ஆதி மனிதன் குகையில் வாழ்ந்த போதே எழுத்தறிவு பெற்றுத் தன் திறமையைப் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறான்.  ஆனால் அவனுக்கு எழுத்து வடிவம் தெரியாததால், தான் நினைத்ததையும், பார்த்ததையும் பாறைகளின் மேல் கோடுகள் போட்டும், சித்திரங்கள் வரைந்தும்  பத்திரப்படுத்தியிருந்தான்  என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.  அவ்வாறு பாறைகளின் மேல் வரையவும், எழுதவும் கூரிய கற்களை எழுதுகோலாய்ப் பயன்படுத்தியிருக்கிறான்.  அப்போதே பேனா போன்ற ஒன்றின் வருகைக்கு அடித்தளம் இட்டிருப்பது தெரிய வருகிறது.

pen 180 சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி.மு.4000 வாக்கில் ஈரமான களிமண் வில்லைகளில் எழுதுவதற்காகவும் மெழுகு பூசப்பட்ட மேல்பரப்பில் எழுதவும் எலும்பால் ஆன எழுத்தாணி போன்ற ஒன்றைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 

சிறிது சிறிதாக முன்னேறிய மனிதன் மிருகங்களின் தோலைப் பதப்படுத்தி அதன்மீது எழுத முற்பட்டிருக்கிறான். காலப்போக்கில் எகிப்தியர்கள் காகிதத்தாள் போன்ற ”பேப்பிரஸ்” என்ற ஒன்றை கண்டறிந்தனர்.  அது நாணல் நார்களால்  பின்னப்பட்ட மெல்லிய தாள் போன்று இருந்தது.  அதன்மீது எழுத நாணல்களால் ஆன தூரிகைகளையே (நாணல் பேனா) உபயோகித்திருக்கிறார்கள்.

அதே போல் நாகரீக வளர்ச்சி பெற்ற தமிழ்நாட்டில்  பனை ஓலைகளைப் பதப்படுத்தி அதன்மீது  எழுத முற்பட்டிருக்கிறார்கள். வெண்கலத்தால் ஆன எழுத்தாணியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  சிலர் இரும்பால் ஆன எழுத்தாணிகளைக்கூட பயன்படுத்தியிருக்கிறார்கள்.

கி.பி.600 லிருந்து 1800ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐரோப்பியர்கள் பறவை இறகால் செய்யப்பட்ட இறகுப் பேனாவைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  அதற்காக அன்னம்,வாத்து மற்றும் வான்கோழி போன்ற பறவைகளிடமிருந்து பிடுங்கப்பட்ட நீண்ட இறகுகளைக் கொண்டு மை தொட்டு எழுதியிருக்கிறார்கள்.

இந்த இறகுப்பேனாதான் மை ஊற்றுப் பேனாவின் முன்னோடி என்று சொல்லலாம்.  இதைச் சுவைபட சொல்ல வேண்டுமானால் பறவையின் இறகுகளை கொண்டுவந்து வெய்யிலிலும் நிழலிலும் உலர்த்தினார்கள்.  இறகுகளின் மேல் படிந்திருக்கும் எண்ணெய் பசை எழுதுவதற்கு தடையாய் இருந்த சிறுசிறு பகுதிகளைக் கவனமாக நீக்கினார்கள்.  அதன் முனையை கூர்மையான கத்தியைக் கொண்டு கூராக்கினார்கள். முனைக்கு சற்று மேலே  மைத் துளி தேங்கி நின்று சிறிது சிறிதாக வெளிப்பட மெல்லிய குழி உருவாக்கினார்கள். இக்குழியில் தேங்கிய மையை இளகுவாக வழிய விட்டு அது காயும் முன்பே சுழித்து நெளித்து எழுதினர்.

 எழுத்துக்களை வளைத்தும் நெளித்தும் எழுதும் வகையில் தயாரிக்கப்பட்ட தகுதியான இறகுகளை மட்டுமே இறகுப்பேனாவாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.  மற்றவற்றையெல்லாம் சுகமாகக் காது குடையப் பயன்படுத்தியிருப்பார்கள்.  அன்னம், வாத்து மற்றும் வான்கோழியின் இறகுகளைக் கொண்டு எழுதிவந்த ஒருசில எழுத்தாளர்கள் காக்கை, கழுகு, ஆந்தை மற்றும் பருந்து போன்ற பறவைகளின் இறகைக்கூட பேனாவாக உபயோகித்திருக்கிறார்கள். இவ்வகையான இறகுப் பேனா படித்தவர்கள் மத்தியில் பிரபலமாய் இருந்திருக்கிறது.   அதற்குக் காரணம் இறகுப் பேனாக்கள்  மை தொட்டு எழுத ஏதுவாக வளைந்து காணப்பட்டதே.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? இலத்தீன் மொழியில் பென்னா (penna) என்ற சொல்லுக்கு இறகுகள் என்று பெயர்.  இதுவே பிரஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் பென்னே (penne) என்று ஆனது.  அதைத் தொடர்ந்து நாமும் நவீன எழுது கருவிகளை பேனா என்று அழைக்கிறோம்.  இப்பொழுது தெரிகிறதா, இறகுப் பேனாதான்  தற்போதைய நவீன பேனாவிற்கெல்லாம் முன்னோடி என்று.

பின்பு, கி.பி. 1803 –ல் உலோக முனை கொண்ட பேனா ( மையூற்றுப் பேனா ) இதுவரை புழக்கத்தில் இருந்து வந்த அனைத்து வகைப் பேனாக்களையும் பின்னுக்குத் தள்ளியது.  இது ஆரம்ப காலத்தில் ஒரு சில குறைகளைக் கொண்டிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அதன் குறைகள் களையப்பட்டு தனக்கென தனி இடத்தைப் பிடித்தது.

கி.பி.1884-ற்கு முன்னும் பின்னும் ஏராளமானவர்கள் நவீனப் பேனாவிற்கு உரிமை கொண்டாடினாலும்  லூயி எட்சன் வாட்டர்மேன் என்பவர்தான் மையூற்றுப் பேனாவிற்கு தந்தை என்று கருதப்படுகிறார்.  இவர் கண்டுபிடிப்புக்குப் பிறகுதான் தொட்டெழுதும் பேனா ஊற்று மைப்பேனாவாக உருமாறியது என அறுதியிட்டுக் கூறலாம்.  இப்பொழுதும் ஊற்று மைப் பேனாவை உபயோகிக்கும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் மையூற்றுப் பேனாவில் எழுதிய எழுத்துக்கள் தண்ணீர்பட்டு அழிந்து போனதால் அதன் மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டதுதான் பால் பாயிண்ட் பேனா.  அது தண்ணீருக்கு அடியிலும் எழுத முடியும் என்ற அறிமுகத்துடன் வெளிவந்தது.  அலுவலகங்களில் கார்பன் காப்பி மூலம் நகல் எடுக்க ஏதுவாக இருந்தது. 

அதைத் தொடர்ந்து கண்ணாடி, பிளாஸ்டிக், மற்றும் அலுமினியத் தாள்களின் மேல் எழுதுவதற்கு ஏதுவாக பிரத்யேகமாகத் தாயாரிக்கப்பட்டதுதான் மார்க்கர் பேனா. 

ஏற்கெனவே அச்சிடப்பட்ட வரிகளில் முக்கிய வரிகளையோ அல்லது முக்கிய வார்த்தைகளையோ வண்ண மை கொண்டு மிகைப்படுத்திக் காட்ட ஹைலைட்டர் பேனா, அடிக்கோடிட்டுக் காட்ட ஸ்டிக் பேனா, வெள்ளை நிற போர்டுகளில் எழுத மார்க்கர் பேனா, அழகாக எழுத ஜெல் பேனா, ஓவியம் வரைந்து வண்ணம் தீட்ட ஸ்கெட்ச் பேனா என ஏராளமான பேனாக்கள் தற்போது புழக்கத்தில் உள்ளது.  இவ்வகைப் பேனாக்களில் பல, உபயோகித்தவுடன் தூக்கி எறியப்படும் யூஸ் அண்ட் த்ரோ வகைப் பேனாக்களே பெரும்பாலும் அதிக அளவில் உலா வருகிறது.  மேலும் அதில் உள்ள மை தீரும் முன்பே குப்பையைச் சென்றடைவது மிகுந்த வேதனை அளிக்கும் விசயம்.

குடும்பப் பொகிசம்போல், ஒரு குடும்பத்திற்கு ஒரு பேனா என்ற பழக்கம் வழக்கொழிந்து போய் ஆண்டுகள் பல ஆகிவிட்டன. ஒரு மாணவனே ஏராளமான பேனா வைத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.  இதில் வரவேற்கத்தக்க விசயம் ஏதும் இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏன் என்றால் மிக அலட்சியமாய் குப்பைகளில் தூக்கி எறியப்படும் யூஸ் அண்ட் த்ரோ பேனாக்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது.  பெரும்பாலும் மற்ற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதே. மேலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் காரணிகளில் இதுவும்  ஒன்று என்ற விழிப்புணர்வு பெற வேண்டியது நமது அனைவரின் கடமை.  ஒரு முறை பயன்படுத்திய பேனாக்களையே மீண்டும் மீண்டும் உபயோகிப்பதில் கெளரவக் குறைச்சல் ஒன்றும் இருப்பதாய் தெரியவில்லை. 

ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கேற்ப பேனாக்களின் பரிணாம வளர்ச்சி அனைவரையும் மலைக்க வைத்தாலும் சிறுவயதில் பிஞ்சு விரல் கொண்டு எழுதிய   பேனாவை ஒருபோதும் மறக்க இயலாது.  பள்ளிப் பருவத்தில் யாரேனும்,  உன்னால் மறக்கமுடியாத அதிஷ்டமான ஒன்று எதுவெனக் கேட்டால் என் பேனா, என்பேனா? இல்லை வேறெதையேனும் சொல்வேனா? தெரியவில்லை.  ஆனால் நீங்கள்?

- வே.சங்கர்