சிரிப்பூட்டுவதற்கென்று ஒரு வாயு இருக்கிறது; அது நைட்ரஸ் ஆக்ஸைடு. ஆனால் கோபமூட்டுவதற்கு ஒரு வாயு இல்லை. அதற்கு பதிலாகத்தான் நமக்கு வாய் இருக்கிறதே! வாய் உதிர்க்கும் சொற்களில் மிகவும் கோபமூட்டும் சொல் எதுவென்றால் “முட்டாள்” என்பதுதான்.

 “அடேய் முட்டாள் புருனோ! நீ சொல்வதைப்போல உலகம் உருண்டையானது என்றால்; சொர்க்கம் எங்கேயடா இருக்கும்?” இது மதக்குருமார்கள் முன்னிலையில் ஒரு நீதிபதி கேட்ட கேள்வி. அதற்கு புருனோ சொன்ன பதில் “அதைத்தான் நானும் கேட்கிறேன். சொர்க்கம் எங்கே இருக்கும்?”. நீதிபதி கேள்விக்கு புருனோவால் பதில் சொல்ல முடிந்தது. ஆனால் புருனோவின் கேள்விக்கு இதுநாள் வரைக்கும் யாராலும் பதில் சொல்ல முடியவில்லையே!. முட்டாள் யார், புத்திசாலி யார் ? என முடிவு செய்வது காலமே தவிர மதமோ, மனிதர்களோ அல்ல.

 பிரெஞ்ச் உளவியலறிஞர் ஆல்பர்ட் பினே மனிதனின் கால வயதை மன வயதால் வகுத்து சதவீதமாக மனிதனின் நுண்ணறிவை வகைப்படுத்தினார். இதன்படி முட்டாள், பின்னடைந்தோர், பின் தங்கியோர், திறனுடையோர், புத்திசாலிகள், மிக்க திறனுடையோர், மேதைகள் என அட்டவணைப்படுத்தினார். உலக மக்கட்தொகையில் ஒரு சதவீதம் மேதைகளாகவும், ஒரு சதவீதம் முட்டாள்கள் இருப்பதாகவும் அவரது கோட்பாடு கூறுகிறது. அவரது கோட்பாட்டின்படி 50 முதல் 69 வரை நுண்ணறிவு ஈவு பெற்றவர்கள் முட்டாள்கள் என்றும் 140 முதல் 169 வரை பெற்றவர்கள் மேதைகள் என்றும் கருதப்படுகிறார்கள்.

 பினே கோட்பாட்டை தழுவி ஆய்வு மேற்கொண்ட உளவியல் அறிஞர்கள் பார்வையில் கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ் மேதைகளின் மேதையாக பார்க்கப்படுகிறார். சாக்ரடீஸ் வாழ்ந்த காலம், அவர் சந்தித்த நெருக்கடி, அந்த வேளையில் அவரது நுண்ணறிவு இவற்றை வைத்து பார்க்கையில் அவருடைய நுண்ணறிவு ஈவு நூற்று எழுபதற்கும், இருநூறுக்கும் இடைப்பட்டதாக இருந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. சாக்ரடீஸ் கருத்துகளை வழிமொழிந்த பிளேட்டோ, அரிஸ்டாடில், புருனோ போன்றவர்கள் இன்றைய சராசரி மேதையை விட மேலானவர்களே!. இது ஒரு புறம் இருக்க மற்றொரு உளவியலாளர் கில்கிறிஸ்ட் மேதைகள் வாழ்ந்து இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுநாள் வரைக்கும் ஒரு முட்டாள் பிறக்கவேயில்லை என்கிறார்.

 கடந்த நூற்றாண்டில் மூளையை அதிகமாக பயன்படுத்தியவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தானாம். அவர் கண்டுப்பிடித்த சார்புநிலை தத்துவம் உலக தத்துவங்களில் தலை சிறந்தது. அத்தகைய விஞ்ஞானி ஐன்ஸ்டீனை முட்டாள் என பாவிப்பவர்களும் உண்டு. அவர் வீட்டில் வளர்த்த பூனை கூண்டுக்குள்ளேயிருந்து வெளியே வர பெரிய பாதையும், அதன் குட்டிகள் வெளியே வர சிறிய பாதையும் வைத்திருந்தார். தாயும், குட்டியும் வெளியே வர ஒரு பொது வழி போதும் என்கிற பொது அறிவு அவரிடம் இல்லையே! என அவரை கிண்டல் செய்யும் ஞானிகள் அவரது காலத்திலிருந்தே இன்று வரை இருந்து கொண்டிருக்கிறார்கள்.

முட்டாள் என சித்தரிக்கப்பட்டவர்களால்தான் உலகம் பல மாற்றங்களை கண்டிருக்கிறது. தாய், தன்னை முட்டாள் என சொன்னதற்காக துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள முயற்சித்தான் ஒரு சிறுவன். ஒரு முறையல்ல மூன்று முறை. என்ன அதிர்ஷ்டம் பாருங்கள்! மூன்று முறையும் அந்த துப்பாக்கி சரியாக வேலை செய்யவில்லை. முட்டாள் என அழைக்கப்பட்ட அந்த சிறுவன்தான், பிற்காலத்தில் நவாப்களை வென்று ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்ற காரணமாக இருந்தான். அவன்தான் ஆற்காட்டு வீரர் என அழைக்கப்படும் இராபர்ட் க்ளைவ்.

ஜெர்மினிய சர்வதிகாரி ஹிட்லரை இரண்டு நிகழ்வுகள் அதிகமாக கோபமூட்டின. ஒன்று சார்லி சாப்ளினின் திரைப்படங்கள். 1940 ஆண்டு சாப்ளின், த கிரேட் டிக்டேட்டர் எனும் திரைப்படத்தின் மூலம் ஹிட்லரின் ஆட்சியை நையாண்டி செய்தார். அதுமட்டுமல்ல அதனைத் தொடர்ந்து வெளிவந்த அனைத்துப் படங்களிலும் சாப்ளின் ஹிட்லரைப் போல மீசை வைத்து நடித்தார். இந்த நடவடிக்கை ஹிட்லரை அதிகம் கோபமூட்டினாலும் ஒரு கட்டத்தில் அதிலிருந்து மீண்டும் வந்துவிட்டான். ஆனால் ஹிட்லரின் ஆட்சி முட்டாள் ஆட்சி என்று சொன்ன யூதர்கள் மீதான கோபம்தான் கடைசி வரைக்கும் அவனை கோபமூட்டிக் கொண்டிருந்தது. அதற்காக யூதர்களை அவன் கொத்துக்கொத்தாக கொன்று குவித்தான். இன்று இந்திய நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஹிட்லர் பெயர் தடை செய்யப்பட்ட சொல்லாக இருப்பதைப்போல ஹிட்லர் அவையில் முட்டாள் என்கிற சொல் தடை செய்யப்பட்ட சொல்லாக இருந்தது.

 முட்டாள் என்கிற சொல் விளையாட்டு துறையிலும் அதிகம் விளையாடிருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டின் தாயகம் இங்கிலாந்து. ஒரு கட்டத்தில் அந்த நாடு கிரிக்கெட் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது. அதை எழுத்துலக வேந்தன் பெர்னாட்ஷா இவ்வாறு விமர்சித்தார். “பதினொரு முட்டாள்கள் விளையாட, பதினோராயிரம் முட்டாள்கள் பார்ப்பது கிரிக்கெட்”. உலக கிரிக்கெட் ரசிகர்களையும், அதை நடத்தும் நாடுகளையும் ஆட்டம் காண வைத்த விமர்சனம் அது. அந்த விமர்சனம் இன்று வரை இரண்டு விதமான சந்தேகத்தை எழுப்பி நிற்கிறது. அவரால் விமர்சிக்கப்பட்டது கிரிக்கெட்டா? அதற்குள் இருக்கும் அரசியலா? இது ஒருபுறம் இருக்க, உலக அளவில் இரண்டாவது பெரிய விளையாட்டான இந்த கிரிக்கெட் இதுநாள் வரைக்கும் ஒலிம்பிக் போட்டிற்குள் நுழைய முடியவில்லை என்றால் அதற்கான காரணம் ஷாவின் விமர்சனம்தான்.

 முட்டாள் கதாப்பாத்திரங்கள் இலக்கியத் துறையில் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றன. உலகில் அதிக மக்களால் விரும்பி வாசிக்கப்படுவது முட்டாள் அரசனை கதாப்பாத்திரமாகக் கொண்ட ஆயிரத்து ஓர் இரவுகள் அரேபிய புத்தகம்தான். உலகின் மிகச்சிறந்த நகைச்சுவை “முட்டாள் நண்பன்” என்கிற அமெரிக்க கதையே. தமிழில் தமிழ் மாணவர் என அழைக்கப்படும் வீரமாமுனிவர் எழுதிய முட்டாள் சீடர்களைக் கொண்ட பரமார்த்த குரு கதைக்கு இன்றளவும் வாசகர் வட்டம் உண்டு.

 உலக அளவிலான நாடாளுமன்ற விவாதத்தில் முட்டாள் சொல் பற்றிய விவாதமே மிகச்சிறந்த நகைச்சுவை விவாதமாக கருதப்பட்டு வருகிறது. ஜெர்மனி நாடாளுமன்றத்தில் ஒரு முறை பிஸ்மார்க் “இங்கே இருப்பவர்களில் பாதி பேர் முட்டாள்கள்” என்றார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உடனே அவரது கருத்தை திரும்பப் பெற்றுக்கொண்டார் “இங்கே இருப்பவர்களில் பாதி பேர் முட்டாள்கள் அல்ல“.

முட்டாள் என்கிற சொல் இன்று மன்னர், அரசியல், குடியரசு என்கிற மூன்று சொல்லிற்கு அடுத்ததாக அதிகம் உச்சரிக்கப்படும் சொல்லாக இருந்து கொண்டிருக்கிறது. அதற்காக ஒரு தினம் கொண்டாடுமளவிற்கு அந்த சொல் பிரசித்திப் பெற்றதாக இருக்கிறது..           

 இந்தியர்களாகிய நாம் 1947 முதல் ஆகஸ்ட் 15 தினத்தை சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறோம். ஆனால் அதற்கு முன்பே சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. 1919 முதல் நம் முன்னோர்கள் ஜனவரி 26 தினத்தை சுதந்திர தினமாக கொண்டாடி வந்தார்கள். ஆனால் சுதந்திரம் ஆகஸ்ட் 15 அன்று கிடைத்தது. ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாட்டத்தை பாதியில் விட்டுவிடக்கூடாது அல்லவா! ஜனவரி 26 ஆம் தேதி கொண்டாட்டத்தை குடியரசு தினமாக மாற்றிக்கொண்டார்கள். மேதகு அம்பேட்கர் தலைமையில் சட்டம் இயற்றும் பணி 1949 நவம்பர் 26 அன்றே முடிவுக்கு வந்து விட்டபோதிலும் அதை நடைமுறைப்படுத்த அன்றைய ஆட்சியாளர்கள் ஜனவரி 26 வரைக்கும் காத்திருந்தார்கள் என்றால் மக்களின் கொண்டாட்டத்திற்கு அவர்கள் கொடுத்த மரியாதை அது. உண்மையில் அதிகம் கொண்டாடப்பட்டு வருவது ஜனவரி 26 தான். அதே போன்றுதான் ஜனவரி முதல் தேதி ஆங்கில புத்தாண்டாக உலகம் கொண்டாடி மகிழ்ந்தாலும் நீண்ட காலம் தொட்டு புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருவது ஏப்ரல் முதல் தேதிதான்.

 முதல் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதன் ஜீலியஸ் சீசர். இவர்தான் முதலில் காலண்டர் முறையை அறிமுகப்படுத்தினார். வருடதத்திற்கு 365¼ நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டதும் இவர் காலத்தில்தான். சீசருக்கு முந்தைய காலத்தில் காலண்டர் முறை இருந்தாலும் அது சந்திரனை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. சோஜிஜென் எனும் வானவியல் வல்லுனரின் ஆலோசனையினால், சீசர் சூரியனை அடிப்படையாகக் கொண்டு காலண்டர் முறையினை அறிமுகப்படுத்தினார். இந்த காலண்டரானது பத்து மாதங்களைக் கொண்டும் வருடத்தின் முதல் மாதமாக ஏப்ரலை கொண்டும் இருந்தது. ஏப்ரல் என்பதற்கு கிரேக்க மொழியில் தொடக்கத்திலிருந்து எனப் பொருள்படும். இந்த காலண்டர் 1581 வரை நடைமுறையில் இருந்தது. 1582 ஆம் ஆண்டு தொடக்கத்தில் போப் கிரிகோரி புதிய காலண்டர் ஒன்றை அறிமுகப்படுத்தினார். இந்த காலண்டர் 12 மாதங்களைக் கொண்டும் முதல் மாதமாக ஜனவரியைக் கொண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. அந்த காலண்டர்தான் இன்று நடைமுறையில் இருக்கிறது.

 உலகில் பல வகையான காலண்டர்கள் உண்டு. உதாரணமாக டிசம்பர் 21 உடன் முடிந்த மாயன் காலண்டர், இஸ்லாமிய நாடுகளில் அரபிக் காலண்டர், சீனக்காலண்டர், தமிழ் நாட்டில் திருவள்ளுவர் காலண்டர்....... என பலவகையான காலண்டர்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அதேப்போன்று ஒவ்வொரு நாட்டிலும் வருடப்பிறப்பில் சர்ச்சைகள் இருந்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்மாதங்களில் வருடப்பிறப்பு சித்திரை என்கிறார்கள் ஒரு பிரிவினர். மற்றொரு பிரிவினர் தை என்கிறார்கள் அல்லவா!. இந்தியாவில் முகலாய மன்னன் ஔரங்கசிப் காலம் வரைக்கும் கனிஸ்கர் அறிமுகப்படுத்திய சக ஆண்டு காலண்டர்தான் நடைமுறையில் இருந்தது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வருகைக்குப்பின் ஆங்கில காலண்டர் நடைமுறைக்கு வந்தது. இருப்பினும் நம் நாட்டின் தேசிய காலண்டரும் சக காலண்டர்தான்.

 ஐரோப்பிய நாடுகளில் இன்றும் இரண்டு விதமான காலண்டர்கள் பயன்பாட்டில் இருக்கிறது. ஒரு பிரிவினர் ஜனவரி முதல் தேதியை புத்தாண்டு தினமாக கொண்டாடி மகிழ்கின்றனர். மற்றொரு பிரிவினர் ஏப்ரல் முதல் தேதியை புத்தாண்டாக கொண்டாடுகின்றனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் ஆங்கில மொழியை தாய் மொழியாக்கொண்ட நாடுகள் ஒன்று கூடி தீர்க்கமான ஒரு முடிவை எடுத்தன. ஜனவரி முதல் தேதியே புத்தாண்டு தினம். இதை ஏற்க மறுத்து ஏப்ரல் முதல் தேதியை கொண்டாடுபவர்கள் முட்டாள்கள் என சித்தரித்தார்கள். அது முதல் ஏப்ரல் முதல் தேதி முட்டாள் தினமாக கருதப்பட்டு வருகிறது.

 இந்திய பிரதமர்களில் முற்போக்குவாதியாக செயல்பட்டவர் ஜவஹர்லால் நேரு. அவர் ஏப்ரல் முதல் தேதி முட்டாள் தினம் என சித்தரிப்பதை ஏற்க மறுத்தார். அதன்படி ஏப்ரல் முதல் தேதியில் ஒரு புரட்சிகரமான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பினார். 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி அவர் மக்கள் முன் உரையாற்றுகையில் “ஏப்ரல் முதல் தேதியை உலகம் எப்படி பார்க்கிறதோ, நாம் இந்த நாளை மாற்றத்தின் தினமாக பார்ப்போம்”என்றவர் காலணா, அரையணா, நாணய முறையை ஒழித்து, தசம நாணய ( உரூபாய்) முறையை அறிமுகப்படுத்தினார்.

 இந்த உலகில் தன்னை முட்டாள் என அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் இரண்டு பேர்தான். ஒருத்தர் நடிகர் சந்திரபாபு.”நானொரு முட்டாளுங்க, நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க “என பாடினார். மற்றொருவர் பிரெஞ்ச் நாட்டு புரட்சியாளர் வால்டர். “உலகில் வாழும் மனிதர்கள் எல்லோரும் புத்திசாலிகள் என நினைத்துக்கொண்டு இருந்துவிட்டேன். நான் ஒரு முட்டாள்” என்றார்.

 உலகத் தலைவர்கள் முட்டாள் சொல்லை பலவிதமாக கையாண்டிருக்கிறார்கள். “நான் முட்டாள்களுக்கு தலைவனாக இருப்பதை விடவும், புத்திசாலிகளுக்கு வேலைக்காரனாக இருக்கவே விரும்புகிறேன்” என்றார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்.. ஆனால் தென்னாட்டின் சாக்ரடீஸ் என அழைக்கபட்ட ஈ.வெ.ரா பெரியார் திராவிட கழகத்திற்குத் தேவை முட்டாள்களே, தவிர புத்திசாலிகள் அல்ல என்றார்.

 உலகில் முதன்முதலாக முட்டாள் என குற்றம் சாட்டப்பட்டவர் சாக்ரடீஸ். அவர் நஞ்சு பருகி மரணத்தை தழுவும் முன் இவ்வாறு சொன்னார் “நான் ஒரு முட்டாள் என்கிறீர்கள். அப்படியானால் இனி இந்த உலகம் முட்டாள் கீழ்தான் இயங்கும்”. அவரது கருத்துபடி இன்றைய உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இன்று இந்த உலகத்தை இயக்கிக்கொண்டிருப்பது கணினி. கணினிக்கு நாம் சூட்டிருக்கும் பெயர் முட்டாள் இயந்திரம் அன்றோ!

 - அண்டனூர் சுரா

(கட்டுரையாளர் – பள்ளி ஆசிரியர் – கந்தர்வகோட்டை)