கொரியாவை வளமான நாடாக்கும் கொரியாவின் மக்கள் மங்கோல் இனத்தைச் சேர்ந்தவர்கள். மஞ்சள் கலந்த வெண்மை நிறத்துடன் ஆண்களும், பெண்களும் அழகாக இருக்கின்றனர். மேற்கத்திய நாட்டினரைப் போல் பருமனான அமைப்பாக இல்லாமல், சரியான உடலமைப்புடன், கண்கள் சற்று இடுங்கி, மூக்கு சற்று சப்பையாக இருக்கினறனர். நாம் பார்க்கும் போது, ஆண்கள் அனைவரும் ஒரே மாதிரியாகவும், பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியாகவும் இருப்பது போல் தோன்றுகின்றது.

மக்கள் அனைவ‌ரும் நேர்த்தியாக உடை அணிகின்றனர். பச்சை, சிவப்பு, மஞ்சள் போன்ற அடர், பளிச் நிறங்களை அதிகம் பார்க்க முடிவதிலலை. தங்கள் அழகைப் பராமரிப்பதில் நாட்டம் கொண்டிருக்கிறார்கள் என்பதை, அதிகமாக இருக்கும் அழகு சாதனக் கடைகளும், அழகு நிலையங்களும் காட்டுகின்றன. மூக்கைத் திருத்துவதற்காகச் சீரமைப்பு சிகிச்சைகளும் மேற்கொள்ளுகின்றனர்.

Seoul Incheon International Airport

நாடெங்கும் மக்கள் ஓர் ஒழுங்கைக் கடைப்பிடிக்கின்றனர். இதை நாம் விமான நிலையத்தில் இறங்கியதுமே கண்டு கொள்ளலாம். விமான நிலையத்தை மிகத்தூய்மையாக வைத்திருக்கும் நேர்த்தி, கச்சிதமாகப் பணியாற்றுதல் போன்றவை நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. எங்கும் ஆர்ப்பாட்டம் இல்லாமல், அமைதியாக, வரிசையில் செல்வதைக் கடைப்பிடிக்கின்றனர்.

கொரியத் தலைநகரான சியோலில், பேருந்து போக்குவரத்து தரையின் அடியில் செல்லும் ஸப்வே எனப்படும் ரயில் போக்குவரத்தும் மிகச் சிறப்பாக அமைக்கப் பட்டிருக்கின்றன. அதிலும் ரயில் இரண்டு அல்லது மூன்று தளங்கள் பூமிக்கடியில் அமைக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் ஸப்வேக்கு மேல் பல கடைகள் அமைந்த மால் அமைக்கப்பட்டிருக்கிறது.

T மணி கார்டு என்னும் கார்டுகளை நாம் வாங்கிக் கொண்டால், பஸ்ஸில் ஏறும் போதும், ரயில் நிலையத்திற்குள் செல்லும்போதும் அதை அதற்குரிய மிஷினில் காட்டி விட்டுச் சென்று, பின் இறங்குமிடத்தில் மறுபடியும் காட்டினால், குறிப்பிட்ட தொகை கழிக்கப்பட்டு விடுகிறது. மக்கள் அனைவரும் வரிசையாக அதைக் காட்டிச் செல்கின்றனர். நமக்கு கார்டு தேவையில்லையென்றால், ரயில் நிலையத்தில் இருக்கும் மிஷினில் செலுத்தி, மீதியிருக்கும் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தக் கார்டுகளை டாக்ஸிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளிக்குச் செல்லும் எங்கள் பேரன்கள் கூட இவற்றைப் பயன்படுத்தி டாக்ஸியில் வந்து விடுகின்றனர்.

தண்ணீர், மின்சாரம் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதால் நாடே வசதியாக பளிச்சென்று இருக்கிறது. தொழில் நுட்பங்கள் எல்லா இடங்களிலும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டு, வாழ்க்கை வசதிகளைப் பெருக்குகின்றன.

கொரியாவின் மக்கள் மற்ற வெளிநாட்டினருடன் அதிகம் பழகுவதில்லை. எங்கள் மகள் இருந்தது பெரிய அப்பார்ட்மெண்ட் என்றாலும், கொரியர்களையோ அவர்கள் குழந்தைகளையோ அதிகம் காணவோ, பழகவோ முடியவில்லை. அவர்களுண்டு, அவர்கள் வேலையுண்டு என்று வேலையிலேயே கருத்தாக இருக்கின்றனர்.

பொதுவாக ஆண், பெண் இருவருமே வேலை பார்க்கின்றனர். அனேகமாக கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். சியோலில் வாழ்கைச் செலவு அதிகம் என்பதால் பெற்றோர்கள், சில நேரங்களில் சொந்த ஊர்களில் இருப்பதாக‌க் கூறப்படுகிறது. குடும்பத்தில் பெற்றோர்கள், மூத்தவர்கள் அதிகம் மதிக்கப்படுகின்றனர். நம்மைப் போல முன்னோர்களை வழிபடுவது போன்ற சடங்குகளில், குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கலந்து கொள்கின்றனர். அது "சோஸக்" என்ற பண்டிகையாக, தொடர் விடுமுறையுடன் கொண்டாடப்படுகிறது. நம் ருசிக்கு இனிப்பே இல்லாத இனிப்புகளை அச்சமயம் பரிமாறிக் கொள்கின்றனர்.

நாய் போன்ற வளர்ப்புப் பிராணிகளுடன் மக்கள் செல்வதை அதிகம் காண முடிகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளில், விருப்பப் பிராணிகள் விற்குமிடம், (நாய் பூனை மட்டுமல்ல; மலைப்பாம்பு, ஆமை கூட உணடு) அவற்றுக்குத் தேவையான பொருட்கள், ஆடை, அணிகள் இவற்றைக் கண்டால், இவர்களும், அமெரிக்கர்களைப் போல் வாழ்க்கைச் செலவுகள் அதிகமாகி விட்டதால், குடும்பத்தைத் தவிர்த்து, செல்லப் பிராணிகளுடன் நேரத்தைக் கழிக்க ஆரம்பித்து விட்டனரோ என்று தோன்றுகிறது.

கொரியர்களின் முக்கிய உணவு அரிசி தான். அரிசி ஒரு பிசுபிசுப்புத் தன்மையுடன் இருக்கிறது. சியோலைச் சுற்றிச் செழிப்பான வயல்களைப் பார்க்க முடிந்தது. அவர்களும் சாதம் தான் சாப்பிடுகின்றனர். சாப்பிடும் முறை தான் வேறு. குழம்பு, சாம்பார் போன்று ஊற்றிப் பிசைந்து சாப்பிடாமல், வேக வைத்த கீரைகள், காளான்கள், மாமிச உணவு வகைகளையும் சேர்த்து, சீனர், ஜப்பானியர் போல் குச்சி வைத்துச் சாப்பிடுகின்றனர். "கிம்ச்சி" என்று முட்டைக்கோஸ், ரேடிஷ் போன்றவற்றை ஊறுகாய் போன்று பதப்படுத்தி உபயோகிக்கிறார்கள். சூப், கிரேவி, நூடில்ஸ் எதுவாக இருந்தாலும், பன்றிக் கறியோ, மீனோ எதையாவது கலந்து விடுகிறார்கள். பொதுவாக கொரிய உணவை நாம் சாப்பிடுவது சற்று சிரமம் தான். அதுவும், சைவமாக இருந்தால் சொல்லவே வேண்டியதில்லை.

கொரிய மொழி மட்டுமே பேசப்படுவதால் சுத்த சைவமாக உணவை வாங்குவது கூடச் சிரமமாக இருக்கிறது. சொல்லப் போனால் "சைவம்" என்பதே புரியவில்லை. ஆனால் எல்லா இடங்களிலும் பஸ், ரயில் முதலியவற்றிலும் தெளிவாக ஆங்கிலத்தில் போர்டுகள் இருக்கின்றன. தற்போது பள்ளிகளில் ஆங்கிலமும் கற்பிக்கப்படுவதால், அடுத்த சில ஆண்டுகளில் தொழில் நுட்பத் துறையிலும் நம்முடன் போட்டிக்கு வந்து விடுவார்கள் என்பது திண்ணம்.

seoul temple

கொரியாவில் புத்த மதம் பின்பற்றப்படுகிறது. ஆனால் பெரும்பாலோர் மதச் சார்பற்றவர்களாக இருப்பதால், கிறித்துவ மதத்தைப் பரப்ப முயற்சிகள் செய்யப் படுகின்றன. நாங்கள் சென்ற சமயம் கத்தோலிக்க கிறித்துவத் தலைவர் போப் அவர்கள் கூட வந்திருந்தார்.

நாங்கள் தெருவில் செல்லும் போது ஒரு கொரிய குடும்பத்தினர், அப்பா அம்மா இரண்டு அழகிய பெண்கள், எங்களைப் பார்த்து "இந்தியா" என்று ஆசையுடன் பேசினர். தாங்களும், இந்தியாவில் கேரளாவிற்கு வந்திருப்பதாகவும், நாங்கள் தமிழ் என்றவுடன், "வணக்கம், நலமா, நன்றி" என்றெல்லாம் தமிழில் கூறினர். நாங்களும் மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தபோது, மதப் பிரச்சார ஏடுகளை நீட்டினர். நாங்கள் வாங்க மறுத்து, தேவையில்லை என்றதும் அப்படியே நின்று விட்டனர். எப்படியெல்லாம் பிரச்சாரம் நடக்கிறது பாருங்கள்!

முக்கிய இடங்களைப் பாதுகாக்க, சிங்கம் (நம் ஊர் யாளி போன்று பற்கள் பெரிதாக) சிலை வைத்தல், தீய சக்திகளை விரட்ட டிராகன் படம், வாஸ்து பார்த்தல் போன்ற பழக்கமெல்லாம் அங்கிருக்கிறது. ஒரு திசையில் மலை, ஒரு திசையில் ஆறு, நடுவில் சமவெளியில் நகரம் என்று சரியான வாஸ்துப்படி சியோல் நகரம் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

புத்தர் கோயில்களில் ஊதுபத்தி ஏற்றுதல், தங்கள் குறைகளை எழுதி வைத்தல், சில இடங்களில் வேண்டிக் கொண்டு கற்களை அடுக்கி வைத்தல் எல்லாம் செய்கின்றனர். ஆனால் எல்லா இடத்தையும் பாழ் பண்ணாமல், தனியாக நடக்கிறது.

அவர்களது கலைகள் அனைத்திலும், ஏன், தேசியக் கொடியில் கூட கீழை நாட்டுத் தத்துவங்கள் பொதிந்து இருக்கின்றன. ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஒலிம்பிக் சோதி ஏற்றுமிடத்தில் கூட, தீயுடன் நீரும் ஒரு ஊற்றுப் போல இருந்தது. அவர்கள், "யின் யாங்"(yin, yang) என்னும் எதிரெதிர் இரட்டைகளை மதிப்பதால், குறியீடாக அப்படிச் செய்திருக்கலாம். அவர்கள் கொடியில் கூட நீரையும், நெருப்பையும் குறிப்பதாகக் கோடுகள் உண்டு.

நாடெங்கிலும் ஒரே மொழி, ஒரே இன மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் தங்கள் நாட்டை அதகம் மதிக்கின்றனர். சாமான்கள் வாங்கும் போது கூட "கொரியாவில் செய்தது" என்று பெருமையுடன் கூறுகின்றனர். 1000 வாண் என்பது ஒரு டாலருக்குச் சமமாக இருக்கிறது. டாலர் மதிப்பிலேயே 5000 வாண், 10000 வாண் என்று விலை இருப்பதால், விலை சற்று அதிகமாக இருப்பதாகவே நமக்குப் படுகிறது.

மொத்தத்தில் கொரியா நல்ல, ஒழுங்கான, ஏமாற்றாத மக்களைக் கொண்ட, இருக்கும் வளங்களைக் கொண்டு, நாட்டின் வளங்களைப் பெருக்கிக் கொண்டு, முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கும் ஒரு நல்ல நாடு.