தேவையானவை:

பச்சரிசி/பாஸ்மதி அரிசி ...1 ஆழாக்கு
துவரம் பருப்பு.................... 1 /2 ஆழாக்கு
மிளகாய்.............................5
மல்லி.................................2 தேக்கரண்டி
மிளகு+சீரகம்...................தலா 1 /2   தேக்கரண்டி
சோம்பு...............................1 /4   தேக்கரண்டி
பட்டை, சின்ன துண்டு,
கிராம்பு,...............................4
ஏலம்..................................2
காயம்..................................கொஞ்சம்
உ.பருப்பு, க.பருப்பு..... தலா 1 தேக்கரண்டி
புளி.....................................எலுமிச்சை அளவு
வெல்லம்.........................கொட்டை பாக்கு அளவு
எண்ணெய், நெய் ...................தலா.. 3   தேக்கரண்டி
முந்திரி,கிசுமிசு..............தலா ..10
புதினா, கறிவேப்பிலை, மல்லித்தழை....கைப்பிடி
சாம்பார் வெங்காயம்.......................100 கிராம்
காய்கறிகள்................................. எது வேண்டுமாயினும்
தாளிக்க..கடுகு, உ.பருப்பு............தலா  1 /4தேக்கரண்டி
சிவப்பு மிளகாய்.. தாளிக்க........3
உப்பு....................................தேவையான அளவு.

செய்முறை:

எல்லாக் காய்களையும் கொஞ்சம் பெரிதாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயத்தை உரித்து வைக்கவும். மிளகாய் , மல்லி, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை,கிராம்பு, ஏலம், க.பருப்பு +உ.பருப்பை எண்ணெய் விடாமல் வறுத்து பொடி செய்யவும். அரிசியை லேசாக வறுத்து, கழுவிய பின் 5 நிமிடம் ஊறவிடவும். புளியைக் கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் கொஞ்சம் ஊற்றி, சூடானதும், வெங்காயம் போட்டு வதக்கி, அதில் எல்லா காய்களையும் போட்டு, கரைத்த புளி, + அரைத்த பொடி+வெல்லம்+ உப்பு போட்டு குக்கரில் ஒரு விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். பருப்பையும், அரிசியையும் குக்கரில் போட்டு 4 மடங்கு நீர் ஊற்றி நன்கு வேகவைத்து இறக்கவும்.

பின் வாணலியில் எண்ணெய் விட்டு அதில் சிவப்பு மிளகாய், கடுகு, உ.பருப்பு போட்டு சிவந்ததும் முந்திரி, கிசு மிசு போட்டு சிவந்ததும் புதினா, கறிவேப்பிலை,மல்லி போட்டு இறக்கி, அதனை சாதத்தில் கொட்டவும். அத்துடன் வேகவைத்த காய்களையும் ஊற்றி, அதில் நெய்யும், பெருங்காயப் பொடி போட்டு கிளறி இறக்கி வைக்கவும். சூடாகப் பரிமாறவும். வேண்டுமானால் 2 தேக்கரண்டி தேங்காய் வறுத்துப் பொடி செய்தும் போடலாம். சுவை டக்கராய் இருக்கும். துணைக்கு தயிர் பச்சடி, மாங்காய் தொக்கு, அப்பளம், மல்லி துவையல்தான் சரியான ஜோடி.