விமானத்தில் சிக்கன வகுப்பு (Economy class) இருக்கைகள் நெருக்கமாக இருக்கின்றன. இதில் நீண்ட தூரமும் நேரமும் பயணம் செய்யும் பொழுது ஏற்படும் விளைவுகளை 'Economy Class Syndrome' என்றழைக்கப்படுகிறது. தொடர்ந்து வெகு நேரம் உட்கார்ந்திருந்தால், இரண்டு முழங்கால்களின் அடிப்பகுதியில் உள்ள இரத்தக் குழாய்களில் (Deep Vein Thrombosis) ரத்தம் உறைய வாய்ப்புண்டு. இதற்கு விமானத்தின் உள்ளே போதுமான காற்றோட்டமில்லாததும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. இது சிக்கன வகுப்புப் பயணிகள் மட்டுமல்லாது பிற உயர் வகுப்புப் பயணிகளுக்கும் ஏற்படலாம்.

பயணம் முடிந்து எழுந்து நடக்கும் பொழுதும், பின் வரும் சில நாட்களிலும் தொடைப் பகுதி மற்றும் கால்களின் பின்பகுதியில் நடக்க முடியாமல் வலி ஏற்படும். சிலருக்கு ரத்தக் கட்டும் வலியும் குறைய மருத்துவ ஆலோசனை தேவைப்படலாம். ஓரிரு நாட்களில் உறைந்த ரத்தம் சிறிது சிறிதாகக் கரைந்து வலியும் குறைந்து விடும். ஒரு சிலருக்கு உறைந்த ரத்தம் கரையும் பொழுது சிறு சிறு ரத்தக் கட்டிகள் நகர்ந்து இருதயம் மற்றும் நுரையீரலுக்குச் சென்று மரணம் ஏற்படலாம்.

இந்த விளைவுகளிலிருந்து காப்பது எப்படி?

1. பயணத்திற்கு விமானத்தில் ஏறுவதற்கு முன் ஒவ்வொருவரும் ஒரு ஆஸ்பிரின் மாத்திரை 75 மி.கி எடுத்துக் கொள்ளலாம். (வயிற்றில் Ulcer தொல்லை இல்லாமல் இருந்தால்)

2. நிறைய தண்ணீரும் குளிர்ந்த பானங்களும் அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. உட்கார்ந்திருக்கும்போதும் அடிக்கடி குதிங்கால்களையும், முழங்கால்களையும், அருகில் இருப்பவர்க்குத் தொல்லையில்லாதபடி, மேலும் கீழும் ஆட்டி பயிற்சி செய்யலாம்.

4. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நாம் இருக்கும் பகுதியிலேயே நடக்கலாம்.

5. இருதய நோயாளிகள் மருத்துவ ஆலோசனைப்படி அவர்கள் மருந்துகளை ஒழுங்காகச் சாப்பிடவேண்டும்.

விமானப் பயணத்தின் போதே பணிப்பெண்கள் கால்களுக்கான பயிற்சி பற்றியும், எழுந்து நடப்பது பற்றியும் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். பயணிகளுக்கு முன்னால் உள்ள திரையிலும் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி விளக்குவார்கள் என்றும் நம்புகிறேன். மேலே சொன்ன முறைப்படி நடந்துகொண்டால் விமானப் பயணம் இனிதே இருக்கும்.

- வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)