அதிகாலை மணி

Hanging
3.00 : தூக்கத்தில் இருந்து எழுப்பப்பட்டார், குளித்தார்.
3.30 : புதிய சட்டையும், பைஜாமாவும் அணிந்து கொண்டு பூசை செய்தார்.
3.45 : மனைவி எழுதிய கடைசிக் கடிதத்தை அமைதியாகப் படித்தார். முகத்தில் எந்த உணர்ச்சியும் வெளிப்படவில்லை.
4.00 : சிறையில் இருந்து தூக்கு மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.
4.10 : மூத்த போலிஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், இரு மாஜிஸ்திரேட்டுகள் முன்னிலையில் தூக்குத் தண்டனை உத்தரவை சிறைக் கண்காணிப்பாளர் வாசித்தார்.
4.15 : தூக்கு மேடையில் மெதுவாக ஏறினார். கொஞ்ச நேரம் நின்றார். அங்கிருந்த அதிகாரிகளை நோக்கி ‘கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்' என்று கூறி விடை பெற்றார்.
4.20 : தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர் முன்னால் வந்து கை கூப்பி மன்னிப்புக் கோரி, முகத்தை கருப்புத் துணியால் மூடினார்.
4.30 : கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் தன் கையில் இருந்த சிவப்புக் கைக்குட்டையைக் கீழே போட்டவுடன், தூக்கு மேடையை விலக்கும் விசை அழுத்தப்பட்டது. தூக்கு மேடைக்கு அடியில் இருந்த குழியில் அவர் விழுந்தார். அவரது கபத்தை தூக்குக் கயிறு இறுக்கியது.
5.00 : அவரைப் பரிசோதித்த மருத்துவர் இறந்துவிட்டதாக அறிவித்தார்.

என்ன ஒரு திட்டமிட்ட, கச்சிதமான, பிசகில்லாத, நேர்த்தியான, எதிர்ப்பில்லாத படுகொலை பாருங்கள்! நெஞ்சில் ஈரமுள்ள யாரையும் உறைய வைக்கும் ஓர் உயிரின் கடைசி நிமிடங்கள் இவை. பதினான்கு வயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு இரையாக்கிக் கொலை செய்த கொல்கத்தாவைச் சேர்ந்த தனஞ்செய் சாட்டர்ஜி, 14 ஆண்டுகளை சாவு பயத்திலேயே சிறையில் கழித்து, அத்தனை கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், இரண்டாண்டுகளுக்கு முன்பு (மேற்சொன்னபடி) மரண தண்டனையை ஏற்க நேர்ந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மனிதத் தன்மையற்ற இந்தப் படுகொலைக்கு மரண தண்டனை என்று பெயர். நீதி தேவதைக்குக் கொடுக்கப்படும் நரபலி! அம்பேத்கர், காந்தி தொடங்கி எத்தனையோ தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மரண தண்டனை கூடாதென வலியுறுத்திய போதும், உயிர் வாழ்வதற்கான உரிமையை முதன்மை அடிப்படை உரிமையாகக் கொண்டாடும் இந்தியா என்ற மாபெரும் ஜனநாயக நாடு, அதை ஒழிக்க இன்றளவும் துணிவற்று இருக்கிறது.

மரண தண்டனையை இந்தியா ஒழித்துக் கட்ட வேண்டுமென்ற முழக்கம், மீண்டும் தற்போது வலுவாகக் கேட்கத் தொடங்கியிருக்கிறது. காரணம், முகமது அப்சல் குரு. 2001 டிசம்பரில் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்க முற்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அப்சலுக்குத் தூக்கு தண்டனையை சென்ற மாதம் உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். அப்சலின் மனைவி தபசும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்ததைத் தொடர்ந்து, தற்காலிகமாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் முதலமைச்சரும், மனித உரிமை ஆர்வலர்களும் அப்சலை தூக்கிலிட எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் நிலையில், இந்துத்துவா சக்திகளும் அவை சார்ந்த ஊடகங்களும் கொலைக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

மரண தண்டனை ஆதரவு கூச்சல்களுக்குப் பின்னால் இருக்கும் சிறுபான்மையினர் எதிர்ப்பு அரசியல் நாமறியாததல்ல. வன்முறையின் ‘பிதாமகன்'களான இந்துத்துவாவாதிகள் நடத்திய வெறியாட்டங்களில் உயிரிழந்தோர், உறுப்பிழந்தோர், உடைமையிழந்தோருக்கு இதுவரை சரியான புள்ளி விவரங்களும் இல்லை. அதற்கான நீதியும் ஆண்டாண்டு காலமாக மறுக்கப்பட்டே வருகிறது. பாபர் மசூதியை இடித்து, குஜராத்தில் கலவரத்தை மூட்டி, சிறுபான்மையினரை வேட்டையாடியவர்கள் யாரெனத் துல்லியமாகத் தெரிந்தும் குற்றவாளிகளை இந்தியச் சட்டத்தால் பிடிக்க முடியவில்லை. நரேந்திர மோடிக்கும் அத்வானிக்கும் குறைந்தபட்ச தண்டனை கூட வழங்காமல் அவர்கள் சுதந்திரமாக உலா வரவும், கருத்துச் சொல்லவும், கலவரங்களைத் தூண்டவும் அனுமதிக்கிற ஜனநாயகம், அப்சல் போன்றோர்களுக்கு தன் சர்வாதிகாரக் கரங்களால் தூக்குக் கயிற்றை இறுக்குகிறது.

‘மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தைத் தாக்கி, பாதுகாப்புப் படையினரைக் கொன்ற அப்சலுக்கு கருணை காட்டப்படுமெனில், அது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, பாதுகாப்புப் படையினரின் மன உறுதிக்கும் பங்கம் விளைவிக்கும்' என இன்று கதறும் இந்துத்துவவாதிகள் அன்று ‘தேசத் தந்தை' எனச் சொல்லப்பட்ட காந்தியை சுட்டுக் கொன்ற இந்து வெறியனான நாதுராம் கோட்சேவுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டபோது பதறிப் போனார்கள். ஆக, இந்துத்துவவாதிகளைப் பொறுத்தவரை, இங்கு மரண தண்டனை ஆதரவு, எதிர்ப்பு இரண்டும் மத உணர்வின் அடிப்படையிலேயே மதிப்பீட்டுக்கு உள்ளாகிறதே தவிர, மனிதாபிமானத்தினால் அல்ல.

வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டுவதாக, போலி தேசாபிமானத்தால் பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்த நாட்டில் வன்முறைக்கு முடிவேயில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பு வழியாக அரங்கேறும் கொலை ஒருபுறமெனில், அரசு கருவிகளால் ஏவப்படும் கொலைகள் இன்னொருபுறம். காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் ராணுவத்தினரால் பொது மக்களின் வாழ்வுரிமைக்கு எதிராக ஏவப்படும் அட்டூழியங்கள் எத்தனை எத்தனை?! அரசால் பயிற்றுவிக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட வன்முறை கும்பல்களான ராணுவமும் அதிரடிப்படையும் காவல்துறையும் கொன்று புதைத்தவர்களுக்கும், பாலியல் வல்லுறவு செய்தவர்களுக்கும் கணக்கில்லை. இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எந்த செய்தியையாவது கேட்டிருக்கிறோமா? கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் புரிந்து விடுதலை கண்ட நாட்டில்தான் இத்தனை ரணகளமும். அகிம்சை அகிம்சை என ஒரு பக்கம் துதி பாடிக் கொண்டே, மறு பக்கம் கொலைக்களங்களை உருவாக்கும் நரித்தனம்.

உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்டபோதும் இந்தியா தயங்குகிறது. காரணம், மரண தண்டனை இல்லையென்றால் குற்றங்கள் பெருகுமாம்! மரண தண்டனை ஒழிக்கப்பட்ட நாடுகளில் குற்றங்கள் தலை விரித்தாடவில்லை. அதே போல் மரண தண்டனையை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதால் மட்டும் குற்றங்கள் நிகழாமலும் இல்லை. கொலை செய்கிறவன், ‘அய்யோ நமக்கு மரண தண்டனை வழங்கப்படும்' என்று கொலையை செய்யாமல் விடுகிறானா என்ன? அந்த நேரச் சூழலும் மனப்பிறழ்வுமே ஒரு மனிதனை கொலைகாரனாக்குகிறது.

ஒருவன் குற்றம் செய்யாமல் தடுப்பதும், திருத்துவதுமே சட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, ‘பழிக்குப் பழி' என்பது போல் கொலைக்கு கொலையையே தண்டனையாக வழங்குவது, எந்த விதத்தில் நியாயம்? தூக்கு என்பது பிரச்சனைக்கானத் தீர்வாக இல்லாமல் வெற்று முடிவாக அமைவதால் தானே குற்றங்கள் குறையாமல் தொடர்கின்றன? கடந்த பதினைந்து ஆண்டுகளில் மரண தண்டனையை ரத்து செய்த நாடுகள் சிலவற்றில், ஒரு கொலைகூட நடக்கவில்லை என்கிறது ஓர் அறிக்கை. மரணத்தை தண்டனையாக அளிப்பதனாலேயே புத்தி வந்துவிடும் என்ற உளவியல் மாயையானது.

மரண தண்டனையைப் பொறுத்தவரை, குடியரசுத் தலைவரின் முடிவே இறுதித் தீர்ப்பாகிறது. குடியரசுத் தலைவர் விரும்பினால் மரண தண்டனையில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு விலக்கு அளிக்க, அமைச்சரவைக்குப் பரிந்துரை செய்யலாம். அப்சல் வழக்கில் குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதற்கு முன் முந்திக் கொண்டு உச்ச நீதிமன்றம், ‘‘குடியரத் தலைவரோ, ஆளுநரோ தண்டனை பெற்றவர்களுக்கு மன்னிப்போ அல்லது தண்டனை குறைப்போ வழங்குவதில் தங்கள் அதிகாரத்தைத் தவறாக, பொருத்தமற்ற வகையில் பயன்படுத்தி இருந்தால், அதில் தலையிட நீதிமன்றத்துக்கு உரிமை உண்டு. சாதி, மதம், அரசியல் நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் கருணை மனுக்களை பரிசீலிக்கக் கூடாது'' என வேறொரு வழக்கின் மூலம் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளது. ஒரு வேளை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், அப்சலுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்களிக்க முயன்றால், அது மத உணர்வினாலே என்று கருதி நீதிமன்றம் தலையிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

நீதிமன்றத்தை மீறிய ஒரு நீதி இருக்கவே முடியாதா? நீதிபதிகள் பணம், பதவி, மதம், சாதிய உணர்வு என எவற்றுக்கு வேண்டுமானாலும் அடிமையாகக் கூடியவர்களே! ஊழல் புரிந்த, பெண்களோடு சிக்கிய நீதிபதிகளை வெகு அண்மையில்கூட நாம் பார்த்திருக்கிறோம். அப்படியிருக்கையில் நீதிபதிகளை உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களாக, ‘கடவுளர்களாக' கொள்வது சரியல்ல. அரிதிலும் அரிதான வழக்கில் மட்டுமே மரண தண்டனை கொடுக்கலாம் என்பதுதான் சட்டம். ஆனால், ‘அரிதிலும் அரிதான' என்பதற்கு எந்த வரையறையும் இல்லை. அதை முடிவு செய்வதும் நீதிபதியே! நீதிபதிகளும் சாதாரண மனிதர்கள்தான். சட்டம் படித்ததால் மட்டும் அவர்கள் நீதிமான்களாக இருப்பார்கள் என்ற கட்டாயம் இல்லை. வழக்கறிஞர்களே நீதிபதிகளாகிறார்கள்.

ஊழல் புரியும், பொய் சொல்லும் வழக்கறிஞர்களை நாம் அன்றாடம் கடந்து வருகிறோம். இவர்கள் நீதிபதிகளாகும்போது மட்டும் ‘புத்தர்'களாகிவிடுவார்களா என்ன? இந்த சாதியச் சமூகத்தில்தான் அவர்களும் பிறந்து வளர்ந்திருக்கிறார்கள். பிற்போக்குச் சிந்தனையும், சாதி மத ஆதிக்கமும், ஆண்டான் அடிமை சித்தாந்தங்களும் நீதியை எந்தத் திசையிலும் புரட்டிப் போடலாம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
குற்றமற்றவரை குற்றவாளியாக்கும், ஏழைகளின் உயிரை மலிவாகப் பார்க்கும் சீக்குப் பிடித்த சமூகம் இது. அதிகாரம் கொண்ட யாரும் யாரை வேண்டுமானாலும் பொய் வழக்குகள் மூலம் சிறையில் அடைத்துவிட முடியும். இதற்கு காவல் துறை முதற்கொண்டு நீதிமன்றங்கள் வரை துணைபோகும் என்பதே வெட்கப்பட வேண்டிய உண்மை. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கூடாது, அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வாதிடப்படும் சூழலில், ஒரு குற்றமற்றவர் சூழ்ச்சியாலோ, சூழலினாலோ சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளும்போது, மரண தண்டனையானது எத்தனைக் கொடூரமானது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

தீவிரவாதம், பயங்கரவாதம் என்பதன் பின்னணியில் பின்னப்படும் அரசியல் சூழ்ச்சிகள், இந்த நாட்டைக் கூறு போடுவதற்குப் போதுமானக் காரணமாக இருக்கிறது. நாட்டுப் பற்று என்பதை ராணுவத்தோடு தொடர்புபடுத்தவும், தேச விரோதம் என்பதை தீவிரவாதத்தோடு தொடர்புபடுத்தவும் பொது மக்களை தொடர்ச்சியான மூளைச் சலவையின் மூலம் தயார்படுத்தி விட்டது அதிகார வர்க்கம். ‘இஸ்லாமியர்களே தீவிரவாதிகள்' என்ற கருத்தை, பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மனதிலும்கூட விதைத்துவிடும் நாச வேலையை, ஊடகங்கள் இடையறாமல் செய்கின்றன. இந்துத்துவவாதிகள் எத்தகையக் கொடூரங்களை அரங்கேற்றினாலும், அதை ‘சனாதான தர்ம'மாகப் பார்க்க மக்கள் பழக்கப்படுத்தப்பட்டு விட்டனர்.

நாட்டில் எங்கு வன்முறை நிகழ்ந்தாலும் அதை இஸ்லாமியர்களே செய்திருப்பார்கள் என ஊடகங்கள் முந்திக் கொண்டு ஊகங்களை வளர்க்கின்றன. கடந்த சூலை மாதம் மும்பை ரயில் நிலையங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தபோதுகூட, இஸ்லாமிய அமைப்புகளே குறி வைக்கப்பட்டன. ஆனால், அடுத்த சில நாட்களில் காவல் துறை நடத்திய சோதனையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களிடம் வெடிமருந்துகளோடு இஸ்லாமியர்கள் அணியும் குல்லாவும், அங்கியும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், இது பரபரப்பான செய்தியாகவில்லை. இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற கருத்திலிருந்து வெகு மக்கள் துளியும் மாறிவிட, இந்து அதிகார வர்க்கம் இடம் கொடுக்காது.

காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களின் சூழல் தமிழ்நாட்டுக்கு ஏற்படுமெனில், இங்கும் அதே அதிகார வேட்டைதான் நிகழ்த்தப்படும். ராணுவம் குவிக்கப்பட்டு, நம் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படும். உங்கள் மேல் சிறு சந்தேகம் ஏற்படினும் சுட்டுத் தள்ளத் துப்பாக்கி குறி பார்க்கும். பெண்கள் எந்நேரமும் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் அச்சத்தோடு வாழ வேண்டியதுதான். அரச பயங்கரவாதத்துக்கு எதிராக அப்போது நாமும் திரண்டெழுவோம். தீவிரவாதிகளாக்கப்படுவோம் என்பதே உண்மை. இந்தப் பின்னணியில் அப்சல் வழக்கை அணுகுவதே பகுத்தறிவு, மனிதாபிமானம். புழுத்துப் போனப் பிற்போக்குச் சிந்தனையிலும், முறுக்கேறிய அதிகாரத்திலும் திளைத்திருந்தால், மனிதநேயத்தை நிலைநிறுத்த முடியாது.

மரண தண்டனை கூடாதென்பதை தண்டனையே கூடாதென்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஓர் உயிரைப் பறிக்கும் உரிமை யாருக்குமே இல்லை. சட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல. குற்றம் புரிந்தவர்கள் திருந்துவதற்கும் மேலும் அதைச் செய்யாமல் தயக்கப்படுத்துவதற்கும் தண்டனையானது பயன்பட வேண்டும். தவறிழைப்பது மனித இயல்பு எனும் பட்சத்தில், திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பே ஒரு நாட்டில் மறுக்கப்படுமெனில், அப்புறமென்ன ஜனநாயகம்? தப்பு செய்தவன் தண்டனை பெறுவான் என்பதே பழமொழி; மரண தண்டனை பெறுவான் என்பதல்ல. மனிதநேயத்திலும், உரிமையிலும் அரசியல் கலக்கக் கூடாது, தலையிடக் கூடாது. மரண தண்டனை வேண்டாமென்பதன் உண்மையான பொருள் மனிதநேயத்தை வளர்த்தெடுப்போம், மனித உரிமையைக் காப்போம் என்பதே! இதற்கு அரசியல், சாதி, மதமெனும் எந்த சாயமும் பூசாமல் இருப்பதுதான் நாகரிக சமூகத்தின் அடையாளம்.
Pin It