவரது கோட்பாடு இந்த இயலில் ஆராயப்படும்.

     திரு.ரைசின் இனக்கோட்பாடு இரண்டு அம்சங்களைக் கொண்டது:

அந்நியப் படையெடுப்பாளர்கள் இந்தியாமீது நடத்திய படையெடுப்புகள், அவர்கள் பெற்ற வெற்றிகள், இதன் விளைவாகத் தோன்றிய சமூக, கலாசார அமைப்புகள் முதலியவை சம்பந்தப்பட்ட முழுப் பிரச்சினையையும் இந்தக் கோட்பாடு எழுப்புகிறது. இந்தியாவின் மீது இரண்டு படையெடுப்புகள் நடைபெற்றதாக திரு.ரைஸ் கூறுகிறார். முலாவது படையெடுப்பு திராவிடர்கள் இந்தியா மீது நடத்திய படையெடுப்பு. அவர்கள் தீண்டப்படாதோரின் மூதாதையர்களான திராவிடரல்லாத பழங்குடி மக்களை வெற்றி கொண்டு, அவர்களைத் தீண்டப்படாதவர்களாக்கினர். இரண்டாவது படையெடுப்பு ஆரியர்கள் இந்தியாவின்மீது நடத்திய படையெடுப்பு. அவர்கள் திராவிடர்களை வெற்றிகொண்டனர். வெற்றிகொண்ட ஆரியர்கள் வெல்லப்பட்ட திராவிடர்களை எவ்வாறு நடத்தினார்கள் என்று திரு. ரைஸ் கூறவில்லை. இதற்குப் பதில் கூறவேண்டும் என்று வலியுறுத்தினால், திராவிடர்களை ஆரியர்கள் சூத்திரர்களாக்கினர் என்று அவர் கூறக்கூடும். ஆக இவ்வாறு இங்கு ஒரு சங்கிலித் தொடரைக் காண்கிறோம். திராவிடர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து பூர்வீகக் குடிகளை வெற்றிக்கொண்டு அவர்களைத் தீண்டப்படாதவர்களாக்கினர். திராவிடர்களுக்குப் பிறகு ஆரியர்கள் வந்தார்கள். ஆரியர்கள் திராவிடர்களை வெற்றி கொண்டு அவர்களைச் சூத்திரர்களாக்கினர். இந்தக் கோட்பாடு மிகவும் யாந்திரீகமானது, வெறும் ஊகத்தை அடிப்படையாகக் கொண்டது, சூத்திரர்கள் மற்றும் தீண்டப்படாதவர்களின் அடிமூலம் சம்பந்தப்பட்ட சிக்கலான விஷயங்களை மேலெழுந்தவாரியாக எடுத்துரைக்க இது முயல்கிறது.

     பண்டைய இந்திய வரலாற்றை ஆராயும் மாணவர்கள் பண்டைக்காலம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடும்போது, அடிக்கடி நான்கு பெயர்களை அவர்கள் எதிர்ப்படுகிறார்கள்; ஆரியர்கள், திராவிடர்கள், தாசர்கள், நாகர்கள் என்பவையே அந்த நான்கு பெயர்கள். இந்தப் பெயர்கள் எதைக் குறிக்கின்றன? இந்தப் பிரச்சினை ஒருபோதும் ஆராயப்பட்டதில்லை. ஆரியர்கள், திராவிடர்கள், தாசர்கள், நாகர்கள் என்ற இந்தப்பெயர்கள் பல்வேறு இனங்களின் பெயர்களா அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களின் வெவ்வேறு பெயர்களா? அவர்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் பொதுவான அனுமானம். இந்து சமுதாயத்தின் சமூகக் கட்டமைப்பை, குறிப்பாக அதன் வர்க்க அடிப்படையை விளக்கமுயலும் திரு.ரைஸ் போன்றவர்களின் கோட்பாடுகள் இந்த ஊகத்தின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன. இத்தகைய ஒரு கோட்பாட்டை ஏற்குமுன் அதன் அடித்தளங்களை ஆராய்வது அவசியம்.

     முதலில் ஆரியர்களுடன் ஆரம்பிப்போம். அவர்கள் ஒரே இனத்தவர்கள் அல்ல என்பதில் ஐயம் ஏதும் இருக்க முடியாது. அவர்கள் இரு பிரிவினர்களாக பிரிந்திருந்தனர் என்பதிலும் ஐயமில்லை. (இந்தப் பொருள் குறித்த விரிவான ஆய்வைசூத்திரர்கள் யார்?” என்ற எனது நூலில் பார்க்கவும்) இந்த இரு பிரிவினரும் வெவ்வேறு கலாசாரங்களைக் கொண்டிருந்தனர் என்பதும் ஐயத்துக்கு அப்பாற்பட்டது. இவர்களில் ஒரு பிரிவினர் ரிக்வேத ஆரியர்கள் எனவும், மற்றொரு பிரிவினர் அதர்வண வேத ஆரியர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். கலாசார ரீதியில் அவர்கள் முற்றிலும் வேறுபட்டிருந்தனர். ரிக்வேத ஆரியர்கள் யக்ஞத்தில் நம்பிக்கை வைத்திருந்தனர். அதர்வண வேத ஆரியர்களோ பசுக்களில் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களுடைய புராணங்களும் வெவ்வேறானவை. ரிக் வேத ஆரியர்கள் ஊழி வெள்ளக் கோட்பாட்டை ஆதரித்தனர்; தங்களது இனம் மனுவிடமிருந்து தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதினர். அதர்வண வேத ஆரியர்கள் ஊழி வெள்ளக் கோட்பாட்டை ஆதரிக்க வில்லை; ஆனால் தங்களது இனம் பிரம்மாவிடமிருந்து அல்லது பிரஜாபதியிடமிருந்து உருவானதாக நம்பினர். அவர்களது இலக்கிய வளர்ச்சிப் போக்குகளும் வேறுபட்ட திசைகளில் செல்லுகின்றன. ரிக்வேத ஆரியர்கள் பார்ப்பனங்களையும், சூத்திரங்களையும், ஆரண்யகங்களையும் படைத்தனர். அதர்வண வேத ஆரியர்களோ உபநிடதங்களைத் தோற்றுவித்தனர். அவர்களிடையே கலாசார முரண்பாடு மிகப் பெருமளவுக்கு நிலவியது. அதர்வண வேதத்தின் அல்லது உபநிடதங்களின் புனிதத்தை, அருந்தூய்மையை ரிக்வேத ஆரியர்கள் நீண்ட நெடுங்காலம் வரை அங்கீகரிக்கவில்லை; அப்படியே அங்கீகரித்த போதிலும் அதனை வேதாந்தம் என்றே குறிப்பிட்டனர். வேதாந்தம் என்னும் பதத்துக்கு இன்று வேதங்களின் சாரம் என்று பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் ரிக்வேத ஆரியர்கள் அன்று இச்சொல்லை இப்பொருளில் பயன்படுத்தவில்லை; மாறாக, வேதாந்தம் என்றால் வேதங்களின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்ற அர்த்தத்திலேயே அதனைப் பயன்படுத்தினர்; எனவே, வேதாந்தம் என்பது வேதங்களைப் போன்று அத்தனைத் தூய்மையானதல்ல என்று கூறினர்; அதனைப் பயில்வது அனுலோமம் என்று கருதினர். ஆரியர்களின் இந்த இரு பிரிவினரும் இரண்டு வேறுபட்ட இனங்களா என்பது நமக்குத் தெரியாது. ஆரியன் என்னும் சொல் ஓர் இனத்தைக் குறிக்கும் சொல்லா என்பதையும் நாம் அறியோம். எனவே அப்படியிருக்கும்போது, ஆரியர்கள் ஒரு தனி இனம் என்ற அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றாசிரியர்கள் ஆய்வு நடத்தி வருவது தவறு.

     இதே போன்று தாசர்களை நாகர்களிடமிருந்து வேறுபடுத்திக் காண்பதும் ஒரு பெரிய தவறாகும். தாசர்கள் என்பவர்கள் நாகர்களே ஆவர். தாசர்கள் வேறல்ல. வேதகால இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். தாசர்கள் என்பது நாகர்களுக்குத் தரப்பட்டிருக்கும் வேறு பெயரே அன்றி வேறல்ல. வேதகால இலக்கியத்தில் நாகர்கள் எவ்வாறு தாசர்கள் என அழைக்கப்பட்டனர் என்பதைப் புரிந்து கொள்வது சிரமம் ஒன்றுமல்ல. தஹாகா என்னும் இந்தோ-ஈரானிய சொல்லின் சமஸ்கிருத வடிவமே தாசர் என்பது. தஹாகா என்பது நாகர்களுடைய மன்னனின் பெயர். (இந்த விஷயம் குறித்துசூத்திரர்கள் யார்?” என்ற எனது தொகுப்பை பார்க்கவும்) எனவே, நாகர்களை அவர்களுடைய மன்னன் தஹாகாவின் பெயரால் ஆரியர்கள் அழைக்க ஆரம்பித்தனர்; இதுவே அதன் சமஸ்கிருத வடிவத்தில் தாசர் என்றாகி அனைத்து நாகர்களையும் குறிப்பிடும் பொது இனப்பெயராயிற்று.

     சரி, இந்த நாகர்கள் யார்? அவர்கள் ஆரியரல்லாதவர்கள் என்பதில் ஐயமில்லை. வேதகால இலக்கியத்தை (அடுத்த சில பக்கங்களில் கூறப்படும் விவரங்களுக்கு இந்திய வரலாற்று காங்கிரசில் நாகர்களையும் நாகா சமயக் கோட்பாட்டு முறையையும் பற்றி குமாரி கருணாகர குப்தா சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையைக் காண்க. (1939) பக்கம் 214 லிருந்து) ஆராய்ந்து பார்த்தோமானால், ஒரு முரண்பாட்டு உணர்வை, இருண்மை உணர்வை அது வெளிப்படுத்துவதைப் பார்க்கிறோம்; இரு வேறுபட்ட கலாசார, எண்ணப்போக்குகளுக்கு இடையே ஒரு மேலாதிக்கப் போட்டி நிலவுவதைக் காண்கிறோம். ஆரிய தெய்வமாகிய இந்திரனுக்கு எதிரியான அகி வித்ரன் வடிவத்தில் சர்ப்ப தெய்வம் ரிக் வேதத்தில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த சர்ப்ப தெய்வம்தான் பிற்காலத்தில் நாகம் என்று பிரபலமடைந்தது. ஆனால் ஆரம்பகால வேத இலக்கியத்தில் இந்தப் பெயரை நாம் காண முடியவில்லை. அப்படியே சதபத பார்ப்பனத்தில் (XI. 2.7.12) இப்பெயர் முதல்முறையாகத் தோன்றும்போது கூட அது மாபெரும் சர்ப்பத்தைக் குறிக்கிறதா அல்லது ஒரு பிரம்மாண்டமான யானையைக் குறிக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும் இது அகி வித்ரனின் ஆற்றலை மூடி மறைத்து விடவில்லை; நீருக்கு அடியில் இருந்து கொண்டு அல்லது மறைந்துகொண்டு, தேவலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள சகல நீர்நிலைகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவனாக அவன் எப்போதுமே ரிக் வேதத்தில் சித்தரிக்கப்படுகிறான்.

     அகி வித்ரனைப் பற்றிக் குறிப்பிடும் பாசுரங்களிலிருந்து அவன் ஆரிய குலங்களால் வழிபடப்படுபவன் அல்ல என்பதும், எதிர்த்துப் போராட வேண்டிய ஓரளவு சக்தி வாய்ந்த தீய ஆவி என்பதும் தெளிவாகிறது.

     ரிக் வேதத்தில் நாகர்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பதானது நாகர்கள் மிகப் பண்டைக் காலத்து மக்கள் என்பதைக் காட்டுகிறது. நாகர்கள் எவ்வகையிலும் ஆதிவாசிகளோ அல்லது நாகரிகமற்ற மக்களோ அல்ல என்பதையும் இங்கு நினைவிற் கொள்ள வேண்டும். நாகா மக்களுக்கும் இந்தியாவின் அரச குடும்பங்களுக்கும் இடையே கலப்புத் திருமணம் மூலம் மிக நெருங்கிய உறவு இருந்ததை வரலாறு காட்டுகிறது. கடம்ப மன்னன் கிருஷ்ணவர்மன் (.. VII. பக்கம் 34) குறித்த தேவகிரி ஆவணம் கடம்ப குலத் தோற்றத்தை நாகர்களுடன் பிணைக்கிறது. கி.பி.9 ஆம் நூற்றாண்டு ராயகோட்டா (.எல். XV, பக்கம் 245) பட்டயம் ஒரு நாகியுடன் அஸ்வத்தாமனுக்கு நடைபெற்ற திருமணத்தைப் பற்றியும், இந்தத் திருமணத்தின் மூலம் பிறந்த ஸ்கந்த சிஷ்யனால் பல்லவ வம்சம் தொடங்கப்பட்டதைப் பற்றியும் விவரிக்கிறது. கி.பி.9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு பல்லவக் கல்வெட்டிலிருந்து வீரகூர்ச்சன் அந்த வம்சத்தைச் சேர்ந்த மன்னனாக இருந்தான் என்று தெரிகிறது. அவன் ஒரு நாகியைத் திருமணம் செய்து கொண்டு அரசுரிமையைப் பெற்றான் என்றும் அதே கல்வெட்டில் காணப்படுகிறது. (எஸ்..I, II பக்கம் 508) வாகாடக மன்னன் பிரவரசேனனுடைய மகன் கௌதமிபுத்ரன் (.எல்.XV பக்கம்41) பரசிவ மன்னன் பவ நாகனுடைய மகளைத் திருமணம் செய்துகொண்டான் என்பது வரலாற்று உண்மை. இவ்வாறே இரண்டாம் சந்திரகுப்தர் ‘நாக குல’த்தைச் சேர்ந்த இளவரசி குவேர நாகாவைத் திருமணம் செய்துகொண்ட விவரமும் வரலாற்றில் காணக்கிடக்கிறது. ஆரம்பக்கால சோழ மன்னனான கோக்கிள்ளி ஒரு நாகா இளவரசியைத் திருமணம் செய்து கொண்டதாக ஒரு தமிழ்க் கவிஞர் குறிப்பிட்டிருக்கிறார். (.எல். XV பக்.249) வீரமும் கம்பீரமும் சுடர்விடும் தனது அழகால் பெரும்புகழ் பெற்ற நாகா இனத்து நங்கையைக் கைபிடித்த பெருமை ராஜேந்திர சோழனுக்கு உண்டு. (.. XXII பக் 144-149) பரமார மன்னன் சிந்துராஜா (இவன் கி.பி.10 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அரசாண்டதாகத் தெரிகிறது) சசிபிரபா என்ற நாகா இளவரசியை மணந்துகொண்டதை நவசகசங்க சரித்திரம் விவரிக்கிறது. இந்தத் திருமணத்தை நேரில் கண்டதுபோன்ற தத்ரூப வருணனை இதற்குப் பின்னால் ஏதேனும் வரலாற்று அடிப்படை இருக்க வேண்டும் என்று நம்மை எண்ணத் தூண்டுகிறது. (..., பக்.229) வி.எஸ். கி.பி.1030-933 ஆம் வருட ஹர்ஷர் கல்வெட்டிலிருந்து முதலாம் குவாகனைப் பற்றித் தெரிந்து கொள்கிறோம். விக்ரகராஜ சஹ மன்னனிலிருந்து மேல்நோக்கிச் செல்லும் வம்சாவளிப் பட்டியலில் ஆறாவது மன்னனாக இடம்பெற்றிருக்கும் இவன் 9 ஆம் நூற்றாண்டு மத்தியவாக்கில் ஆட்சி செய்திருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த மன்னன் “நாகர்களும் ஏனைய இளவரசர்களும் கூடியிருந்த அவையில் புகழ்பெற்ற வீரனாகத் திகழ்ந்தான்.” (.. பக்கம் 229) ஒரிசாவின் பௌம் அரசகுலத்தைச் சேர்ந்த சனதிகாரன் அநேகமாக கி.பி.921 ல் அரசாண்டிருக்கக் கூடும் என்று தெரிகிறது. இவன் நாகா குடும்பத்தைச் சேர்ந்த திரிபுவன மகா தேவியை மணம் செய்து கொண்டதாக அவனுடைய புதல்வனது கல்வெட்டு ஒன்றில் கூறப்பட்டிருக்கிறது. (ஜே.பி..ஆர்.எஸ். XVI, பக்கம் 771)

     நாகர்கள் உயர்ந்த கலாசாரத் தரத்தை எய்தியிருந்தது மட்டுமன்றி, இந்தியாவில் ஒரு கணிசமான பகுதியில் அவர்கள் ஆட்சி செய்தும் வந்தனர் என்பதையும் வரலாறு காட்டுகிறது. மகாராஷ்டிரம்தான் நாகர்களின் தாயகம் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. அதன் மக்களும் மன்னர்களும் நாகர்களாகவே இருந்தனர். (ராஜ்வாடே)

     கிறித்தவ சகாப்தத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் ஆந்திர தேசமும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளும் நாகர்களின் ஆதிக்கத்தில் இருந்து வந்தன என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட சான்றுகள் உள்ளன. சாதவாகனர்களும் அவர்களுடைய மரபில் வந்த சுதகுல சதகர்ணிகர்களும் ஏறத்தாழ நாகர்களின் குருதிவழி வந்தவர்களே ஆவர். டாக்டர் எச்.சி.ராய் சௌதரி சுட்டிக்காட்டியிருப்பதுபோல், துவத்ரிம சத்புகலித்தா சாதவாகன அரசப் பரம்பரையை சேர்ந்த புராணப் புகழ் பெற்ற சாலிவாஹனனையே குறிக்கிறது; இது பார்ப்பன – நாகா கலப்பினமாகும். (.பி.எச்.., .280) இவர்களது அரசவம்சப் பட்டியல்களில் நாகா பெயர்கள் இடம்பெற்றிருப்பதிலிருந்து இதனை நன்கு தெரிந்து கொள்ளலாம். சாதவாகன ஆட்சியின் முடிவு நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் நாகர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக வளர்ச்சியடைந்தனர். இதனை பல விவரங்கள் மெய்ப்பிக்கின்றன. பிரதான சாதவாகன கால்வழியின் கடைசி மன்னனான புலுமவி ஆட்சிக் காலத்தில் ஸ்கந்தநாகன் என்ற குலத்தலைவன் பெல்லாரி மாவட்டத்தை ஆண்டு வந்ததாகத் தெரிகிறது. இரண்டாவதாக, சுது மன்னன் ஒருவனின் புதல்வியான நாகா முலனிகா அவளுடைய மகனான சிவகந்தநாகா - ஶ்ரீயுடன் சேர்ந்து நாகர்களின் ஒரு நன்கொடையாக அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மரபுவழியைச் சேர்ந்த எல்லா நாகா மன்னர்களும் ஒரே பெயரைக் கொண்டிருப்பது நாகர்களுடன் இவர்களுக்கு இருந்த மிகவும் நெருங்கிய தொடர்பைக் குறிக்கிறது. மூன்றாவதாக, சோரிங்கோயின் தலைநகரமான உரகபுரா என்னும் பெயர் தனியொரு நாகா மன்னனின் ஆட்சியைக் குறிக்கவில்லை, மாறாக நீண்டகாலமாக அப்பகுதியில் ஒரு நாகா குடியேற்றம் இருந்ததையே குறிக்கிறது.

     வைர மணல் பரப்புக்கு அருகே அதாவது கராச்சிக்கு (கன்னிங்ஹாம், ., இந்திய மண்ணூல், பக். 611-612) அருகே மஜேரிகா என்னும் ஒரு நாகா நாடு இருந்து வந்ததை இலங்கை மற்றும் சயாமில் கிடைத்த பௌத்த தகவல்களிலிருந்து அறிகிறோம்.

     அடுத்தது, கி.பி.4 ஆம் நூற்றாண்டின் மூன்றாவது பகுதியிலும், நான்காம் பகுதியின் ஆரம்பத்திலும் வட இந்தியாவில் பல நாகா மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்; புராணங்களிலிருந்தும் கல்வெட்டு மற்றும் நாணயங்களின் சான்றுகளிலிருந்தும் இது தெள்ளத்தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. விதிசா, காம்பாவதி அல்லது பத்மாவதி, மதுரா ஆகிய மூன்று சுயேச்சையான நாகா அரச பரம்பரையினரைப் பற்றித் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது; இவற்றின் முக்கியத்துவம் பற்றி எத்தகைய ஐயத்துக்கும் இடமில்லாத வகையில் இது உள்ளது. பரசிவ வம்சத்தைச் சேர்ந்த வெளிஉலகிற்கு தெரிந்த ஒரே மன்னனான பவ நாகாவின் பெயர் அவனை நாகாக்களுடன் இணைப்பதாகத் தோன்றுகிறது. இரண்டாவது பிரிவைச் சேர்ந்த மன்னர்களின் நாணயங்களைப் பற்றியோ, அலகாபாத் தூபி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் அச்சுதகணபதி நாகா அல்லது நாகசேனா இவர்களை புராணகால நாகா மன்னர்களுடன் இனம் காணுவது பற்றியோ இங்கு விவாதிப்பது சாத்தியமல்ல. (ஜி.எம்.. பக்.23-24) பண்டைய இந்திய வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் எல்லா நாகர்களிலும் கி.பி.4 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த வட இந்திய நாகா அரச பரம்பரையினரே மிகப் பிரபலமானவர்களாகவும் வரலாற்று ரீதியில் ஐயத்துக்கிடமற்றவர்களாகவும் தோன்றுகின்றனர். (பி.எச்..., .364) நாகபட்டாவும் லாகூர் செப்பு முத்திரையில் (ஜி.ஜி.. .284) குறிப்பிடப்பட்டிருக்கும் அவனுடைய புதல்வன் மகாராஜா மோகேஸ்வர நாகாவும் இந்த மூன்று பிரிவினரில் ஏதேனும் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களா அல்லது அவர்களே ஒரு தனி நாகா அரச பரம்பரையினரைச் சேர்ந்தவர்களா என்பது தெரியவில்லை. எனினும் வட இந்தியாவில் குஷானர்களின் ராஜ்யம் நாகர்களால் வெற்றி கொள்ளப்பட்டு கி.பி.4 ஆம் நூற்றாண்டில் மறைந்தது என்று டாக்டர்.சி.சி.ராய் சௌதரி தெரிவித்துள்ள கருத்தை இவை யாவும் உறுதி செய்வதாக இருக்கிறது. இந்த நாகர்கள் உத்தரபாதத்தின் பல்வேறு பகுதிகளில் அரசாண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்; பின்னர் சமுத்திரகுப்தனின் பிரம்மாண்டமான படையெடுப்பு அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும்.

     எனினும் ஸ்கந்தகுப்தன் காலத்தில் சர்வநாகா என்பவன் அன்டர்வேதியின்’ ஆளுநராக இருந்ததைப் பார்க்கிறோம். (ஜி..பக்.68) குறிப்பாக சௌராஷ்டிரா மற்றும் பாருகச்சாவின் சுற்றுவட்டாரங்களில் கி.பி.6 ஆம் நூற்றாண்டுவரை நாகர்கள் பிரதானமான இடத்தை வகித்து வந்ததாகத் தெரிகிறது. ஸ்கந்தகுப்தன் நாகர்களின் கலகத்தைக் கடுமையாக அடக்கியதை ஜூனாகத் கல்வெட்டிலிருந்து தெரிந்து கொள்கிறோம். (ஜி.. பக்.59) புரோச்சைச் சேர்ந்த பிரிஹூல் லாகா பகுதியை ஆண்டுவந்த காட்டுபகுதி மக்களான நாகர்களை கி.பி. 570ல் முதலாம் தாதா குர்ஜாரா வேரறுத்ததாகக் கூறப்படுகிறது. (.. XIII, பக்.82) இரண்டாம் துருவசேனாவின் பட்டயம் (பி.காஸ், பக்.115) (ஜி.எஸ்.334, கி.பி.645) துதகாவை பிரமத்ரி ஶ்ரீநாகா என்று குறிப்பிடுகிறது. (...பக்.92)

     நாகர்களின் அடுத்த முக்கியமான புத்தெழுச்சி குறிப்பாக மத்திய இந்தியாவில் கி.பி.9 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது. கி.பி.800ல் கோசலத்தைச் சேர்ந்த ஶ்ரீபுரத்தின் மகாராஜா திவாரதேவா ஒரு நாகா குலத்தைத் தோற்கடித்ததாகத் தெரிகிறது. (ஜி.. பக்.298) இதற்கு சிறிது காலத்திற்குப்பிறகு, நாகர்களைப் பற்றிய இரண்டு குறிப்புகளை வங்கக் கல்வெட்டில் காண்கிறோம். மகாமண்டலிக ஈஸ்வர கோஷாவின் ராம்கஞ்ச் ஆவணம் தெக்காரியைச் சேர்ந்த ஒரு கோஷா நாகா குடும்பத்தை அறிமுகம் செய்கிறது; இக்காலப் பகுதி 11 ஆம் நூற்றாண்டாகும். கி.பி.12 ஆம் நூற்றாண்டில் ஹரிவர்மதேவாவிடம் அமைச்சராக இருந்த பட்டா பவதேவாவைச் சேர்ந்த புவனேஸ்வர பிரசாஸ்தி தன்னால் நாகா மன்னர்கள் அழிக்கப்பட்டதைக் கூறுகிறார். பவ-பூஷண சந்ததி ராஜ்யமான உத்கலம் ராமபாலாவால் வெற்றிகொள்ளப்பட்டதை ராமச்சரிதம் குறிப்பிடுகிறது. ஆனால் இங்கு நாகர்கள் குறிப்பிடப்படுகிறார்களா அல்லது சந்திராக்கள் குறிப்பிடப்படுகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அநேகமாக இங்கு நாகர்கள்தான் குறிப்பிடப்படுவதாக இருக்கவேண்டும். ஏனென்றால் அவர்கள்தான் அதிகம் பிரபலமானவர்கள். (பண்டர்கரின் பட்டியல் எண்.2100)

     பொகவதி மற்றும் நாகவம்சியின் கோமான்கள் என்று தங்களை அழைத்துக்கொண்ட சேந்த்ரகா, சிந்தா, சிந்தகா வம்சத்தின் பல்வேறு பிரிவினர் கி.பி.10-12 ஆம் நூற்றாண்டில் மத்திய இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக பாஸ்டரில் படிப்படியாகப் பரவிவந்தனர். பேகூரைச் சேர்ந்த நாகத்தராக்களும், 10ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்றில் (வங்கக் கல்வெட்டு III, அடிக்குறிப்பு, 30) குறிப்பிடப்படுகின்றனர். வீரமகேந்திர மன்னனை எதிர்த்து மேற்கு கங்கை அரசனான எரியப்பா சார்பில் இவர்கள் போராடினர்; இப்போரில் அவர்கள் நேர் நிகரற்ற வீரத்தைக் காட்டி அழியாப் புகழ் பெற்றனர். (.. VI பக்.45) நவசஷாங்க சரித்திரம் ஏற்கப்படுமானால் இந்தச் சமயம்தான் நர்மதா நதிதீரத்திலுள்ள ரத்னாவதியை நாகா மன்னன் ஆட்சி புரிந்து வந்தான் என்பது நிரூபணமாகிறது; இந்த மன்னனின் மகள் சசிபிரபாதான் சிந்துராஜா பரமராவுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டாள் என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.

     இது ஒருபுறமிருக்க திராவிடர்கள் யார்? அவர்கள் நாகர்களிடமிருந்து வேறுபட்டவர்களா? அல்லது ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களுக்குத் தரப்பட்டிருக்கும் இரண்டு வெவ்வேறு பெயர்களா? திராவிடர்கள், நாகர்கள் என்பவை இரண்டு வெவ்வேறு இனங்களின் பெயர்கள் என்ற கருத்து பொதுவாக நிலவுகிறது. இந்தக் கருத்து பலரை அதிர்ச்சிகொள்ளச் செய்யக்கூடும். ஆயினும் திராவிடர்கள், நாகர்கள் என்ற பதம் ஒரே மக்களைக் குறிக்கும் இரு வெவ்வேறு பெயர்களே என்பதுதான் உண்மை.

     திராவிடர்கள், நாகர்கள் என்பது ஒரே மக்களின் வெவ்வேறு பெயர்களே என்பதை ஒப்புக்கொள்ள வெகுசிலரே தயாராக இருப்பர் என்பதை மறுக்கமுடியாது; அதேபோன்று திராவிடர்கள் நாகர்களாக தென் இந்தியாவில் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் தென் இந்தியாவிலும் வட இந்தியாவிலும் பரவியிருந்தனர் என்பதையும் சிலரே ஒப்புக் கொள்வர். ஆயினும் இவை வரலாற்று உண்மைகள் என்பதில் ஐயமில்லை.

     இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம். பிரபல தென் இந்திய அறிஞரான திரு.தீட்சிதர் ராமாயணத்தில் தென்னிந்தியா எனும் தமது ஆய்வுக் கட்டுரையில் இந்த விஷயம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:

     “பாம்பைத் தங்களது குலமரபுச் சின்னங்களாகக் கொண்டவர்களும் ஓரளவு தெய்வீகத்தன்மை வாய்ந்தவர்களுமான நாகர்கள் வட மேற்கில் தட்சசீலத்திலிருந்து வடகிழக்கில் அஸ்ஸாம் வரையிலும், தெற்கில் இலங்கை வரையிலும் தென் இந்தியா வரையிலும் இந்தியா முழுவதிலும் பரவியிருந்தனர். ஒரு காலத்தில் அவர்கள் மிகவும் செல்வாக்கு வாய்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும். யாக்வாக்கள் காலத்தில் அல்லது அவர்களது வீழ்ச்சிக்குப் பிறகு நாகர்கள் தென் இந்தியாவில் உன்னத நிலைக்கு உயர்ந்தனர். இலங்கையின் சில பகுதிகள் மட்டுமன்றி பழைய மலபாரும் பண்டைய நாகர்களின் வசமிருந்ததைக் கிறித்துவுக்கு பிந்தைய ஆரம்ப நூற்றாண்டுகளைச் சேர்ந்த தமிழ் இலக்கியங்களில் நாகநாடு பற்றி அடிக்கடி குறிப்பிடப்படுவதைப் பார்க்கிறோம். நாக வழிபாடு மலபாரில் இன்றளவும் நீடித்திருப்பதைக் காண்கிறோம். தெற்குத் திருவாங்கூரில் நாகர் கோவிலிலுள்ள ஆலயம் இன்றுங்கூட நாக வழிபாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. நாகர்களைப் பற்றி கூறவேண்டுமானால் அவர்கள் கடலோடிக் குலத்தினர் எனலாம். அவர்களுடைய பெண்கள் நேர்நிகரற்ற அழகுக்குப் பெயர்போனவர்கள். கிறித்தவ சகாப்தத்தின் ஆரம்பத்தில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து பெயரும் புகழும் பெற்றிருந்த சேரர்களுடன் நாகர்கள் இரண்டறக் கலந்துவிட்டதாகத் தோன்றுகிறது.” (ஏழாவது அகில இந்திய கீழ்த்திசை மாநாட்டு நடவடிக்கைகள்)

இந்த விஷயம் குறித்து ஆழமாக ஆராய்ச்சி மேற்கொண்ட சி.எப். ஓல்டாம் மேலும் பல சுவையான விவரங்களைத் தருகிறார். அவர் கூறுகிறார். (சூரியனும் நாகங்களும், பக்.157-161)

“திராவிட மக்கள் பண்டைக்காலம் முதலே சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள் எனப் பிரிந்திருக்கின்றனர். சேரர் (பண்டைய தமிழில் சராய்) என்பது நாகரையும், சேர மண்டலம் என்பது நாகத்வீபம் அல்லது நாகநாட்டையும் குறிக்கும் திராவிட இணைச்சொல்லாகும். தென்புலத்துத் திராவிடர்கள் அசுர மரபுமூலம் கொண்டவர்கள் என்பதைத் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. இது தவிர கங்கை சமவெளியில் பல இடங்களில் தங்களைச் சேருஸ் அல்லது சியோரிஸ் எனக் கூறிக்கொள்பவர்கள் இன்னமும் இருந்து வருகிறார்கள்; இவர்கள் தங்களை நாகதேவதைகளின் வழித்தோன்றல்கள் என உரிமை கொண்டாடி வருகிறார்கள். (ஈலியட் தனித்துறைச் சொல் விளக்கக் களஞ்சியம், .மே.. பக்.135-136) சேருஸ் என்பவர்கள் மிகவும் தொன்மையான இனத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் ஒரு சமயம் கங்கைப் பள்ளத்தாக்கின் பெரும்பகுதியைத் தங்கள் வசம் வைத்திருந்தனர்; இப்பகுதிகள் மிகப் பண்டைக் காலத்தில் நாகா மக்களின் உடைமையாக இருந்தன என்பதை ஏற்கெனவே பார்த்தோம். முகமதிய படையெடுப்புகள் நடைபெற்ற குழப்பம் மிகுந்த நாட்களில் சேருஸ் மக்கள் தங்கள் நிலங்களிலிருந்து படிப்படியாக வெளியேற்றப்பட்டு, இப்போது நிலமற்றவர்களாக கொடிய வறுமையில் உழன்று வருகின்றனர். இந்த மக்கள் திராவிட சேரர்களின் குருதித் தொடர்புடைய உறவினர்கள் என்பதில் ஐயமில்லை.

     சேருஸ்களிடம் பல நூதனமான பழக்கவழங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று அவர்களை லிச்சாவிகளுடனும் நேவார்களுடனும் தொடர்புபடுத்துவதாக உள்ளது. ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு வீடுகளுக்கு ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுப்பதுதான் அது. அரசுச் சின்னமாக அவனது நெற்றியில் திலகமிடப்படுகிறது. (வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் இனங்கள், 376, 377) லிச்சாவிகளும் நேவார்களும் தெற்கத்திய திராவிடர்களுக்குரிய பல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்துவந்தனர். இந்த ஒவ்வொரு பிரிவினரும் சர்ப்பத்தைப் பயபக்தியுடன் வணங்கிவந்தனர்; நேபாளத்துக்கு கார்கோடக நாகமும் காஷ்மீருக்கு நீலநாகமும் வழிபாட்டுக்குரியவையாக இருந்தன. மேலும் நாகம் லிச்சாவியின் தலைநகரான வைசாலியின் காப்புத் தெய்வமாகவும் திகழ்ந்தது. நேவார்கள், லிச்சாவிகளின் திருமண உறவுகளும் தமிழ் மக்களின் திருமண உறவுகளை ஒத்திருந்தன. இவர்கள் பொது மரபுமூலத்தைக் கொண்டவர்கள் என்பதை இவை யாவும் புலப்படுத்துகின்றன.

     நேவார்களிடையே சொத்துரிமை பெண் மரபு வழியில் அமைந்திருந்தது; பஞ்சாபைச் சேர்ந்த அரட்டாக்களும், பகிகாக்களும், தகாஸ்களும் ஒரு காலத்தில் இந்த சொத்துரிமை முறையைத்தான் கடைப்பிடித்தனர்; இதன்படி குடும்ப சொத்துக்கு வாரிசுதாரர்கள் சகோதரிகளின் புதல்வர்களே அன்றி, தங்கள் சொந்தப் புதல்வர்கள் அல்ல. (மகாபாரதம், காமா, பக்.XIV) இது இன்னமும் ஒரு திராவிடப் பழக்கமாக இருந்துவருகிறது. சுருக்கமாகக் கூறினால், ‘தம்முடைய மக்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு அம்சத்திலும் தோன்றுகின்றனர்’ என்று அண்மைய திராவிட எழுத்தாளரான திரு. பாலகிருஷ்ண நாயர் கூறுகிறார். (கல்கத்தா ரெவ்யூ, ஜூலை, 1896)

     இவை தவிர, தெற்கத்திய நாகா மக்களை வட இந்திய நாகா மக்களுடன் இணைக்கும் இதர பல பிணைப்புகளும் உள்ளன. சம்பல் நதிக்கு அருகில் கான்ஸ்வாவில் கலோனல் டோட் கண்டுபிடித்த ஒரு கல்வெட்டில் பின்கண்ட விவரம் காணப்படுகிறது. வலிமை மிக்க குலங்களிடையே பெரிதும் புகழ் பெற்ற குலமான சர்யா என்னும் இனத்தைச் சேர்ந்த சலீந்திரா என்னும் ராஜா தாகியாவை ஆண்டு வந்தான். (ராஜஸ்தான் வரலாற்று ஆதார ஏடுகள், பக்.795)

     இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் தாகியா அல்லது தாகா நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட ஒரு பஞ்சாப் ராஜ்யமாகும். யுவான் சுவாங் (யுவான் சுவாங், பீல், 165) இந்த ராஜ்யத்தில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். எனவே இதை வைத்துப் பார்க்கும்போது இந்தத் தாகியாவைச் சேர்ந்த நாகா மக்கள்தான் சார்யா என்ற பெயராலும் குறிப்பிடப்படுவதாகத் தோன்றுகிறது.

     சட்லஜ், பீஸ் பள்ளத்தாக்குகளுக்கு இடையே வெளி இமாலயத்தில் சாரா அல்லது சியோரஜ் எனும் ஒரு நாட்டின் நிலப்பகுதி இருக்கிறது; இங்கு நாகம்தான் பிரதான தெய்வமாக வழிபடப்படுகின்றது.

     மேல் சினாப் பள்ளத்தாக்கின் மற்றொரு சியோரஜ் இருக்கிறது; இங்கு நாகத்தை வழிபடும் மக்களே வசித்து வருகின்றனர்.

     சரஜ் அல்லது சியோரஜ் என்னும் பெயரும் கலோனல் டோட் கண்டுபிடித்த கல்வெட்டில் காணப்படும் சர்யா என்பதும் அதே போன்று கங்கைப் பள்ளத்தாக்கில் உள்ள சேருஸ் என்பதன் மாற்றுப் பெயரான ஸ்யோரி என்பதும் ஒன்றேதான் எனத் தோன்றுகிறது. மேலும் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் சேரர் அல்லது நாகரின் பழைய தமிழ்ப் பெயரான செராய் என்பதும் இதுவும் ஒன்றே எனவும் தெரிகிறது. எனவே, சர்யாஸ்கள் அல்லது தாகியர்களும், சட்லெஜ் பள்ளத்தாக்கைச் சேர்ந்த சரஜ் மக்களும், கங்கைப் பள்ளத்தாக்கின் சியோரிஸ்கள் அல்லது சேருஸ்களும் தென் இந்தியாவைச் சேர்ந்த சேரர்கள் அல்லது கேரளர்களும் நாகத்தை வழிபடும் மக்களின் பல்வேறு பிரிவினரே தவிர வேறல்ல என்பது கண்கூடு.

     தவிரவும், சில இமாலய கிளைமொழிகளில் கிரா அல்லது கிரி என்பது சர்ப்பத்தை குறிக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இமாலய மக்களைக் குறிப்பிடுவதற்குப் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படும் கிராட்டே என்னும் பதம் இந்த கிரா அல்லது கிரி என்ற பெயரிலிருந்துதான் அநேகமாகத் தோன்றியிருக்கக்கூடும். கிராட்டே என்பது ராஜதரங்கிணியிலும் ஆங்காங்கே காணப்படுகிறது. காஷ்மீரிலுள்ள அல்லது காஷ்மீருக்கு அருகிலுள்ள மக்களைக் குறிப்பதற்கு இச்சொல் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வராகமிஹிராவாலும் பேராசிரியர் கியல்கோர்ன் (ராஜதரங்கிணி, ஸ்டீன், VIII 26. 67. ராப்சன் ஜே.ஆர்..எஸ். ஜூலை 1900. பக்கம்.33) பிரசுரித்திருக்கும் செப்புத் தகட்டிலும் கிராஸ் மக்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

     காங்கரா பள்ளத்தாக்கில் உள்ள பைஜ்நாத் கோவிலில் காணப்படும் ஒரு கல்வெட்டில் இந்த இடத்தை பழைய பெயர் கிராகிராம்ஸ் எனக் குறிப்பிடப்படுகிறது. (ஜே.ஆர்..எஸ். ஜன, 1903, பக்.37) இதற்கு உள்ளூர் மொழியில் சர்ப்பங்கள் என்று பொருளாகும். பைஜ் நாத்திலும் அண்டைப் பிரதேசம் முழுவதிலும் நாகம் இன்னமும் ஒரு பிரபல தெய்வமாக வழிபடப்படுகிறது. இவ்வாறு கிரா என்னும் பதம் நாகம் எனும் பதத்திற்குச் சமமானது. எனவே, இமாலயப் பகுதியைச் சேர்ந்த நாகத்தை வழிபடும் கிராஸ்கள் தென்பகுதியை சேர்ந்த திராவிட கெராஸ்களுடனும், சேரர்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயம் இருக்கமுடியாது.

     பெயரில் காணப்படும் ஒற்றுமை எப்போதும் நம்புதற்குரியதல்ல; ஆனால் இங்கு இதற்கும் மேலான சில அம்சங்கள் இருக்கின்றன. இவ்வாறு, ஒரே மாதிரியான சுட்டுப்பெயரை உடைய இந்த மக்கள் அனைவரும் சூரிய வம்சத்தை சேர்ந்தவர்கள். படம் எடுத்து ஆடும் நாகத்தை வணங்குபவர்கள். தங்கள் மூதாதையர்களைப் போன்றே நாக தெய்வங்களை வழிபடுபவர்கள்.

     மேலே கூறியவற்றிலிருந்து தென் இந்தியாவின் திராவிடர்கள் வடக்கின் நாகர்கள் அல்லது அசுரர்களின் அதே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஒரளவு நிச்சயமாகிறது.”

     இவ்விதம் நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள் என்பது தெளிவாகிறது. இத்தனை சான்றுகள் இருந்த போதிலும் இந்தக் கோட்பாட்டில் பலருக்கு உடன்பாடு இல்லாதிருக்கக்கூடும். தென் இந்திய மக்கள் திராவிடர் என்ற பெயரால் குறிப்பிடப்படுவதே இந்தக் கோட்பாட்டை ஏற்பதற்குக் குறுக்கே நிற்கும் பிரதான இடர்ப்பாடாகும். உண்மையிலேயே அவர்கள் நாகர்களாக இருந்தால் தென் இந்திய மக்களை மட்டும் திராவிடர் என்ற பதத்தைக் கொண்டு குறிப்பிடுவது ஏன் என்று அவர்கள் கேட்பது முற்றிலும் இயல்பே. விமர்சகர்கள் பின்வருமாறு வினவக்கூடும். திராவிடர்களும் நாகர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றால் தென் இந்திய மக்களையும் குறிப்பதற்கு ஏன் நாகர்கள் என்ற பதம் பயன்படுத்தப்படுவதில்லை. இது ஒரு புதிர் என்பதில் ஐயமில்லை. ஆனால் விடையிறுக்க முடியாத புதிரல்ல இது. சில உண்மைகளை மனத்திற்கொண்டால் இப்புதிருக்கு விடை காண முடியும்.

     நாம் நினைவிற் கொள்ளவேண்டிய முதல்விஷயம் மொழி சம்பந்தப்பட்ட நிலையாகும். இன்று தென் இந்தியாவின் மொழி வட இந்திய மக்களது மொழியிலிருந்து வேறுபடுகிறது. எப்போதும் இவ்வாறுதான் இருந்ததா? இப்பிரச்சினை குறித்து திரு.ஓல்டாம் தெரிவித்திருக்கும் கருத்துகள் சிந்தனைக்குரியவை.(சூரியனும் சர்ப்பமும்)

     “திராவிட நாடுகளின் மொழி வட இந்திய வட்டார மொழிகளுடன் சம்பந்தப்பட்டது என்று பழைய சமஸ்கிருத மொழி வல்லுநர்கள் கருதினர். முக்கியமான அசுரகுலத்தின் வழித்தோன்றல்களான மக்களின் பேச்சு மொழியுடன் அது நெருங்கிய தொடர்புடையது என்பது அவர்களது அபிப்பிராயம். பாண்டிய, கேகய, வஹ்லிக, சாஹ்ய, நேபாள, குந்தல, சுதேச, போட்டா, காந்தார, ஹைவா, கனோஜ் முதலான பைசாசி நாடுகளில் பைசாசி மொழி பேசப்படுகிறது என்ற ‘சாஹஷ சந்திரிகாவி’ல் லட்சுமிதாரா கூறுகிறார். (முய்ர், .எஸ்.டி. பக்.49) எல்லா வட்டார மொழிகளிலும் பைசாசி மொழியில்தான் சமஸ்கிருத ஊடுருவல் மிகமிகக் குறைவாக இருக்கிறது. (முய்ர், .எஸ்.டி. பக்.49)

                அசுரர்கள் ஆரம்பத்தில் ஆரியர்களது மொழியிலிருந்து வேறுபட்டதொரு மொழியையே பேசி வந்தனர். அசுரர்களது பேச்சு மொழியைக் குறிக்கும் ‘மிரிதவச்’ என்னும் சொல் ரிக்வேதத்தில் பல இடங்களில் வருவதை பேராசிரியர் முய்ர் சுட்டிக் காட்டியிருக்கிறார். (ருக். VI.74.2; V V13; V. VII.6) இது பற்றி பேராசிரியர் முய்ர் கூறுவதாவது: ‘மிரிதவச் என்னும் சொல்லை “புண்பட்ட முறையில் பேசுவது” என்று நான் மொழி பெயர்த்திருக்கிறேன். ஆனால் சயனா “பேசும் உறுப்புகள் அழிக்கப்பட்டவன்” என்று இதற்கு விளக்கம் தந்திருக்கிறார். (முய்ர், .எஸ்.டி. ii 49) அசுரர்கள் மொழி ஆரியர்களுக்குப் புரியாத ஒன்றாக இருந்தது என்றே ஆரம்பத்தில் இதற்குப் பொருள் கொள்ளப்பட்டது என்பதில் ஐயமில்லை. நாம் (இந்திரனது கோபத்தைத் தணித்து) மோசமாகப் பேசுபவனை வெற்றி கொள்வோம் (ரிக்வேதம், வில்சன் VII, XVII 13) என்று ரிக் வேதத்தில் வேறோர் இடத்தில்வரும் பகுதிக்கும் இதே பொருள் கொள்ளலாம்.

     பேசும் ஆற்றலை இழந்த அசுரர்கள் ‘ஹே லாவா’ என்று கதறியதாக சதபத பார்ப்பனம் கூறுகிறது. அவர்கள் பேசிய மொழி இவ்வாறு புரியாத ஒன்றாக இருந்தது. இவ்விதம் பேசுபவன் ஒரு மிலேச்சன். எனவே எந்தப் பார்ப்பனனும் காட்டுமிராண்டி மொழியைப் பேசக்கூடாது; ஏனென்றால் அது அசுரர்கள் பேசும்மொழி. (சதபத பார்ப்பனம் iii 2.1.23)

     ‘பிரம்மாவின் வாய், தோள்கள், தொடைகள், பாதங்களிலிருந்து தோன்றிய வகுப்பினருக்கு வெளியே உள்ள குலத்தினர் அவர்கள் மிலேச்சர்களின் மொழியைப் பேசினாலும், ஆரியர்களின் மொழியைப் பேசினாலும் தஸ்யூக்கள் என அழைக்கப்படுவர், (முய்ர், ஹாட்டன் X 45) என்பதை மனுவிடமிருந்து தெரிந்து கொள்கிறோம். எனவே இதிலிருந்து மனுவின் காலத்தில் ஆரிய மொழியும் மிலேச்சர்கள் அல்லது அசுரர்கள் மொழியும் புழக்கத்தில் இருந்தன என்பது தெளிவாகிறது. ஆயினும் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் காலத்தில் ஆரியமயமான குலங்களிடையே அசுரமொழி கிட்டத்தட்ட வழக்கொழிந்து போயிருக்க வேண்டும்; யுதிர்ஷ்டரர் தவிர மற்றெல்லோருக்கும் புரியக்கூடாது என்பதற்காக வதுரர் அவருடன் மிலேச்ச மொழியில் பேசியதாகக் கூறப்படுகிறது.

     எனினும் இதற்குப் பிந்தைய காலத்தில் இலக்கண வல்லுநர் ராம தர்கவாகிசா ‘நாகர்களைப் போன்று பேசியவர்களைப் பற்றி‘க் குறிப்பிடுகிறார். (முய்ர், .எஸ்.டி ii 52) எனவே, இனம் மாறிய தங்களுடைய சகோதரர்கள் தங்களைப் புறக்கணித்த போதிலும் அசுரர்கள் தங்களுடைய முன்னோர்கள் விட்டுச்சென்ற மொழியையும், சமயத்தையும், பழக்கவழக்கங்களையும் பாதுகாத்துவந்தனர் என்றே தோன்றுகிறது. புத்தெழுச்சி பெறாத இத்தகைய குலங்களுக்கு இடையேதான் பைசாசி பேச்சு வழக்கு மொழிகள் உபயோகத்தில் இருந்தன என்பதும், இவர்களில் திராவிட பாண்டியர்களும் அடங்குவர் என்பதும் தெளிவு. (மேற்படி நூல், 49)

     தமிழும் இதர இன உறவு மொழிகளும் பண்டைய அசுர மொழியை அடிப்படையாகக் கொண்டவையே என்று கருதப்படுகிறது. சிந்துவின் எல்லைப்பகுதிகளில் வசிக்கும் பிரஹூய்களின் மொழி மேலே கூறிய மொழிகளுடன் மிகப் பெருமளவுக்கு ஒத்திருப்பது இந்தக் கருத்தை அழுத்தம் திருத்தமாக உறுதிசெய்வதாக இருக்கிறது. இது குறித்து டாக்டர் கால்டு வெல் கூறுவதாவது: ‘திராவிட இனத்தவர்கள் சிந்து நதிக்கு அப்பால் மத்திய ஆசியாவின் தெற்கு எல்லைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்ற முடிவுக்கு வருவதற்கு பிரஹூய் (மொழி) நமக்குத் துணைபுரிகிறது. (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், முன்னுரை, .44) நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று இந்த நாடுதான் அசுரர்களின் அல்லது நாகர்களின் தாயகமாகும்; திராவிட அரசுகளை நிறுவியர்கள் இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பது வெள்ளிடைமலை.

     இதுவரை நமக்குக் கிடைத்துள்ள சான்றுகள் அனைத்தையும் கருத்திற்கொண்டு பார்க்கும்போது, தென் இந்தியாவின் திராவிடர்களும் வட இந்தியாவின் அசுரர்களும் அல்லது நாகர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது.”

     நாம் நினைவிற் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் ‘திராவிடர்’ என்னும் சொல் ஒரு மூலச்சொல் அல்ல என்பதாகும். ‘தமிழ்’ எனும் சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல், ‘தமிழ்’ என்னும் மூலச்சொல் முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இடம்பெற்றபோது தமிதா (பி.ஆர். பண்டர்கா, இந்தியாவின் பண்டைய வரலாறு பற்றிய விரிவுரைகள் (1919) பக்கம். 60) என்று உச்சரிக்கப்பட்டது. பின்னர் தமில்லா ஆகி முடிவில் திராவிடா என்று உருத்திரிந்தது. திராவிடா என்னும் சொல் ஒரு மக்களது மொழியின் பெயரே அன்றி அந்த மக்களது இனத்தைக் குறிக்கவில்லை. நாம் ஞாபகத்திற்கு கொள்ள வேண்டிய மூன்றாவது விஷயம் தமிழ் அல்லது திராவிடம் என்பது தென் இந்தியாவின் மொழியாக மட்டுமே இருக்கவில்லை, மாறாக அது ஆரியர்கள் வருவதற்கு முன்னர் இந்தியா முழுவதன் மொழியாகவும் இருந்தது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பேசப்பட்டு வந்தது என்பதே ஆகும். (அதே நூல், பக். 25-28) உண்மையில், இந்தியாவெங்கிலும் நாகர்களால் பேசப்பட்டுவந்த மொழியாகவும் திகழ்ந்தது. ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பையும், அது நாகர்களிடமும் அவர்களது மொழியிடமும் ஏற்படுத்திய தாக்கத்தையும் அடுத்தப்படியாக நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். இதில் விந்தை என்னவென்றால், இந்தத் தொடர்பு வடஇந்திய நாகர்களிடம் ஏற்படுத்திய விளைவு தென் இந்திய நாகர்களிடம் தோற்றுவித்த விளைவிலிருந்து பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதாகும். வட இந்தியாவிலிருந்த நாகர்கள் தங்களது தாய்மொழியான தமிழைக் கைவிட்டுவிட்டு, அதற்குப்பதில் சமஸ்கிருத்தை வரித்துக் கொண்டனர். ஆனால் தென் இந்தியாவிலிருந்த நாகர்கள் அவ்வாறு செய்யவில்லை. தமிழையே தங்கள் தாய் மொழியாகத் தொடர்ந்து பேணிக்காத்து வந்தனர். ஆரியர்களின் மொழியான சமஸ்கிருத்தை அவர்கள் தங்களுடைய மொழியாக ஆக்கிக் கொள்ளவில்லை. இந்த வேறுபாட்டை மனத்திற்கொண்டால் திராவிடர் என்ற பெயர் தென் இந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தப்படும்படி நேர்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம். திராவிடர் என்ற சொல்லை வட இந்திய நாகர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஏனென்றால் திராவிட மொழியைப் பேசுவதை அவர்கள் விட்டுவிட்டனர். ஆனால் தென் இந்தியாவின் நாகர்களைப் பொறுத்தவரையில் திராவிட மொழியை தங்கள் தாய்மொழியாகத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்ததால் தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதற்கு முழுத் தகுதி பெற்றிருந்தனர்; அது மட்டுமன்றி, வட இந்திய நாகர்கள் திராவிட மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட்டுவிட்டதன் காரணமாக திராவிட மொழி பேசும் ஒரே மக்கள் என்ற முறையில் தங்களைத் திராவிடர்கள் என்று அவர்கள் அழைத்துக்கொள்வது மிக மிக அவசியமாயிற்று. தென் இந்தியர்கள் திராவிடர்கள் என ஏன் அழைக்கப்படலாயினர் என்பதற்கு இதுதான் உண்மையான காரணமாகும்.

     எனவே, தென் இந்திய மக்களுக்குத் திராவிடர் என்ற சொல் விசேடமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதானது நாகர்களும் திராவிடர்களும் ஒரே இனத்தவர்களே என்ற உண்மையை மூடி மறைக்க அனுமதிக்கக்கூடாது. நாகர்கள் என்பது இன அல்லது காலாசாரப் பெயர்; திராவிடர் என்பது மொழி அடிப்படையில் அமைந்த அவர்களது பெயர்.

     தாசர்கள் என்பதும் நாகர்கள் என்பதும் ஒன்றுதான். அதே போன்று நாகர்கள் என்பதும் திராவிடர்கள் என்பதும் ஒன்றுதான். வேறுவிதமாகச் சொன்னால் இந்தியாவின் இனங்களைப் பற்றிக் கூறுவதானால், இத்துறையில் அதிகபட்சம் இரண்டு இனங்கள் தான் உள்ளன. ஆரியர்களும் நாகர்களுமே அவர்கள். ஆக, இவ்விதம் திரு.ரைஸின் கோட்பாடு சடசடவென்று நொறுங்கி விழுகிறது. ஏனென்றால் நடைமுறையில் மூன்று இனங்கள் இருப்பதாக அவரது கோட்பாடு கூறுகிறது. ஆனால் உண்மையில் இரண்டு இனங்கள் இருந்து வருவதையே நாம் காண்கிறோம்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 14, இயல் 7)