குறைந்தபட்சத் தகுதி விதியின் அடிப்படையில், அரசுப் பணித் துறைகளில் சில குறிப்பிட்ட சதவீத இடங்களைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று தீண்டப்படாதோர் கோருகின்றனர். தீண்டப்படாதோரின் இதர கோரிக்கைகள் விஷயத்தில் போன்றே இந்துக்கள் இந்தக் கோரிக்கையையும் எதிர்க்கின்றனர். அரசுப் பணித் துறைகளுக்கு நியமனங்கள் செய்யும்போது, நாட்டின் நலனைக் கருதி ஆற்றல், திறமை, நற்பண்பு ஆகியவற்றை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் தவிர சாதி, மதம் முதலியவற்றுக்கு இடம் அளிக்கக் கூடாது என்ற நிலையை அவர்கள் மேற்கொள்கின்றனர்.

ambedkar 452நற்பண்பு ஓர் அவசியமான தகுதியாக இருக்க வேண்டும் என்பதில் சர்ச்சைக்கு இடமில்லை; அதேபோன்று ஆற்றலும், திறமையும் இருக்க வேண்டும் என்பதிலும் சர்ச்சை ஏதும் இல்லை. ஆனால் சர்ச்சைக்குரிய ஒரே விஷயம் அரசுப்பணித் துறைகளுக்கு நியமனம் செய்வதில் சாதியையும், மதத்தையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டுமா என்பதுதான்; இது மிகமுக்கியமான விஷயம்.

கல்வித் தகுதியை திறமைக்கு ஒரே அடிப்படையாகக் கொண்டு இந்துக்கள் ஒரு விஷயத்தை வலியுறுத்துகின்றனர்; அனைத்து சாதியினரும், மதத்தினரும் பங்கு கொள்ளக் கூடிய போட்டித் தேர்வுகள் மூலம் அரசுப் பணித்துறைகள் நிரப்பப்பட வேண்டும் என்று அவர்கள் முயலுக்கே மூன்றே கால் என்று சாதிக்கின்றனர். இத்தகையதோர் ஏற்பாடு இரண்டு நோக்கங்களை நிறைவேற்றுகிறது. முதலாவதாக அது திறமை நோக்கத்தை பூர்த்தி செய்கிறது, இரண்டாவதாக, அரசுப் பணித்துறைகளில் தீண்டப்படாதோர் பங்கெடுத்துக் கொள்வதை அது தடை செய்யவில்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர்..

திறமைக்கும், போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியத்துவம் தந்து, தீண்டப்படாதோர் கோரிக்கையைத் தாங்கள் எதிர்ப்பதற்கு நியாயம் கற்பிக்க இந்துக்கள் முயல்கின்றனர். இங்கும் அவர்களது வாதம் தடம்புரண்டு செல்கிறது. அரசுப் பணித்துறைகளுக்குத் திறமையான நபர்களைத் தெரிவு செய்வதற்கு போட்டித்தேர்வு முறை சரியான முறையா, இல்லையா என்பதல்ல இங்கு பிரச்சினை. போட்டித் தேர்வு முறையில் அனைத்து சாதியினரும், மதத்தினரும் கலந்து கொள்ளலாம் என்பதனால் பணித்துறைகளில் தீண்டப்படாதோர் இடம் பெறுவதை அது சாத்தியமாக்குமா என்பதே பிரச்சினை.

இது அரசின் கல்வி முறையைப் பொருத்து அமைந்துள்ளது. இந்தக் கல்விமுறை போதிய அளவு ஜனநாயகரீதியாக உள்ளதா? எல்லா வகுப்பினரும் போட்டித் தேர்வுகளில் பங்கு கொள்வதை அனுமதிக்கும் அளவுக்குக் கல்வி வசதிகள் விரிவானவையாக இருக்கின்றனவா? இவ்வசதிகள் எல்லோருமே பயன்படுத்திக் கொள்ளக் கூடியவையாக இருக்கின்றனவா? இவ்வாறு இல்லையென்றால், பகிரங்கப் போட்டியில் பல வகுப்பினர் பங்குகொள்ள இயலாது போகக்கூடும். இந்தியாவில் அடிப்படையான இத்தகைய பரந்து விரிந்த கல்வி வசதிகள் இல்லை.

இந்த நாட்டில் மேற்கல்வி என்பது இந்துக்களின் அதிலும் குறிப்பாக சாதி இந்துக்களின் ஏகபோகமாக இருந்து வருகிறது. தீண்டாமை காரணமாக தீண்டப்படாதவர்களுக்கு கல்வி வசதி மறுக்கப்படுகிறது. அரசுப் பணித் துறைகளில் உயர் பதவிகள் வகிப்பது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆனால் உயர் பதவிகள் பெறுவதற்கு அவசியமான மேற்கல்வி பெறுவது வறுமை காரணமாக தீண்டப்படாதோருக்குச் சாத்தியமில்லாமல் இருக்கிறது. அதே சமயம் அவர்களுக்கு மேற்கல்வி அளிப்பதற்கு ஆகும் செலவை ஏற்க அரசும் தயாராக இல்லை. இந்து அறக்கொடை அமைப்புகளும் தீண்டப்படாதோருக்குக் கைகொடுத்து உதவுவதில்லை. இதில் பச்சையான வகுப்பவாதம் வெட்கங்கெட்ட முறையில் தலைவிரித்தாடுகிறது. இவ்வாறிருக்கும்போது போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு அவற்றின் முடிவுகளை நம்பியிருக்கும்படி தீண்டப்படாதவர்களுக்கு உபதேசம் செய்வது கடைந்தெடுத்த மோசடியாகும், முழுக்க முழுக்க கபநாடகமாகும். இத்தகைய சூழ்நிலையில் தீண்டப்படாதோர் மேற்கொண்டிருக்கும். நிலைப்பாடு நியாயமற்றது என்று கூற முடியாது.

திறமையை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தை அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இதனால் தான் குறைந்தபட்சத் தகுதி விதியின் அடிப்படையி தங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டுமென்று தங்களது தீர்மானத்திலேயே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வேறுவிதமாகக் கூறினால், அரசுப் பணித்துறைகளில் ஒவ்வொரு பதவிக்கும் குறைந்தபட்ச தகுதி நிர்ணயிக்கப்பட வேண்டும்; இத்தகைய பதவிக்கு இருவர் விண்ணப்பித்துக் கொள்ளும்போது, தீண்டப்படாதவர் குறைந்த பட்ச தகுதி பெற்றிருந்தால், இந்தக் குறைந்தபட்சத் தகுதியைக் காட்டிலும் அதிகத் தகுதி பெற்றுள்ள ஓர் இந்துவை விட அவனுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீண்டப்படாதோர் கோருகின்றனர்.

அரசுப் பதவி நியமனத்துக்கான அடிப்படை குறைந்தபட்சத் தகுதியாக இருக்க வேண்டுமேயன்றி, அதிகப்பட்சத் தகுதியாக இருக்கக் கூடாது என்பதே இதன் பொருள். இந்தத் திறமை கோட்பாடு சில குறிப்பிட்ட வகுப்பினர் அரசுப் பணிகளைப் பெறுவதில் ஏக போகம் எய்துவதைப் பற்றிக் கவலைப்படாதவர்களுக்கு இது விந்தையானதாகத் தோன்றக்கூடும்; ஆனால் நல்ல அரசாங்கத்தை விடத் தன்னாட்சி அரசாங்கம் சிறந்தது என்று காம்பெல் – பானர்மேன் கூறவில்லையா? தீண்டப்படாதவர்கள் வேறு என்ன கோருகிறார்கள்? திறமையான அரசாங்கம் இருக்க வேண்டிய அவசியத்தை அவர்கள் ஒப்புக் கொள்கின்றனர். இதனால்தான் நாட்டின் அரசுப் பணித் துறைகளில் சேருவதற்கு குறைந்தபட்ச தகுதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க அவர்கள் தயாராக இருக்கின்றனர்.

ஆனால், நல்ல அரசாங்கத்துக்காக தன்னாட்சித் தியாகம் செய்ய அவர்கள் தயாராக இல்லை. மிக உயர்ந்த தகுதிகளின் அடிப்படையில் அமைந்த நல்ல அரசாங்கம் வகுப்புவாரி அரசாங்கமாகவே இருக்கும்; ஏனென்றால் குறைந்தபட்ச தகுதிகளுக்கும் மேலான தகுதிகளை இந்துக்கள் மட்டுமே பெற்றிருக்க முடியும். இதைத்தான் அவர்கள் விரும்பவில்லை. திறமையான அரசாங்கத்துக்குக் குறைந்தபட்சத் தகுதிகளே போதுமானவை. அவை தன்னாட்சி உருவாவதைச் சாத்தியமாக்குவதால் அரசப்பணித் துறையில் பிரவேசிப்பதற்கு குறைந்தபட்சத் திகுதி இருந்தால் போதுமானது என்று விதி செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது தன்னாட்சியையும் திறமையான ஆட்சியையும் உத்தரவாதம் செய்கிறது.

(திரு. காந்தியும் தீண்டப்படாதோரின் விடுதலையும், தொகுதி 17, இயல் 7)