குழந்தை என்னும் பிரபஞ்சம் ஆதியிலிருந்தே அதன் போக்கில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.  அது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தன் குழந்தைப் பருவத்தை முழுமையாய் கடந்து படிப்படியாய் அடுத்த பருவத்தில் அடியெடுத்து வைத்து நகர்ந்து கொண்டிருந்தது.  இடையில்தான் சில மேதாவிகள் குழந்தைமையைக் கொண்டாடுகிறோம் என்ற பேரில் அதன் இயக்கத்தைக் குழப்பி எதிர் திசையில் இயக்கச் செய்வதில் பெரும் முனைப்பு காட்டுகிறார்கள்.

kid 313

குழந்தைகளின் வாழ்க்கையின் பெரும் பகுதியை வளர்ந்த பெரியவர்களே வாழ்ந்து முடித்து, தன் கடமை முடிந்துவிட்டதாகப் பெருமிதம் கொண்டு குற்ற உணர்ச்சியே இல்லாமல் கடந்து போகிறார்கள். இதை  ஆச்சரியத்திலும் சேர்க்க முடிய வில்லை அவஸ்தையிலும் சேர்க்க முடியவில்லை.  ஏனென்றால்,  தற்போது குழந்தை என்னும் பிரபஞ்சம், அறிவியல் தொழில்நுட்ப சுழலில் சிக்கி, பெற்றோரின் ஆடை தேர்ந்தெடுப்பில் தத்தளித்து, இயற்கையை இயற்கை என்றே தெரியாமல் மணலில் கைவைத்து விளையாடுவதைக்கூட நாகரீக வளர்ச்சியில் தவறென்று போதிக்கப்பட்டு, இன்றளவில் குழந்தை என்னும் பிரபஞ்சம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறதென்று தெரியாமல் இயங்கிக் கொண்டிருப்பதுதான் பரிதாபத்திலும் பரிதாபம்.

உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமானால் என் தம்பியின் ஐந்து வயது மகன் உள்பட குடும்பத்துடன்  சினிமா பார்க்கச் சென்றிருந்தோம்.  சென்றிருந்த அனைவரும் சினிமாவில் ஒன்றிவிட அழைத்துச் சென்ற குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு என்னுடையதாய் இருந்தது.  இடையிடையே பாட்டு வரும்போதெல்லாம்  குழந்தைகளின் நலன் கருதி கேண்டீனில் பாப் கார்ன் சாப்பிட வெளியே வந்துவிடுவோம்.  அப்போது நான் சந்தித்த கேள்விதான் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது.  பெரியப்பா, வீட்டுக்குப் போயி டி.வி ரிமோட் எடுத்துட்டு வந்தர்லாமா? என்பதுதான்.  எனக்கு அந்தக் கேள்வி உடனடியாக புரியவில்லை.  இப்போ அதுக்கென்ன அவசியம்? என்றேன்.  பாட்டை வேகமா ஓட்டிவிட்டுட்டு சினிமா பார்க்கலாம்ல? என்றதும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.  குழந்தை என்னும் பிரபஞ்சம் அவனைப் பொருத்த வரை தெளிவாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.  அறிவியல் தொழில்நுட்பம்தான் தன் மேதாவித் தனத்தால் அவனைக் குழப்பிக் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்து கொண்டேன்.

ஆடை உடுத்துவதில் எது அழகு எது ஆபாசம் என்பதை எந்தக் குழந்தையாலும் வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை அல்லது தெரிவதில்லை.  நான் சின்ன வயதில் இந்த மாதிரியான உடை அணிந்து பார்க்கக்கூட கொடுத்து வைக்கவில்லை என்று ஆதங்கப்படும் பெரும்பாலான பெற்றோர்கள்தான் தங்கள் விருப்பப்படி ஆடையைத் தேர்ந்தெடுத்து அணிய வைக்கிறார்கள்.  அது பல நேரங்களில் தட்ப வெப்ப நிலைக்கும் பொருந்தாமல் சமூகப் பார்வைக்கும் பொருந்தாமல் போய்விடுகிறது.

என் வீட்டில் அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.  ஒவ்வொரு முறையும் என் மகன் தானே தேர்ந்தெடுத்து அணிந்த உடையை என் மனைவி ஒரு போதும் அனுமதித்ததே இல்லை.  வெளியே போகும்போது இப்படியா மேட்ச்சே இல்லாமல் ட்ரஸ் போடுவது? கழட்டு இந்தா இதைப் போடு என்று சொல்லிச் சொல்லி தற்போதெல்லாம் குளித்து முடித்து வெளியே வந்து அப்படியே நிற்கிறான்.  ஏனென்று கேட்டால், அம்மா வந்து ட்ரஸ் எடுத்துக் கொடுப்பாள் என்பதே பதிலாக இருக்கிறது.  தன் சுய தேவையைக்கூட பூர்த்து செய்து கொள்ள அனுமதி பெறவேண்டிய நிலையில் குழந்தை என்னும் பிரபஞ்சத்தை மாற்றி அமைப்பது யார் என்ற கேள்வி அவ்வப்போது எழுந்து கொண்டேதான் இருக்கிறது.

குழந்தையின் அழகே அதன் சிரிப்புதான்.  சிடுமூஞ்சிகள்கூட ஒரு நிமிடம் குழந்தையின் சிரிப்புக்குப் பதில் சிரிப்பை உதிர்த்திருப்பதைப் பார்த்திருக்கக் கூடும்.  எப்போது குழந்தையின் சிரிப்பு குறையத் தொடங்குகிறதோ அப்போதே அது, தன் அழகையும் பிரபஞ்சத்தையும் இழக்கத்தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.

ஒரு குழந்தை ஒரே நேரத்தில் 16 மொழிகளைக் கற்றுக் கொள்ளும் திறன் உண்டு என ஆய்வுகள் கூறுகின்றன.  ஆனால் காலப்போக்கில் அதிகாரத்தின் பெயரால் எந்த மொழியையும் பேச விடாமல் செய்த பெருமை இந்த சமூகத்தையே சாரும்.  தன் சுய சிந்தனையை மழுங்கடிக்க வைப்பதில் தொடங்கி, படைப்பாற்றலைக்கூட மறைத்து வைத்து வெளிக்காட்டுவது என பயணித்து, கடைசியில் எது தன் பிரபஞ்சம் என்பதை மறந்து கூட்டத்தோடு கூட்டமாய் புலம் பெயர்வது யார் கண்களுக்கும் எப்படித் தெரியாமல் போகிறது?.

வீதிகளில் விளையாடத் தடை செய்யப்பட்ட போதே கூடிவாழும் கலை சந்தடியில்லாமல் களவு போய்விட்டது.  அருகில் இருந்தும் யாருடனும் ஒட்டாத அப்பார்ட்மெண்ட் வாழ்க்கைதான் எதார்த்தம் என்று ஏகாந்தம் பேசத்தொடங்கிவிட்ட பிறகு குழந்தை என்னும் பிரபஞ்சம் கொஞ்சம் கொஞ்சமாய் ஆண்ட்ராய்டு மொபைல் போனில் வீடியோ கேமுடன் முடங்கிப் போய்விட்டது.  பிறக்கும் குழந்தைகள்கூட மூக்குக் கண்ணாடியுடனேயே பிறந்து தொலைக்கிறது.

பசி எடுத்தவுடன் கிடைத்ததை எல்லாம் தின்ன வேண்டிய வயதில், விளம்பரப்படுத்தப்படும் பொட்டல உணவுகளில் கலோரியைக் கணக்கிட்டு உண்ண வைத்தாலும் உடல் பருமன் ஒரே சீராய் இல்லாமல் பிடிக்கத் தெரியாதவன் கொழுக்கட்டை பிடித்தது போல் ஏகத்துக்கும் ஒரே அளவில் உருளைபோல் அசைந்து அசைந்து  நடந்து வரும் குழந்தையை உருவாக்கி குழந்தையின் பிரபஞ்சத்திற்கே அழகு சேர்த்ததில் பெரும்பங்கு பாசக்கார அம்மாக்களையே சேரும்.

இருக்கையைவிட்டு அசைந்தால்கூட போதித்து வைத்த அறிவுக் களஞ்சியம் காது வழியே வழிந்துவிடும் பேராபத்து உள்ளதாகக் கருதி அச்சிடப்பட்ட அத்தனையையும் தலைக்குள் திணித்துவிட்டு உடல் முழுவதும் நீரழிவு நோயை உலகளவில் சளைக்காமல் பரப்பிய புண்ணியம் குழந்தைகளின் நலன் கருதி இயங்கிவரும் அனைத்து வகை பள்ளிக்கூடத்தையும் சாரும்.

குழந்தைகளின் உலகம் பொய் பேசாத பொம்மைகள் உலகம்.  ஆடை அணியத் தெரியாத அம்மண உலகம்.  கபடமில்லாமல் கேள்வி கேட்கத் தெரிந்த உலகம்.  எல்லையில்லாமல் பரந்து விரிந்த விசாலமான உலகம்.  அதுதான் பெரும்பாலான நேரங்களில் காற்று பிடுங்கப்பட்டு சுருங்கிப்போன பலூனாய் யாராலும் சீந்தப் படாமல் ஏதோ ஒரு மூலையில் குப்பையோடு குப்பையாய் கிடக்கிறது.

குழந்தை என்னும் பிரபஞ்சத்திற்கு எதையும் கற்பிக்கவோ அல்லது கற்பித்தே தீரவேண்டும் என்ற கட்டாயமோ ஒருபோதும் இல்லை.  அது தனக்குள்ளே அனைத்தையும் உள் அடக்கியுள்ளது என்பதை மட்டும் புரிந்து கொண்டால் போதும். 

பல நேரங்களில் ஒரு குழந்தை உலக அறிவு அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என மெனக்கெடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் ஒன்றே ஒன்றுதான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.  உங்களுக்கு வேண்டுமானால் உலக அறிவு என்பது மேம்பட்ட ஒன்றாக இருக்கலாம்.  குழந்தை என்னும் பிரபஞ்சத்திற்கு உலக அறிவு என்பது எங்கோ அடித்துக் கொண்டிருக்கும் கடலலையின் ஒரு பகுதி.  அவ்வளவே.

போட்டி உலகிற்குள் போட்டி போடத் தெரியாத குழந்தைகளை, காட்டுக்குள் உடல் ஊனமுற்ற விலங்கால் உயிர்வாழ முடியாது என்பது போல் நோக்குவது எவ்வளவு தவறானது என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்?.  கண்டவரிடமெல்லாம் காட்சிப் படுத்தப் பட குழந்தை என்ன தேர்க்கடைப் பொருளா?

குழந்தைகளின் பிரபஞ்சம் நம் கற்பனைக்கெட்டாத,  புதிய பார்வைக்கும், புதிய கோணத்திற்கும் ஆட்படாத விஸ்தாரணமான ஒன்று.  லட்சக்கணக்கான சூரியனையும், கோடிக்கணக்கான கோள்களையும் தன் போக்கில் இயங்க வைப்பதில் வெற்றி கொண்டுவிட்ட பிரபஞ்சம், குழந்தை என்னும் பிரபஞ்சத்தையும் அதன் போக்கில் இயங்க வைக்கும்.  அதற்குள் செயற்கைக் கோள்களை விட்டு மாசுபடுத்தாமல் இருந்தாலே போதும்.

- வே.சங்கர்