2.1.2013

பகல் 12 மணிக்கு மேல் புறப்பட்டு, தாராவிக்குச் சென்றோம். அங்கே, 90 அடி சாலையில்தான் கடைகள் அமைந்து இருக்கின்றன. பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது. அதை ஒட்டினாற்போல உள்ளே இருக்கின்ற முதலாவது தெருவுக்குச் சென்றோம். காமராஜர் கட்டடத்துக்குப் பின்புறம் உள்ள பகுதியில் மகேஷ் என்ற தம்பியிடம், இந்தி மராத்தி மொழி துண்டு அறிக்கை அச்சிடுவதற்கான கணினிப் பணிகளை மேற்கொண்டோம். கண்ணாடிக் கடை வைத்து இருக்கின்ற ஒரு மராத்தியர், ஆங்கிலத்தில் இருந்த நமது அழைப்பு இதழை, அப்படியே இருமொழிகளிலும் மொழிபெயர்த்துத் தந்தார்.

இந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளையில், நானும், அண்ணன் அடைக்கலமும், தாராவி பகுதிக்கு உள்ளே சற்றுத் தொலைவு நடந்து சென்றோம். இங்கே, வீடுகளில் அல்ல, இண்டு இடுக்குகளில், ஒண்டுக் குடித்தனங்களில்தான் மக்கள் வசிக்கின்றார்கள். இரண்டு அடி மூன்று அடி குறுகலான தெருக்களில், எதிரே வருபவர்கள் மீது இடித்துவிடாமல், ஒதுங்கி நடக்கப் பழகிக் கொள்ள வேண்டும். மாடிப்படிகள் எல்லாமே, இரும்பு ஏணிகள்தாம். அப்படி ஒரு ஏணியின் வழியாக மேலே ஏறி, நண்பர் நாடோடித் தமிழன் இல்லத்துக்குச் சென்றோம். இந்தப் பகுதியில் நிறைய தையல் பொறிகள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன; ஆயத்த ஆடைகளைத் தைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். சிறிய அச்சுக்கூடங்கள் பல உள்ளன.

இந்தப் பகுதியில் சுற்றியபோது, தமிழ்நாட்டுக்கு உள்ளே, அதுவும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளே இருப்பது போன்ற உணர்வே ஏற்படுகின்றது. ஆங்காங்கே தமிழ் இளைஞர்கள் நின்று கூடிப்பேசிக்கொண்டு இருந்தனர். எத்தனையோ ஆண்டுகளாக மும்பையில் வசித்தாலும் அவர்களது பேச்சு நடை, கொஞ்சமும் மாறவில்லை. மராத்தி,இந்தி மொழிகளின் தாக்கம் எதுவுமே இல்லை. அப்படியே, நெல்லைத் தமிழில் பேசிக்கொண்டு இருந்தார்கள். கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.

தாராவிக்கு மறுமலர்ச்சி

அடுத்து, நண்பர்கள் இருவரும் தாராவி பகுதியைப் பார்க்க வேண்டும் என்றார்கள். குளிர்பதன நகரப் பேருந்தில் ஏறி அங்கே சென்றோம். தாராவி 90 அடி சாலையில் இறங்கி, நீண்ட தொiவு நடந்தே சுற்றி வந்தோம். மக்கள் வசிக்கின்ற குறுகலான தெருக்களுக்கு உள்ளே அவர்களை அழைத்துச் சென்றேன். இங்கே, ஒருவர் மட்டுமே நடந்து செல்லக்கூடிய, ஒரு கிலோ மீட்டர் நீள நடைவழிகூட இருக்கின்றதாம்.

தேடல் தொலைக்காட்சியில் உலகிலேயே மிகப்பெரிய குடிசைப் பகுதி என்று அழைக்கப்பட்ட தாராவியில், மக்கள் வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்பதை, ஆவணப்படமாக அடிக்கடி காட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். அப்படி இருந்த தாராவி மக்களுக்கு, இப்போது விடிவு காலம் பிறந்து விட்டது. ஆம்; தாராவி பகுதியில் உள்ள குடிசைகளை இடித்து விட்டு, அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தருகின்ற திட்டத்தை, மராட்டிய மாநில அரசு படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றது. அவ்வாறு பல கட்டடங்கள்உருவாகி விட்டன. குடிசை வீடுகள் கோபுரங்களாக ஆகிக் கொண்டு இருக்கின்றன. இன்னும் சில ஆண்டுகளுக்குள், தாராவி புது வடிவம் பெற்று விடும். மராட்டிய மாநில அரசுக்கு நமது பாராட்டுகள்.

வந்த வேலையை முடித்துக் கொண்டு, அங்கிருந்து புறப்பட, இரவு 7.30 ஆகி விட்டது. அண்டோப் ஹில், தமிழ்ச்செல்வன் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தோம். இதற்கு இடையில் பல பகுதிகளில் நிகழ்ச்சிக்கான சுவரொட்டிகளை ஒட்டி இருந்ததைப் பார்த்தேன்.

தங்கி இருந்த அறையைக் காலி செய்து விட்டு, நிகழ்ச்சி நடக்கின்ற இடத்துக்கு அருகில் உள்ள ஜ்வல் ஆஃப் செம்பூர் என்ற விடுதிக்கு வந்து தங்கினேன். மும்பைக்குச் செல்பவர்கள், தாங்கள் செல்கின்ற பணி தொடர்பான அலுவலகங்கள் அமைந்து உள்ள பகுதியிலேயே தங்குவது நல்லது. இல்லை என்றால், போக்குவரத்து நெரிசலிலேயே சிக்கி, உங்கள் பொழுதும் கழிந்துவிடும்; களைப்பு அடைந்து விடுவீர்கள்.

3.1.2013

செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டிக்குச் சென்றோம். பிரமாண்டமான கட்டடம். நிகழ்ச்சி அரங்கத்துக்கு, சிவசாமி ஆடிட்டோரியம் என்று பெயர் வைத்து இருக்கின்றார்கள். தரைத்தளத்தில் 750 பேர்களும், பால்கனியில் 550 பேர்களும் அமரலாம். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே, திரை அமைத்து, ஒளிப்படக் குறுவட்டை ஒளிபரப்பலாம் எனத் தீர்மானித்தோம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கவனித்தேன்.

மதிய உணவுக்கு, சயானில் மாடர்ன் என்ற உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார் மாடசாமி. நடைபாதையில் இருக்கைகள் போட்டு அமர வைத்தார்கள். அப்போதே, உணவுப் பட்டியலைக் கொண்டு வந்து தந்து, என்ன வேண்டும்? என்று கேட்டுக் குறித்துக் கொண்டார்கள். உள்ளே, இட நெருக்கடி. இருக்கைகள் காலியானவுடன், எங்களை உள்ளே அழைத்தார்கள். மீன்குழம்பு சாப்பாடு. சுவையாக இருந்தது. அதனால்தான் அவ்வளவு கூட்டம். அங்கிருந்து தாராவி சென்றோம்.

மும்பை, டெல்லியில் உள்ள தமிழர்கள், அனைத்துக் கட்சி ஆதரவாளர்களாகவே இருக்கின்றார்கள். அதாவது தாயகத்தை விட்டு வெளியே வசிப்பவர்கள் அனைவருக்குமே அத்தகைய உணர்வுதான் இருக்கின்றது. தமிழகத்தில் இருந்து வருபவர்களை, தமிழன் என்ற உணர்வோடுதான் பார்க்கின்றார்கள். கட்சி பேதம் பார்ப்பது இல்லை. இது இயல்பானது. அயல்நாடுகளிலும் இத்தகைய உணர்வை நான் பார்த்து இருக்கின்றேன்.

3 ஜனவரி 2013

இன்று காலை ஆயத்தமாகி, தில்லியில் இருந்து வருகின்ற தலைவர் வைகோ அவர்களை வரவேற்பதற்காக, விமான நிலையத்துக்குப் புறப்பட்டோம். போக்குவரத்து நெரிசலைக் கடந்து, விமான நிலையம் போய்ச் சேர்ந்தபோது, மணி பத்து. அதற்கு முன்பாகவே, டெல்லியில் இருந்து வர வேண்டிய விமானம், தரை இறங்கி விட்டது. அதாவது, 25 நிமிடங்களுக்கு முன்பாகவே வந்து சேர்ந்து விட்டது. கேப்டன் தமிழ்ச்செல்வன், வைகோவை வரவேற்றார். இதற்காகவே, பட்டுக்கோட்டை அருகே சொந்த ஊரில் தமது இல்ல நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, அதிகாலை, 2.30 மணிக்குத்தான் விமானத்தில் மும்பை வந்து சேர்ந்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்தையாவின் இரண்டு மகள்களையும், மும்பையில் உள்ள தமது உறவினர் குடும்பத்து மாப்பிள்ளைகளுக்கே திருமணம் செய்து கொடுத்து உள்ளார். மூத்த மருமகன், பத்துப் பேரை வேலைக்கு வைத்துக் கொண்டு, செம்பூரில் பால் வணிகம் செய்கின்றார். அடுத்த இரண்டு நாள்களும், அவரது வீட்டில் இருந்து அருமையான சாப்பாடு கிடைத்தது.

பிற்பகல் நான்கு மணி அளவில், மும்பை பிரஸ் கிளப்பில் வைகோ செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. செம்பூரில் இருந்து அங்கே செல்வதற்கு, ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும் என்பதால், 2.45 மணிக்குப் புறப்பட்டோம். 3.45 மணிக்கு பிரஸ் கிளப் போய்ச் சேர்ந்தோம். பிர்ஹான் மும்பை முனிசிபல் கார்ப்பரேசன் அலுவலகத்துக்கு அருகில் உள்ளது. (பிர்ஹான் என்றால், மராத்திய மொழியில் விரிவான, அகன்ற, பரந்த என்று பொருள்) சத்திரபதி சிவாஜி தொடர்வண்டிநிலையமும் அருகில்தான் முன்பு, வி.டி. என்று அழைக்கப்பட்ட இந்தத் தொடர்வண்டி நிலையத்தின் பெயர்தான், சில ஆண்டுகளுக்கு முன்பு, மாற்றப்பட்டது. மாநகர் மன்ற அலுவலகத்துக்கு எதிரிலேயே ஆசாத் மைதான் (விடுதலைத் திடல்) உள்ளது. எத்தனையோ வரலாற்று நிகழ்வுகள் நடந்த இடம் என்பதோடு, இதுதான் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்ட பிறகு, பொதுக்கூட்டம் நடைபெற்றது என்றார்கள் நண்பர்கள்.

செய்தியாளர் சந்திப்பு சிறப்பாக அமைந்தது. சுமார் ஒரு மணி நேரம் ஈழப்பிரச்சினையை எடுத்து உரைத்தார் வைகோ. அதற்குப்பிறகு, வைகோ அவர்களை, கேட்வே ஆஃப் இந்தியா பகுதிக்கு அழைத்துச் சென்றோம். மும்பை மாநகர ஒழுங்குகள் பற்றிய தகவல்களை, கருண், மாரி மற்றும் ஓட்டுநர், தலைவரிடம் கூறிக்கொண்டே வந்தனர்.

பேருந்துகளில், பின்பக்கம்தான் ஏற வேண்டும்; படிகளில் தொங்கிக் கொண்டு போக முடியாது. சிறுநீர் கழிப்பு இடங்களில் கூட, வரிசைதான். ஆட்டோ, டாக்சிக்காரர்கள், எந்த இடத்துக்கு அழைத்தாலும், வந்தாக வேண்டும். மறுக்கக் கூடாது. அல்லது, அபராதம்தான். ஆட்டோக்களை, மும்பையில் ரிக்ஷா என்றுதான் அழைக்கின்றார்கள். அனைத்தும் எரிகாற்றால் இயங்குகின்றன. எனவே, சுற்றுச்சூழல் மாசு இல்லை. சாலைகளில், ஆங்காங்கு, அவ்வப்போது நாகாபந்தி என்ற பாதுகாப்புச் சோதனை நடைபெறுகின்றது. எத்தனை ஆயிரம் வண்டிகள் இருந்தாலும், காவலர்கள் தடுத்து நிறுத்தி, ஒவ்வொரு வண்டியாகத்தான் அனுப்புகின்றார்கள். அதனால்தான், எத்தனையோ மேம்பாலங்களைக் கட்டி இருந்தாலும், சில வேளைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது. மராட்டிய மாநிலத்தில் உட்பகுதிகளில், ஆறு மணி நேர மின் தடை இருந்தாலும், மும்பை மாநகரில் மின்சாரத் தட்டுப்பாடு கிடையாது; அடுக்ககங்களுக்கு வெளியே குப்பைத் தொட்டிகளை வைக்கக்கூடாது. வளாகத்துக்கு உள்ளேயேதான், குப்பைத் தொட்டிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். எனவே, சாலைகள் சுத்தமாக இருக்கின்றன; நடைமேடைகளையும் தூய்மையாகப் பராமரிக்கின்றார்கள் என்றனர். கேட்டுக்கொண்டே வந்த தலைவர் வைகோ அவர்கள், மும்பையைப் போன்ற ஒழுங்குகள் நமது சென்னை மாநகரிலும் வர வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்கள்.

நான் மும்பைக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆனபின்னரும், எனக்கு இந்தி பேச வரவில்லை. காரணம், நான் இருந்த பகுதியில் அனைவரும் தமிழர்கள்தாம். பணி ஆற்றியதும் தமிழர்கள் நடத்தி வருகின்ற கடைகளில்தான். எனவே, தமிழிலேயே பேசிக்கொண்டு இருந்தேன். தமிழகத்தில் இருப்பதைப் போலவே இருந்தது என்றார் மாரி. கேட்வே ஆஃப் இந்தியா சுற்றிப் பார்த்து விட்டு, எல்ஃபின்ஸ்டன் என்ற பகுதியில் உள்ள, ‘பிரஹார்’ மராத்திய மொழி ஏட்டின் அலுவலகத்துக்குச் சென்றோம்.

பிரஹார் அலுவலகத்தில்..

அந்நாளிதழின் ஆசிரியர் மகேஷ் மாத்ரே வைகோ மீது மிகுந்த மரியாதை கொண்டவர். எங்கள் அலுவலகத்துக்கு வைகோ அவர்கள் வந்தால், பெருமையாக இருக்கும். மகிழ்ச்சியோடு அவரை வரவேற்கின்றோம். ஏற்பாடு செய்ய முடியுமா? என்று கேட்டு இருந்தார்கள். அதன்பேரில் அங்கே அழைத்துச் சென்றோம். அன்போடு வரவேற்றார்கள். நாளிதழின் ஆசிரியர், துணை ஆசியர்கள், சுமார் இரண்டு மணி நேரம் வைகோவோடு கலந்து உரையாடினார்கள். இந்த ஏடு, மராத்தியத் தொழில்துறை அமைச்சர், முன்னாள் முதல்வர், நாராயண் ரானேக்குச் சொந்தமானது. அலுவலகத்துக்கு உள்ளே நுழைகையில், ரானேயின் படமும், அவரது இரு புதல்வர்களின் படமும் வைக்கப்பட்டு உள்ளது. சந்திப்புக்குப் பிறகு, அறைக்குத் திரும்பினோம்.

4.1.2013 இன்று காலையில், வைகோ அவர்கள், மும்பையின் புகழ் பெற்ற சிவாஜி பார்க்கில் நடை பழகுவதற்காகச் சென்றார். உடன், அடைக்கலம், செந்தூர்பாண்டியன் சென்றனர். நானும், தம்பி ஆனந்தராஜூம் நாங்கள் தங்கி இருந்த விடுதியைச் சுற்றிய பகுதிகளிலேயே நடந்து வருவது எனப் புறப்பட்டோம். அரை மணி நேரம் நடந்து சென்று, பின்னர் திரும்பி வந்தோம். இங்கே உள்ள பூங்காக்களின் நுழைவாயில்களிலும், பலவிதமான சாறுகளை விற்கின்றார்கள். மூச்சுப்பயிற்சிகளில் குழுவாக ஈடுபடுகின்றார்கள்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மிகப்பெரிய, பரந்த திடலில் அமைந்து உள்ளது. சிறு வானூர்திகளே வந்து இறங்கலாம். வேறு பல தனியார் நிறுவனங்களும், தங்களுடைய கணினி சர்வர்களை, ரிலையன்ஸ் தலைமையகத்தில் வைத்து உள்ளன. எனவே, அவ்வப்போது எனக்கு அங்கே செல்லக்கூடிய வாய்ப்புக் கிடைக்கின்றது. பார்க்க வேண்டிய இடம்; அதேபோல இந்தியாவிலேயே அதிக மதிப்புள்ள, முகேஷ் அம்பானியின் 27 அடுக்கு மாடி வீடு, தெற்கு மும்பையில் பெட்டார் ரோடு என்ற இடத்தில் உள்ளது அதை அல்டாமௌண்ட் ரோடு என்றும் அழைப்பார்கள் என்றார் ஆனந்தராஜ்..

இன்று முழுமையும் நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கவனித்தோம். முகநூல் வழியாக மட்டுமே அறிமுகம் ஆகி இருந்த 30 தோழர்கள், நாங்கள் தங்கி இருந்த விடுதிக்கு வந்து, சந்தித்தார்கள்.

செம்பூர் முருகன் கோவில்

மாலை 4.00 மணிக்கு, வைகோ அவர்கள் ராம் ஜெத்மலானியைச் சந்திப்பதற்காகச் சென்றார். திருச்சி சேரன், ராஜமாணிக்கம் ஆகியோருடன் நான் வெளியே புறப்பட்டேன். செம்பூரில் அடுக்குமாடி முருகன் கோவிலைப் பார்க்கச் சென்றோம். திருச்செந்தூர் என்று அழைப்பதுபோல, இந்த இடத்துக்கு ‘திருச்செம்பூர் முருகன் கோவில்’ என்று பெயர் சூட்டி இருக்கின்றார்கள். நான்கைந்து மாடி உயரக் கட்டடத்தின் மேல் மாடியில், முருகன் சிலை அமைந்து உள்ளது. மாறுபட்ட வடிவ அமைப்பிலான கோவில் இது.

தாராவி கடைத்தெருவில், ஒரு இடத்தில் கூட்டமாக இருந்தது. பறை ஒலித்துக் கொண்டு இருந்தது. உள்ளே நுழைந்து பார்த்தேன். திருமணம் ஆன மராட்டியத் தம்பதியர் நின்றுகொண்டு இருந்தார்கள். தரையில் இலை விரித்து, பூ, பழங்கள் வைத்து பூசை நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அவர்களது சடங்குகளைக் கவனித்தேன். சற்று நேரத்தில், ஒருவர் கையில் சவுக்கோடு சாமியாட்டம் போட்டபடி வந்தார். அவருக்கு எதிரே நின்ற முதியவர் ஒருவர் இரண்டு கைகளையும் விரித்தபடி நின்றார். சவுக்கு ஆசாமி, ஆடிக்கொண்டே முதியவர் அருகில் வந்து அவரது தாளைத் தொட்டு வணங்கினார். பக்கத்தில் ஒருவர் வைத்து இருந்த மஞ்சளை எடுத்து, முதியவரின் இரண்டு கைகள், நெஞ்சு, நெற்றியில் அப்பினார். அப்படியே பின்னோக்கிச் சென்றவர், சவுக்கை வேகமாகச் சுழற்றி வந்து, முதியவரின் கைகளில் விளாசினார். அடிவாங்கிய முதியவர், சற்றுத் தள்ளி நகர்ந்தார். அங்கே ஒருவர் கையில் குஞ்சரங்கள் கட்டிய பத்துப் பதினைந்து சவுக்குகளோடு நின்று கொண்டு இருந்தார். அவற்றுள் ஒன்றை எடுத்து முதியவரின் கழுத்தில் மாலையாக அணிவித்தார். அடுத்து ஒருவர், இரண்டு கைகளையும் விரித்து நின்றார். அவருக்கும் அடி விழுந்தது, சவுக்கு பரிசாகக் கிடைத்தது. இப்படி வரிசையாக ஒவ்வொருவராக வந்து அடி வாங்கினார்கள்.

ஒருவேளை அடிப்பது போல ஓங்கி, மெதுவாக அடிக்கின்றார்களோ என்று பார்த்தால் இல்லை. அடி வாங்கிய ஒவ்வொருவரின் கைகளில் இருந்தும் ரத்தம் வழிந்தது. அருகில் இருந்தவர்களிடம் விளக்கம் கேட்க முடியவில்லை. ஒரே நெருக்கடி. பிறகு சந்தித்த தாராவி தமிழ் நண்பர்களிடம் கேட்டேன். இருபது ஆண்டுகளாக இங்கே இருக்கின்றேன். மராட்டியர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையெல்லாம் கவனித்துப் பார்த்ததே கிடையாது. நீங்கள் இப்போதுதான் வந்தீர்கள். இதையெல்லாம் கவனித்துக் கேட்கிறீர்களே? என்றார்களே தவிர, யாரும் விளக்கம் சொல்லவில்லை. ஒருசிலர், ‘நாங்கள் விசாரித்துச் சொல்லுகிறோம்’ என்றார்கள்.

தமிழ்மணி பாலா

முகநூல் மும்பை நண்பர் தமிழ்மணி பாலாவோடு சுற்றியபோது பல தகவல்களைத் தந்தார். பன்வல் தொடர்வண்டி நிலையம் பற்றிக் கூறினேன். அவர் சொன்னார்: மும்பை நகரில் உள்ள பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் விரிவாக்கப் பகுதி, பன்வல் அருகே அமைய உள்ளது. அதேபோல, அடுத்த சில ஆண்டுகளில், மும்பையில் இருந்து சென்னை மற்றும் தென் மாநிலங்களுக்குச் செல்லுகின்ற தொடர்வண்டிகளையும், பன்வல் தொடர்வண்டி நிலையத்தில் இருந்தே இயக்குவது என தொடர்வண்டித்துறை முடிவு செய்து உள்ளது. இதையெல்லாம் கருதித்தான், பன்வல் தொடர்வண்டி நிலையத்தை அவ்வளவு பிரமாண்டமாகக் கட்டி இருக்கின்றார்கள் என்றார்.

அத்துடன், ‘அண்ணா நீங்கள் கடலை மிட்டாய் பற்றிச் சொன்னீர்கள். தமிழகத்தில் எப்படி கோவில்பட்டி கடலை மிட்டாய் பிரபலமோ, அதைவிட இரண்டு மடங்கு, லோனவாலா சிக்கி மராட்டியத்தில் பிரபலம். இதில், காஜூ சிக்கி, பாதாம் சிக்கி, கடலை சிக்கி, எல் சிக்கி, தேங்காய் சிக்கி என பல வகைகள் உண்டு. லண்டன் பிபிசி தொலைக்காட்சி, இந்த சிக்கி பற்றி ஆவணப் படம் ஒளிபரப்பி உள்ளது. வட இந்தியாவில் இருந்து மும்பை வருகின்ற பயணிகள் இந்த சிக்கியை விரும்பி வாங்கிச் செல்வர் என்றார். தாராவி பகுதியில் நிறைய தையல் பொறிகளைப் பார்த்ததாகச் சொன்னீர்கள். குமார் சர்ட்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள், தாராவியில்தான் தையல் தொழிற்கூடங்களை வைத்து உள்ளது. அதேபோல, பெல்ட், பர்ஸ், பெண்களின் கைப்பைகள் போன்ற தோல் பொருட்களும், தாராவியில் தயாராகின்றன’ என்றார்.

பாலாவின் திருமணம் மே மாதம் 18 ஆம் நாள், திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் நடக்கின்றது. என்னுடைய கொடிவழி அல்லது அலைபேசி குறுநூலை, ஆயிரம் படிகள் அச்சிட்டு, அன்பளிப்பாகக் கொடுக்க விழைவதாகக் கூறினார். நான் சொன்னேன்: நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தின் விற்பனையாளராக, 12 ஆண்டுகள் மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்து இருக்கின்றீர்கள். ஓரளவுக்கு இங்கே உள்ள மராட்டியர்களின் பழக்கவழக்கங்களை அறிந்து இருக்கின்றீர்கள். பல நண்பர்களிடம் நான் பேசித்தான் தகவல்களை வாங்குவேன். ஆனால், நீங்கள் கேட்காமலேயே நிறையச் சொல்லுகின்றீர்கள். எனவே, மராட்டிய மாநிலம் குறித்து உங்கள் நினைவில் உள்ள செய்திகளைத் தொகுத்து எழுதுங்கள். ‘மராட்டியத்தில் பாலா’ என்ற தலைப்பில், படங்களுடன் தொகுத்து, அதையே ஒரு சிறுநூலாக உங்கள் திருமணத்தில் அன்பளிப்பாக வழங்குவோம் என்றேன். நல்ல யோசனைதான். ஆனால், நான் பள்ளி இறுதி வகுப்பு கூடப் படிக்கவில்லை’ என்றார்.

அதனால் என்ன? எம். ஏ. படித்தவர்கள் வாயை மூடிக்கொண்டு இருப்பார்கள். எதுவும் பேச மாட்டார்கள். ஆனால் நீங்கள் இணையத்தில் புகுந்து விளையாடுகிறீர்கள். முகநூல் பக்கங்களில் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கின்றீர்கள். மும்பைச் செய்திகள் அனைத்தையும் தொகுத்து வழங்குகின்றீர்கள். எனவே, உங்களால் புத்தகம் எழுத முடியும். அச்சிட்டு, வெளிக்கொணர நான் உதவுகிறேன் என்றேன். ‘சரி அண்ணா; கண்டிப்பாக எழுதுகிறேன்’ என்றார்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் உள்ள தமிழர்கள், அந்த மாநில மக்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு குறித்த செய்திகளை, கட்டுரைகளாக எழுதி, இணையதளத்தில், முகநூல் பக்கங்களில் பதிவு செய்ய வேண்டும். இதுவரையிலும், 38 நாடுகளில் வசிக்கின்ற தமிழர்களை நான் நேர்காணல் கண்டு, அவர்களது அனுபவங்களைக் கேட்டு எழுதி, உலக வலம் என்ற நூலைத் தொகுத்து வெளியிட்டு இருக்கின்றேன். பல நாடுகளில் உள்ள தமிழ் இளைஞர்களை, அந்த நாடுகளைப் பற்றி எழுதுமாறு ஊக்கம் அளித்து உள்ளேன். பலர் எழுதி வருகின்றார்கள்.

ஜனவரி 4,5 ஆகிய நாள்களில், மும்பைக்கு வைகோ வந்து இருக்கின்ற செய்தி அறிந்து, மும்பையின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருந்து தமிழர்கள் வந்து சந்தித்துப் பேசி, படங்கள் எடுத்துக்கொண்டே இருந்தனர். 5 ஆம் தேதி மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, அரங்கம் நிறைந்து, நிற்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டது. நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. அன்று இரவே, வைகோ அவர்கள் சென்னைக்குத் திரும்பினார்கள்.