விழிக்கும்போது கனாக்கள் மூளையின் நினைவுப் பகுதியில் சேமிப்புக் கிடங்கில் தங்கியிருக்கும் அல்லது மறக்கப்பட்டிருக்கும் எனக் கூறுவது இக்கேள்விக்குரிய எளிய விடையாகும்.

நினைவில் நிற்பனவாயிருப்பினும் அல்லது மறப்பனவாயிருப்பினும் நாம் ஒவ்வொரு இரவிலும் கனாக்கள் காண்பது மனத்தை நலமாக வைக்கும் எனச் சில நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் தான் இரவில் கண்ட கனாக்களைக் குறித்து வைத்ததோடு சில வேளைகளில் எதிர்காலத்தில் நிகழ இருப்பனவற்றை முன்கூட்டியே அறிவிப்பனவாய்ச் சில கனாக்கள் இருந்ததையும் தன் “நேரத்தைப் பற்றிய சோதனை” (An Experiment with Time) என்ற நூலில் ஜே.டபிள்யூ.டன்னே (J.W.Dunne)) என்பார் வரைந்துள்ளார்.

நாம் நனவு நிலையில் விழித்திருக்கும்போது நம் நிகழ்கால உணர்வுகளை மட்டும் அறிதற்கேற்ப காலப்புலனுணர்வு செங்குத்து நிலையுடையதாயும் நாம் தூங்கும் நிலையில் நம் இறந்தகால எதிர்கால உணர்வுகளில் பயணம் செய்வதற்கேற்பக் காலப் புலனுணர்வு படுக்கை நிலையுடையதாயும் அமையும் என அந்த நிபுணர் டன்னே தன் கருத்தாகக் குறித்துள்ளார். நாம் பகலில் தொழில்பட்டுக் கொண்டிருக்கும் போது பல்வேறு காரணங்களால் நம்மால் செயலுருவாக்க முடியாமல் போனவை நாம் தூங்கும்போது கனாக்களாகக் காணப்படுகின்றன என்றும் பகலில் செயலுருவாக்க இயலாத நம் விருப்பங்கள் தூங்கும்போது நம் கனாக்களில் செயலுருவாக்கம் பெற முயல்கின்றன என்றும் மற்ற நிபுணர்கள் கூறுகிறார்கள்.

(உடலும் மருந்தும் நூலிலிருந்து)