arene_621

பழங்காலத்தில் மக்கள் சந்தோஷமான நிகழ்வு, மதச்சடங்குகள், திருமண விழா, பிறப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகளில் தங்கள் உணர்வுகளைக் கொண்டாட பானம் அருந்தினர். இது ஒரு சமூக பழக்கமாகவே இருந்தது. இந்த நடைமுறை காலம் காலமாகவே நடந்து வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான பானம் அருந்துகின்றனர். கிரேக்கர்கள், ரோமானியர்கள் போன்றவர்கள் தங்களின் கடவுளான பாச்சசசை தொழுவதற்கு ஒயின் அருந்துவதை ஒரு சடங்காகவே கொண்டாடினர். துக்ககரமான  நிகழ்விலும், குடும்ப விழாக்களிலும் ஒயின் அருந்தி மகிழ்ந்தனர். இது பற்றி, பைபிள் கதைகளிலும் கூறப்பட்டுள்ளது. அராரத்  மலையில் வந்து தங்கிய நோவா, அங்கு திராட்சைக் கொடியினை நட்டு வளர்த்து, திராட்சை பழம் பறித்து, அதனை புளிக்கச் செய்து, அந்த பானத்தைக் குடித்தாராம்.

areni_cave_1      சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, உலகின் மிகப் பழமையான ஒயின் பிழியும் மற்றும் சேகரித்து புளிக்க வைக்கும் பாத்திரத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அது, ஈரானுக்கு அருகில் ஆர்மேனியன் கிராமத்திற்கு பக்கத்திலுள்ள, தெற்கு ஆர்மேனியன் மலையில் ஆர்னி-1 குகையிலிருந்து கிடைத்துள்ளது. திராட்சை பிழியும் பெரிய தொட்டி, அதிலிருந்து வடிந்து, சேகரித்து, புளிக்க வைக்கும் மண் ஜாடிகள் மற்றும் ஒயின் குடிக்கும் குவளை போன்றவை இருக்கின்றன. ஆனால் இவைகளின் வயது சுமார் 6,100  ஆண்டுகள் இருக்கலாம் என சர்வதேச ஆராய்ச்சிக்குழு கருதுகிறது. அது மட்டுமல்ல, இவைகளை வேதிஆய்வுக்கு உட்படுத்தியதில் வந்த முடிவும், இவை 6,100 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றே தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு பல சான்றுகள், ஒயின் அருந்துவதைப் பற்றி கிடைத்திருந்தாலும், இதுவரை கிடைத்துள்ளதில் மிகப் பழமையான மற்றும் முழுமையான சான்று இதுவே என லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலையைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சி இணை நிர்வாக இயக்குனர் கிரிகாரி அரேஷியன் தெரிவித்துள்ளார்.

            மிகப் பழமையான ஒயின் தயாரித்த பகுதியைப் பற்றிய செய்தியை நேஷனல் ஜியோகிராபிக் சொசைட்டி(National Geographic Society), 2011  ஜனவரி 11ம் நாள் தெரிவித்துள்ளது. ஆர்னி குகையிலுள்ள சான்றுகள் இங்கே ஒயின் தயாரிக்கும் வசதி இருந்ததை துல்லியமாக நிரூபிக்கின்றன என்று பிலடெல்பியா அருங்காட்சியக பல்கலையின் உயிர்மூலக்கூறியியல் அகழ்வாராய்ச்சி சோதனைசாலையின் அறிவியல் நிர்வாக இயக்குநர் பாட்ரிக் மெக்கவர்ன் கருத்து தெரிவிக்கிறார். மேலும் இதிலிருந்து வெளிப்படும் தகவல் என்ன தெரியுமா? இவ்வளவு பெரிய ஒயின் தயாரிக்கும் இடத்தைப் பார்க்கும்போது யுரேஷியாவில் இதற்கு முன்பே பல வகை திராட்சைகளைப் பயிர் செய்திருக்கின்றனர் என்பதும் தெரியவருகிறது என இந்த விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  

areni_cave_640

     ஆர்னி-1 குகைகளில் இருந்த ஒயின் தயாரிப்பு பொருள்களிலிருந்து கிடைத்த ரேடியோகார்பன் டேட்டிங் தகவல் மூலம், இவை தாமிர காலத்தைச் சேர்ந்தவை என்றும் கூறப்படுகிறது. அங்கே 3 அடி சதுரமான குழி ஒன்றும் காணப்படுகிறது. இது திராட்சையை காலால் மிதித்து பிழியும் இடமாக இருக்கலாம் என்று கணிக்கின்றனர். இதன் ஓரத்தில் கனமான விளிம்பும் கூட இருக்கிறது. மேலும் இதனருகில் நசுக்கிய திராட்சைகளும், உலர்ந்த திராட்சைக் கொடிகளும், திராட்சைக் காம்புகளும் கூட காணப்படுகின்றன. இவைகளின் வயதும் 6,000 ஆண்டுகளுக்கு மேல்தான். இது சிறிய ஒயின் தயாரிப்பு இடமாக இருப்பதால், இது சடங்குகள் நடத்தப்படும் இடமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும்  இந்த இடத்தைச் சுற்றிலும் கல்லறைகள் காணப்படுவதால், இந்த ஒயின் தயாரிப்புகள் அந்த இறப்பு சடங்குகளுக்காகவே பயன்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. இதிலிருந்து இறப்பு விருந்துகளில் ஒயின் தான் முக்கிய பானமாக இருந்திருக்கிறது என்பதும் தெரியவருகிறது.

      arene_320ஒயின் புளிக்க வைக்கும் ஜாடியின் அடியில், ஒயினால் ஏற்பட்ட கரும்சாம்பல் நிறத்திலான கறை காணப்படுகிறது. இது, தாவர நிறமி மால்விடின் (malvidin) என்ற வேதிப் பொருள். இது ஒயினால் ஏற்பட்டது என்றும், இதனை அகற்றுவது கடினம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதன் அருகில், மண்ணாலான ஒயின் அருந்தும் கோப்பையும், விலங்கின் கொம்பாலான ஒரு கிண்ணமும் கூட காணப்பட்டது. இவைகளுடன் காணப்பட்ட சிதைந்த திராட்சை, அதன் காம்பு, கொடி மற்றும் அதன் மீதி மிச்சங்கள் போன்றவை அங்கே சிவப்பு ஒயின் தயாரிப்பைத் தெளிவாக உணர்த்துகின்றன. இப்போதும் கூட, ஆர்மேனியன் கிராமப் பகுதிகளில், திராட்சை ஒயின் தயாரிப்புதான், முக்கிய தொழிலாகவும், பாரம்பரிய தொழிலாகவும் இருக்கிறது. 

           ஆர்னி-1 குகையில் 2008ம் ஆண்டு, ஒரு காலணி (Shoe) கிடைத்தது. அதன் வயதும் சுமார் 5,400௦௦ ஆண்டுகள் ஆகும்.  இது தோல் மற்றும் புல்லால் ஆனது. இங்கேயே, செம்பு காலத்தைச் சேர்ந்த மூன்று மண்டையோடுகளும் கிடைத்துள்ளன. இவை தனித்தனியான குழிகளில் இருந்தன. மேலும் இவைகளில் இரண்டு 12-14 வயது பெண் குழந்தைகளுடையது. இவர்கள் இறப்பு சடங்குக்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர். அதிசயமாக, ஒரு மண்டையோட்டில் மூளை பத்திரமாக பதப்படுத்தப்பட்டும் இருந்ததாம். இப்பகுதியைச் சுற்றிலும், எரிமலை பளிங்கு கற்களிலான கருவிகளும் காணப்படுகின்றன.

-பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)