பாம்பியின் (Pompei) அகழ்வாய்வில் பல திறப்பட்ட இருநூறு மருத்துவக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் பொதுவாக உரோமானியர்களின் மருத்துவ நன்கொடை குறிப்பிடத்தக்கதாய் இல்லை.

‘உரோமானியர்கள், மருத்துவர்கள் இல்லாமலேயே அறுநூறு ஆண்டுகள் வாழ்ந்துவிட்டனர்’ என கிறித்துவுக்குப் பின் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளைனி (Pliny) கூறுகிறார். உண்மையில் பார்க்கப் போனால் கிரேக்கர் தொடர்பில்லையானால் அவர்களுக்குச் சொல்லிக் கொள்ளத் தக்கதாக ஒன்றும் இருந்திருக்காது. முந்தைய நாட்களில் உரோமர்கள், செடியினங்கள், உப்புகள், காட்சிச்சண்டை வீரனின் (gladiators) குருதி போன்ற வெறுக்கத்தக்க ஒரு வேளை நஞ்சுப் பொருள்கள், மற்றும் மனிதனின் கொழுப்பு ஆகியவற்றையே நோயை நீக்க நம்பியிருந்தார்கள். ஏறக்குறைய கி.மு. 91_இல் புகழைத் தேடிக் கொண்ட முதல் கிரேக்க மருத்துவர் ஏஸ்கிளியபியட்ஸ் (Asciepiades) ஆவர். அவர் முறையான உணவு, உடற்பயிற்சி, தூயகாற்று, தூய்மை ஆகியவற்றை மிக வற்புறுத்தினார். கலென் (Galen) (130-200A.D) எல்லோரைக் காட்டிலும் புகழ்மிக்கவராய் இருந்து, உடல் கூறு அறிவினைக் கற்க வேண்டிய தேவையை அழுத்தமாக வற்புறுத்திக் கூறினார்.

துளைப் பொறிகள் (drills); அறுவைக்கத்திகள் (scaipels) இடுக்கிமுள் (tweezers); பற்றுக்குறடு (forceps), நாற்பல் இடுக்கிப் பிடி (four-jawed clamp) ஆகியவை அறுவைச் சிகிச்சையில் திறத்தோடு பயன்படுத்தப்பட்டன. தோற்றும் வென்றும் மெல்ல மெல்ல வளர்ந்தனர் அறுவையாளர்கள். எலும்பு முறிவுகளும் எலும்பு விலக்குகளும் திறமையாக நலப்படுத்தப்பட்டன. பொய்க்கால் வைத்தலையும் அவர்கள் அறியாதவர்களல்லர். ஆயினும் உணர்வகற்றும் பொருள்களும் (anaesthetics), நோய் நுண்மத்தடைப் பொருள்களும் அங்குக் கிடையா. பல அறுவைச் சிகிச்சைகள். குடல் வால் அறுவை போன்றவை. அறுவைச் சிகிச்சை செய் மருத்துவர் திறனுக்கு அப்பாற்பட்டிருந்தன.

(நன்றி: உடலும் மருந்தும்)