இந்த தலைப்பில் கற்றளி என்கிற வார்த்தையைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். கோயில் கட்டிடக் கலை குறித்து தெரிந்தவர்களுக்கும், தமிழகத்தில் கோயில்களின் பரிணாம வளர்ச்சி குறித்து தெரிந்தவர்களுக்கும், பல்லவர்களின் வரலாறு தெரிந்தவர்களுக்கும் இந்த வார்த்தை மிகப் பரிச்சயமாண ஒன்று. சதுரமாக அறுத்த கற்களைக் கொண்டு கட்டும் கற்கோயில்களுக்கு கற்றளி என்று பெயர்.

தமிழகத்தின் முதல் கற்றளி கோயிலை - அதாவது முதன் முதலாக பெரிய பெரிய பாறைக் கற்களை ஒன்றின் மீது ஒன்றாக வைத்துக் கட்டிய கோயில் – குறித்த தெரிந்து கொண்ட நான் அதை தேடிப் போன பயணக் கதையைத்தான் இங்கே பேசலாம் என்று இருக்கிறேன். கதையா அப்ப நல்ல சுவாரசிய சங்கதியெல்லாம் இருக்கும்தானே என்றெல்லாம் பேராசை பட்டுத் தொலைக்காதீர்கள். தமிழக வரலாற்றின் மிக முக்கிய மைல் கல்லான ஒரு வரலாற்றுச் சின்னம் எப்படி நாதியற்றுக் கிடக்கிறது என்பதற்கான சிறந்த உதாரணம் - எனது அதைத் தேடிய பயணம்.

இந்தத் தேடல் பயணம் பத்து, பதிமூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த ஒன்று. பொறியியல் படித்துக் கொண்டிருந்தபோது, மூன்றாம் ஆண்டு முடிவின்போதான மே மாத விடுமுறையில் அந்தப் பயணத்தை எனது நண்பன் ஒருவனுடன் தொடங்கினேன். பயணம் என்றால் மிக நீண்ட பயணமெல்லாம் இல்லை. தாம்பரத்தில் பேருந்தைப் பிடித்து காஞ்சிபுரத்தில் போய் இறங்கியதைத்தான் அப்படி கொஞ்சம் ‘பில்டப்பாக’ சொன்னேன். என்னுடன் வந்த நண்பனுக்கு வரலாறு, கோயில் கட்டிடக் கலை குறித்த சங்கதியெல்லாம் தெரியாத விசயங்கள். நான் கூப்பிட்டதற்காக என்னுடன் வந்தான். அன்றைய தினம் முழுவதும் என்னுடன் மே மாத வெயிலில் மனித கருவாடாக வேண்டும் என்பது அன்றைய அவனுடைய இராசி பலனாக இருந்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் முதல் கற்றளி, கூரம் என்கிற ஊரில் இருக்கிறது என்பதையும் அது காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் போகும் பிரதான சாலையில் கொஞ்சம் உள் வாங்கி இருக்கும் சிறிய கிராமம் என்பதையும், மா.இராசமாணிக்கனாரின் ‘பல்லவர் வரலாறு’ என்ற வரலாற்று ஆராய்ச்சிப் புத்தகத்தின் மூலம்தான் அறிந்து கொண்டிருந்தேன். அது ஒரு சிறிய சிவன் கோயில் என்பதையும் இராசமாணிக்கனார் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மேல் என்ன அங்க அடையாளங்கள் வேண்டும்!

காஞ்சிபுரத்தில் போய் இறங்கிவிட்டோம். அப்போதெல்லாம் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் டீக் கடைகளும், ஆட்டோ ஓட்டுனர்களும்தானே GPRS சேவையைத் தருபவர்கள். எங்களுக்கு வேண்டிய தகவலைப் பெற ஒரு டீக் கடையில் டீயை வாங்கியபடி கூரம் கிராமத்திற்கான பேருந்து குறித்த தகவலைக் கேட்டோம்.

இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும் தம்பி. ஒரே பஸ்சுதான். காலையில் ஒரு வாட்டி ஊருக்குள்ள போகும். அதோட சாயங்காலம் ஊருக்குள்ள போகும் என்றார். அடக் கொடுமையே! அப்ப காலையில் ஊருக்குள் போனால் அத்தோடு சாயங்காலம்தான் வெளியே வர முடியுமா? கூரம் சிவன் கோயிலோடு சேர்த்து காஞ்சி கைலாசநாதர் கோயிலையும் பார்ப்பது என்பது எனது அன்றைய திட்டம். இவர் சொல்வதைப் பார்த்தால் கூரம் கிராமத்திலேயே ஒருநாள் கழிந்துவிடுமே. சரி தமிழகத்தின் முதல் கற்றளிக்காக ஒரு முழு நாளை ஒதுக்கினால்தான் என்ன என்கிற முடிவுடன் இரண்டு மணி நேரத்தை காஞ்சி வரதராஜ (பெரிய) பெருமாள் கோயிலில் கழித்துவிட்டு கூரம் பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம்.

ஊரைச் சுற்றியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல் வெளிதான். பெரிய ஆலமரத்தடியை ஒட்டிய ஒரு ஓட்டு வீட்டில் டீக் கடை. அதுதான் கூரம் பேருந்து நிறுத்தம். ஊருக்குள் இறங்கியது எங்களுடன் சேர்த்து மூன்று நான்கு பேர்தான். நாங்கள் இறங்கும்போது கண்டக்டர், "இன்னும் அரமணி நேரம் பஸ்சு ஊர்க்காரங்களுக்காக நிக்கும். அதுக்குள்ள திரும்பி வந்துருவீங்களா. இல்ல சாயங்காலம்தான் பஸ்சு வரும்" என்றார். தமிழகத்தின் முதல் கற்றளியை அரைமணி நேரத்தில் பார்த்துவிட்டு வருவதாவது! ஆனால் கண்டக்டருக்கு ஏற்கனவே அந்த கூரம் சிவன் கோயிலைத் தேடி வந்தவர்களைப் பார்த்த அனுபவம் இருந்திருக்கிறது என்பதை அடுத்த அரைமணி நேரம் கழித்துத்தான் நாங்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டோம்.

அந்த ஆலமரத்தடி டீக் கடைக்கு அருகில் ஊருக்குள் செல்லும் பாதை. ஒற்றையடிப் பாதையாக இருக்கும்போல என்று கற்பனை செய்ய வேண்டாம். நல்ல பெரிய பாதை, இரண்டு வாகனங்கள் அருகருகே செல்லக் கூடிய அளவிற்கான பாதை. தேர் ஓடும் பாதை அப்படித்தானே இருக்கும். இராசமாணிக்கனாரின் எழுத்துக்களில் வருணிக்கப்பட்ட தமிழகத்தின் முதல் கற்றளியை நேரில் காணப் போகிறோம் என்கிற ஆர்வத்துடன் ஊருக்குள் சென்றோம். ஊருக்குள் இருந்தவர்கள் எல்லாம் உடனே எங்களை பப்பரக்கா என்று வேடிக்கை பார்த்திருப்பார்களாக்கும் என்று அடுத்த கற்பனைக்கு செல்ல உங்களுக்கு நான் அனுமதி தரப் போவதில்லை. காரணம் அப்படியெல்லாம் நடக்கவேயில்லையே!

ஊரின் மையத்தில் ஒரு மிகப் பெரிய திருமால் கோயில் (திருமால் கோயில் என்றுதான் கவனம்). விஜயநகர மற்றும் நாயக்கர் கால கோயில் கட்டிக் கலையில் கட்டப்பட்ட கோயில் அது. கோயில்களின் கட்டிக் கலையை வைத்தே அதன் காலத்தையும், அது எந்த பேரரசு காலத்திய கட்டிக் கலை என்பதையும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு கோயில் கட்டிடக் கலையிலும் வரலாற்றிலும் பரிச்சயம் உண்டு. கோயில்களில் இருக்கும் கல்வெட்டு எழுத்துக்களின் அமைப்பைக் கொண்டு (அதாவது அது தமிழியா, வட்டெழுத்தா, பிராகிருதமா) அந்த கோயில் கட்டப்பட்ட உத்தேச காலகட்டத்தை அறிந்து கொள்ளும் பரிச்சயமும் உண்டு. (இந்த பயிற்சிக்கு எனக்கு உதவியவைகள் நடன காசிநாதன் போன்ற வரலாற்று அறிஞர்களின் புத்தகங்கள்). நிச்சயமாக அது நான் தேடிவந்த கோயில் கிடையாது. அந்த கோயிலுக்கு வெளியே இரண்டு நீண்ட பெரிய தெரு. தெருவின் இரண்டு பக்கங்களும் வீடுகள். அவ்வளவுதான் மொத்த ஊரும்.

வேறு கோயில் இருப்பதற்கான எந்த புற அடையாளத்தையும் காணவில்லை. அந்த பெரிய கோயில் அருகில் இருந்த ஒருவரைக் கேட்டேன். இங்க சிவன் கோயில் ஒன்னு இருக்கு. அதுக்கு எப்படி போகணும் என்று. இதுதான் தம்பி அந்தக் கோயில் என்று பதில் வந்தது. இது என்னடா சோதனை. தவறான ஊருக்கு வந்துவிட்டோமா அல்லது இராசமாணிக்கனார் தவறாக ஏதும் குறிப்பிட்டுவிட்டாரா. நிச்சயமாக இராசமாணிக்கனார் தவறாகக் குறிப்பிட வாய்ப்பே இல்லை. நான்தான் தவறான இடத்திற்கு வந்திருக்க வேண்டும் என்கிற நினைப்போடு, கண்ணில் பட்ட மேலும் இருவரைக் கேட்டோம். அவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக 'சின்ன சிவன் கோயிலுங்க அது' என்று அங்க அடையாளமெல்லாம் சொல்லி, எங்களுக்குத் தெரிஞ்சு அப்படி சின்ன கோயிலெல்லாம் இங்க இல்லயே என்று பதில் வந்தது.

கூட வந்த நண்பன், "மச்சி கிளம்பு... நாம தப்பான ஊருக்கு வந்துட்டோம் போல. பஸ்சு நின்னுகுட்டுத்தான் இருக்கும்... வா போயிடலாம். இல்ல சாயங்காலம் வரைக்கும் இங்கதான் கிடக்கனும்" என்றான். அதுவும் சரிதான். தமிழகத்தின் முதல் கற்றளியை இன்று பார்க்க குடுப்பினை இல்லை போல என்று ஆலமரத்தடி டீக்கடைக்கு செல்லும் பாதையில் ஊரைவிட்டு வெளியே நடையைக் கட்டினோம். ஊருக்கு உள்ளே வரும் அந்தப் பாதையில் இடது புறமாக ஒரு வீடு இருந்தது. ஊருக்குள் வருபவர்களை முதலில் வரவேற்பதைப் போல இருந்தது அந்த வீடு. அந்த வீட்டில் உள்ளவர்களின் கண்களில் படாமல் யாரும் ஊருக்குள் சென்று விட முடியாது என்பதாக இருந்தது அந்த வீடு. வீட்டிற்கு வெளியே கணவனும் மனைவியுமாக இரண்டு பேர் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

நண்பன் தாகம் எடுக்கிறது என்று அவர்களிடம் சென்று குடிக்க நீர் கேட்டான். உடனே அந்த அம்மையார் தண்ணீர் கொண்டு வர வீட்டிற்குள் சென்றார். அவருடைய கணவர் எங்களிடம் பேச்சுக் கொடுத்தார். நான் தமிழகத்தின் முதல் கற்றளியைப் பற்றியும், அது ஒரு சின்ன சிவன் கோயில் என்பதையும் அவருக்கு விளக்கிச் சொல்லி, "அந்தக் கோயில் இந்த ஊருலதான் இருக்குன்னே படிச்சேன்... அதான் பாத்துட்டு போகலாம்னு…..ஆனா….எதயும் காணல" என்றேன். பெரிய கோயிலை சுட்டிக்காட்டி "இங்க அந்த கோயில் ஒன்னுதான் இருக்கு" என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குள் அந்த அம்மையார் எங்களுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்துவிட்டார். நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டிருப்பார் போலும். கணவரிடம், "ஏன் இந்தா பக்கத்துல ஒரு கோயிலு இருக்கே" என்றார். அதைக் கேட்டதும் அவரும் "அட ஆமா தம்பி.. தோ அங்க ஒரு இடிஞ்ச கோயிலு இருக்கு. அது கூட சிவன் கோயிலுதான்" என்றார்.

படக்கென்று அவர் சுட்டிக் காட்டிய திசைக்குப் போய் பார்த்தேன். அதேதான். நான் தேடி வந்த அதே அற்புதம்தான். இராசமாணிக்கனார் குறிப்பிட்டிருந்த அதே தமிழகத்தின் முதல் அதிசயம்தான். காலக் கொடுமையே! அந்த கோயிலின் நிலையைப் பார்த்தவுடன் தமிழனின் வரலாற்று பிரக்ஞை குறித்து புல்லரித்து விட்டது போங்கள். இந்த அழகில் அது தொல்லியல் துறையின் பராமரிப்பில் வேறு இருப்பதாக அறிவிப்புப் பலகை வேறு. பரமாரிப்பு என்கிற வார்த்தையைக் கிண்டல் செய்வதைப் போலிருந்தது கோயிலின் பராமரிப்பு. அரச மரத்தின் தடினமான வேர் கோயிலின் பிரஸ்தரப் பகுதியையும், பித்தி பகுதியையும் ஊடுருவிச் சென்றிருந்தது. (கோயில் கருவறையை சுற்றியிருக்கும் பகுதியை பித்தி என்பார்கள். பித்திக்கு மேல் பிரஸ்தர பகுதி. கோயிலின் அடியிலிருந்து முடி வரை ஆறு அங்கங்கள் உண்டு. அவை அதிட்டாணம், பித்தி, பிரஸ்தரம், கிரிவரம், கோபுரம் மற்றும் சிகரம். இந்த ஆறு அங்கங்களையும் உள்ளடக்கிய முழு உருவத்தை விமானம் என்பார்கள்.)

விமானத்திற்கு முன்பு ஒரு சிறிய முகப்பு மண்டபம். அவ்வளவுதான் அந்தக் கோயிலின் கட்டுமானம். விமானமும் அவ்வளவு பெரியதெல்லாம் இல்லை. முதல் கற்றளி முயற்சி என்பதால் அதன் உருவம் சிறியதாகத்தான் இருந்தது. சுமார் இரு நூறு வருடங்கள் கழித்து கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோயிலின் முப்பாட்டான் இந்த கூரம் சிவன் கோயில். பித்திப் பகுதியிலும் அவ்வளவாக கோஷ்ட பஞ்சாச்சரங்கள் இடம் பெற்று இருக்கவில்லை. (கருவறையின் வெளி சுற்றுப் பகுதியில் இருக்கும் புடைப்பு சிற்பங்களையும், அது இருக்கும் அமைப்பையும் பஞ்சாச்சரங்கள் என்பார்கள். இதில் பல வகை உண்டு). கோயில் சிறியதாக இருந்தாலும் அவ்வளவு அழகாக இருந்தது. மூட்டப்பட்ட கேட்டிற்கு வெளியே சற்று தொலைவில் இருந்து பார்க்கும்போதே அதன் அழகு அள்ளியது. உள்ள போக முடியுமா என்று அவரைக் கேட்டேன். "போலாம் தம்பி ஆனா சாயங்காலம்தான் அய்யர் வருவார். அவருகிட்டதான் சாவி இருக்கு" என்றார்.

பிறகு சாயங்காலம் ஆகும் வரை அங்கேயே இருந்தோம். நாங்கள் எதிர்பார்த்திருந்த அய்யர் நான்கு மணி போல வந்தார். எங்களுக்கு அந்தக் கோயிலை அடையாளம் காட்டியவர், அய்யரிடம் நாங்கள் காலையிலிருந்து இந்தக் கோயிலைப் பார்ப்பதற்காக உட்கார்ந்திருப்பதை அவரிடம் சொன்னார். அப்படியா என்று ஆச்சரியத்துடன் ஐய்யர் கேட்டைத் திறந்துவிட்டார். கோயிலின் வளாகத்திற்குள் சென்று திருப்தியாக தமிழகத்தின் முதல் கற்றளியை சுற்றிப் பார்த்தேன். இந்தக் கோயில் கட்டப்பட்டபோது ஊரின் மையத்தில் இருந்திருக்கிறது. இப்போது ஊருக்கு வெளியில் இருக்கிறது. சாயங்காலம் வர வேண்டிய பேருந்திற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலிருந்ததால், இந்தக் கோயிலில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருக்கலாமா என்று அய்யரிடம் கேட்டோம். "தாராளமா இருந்துட்டு போங்க தம்பி" என்று விட்டு அவர் ஊருக்குள் இருக்கும் பெரிய கோயிலுக்குப் போய்விட்டார்.

நானும், என் நண்பனும், தமிழகத்தின் முதல் கற்றளிக் கோயிலும் மட்டுமே அங்கே தனித்திருந்தோம். அட! அந்த அனுபவம். சுமார் ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்பு நம் முன்னோர்களால் கட்டப்பட்ட ஒரு கட்டடத்துடன் தனிமையில் இருக்கும் அந்த அனுபவம்! மாமல்லபுரம் ஆவணப் படம் எடுக்கும்போது இந்தக் கோயிலையும் அதில் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. ஆனால் இந்த வருடம் செம்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப் பெருமாள் (பெரியது இல்லை) கோயில் மற்றும் கைலாசநாதர் கோயில் குறித்த ஆவணப்படம் எடுக்கலாம் என்று திட்டம். அப்போது இந்த கூரம் சிவன் கோயிலையும் ஆவணப் படுத்த வேண்டும் என்று கருதியிருக்கிறேன்.

(பின் குறிப்பு - சில ஆராய்ச்சியாளர்கள் முழுப் பாறையில் கோயிலாக செதுக்கப்பட்ட கட்டடக் கலையையும் கற்றளி என்று குறிப்பிடுவார்கள்.)

- நவீனா அலெக்சாண்டர்