பொதுமக்கள் பழங்காலங்களில் நடைப் பயணமாகவே பல ஊர்களுக்குச் சென்று வந்தார்கள். வசதி உள்ளவர்கள் குதிரைகளிலும், மாட்டுவண்டிகளிலும் காட்டுவழிகளில் பயணித்தார்கள். பின் சைக்கிள்களும், மோட்டார் வண்டிகளும் வந்தன. இருசக்கர வாகனங்களும் வந்தன. அடுத்து பேருந்துகளும், புகை வண்டியும் தயாரிக்கப்பட்டு பயணம் எளிதாகியது. சரக்குகளைக் கொண்டு செல்ல லாரிகளும், சிறு சரக்கு வாகனங்களும், மூன்று சக்கர வாகனங்களும் (Autos, mini vans) தயாரிக்கப்பட்டன. உந்துவிசைக்கு பெட்ரோல், டீசல் என்றும் பயன்படுத்தப்படுகிறது.

சுற்றுலா, திருமணம் போன்ற குடும்ப விழாக்களுக்குச் செல்ல கடந்த 20  - 30 ஆண்டுகளாக வசதியான சுற்றுலாப் பேருந்துகளும், சி்ற்றுந்துகளும், சிறிய வகை வேன்கள், கார்கள் என அவரவர் தேவைக்கேற்ப வாடகைக்குக் கிடைக்கின்றன.   

ஆனால், தற்காலத்தில் ஒரு சிலர் செலவை எண்ணி, தங்கள் நண்பர்கள், உறவினர்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் என விழாக்கள், திருமணங்கள், துக்க நிகழ்ச்சி, மாநாடு, பேரணிகளுக்கு திறந்த லாரி, மினி வேன் போன்ற வாகனங்களில் அழைத்துச் செல்கின்றனர்.  

சில நேரங்களில் திருமணப் பெண், மாப்பிள்ளை உட்பட உறவினர் அனைவரும் பெருமளவில் திணிக்கப்பட்டு, நின்றபடியே இத்தகைய வாகனங்களில் கிராமங்கள், நகர்ப்பகுதி என வெகு தொலைவுக்கு அழைத்துச் சென்று திரும்புகின்றனர்.

இன்னும் ஒரு சில லாரி, வேன் போன்ற வாகனங்களில் ஓட்டுனர் பகுதிக்கு நேர் மேலே உள்ள சிறிய பகுதியில் நான்கைந்து பேர் பயணம் செய்கின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் 23 வயதுள்ள ஒரு ஆண் தன் நண்பரின் சரக்கு வாகனத்தில், ஓட்டுனர் இருப்பிடத்தின் மேல் பகுதியில் விளையாட்டாகப் பயணம் செய்தார். அது வினையாகி, வாகனம் இறக்கத்தில் செல்லும்போது, முன்பக்கம் கண்ணாடி மீது விழுந்து, கீழேயும் விழுந்து பலத்த காயமடைந்தார். விசாரணையில் அவர் மது அருந்தியிருந்தார் என்றும், நல்ல வேளை முட்டாள்தனமாக மேலே ஏறவில்லை என்றும் முடிவாயிற்று.

நம் தமிழகத்தில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்வது அறிவுடைமையா, அறியாமையா என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். தங்கள் மற்றும் உறவினர்கள் உடல் நலத்தின் மேலும், உயிரின் மீதும் அக்கறை இருந்தால், லாரி, வேன் போன்ற  வாகனங்களில் இத்தகைய ஆபத்தான பயணத்தை செய்யமாட்டார்கள்.                

இது போன்ற சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி, வேன் ஓட்டுனர்கள் தகுந்த ஓட்டுனர் உரிமம் பெற்றவர்களா, ஓரளவு படிப்பறிவும் ஆபத்து நேரங்களில் சமாளிக்க சமயோசிதமும் உள்ளவர்களா என்பதும் சந்தேகத்திற்கும், சர்ச்சைக்கும் உரியதே. ஏதாவது விபத்து நேரிட்டால் உயிரிழப்பும், காயம் அடைவோரும் அதிகமாக வாய்ப்புண்டு.

இத்தகைய போக்கு உள்ளவர்களிடம் விழிப்புணர்வை யார், எப்படி உண்டாக்குவது?

நம் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் ஓரளவு படித்தவர்களும், செய்தித்தாள் படிப்பவர்களும் இருப்பார்கள். அனேகமாக எல்லோர் வீ ட்டிலும் தொலைக் காட்சி வசதியும் உண்டு. எனவே தினந்தோறும் செய்திகளில் லாரி, வேன் விபத்துகள் பற்றியும், அதனால் ஏற்படும்  காயங்கள், உயிர் இழப்புகள் பற்றியும் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

காயப்படுவதையும், உயிரிழப்பையும் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இதில் அரசியல்வாதிகள் இறந்தவரும், காயப்பட்டவரும் எங்கள் கட்சித் தொண்டர் என்று உரிமை கொண்டாடி, மருத்துவமனைக்குச் சென்று, பொருளுதவி செய்து விளம்பரம் தேடிக் கொள்வர். சட்டத்துக்குப் புறம்பாக சரக்கு வாகனங்களில் பயணம் செய்து, விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவ உதவி செய்யலாமேயன்றி, பொருளுதவி (இழப்பீடு) செய்வது சரியல்ல.

அவரவரின் தவறான செயல்களுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். திறந்த லாரி, வேன் போன்ற வண்டிகளில் பயணம் செய்வது தவறு என்று குடும்ப மற்றும் மக்களிடம் செல்வாக்குள்ள தலைவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.                                                                                       

போக்குவரத்துத் துறையும், காவல் துறையும் தனித்தனியாகவும், இணைந்தும் பணியாற்றி திறந்த லாரி, வேன் போன்ற வண்டிகளில் பயணம் செய்வோரை வாகனத்தை நிறுத்தி, பயணிகளை பஸ்ஸில் செல்லுமாறு வலியுறுத்த வேண்டும். அப்படி சரக்கு வண்டி்களை பயணிகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும் ஓட்டுனரையும், உரிமையாளரையும் கடுமையாகத் தண்டிக்கலாம். அபராதமாக நீதிமன்றம் பெருந்தொகையை சட்டபூர்வமாக வசூலிக்க வேண்டும். அந்த வண்டியின் தகுதிச் சான்றிதழையும், ஓட்டுனரின் உரிமத்தையும் ரத்துச் செய்யவேண்டும்.

ஆங்காங்கே வாகனச் சோதனைச் சாவடிகள் இருந்தாலும், பயம் சிறிதுமின்றி, சமாளித்துக் கொள்ளலாம் என்றோ, அரசியல்  செல்வாக்கைப் பயன்படுத்தியோ தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை மாறவேண்டும்.

உதாரணமாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் சிறு குழந்தை கூட சட்டத்தை மதித்து நடந்து கொள்ளும். அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒரு குழந்தை தற்செயலாக காரின் முன்புறத்தில் செல்ல நேர்ந்தது. சிறிது நேரத்தில் வழியில் ஒரு போலீசைப் பார்த்த அந்தக் குழந்தை, ' Cop, Cop' என்று சொல்லியபடி காருக்குள் பதுங்கியது. சட்டத்தின் முன் அந்த பயம் வேண்டும். அதிகாரிகளும் தயக்கமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கடுமையான நடவடிக்கை எடுத்தாலன்றி, லாரி, வேன்களில் பயணத்தையும், அதனால் ஏற்படும் உயிரிழப்பையும் தடுக்க முடியாது.

வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)