9ம் நூற்றாண்டிலிருந்து 15ம் நூற்றாண்டு வரை அங்கோர் வாட்டைச் சுற்றிலும் கெமிர் சாம்ராஜ்ஜியம் பரந்து விரிந்து இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன.

அவற்றில் முக்கியமானது என்று (river of thousand lingas) சொல்லப்படும், ஆயிரம் லிங்கங்கள் பதிக்கப் பெற்ற ஆற்றுப் பகுதியாகும். அங்கோர்வாட்டிற்கு வடகிழக்குப் பகுதியில் குலன் மலைப்பகுதி (kulen hills) உள்ளது. அந்தப் பகுதி மரங்கள், செடிகள் அடர்ந்த காட்டுப் பகுதியாக, நம்மூர் குற்றாலம், கொடைக்கானல் போல் உள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மண் ரோடு தான்.

River of Thousand Lingas

அம் மலைப் பகுதியிலிருந்து, சயாம்ரீப என்ற ஆற்றின் துணை ஆறான ஸ்டங் என்ற ஆறு வருகிறது. மலையில் காட்டுப் பகுதியில் இந்த ஆறு ஓடி வரும் வழியில் தண்ணீருக்கு அடியில், மணற்பாறைகளில் வரிசையாக லிங்கம் செதுக்கப் பட்டிருக்கிறது. சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு ஒரே மாதிரி லிங்கங்கள், சில பெரிய லிங்கங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. சதுரமாக ஆவுடையாரும், அதற்குள் வட்டமாக லிங்கமும் இருக்கின்றன. அதைப் பார்த்ததும் எனக்கு குற்றாலத்தில், பெரிய அருவியில் பாறைகளில் லிங்கங்கள் செதுக்கப்பட்டிருப்பது தான் நினைவுக்கு வந்தது.

மற்றும் லட்சுமி, அனந்த சயனன், பிரம்மாவுடன் சயன நிலையில் விஷ்ணுவின் உருவம் தண்ணீர் ஓடும் வழிகளிலும், ஆற்றின் கரைகளிலும் செதுக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் சென்ற சமயம் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததால் உமா சகித சிவன், இராமர், அனுமான் மற்றும் மிருகங்கள் சிற்பங்களைப் பார்க்க முடியவில்லை.

இச் சிற்பங்கள் 11-12ஆம் நூற்றாண்டில் முதலாம் சூரிய வர்மன் காலத்திலிருந்து இரண்டாம் உதயாதித்ய வர்மன் காலம் வரை, அப்பகுதியில் வாழ்ந்த துறவிகளால் செதுக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.

"எதற்காக இப்படி ஆற்றுப் படுகையில் செதுக்கினர் தெரியுமா? கங்கையைப் போல் தண்ணீரைப் புனிதப்படுத்த" என்று எங்கள் வழிகாட்டி கூறினார். லிங்கங்கள் வழியே பாயும் ஆறு, பின்னர் ஓர் அருவியாக விழுகிறது. அதில் மக்கள் குளிக்கின்றனர். புனிதப்படுத்தப்பட்ட ஆறு, நாட்டின் வழியே பாய்ந்து, வயல்களில் நெல் உற்பத்தியைப் பெருக்கி, நாட்டையும் புனிதப் படுத்தி, வளப்படுத்துவதாக அம்மக்கள் நம்புகின்றனர்.

kulen falls

அருவியின் அருகிலுள்ள பெரிய மரங்களிலிருந்து, பெரிய ஊஞ்சல்கள் போல் கூடை நாற்காலிகள், பிளாஸ்டிக் செடி, பூ அலங்காரங்களுடன் தொங்க விட்டிருக்கிறார்கள். அருவியின் பின்னணியுடன் அங்கு அமர்ந்து, தலையில் மலர் வளையத்துடன் புகைப்படம் எடுப்பது பறப்பது போல் இருந்தது.

அருவிக்குச் செல்லும் வழி சற்று சிரமமாக இருந்தாலும், சென்று, குளித்து மகிழ்ந்தோம். ஆற்றின் அருகில் மக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க, சாப்பிட சிறு சிறு மரக்கூடாரங்கள் - அடிப்பகுதி தரையிலிருந்து சற்று மேலே இருக்கும் வகையில் அமைத்திருக்கிறார்கள். சிறு சிறு கடைகளும் இருந்தன. அங்கே ஒரு பாட்டி வாழைப்பழத்தைச் சாதத்தின் உள்ளே வைத்து சுட்டுக் கொடுத்தார். நன்றாகவே இருந்தது.

அங்கிருந்து சற்று தூரம் மலையில் சென்று சிறிது தூரம் படியில் ஏறிச் சென்றால் ஒரு சிவன் கோயில் இருந்தது. நெற்றிக் கண்ணுடன், கையில் சங்கு சக்கரத்துடன் சிவன் நின்ற நிலையில் இருந்தார். எதனால் அப்படி என்று தெரியவில்லை. அந்தப் பகுதியில் முதலில் இருந்த தலைநகரின் பெயர் ஹரிஹராலயா என்று வழிகாட்டி சொன்னார். அதற்கும் சிவனின் தோற்றத்திற்கும் சம்பந்தம் உண்டா என்று தெரியவில்லை. சிலை பழையதாக இல்லாமல் சமீப காலத்தியதாகவே இருந்தது. சிவலிங்கமும் இருந்தது. தண்ணீர் ஊற்றி நாமே அபிசேகமும் செய்யலாம்.

படியில் மேலே சென்றால் ஒரு பாறையின் உச்சிப் பகுதியில், படுத்த நிலையில் பெரிய புத்தர்சிலை இருக்கிறது. எப்படித்தான் ஒரு உருண்டைப் பாறையின் உச்சியில செதுக்கினார்களோ தெரியவில்லை. அந்த இடத்தைச் சுற்றி மலர்ந்த செண்பகப் பூக்களுடன், வாசமாக மரங்கள் இருந்து ரம்மியமாக இருந்தது.

இடம் பார்க்க அழகாக இருந்தாலும் அந்த இடத்தில் வசதிகள் அதிகம் இல்லை. அங்கு சில கடைகளில் அரை டாலருக்கு, அவர்கள் நாணயமான ரியால் கட்டுகள் விற்கிறார்கள். எதற்காக என்றால் அங்கே கோயில் செல்லும் வழியில் படியில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள், சிறு பிள்ளைகளுக்குப் போடுவதற்காக. நம்மூரில் சில்லறை வாங்குவது போல் டாலருக்கு ரியாலை விற்கிறார்கள். பயணிகளும் அவர்கள் மேல் பரிதாபப்பட்டோ, அவர்கள் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காகவோ வாங்கிப் போடுகிறார்கள்.

சயாம்ரீப்பில் சுற்றுலாப் பயணிகளுக்காக பெரிய பெரிய ஹோட்டல்களைப் பார்த்த நமககு சாதாரண மக்களின் நிலை மிகவும் கஷ்டமாக இருந்தது.

சுற்றுலாப் பயணிகளுக்காக ஹெலிகாப்டரில் கோயிலைச் சுற்றிப் பார்த்தல், பலூனில் பறப்பது, யானை மேல் செல்வது எல்லாம் உண்டு. மற்றும் ஜிப் வயர் ரைடு (zip wire ride) என்னும் காட்டிற்குள் கம்பியில் தொங்கிக் கொண்டு செல்வதும் உண்டு. எங்கள் மகள், மருமகன், பேரன்கள் சென்று நன்றாக இருந்ததாகச் சொன்னார்கள்.

நம் நாட்டிலிருந்து எவ்வளவோ தூரத்தில் கடல் கடந்து இருக்கும் ஒரு நாட்டில், அதுவும் காட்டுப் பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட லிங்கங்கள் செதுக்கியிருக்கிறார்கள் என்றால் நமது மன்னர்கள் எவ்வளவு சமயப்பற்று பிடித்தவர்களாக இருந்திருக்க வேண்டும்! அவ்வளவு தூரம் செல்லவேண்டுமென்றால் நமது நாடு எவ்வளவு வளமாக, பலம் மிக்கதாக இருந்திருக்க வேண்டும்.! நினைக்கவே வியப்பாக இருக்கிறதல்லவா!!!