‘எல்லோரும் கோயிலில் மணி ஆட்டலாம்’ என்று காஞ்சி சங்கராச்சாரி சொன்னால் எப்படி ஓர் ஆச்சரியம் வருமோ, அப்படித்தான் ‘மாலை போட்டிருக்கேன்’ என்று சரவணன் சொன்னபோது, எனக்கும் வந்தது.

சிவப்பு எறும்புகள் எல்லாம் கருணாநிதி, கறுப்பு எறும்புகள் எல்லாம் எம்.ஜி.ஆர். என்று நம்பிக் கொண்டிருந்த பால்ய காலம் தொட்டே நானும் சரவணனும் நண்பர்கள். ஏறக்குறைய 30 ஆண்டுகால நட்பு. நான் அரைக்கிளாஸ் (எங்க ஊர் Pre KG) படித்தபோது, அவன் ஒண்ணாப்பு. நாங்கள் வளர்ந்தது தென் தமிழகத்தில் கோவில்பட்டிக்கு அருகில் இருக்கும் சுப்பையாபுரம் என்ற கிராமத்தில்.

நான் 10 வயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை அற்றவன். ‘தீபாவளிக்கு அன்னைக்கு மட்டும் ஏன் தலைக்கு எண்ணெய் தேய்ச்சிக் குளிக்கணும். நாளைக்கு எண்ணெய் தேய்ச்சி குளிச்சா ஆகாதா?’ என்று எதிர்க்கேள்வி கேட்பவன். பெற்றோர்கள், ஊர்ப் பெரியவர்கள் யார் பேச்சையும் அப்படியே கேட்காதவன்; எதிர்க்கேள்விகள் கேட்கும் அதிகப் பிரசங்கி. ஆனால் நன்றாகப் படிப்பவன். ஊரார் பார்வையில், அது ஒன்று மட்டுமே என்னிடம் இருந்த நல்ல அம்சம்.

சரவணன் எனக்கு நேரெதிரான குணம் உடையவன். தண்ணீர் போன்றவன். எந்தப் பாத்திரத்தில் ஊற்றுகிறோமோ அந்த வடிவத்தில் இருப்பவன். குடும்பத்தினர் சாமி கும்பிட கூப்பிட்டாலும் போவான்; 'கோயிலுக்கு வேணாம்; சினிமாவுக்குப் போகலாம்' என்றாலும் வருவான். படிக்கும்போதே தீப்பெட்டி ஆபீஸ் வேலைக்குப் போய் வீட்டில் நல்ல பேரும் வாங்குவான்; என்னோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடி கெட்ட பேரும் வாங்குவான். மனிதர்களை வகை பிரித்துப் பார்க்காதவன். எல்லோருடனும் அவனால் அன்பாகப் பழக முடியும். ஒவ்வொரு மனிதருக்கும் ஏதேனும் ஒரு நல்ல குணம், ஏதேனும் ஒரு விருப்பு வெறுப்பு இருக்குமல்லவா? அது போதும் சரவணனுக்கு, அவர்களுடன் சிரித்துப் பேசவும், அவர்களுடன் நட்பு கொள்ளவும். ஆளுக்குத் தகுந்தாற்போல் நடந்துகொள்கிறானா என்றால் அதுவும் கிடையாது, அவனது இயல்பே அதுதான். அவனால் பேசுவதற்கும், பழகுவதற்கும் ஆட்கள் இல்லாமல் இருக்க முடியாது. அவனது உயிர் நண்பர்கள் நானும், தர்மாவும் (தர்மாவைப் பற்றி எனது துபாய் பயண அனுபவத்தில் எழுதுகிறேன்) என்றாலும்கூட, அதையும் தாண்டி அவனுக்கு எப்போதும் மிகப் பெரிய நண்பர்கள் வட்டம் இருக்கும்.

என்னுடனான நட்பு சரவணனுக்கு எப்போதும் தொல்லையானதுதான். எனது வீட்டில் நான் செல்லப்பிள்ளை. நன்றாகப் படித்தால் போதும், வீட்டில் எந்த வேலையும் சொல்ல மாட்டார்கள். ஆனால் சரவணன் வீட்டில் அப்படி இல்லை. தீப்பெட்டி ஆபிஸ், காட்டு வேலைக்குப் போக வேண்டியவனை விளையாட இழுத்துப் போய்விடுவேன். அந்தக் கிராமத்தில் கிரிக்கெட் விளையாட 11 பேர் சேர்ப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். டீம் கேப்டன் என்ற முறையில் ஆள் கணக்கிற்கு சரவணனையும் அழைத்துப் போய் விடுவேன். விளையாடிவிட்டு வந்து, வீட்டில் திட்டு வாங்குவான். ஊரில் ஏதேனும் நல்லது, கெட்டது என்றால், கோவில்பட்டியிலிருந்து வீடியோ, VCR வரவழைத்து சினிமாப் படம் போடுவார்கள். துணைக்கு சரவணனையும் அழைத்துப் போவேன். 4 படம் பார்த்துவிட்டு விடியற்காலையில் போனால், சரவணனுக்கு வீட்டில் பூசை காத்திருக்கும். எனது விடலைப் பருவ காதலுக்கு எத்தனையோ எதிர்ப்புகள் இருந்தபோதும், எதைப் பற்றியும் கவலைப்படாது தூது போனவன் சரவணன்.

பள்ளிப் படிப்பிற்குப் பின் டிப்ளமோ முடித்து, பெங்களூருக்கு வேலைக்குப் போனான். நான் BE படித்து, வேலை தேட பெங்களூரு போனபோது, எனது செலவுகள் அனைத்தையும் அவனே பார்த்துக் கொண்டான். நாங்கள் சேர்ந்து சுற்றும்போது, அனைத்து முடிவுகளையும் என் விருப்பத்திற்கே விட்டுவிடுவான். என் வாழ்வின் முக்கிய தருணங்கள் அனைத்திலும் என்னுடன் இருந்திருக்கிறான். எனக்காக அனைத்தையும் விட்டுக் கொடுப்பான். அவன் மனம் நோகும்படி நான் பலமுறை நடந்ததுண்டு. ஆனால் என் மனம் நோக ஒருநாளும் அவன் நடந்தானில்லை.

கடவுள் என்ற ஒன்றைப் பற்றி எந்த தீவிர யோசனையோ, கவலையோ இல்லாதிருந்தவன், திடீரென்று ‘அய்யப்பனுக்கு மாலை போட்டிருக்கேன்’ என்று சொன்னபோது, எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.

கடவுள் நம்பிக்கை குறித்து எப்போதும் கேலி, கிண்டலுமாக இருக்கும் எனக்கு, ‘என்னுடைய பெண்குழந்தையின் கால் மற்ற குழந்தைகளைப் போல நேராக வேண்டும் என்று வேண்டி, மாலை போட்டிருக்கேன்’ என்று காரணம் சொன்னபோது, அவனிடம் பகுத்தறிவு பேச எனக்கு மனம் வரவில்லை. சரியோ, தவறோ... இந்த நம்பிக்கை பொய்யானது என்று எப்படி சொல்ல முடியும்?

***

ஊர் சுற்றுவதின் மீதான ஆர்வம் எனக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாராவாரம் எங்கேயாவது ஒரு புது இடத்திற்குப் போக வேண்டும் என்ற ஆவல் என்னை விடாது எங்கேயாவது துரத்திக் கொண்டே இருக்கிறது. அப்படித்தான் சரவணன் சபரிமலைக்குப் போகிறேன் என்று சொன்னபோது, எந்தத் தயக்கமுமின்றி உடனடியாக 'நானும் வருகிறேன்' என்று அவனிடம் சொன்னேன். இந்த வாய்ப்பில் சபரிமலைப் பகுதிகளைச் சுற்றிப் பார்த்து விடலாம் அல்லவா?

அவனும் மிகவும் மகிழ்ச்சியுடன், ‘குரு சாமி’யிடம் கேட்டுவிட்டுச் சொல்வதாகக் கூறினான். 'பதினெட்டுப் படி ஏற வேண்டும் என்றால், ஒரு மண்டலம் விரதம் இருக்க வேண்டும். மாலை போடாமல் வெறுமனே சபரிமலைக்கு வருவதாக இருந்தால், ஒரு வாரம் விரதம் இருந்தால் போதும்’ என்று ‘குரு சாமி’ சொன்னதாக சரவணன் சொன்னான். விரதம் என்றால் காலையில் இரண்டு இட்டிலி, பால் அல்லது பழச்சாறு; மதியம் மூன்று மணிக்கு வடை, பாயசம், மூன்று வகை கூட்டுப் பொறியலுடன், சாம்பார், இரசம் என விருந்து சாப்பிடுவது. இரவு வழக்கம்போல் சாப்பிடுவது. அட, ரொம்ப எளிதாக இருக்கிறதே என்று நானும் ஒத்துக் கொண்டேன்.

ஆனாலும் மதிய சாப்பாடு மட்டும் கொஞ்சம் இடித்தது. அலுவலகத்தில் நண்பர்கள் எல்லாம் ஒரு மணிக்கு சாப்பிடப் போவோம். மூன்று மணிக்கு என்றால் நான் தனியாகப் போய் சாப்பிட வேண்டும். பிரச்சினையை அய்யப்பனிடமே கொண்டு போய்விடலாம் என்று முடிவெடுத்தேன். ‘அய்யப்பா... மூன்று மணிக்குத்தான் நான் சாப்பிட வேண்டும் என்றால், அதற்கு அறிகுறியாக லஞ்ச் பாக்ஸில் ஒரு வடையை வைத்துவிடு; ஒரு மணி என்றால் வடையை வைக்க வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு, வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம்! வடை இல்லை. தனியாக நான் சாப்பிடுவதை அய்யப்பன் விரும்பவில்லை போலும். என்ன இருந்தாலும், god is great இல்லையா?!

தைப் பொங்கல் தினத்தன்று அருப்புக்கோட்டையிலிருந்து செல்லும் அய்யப்ப பக்தர்களுடன் சேர்ந்து நானும், சரவணனும் சபரிமலைக்குச் செல்வதாகத் திட்டம். நான்கு நாட்கள் பயணச் செலவுக்கு ‘சாமி’ ஒருவருக்கு ரூ.2700; ‘மாலை போடாத சாமி’ என்பதால் எனக்கு ரூ.2400 மட்டுமே.

ஜனவரி 13, 2015ம் தேதி காலையில் நான், ஹேமா, அம்மா மூவரும் கோவில்பட்டிக்குக் கிளம்பினோம். செல்லும் வழியில் கல்லணை பார்த்துவிட்டு, 4 மணிக்கு கோவில்பட்டி சென்றடைந்தோம். ‘கன்னிசாமி’யிடம் இருந்து உடனே அழைப்பு வந்தது. குளித்துவிட்டு ‘சாமி’ தரிசனத்துக்குச் சென்றேன். மார்க்கெட்டிங் துறையில் இருப்பதால், எப்போதும் மழித்த முகத்துடன் இருக்கும் சரவணன், தற்போது 60 நாட்கள் தாடியில் இருந்தான். வீட்டில் அவனது பெற்றோர், ‘சாமி மிகவும் பக்தியாக இருக்கிறார்; விரதத்தைக் கடுமையாக கடைபிடிக்கிறார்’ என்று சொன்னார்கள். எனக்கு குழப்பமாகிவிட்டது. நான் ‘சரவணன்’ என்று சொல்வதா? அல்லது ‘சரவணர்’ என்று சொல்வதா?

தனது கன்னிசாமி அனுபவங்களை சரவணன் சொன்னபோது, சபரிமலைக்குச் செல்லும் விதிமுறைகளில் பலவற்றை அய்யப்பன் தளர்த்தியிருப்பது தெரிந்தது. எனது அப்பாவுக்குத் தெரிந்த ஓர் அய்யப்ப பக்தர் கடைபிடித்த விரதமுறைகளைப் பற்றி அப்பா சொல்லக் கேட்டிருக்கிறேன். மாடியில் தனக்கு ஒரு குடிசை போட்டு, அதில்தான் குடியிருப்பார். செருப்பு அணிய மாட்டார்; வண்ணத்துணிகள் உடுத்த மாட்டார்; பெண்களை தனது மாடி அறைப் பக்கம் நடமாடக்கூட அனுமதிக்க மாட்டார்; பெண்கள் பயன்படுத்திய பாத்திரங்களைப் பயன்படுத்த மாட்டார்; தனிப் பாத்திரத்தில் அவரே சமைத்து, சாப்பிட்டுக் கொள்வார்; அவரது துணிகளை அவரேதான் துவைத்துக் கொள்வார்; தினமும் இருமுறை அறையை சுத்தம் செய்வார்; தரையில்தான் படுப்பார்; தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து, மார்கழி மாதக் குளிரில் பச்சைத் தண்ணீரில் குளித்துவிட்டு, பக்திப் பாடல்கள் பாடுவார்; சிகரெட், பீடி, சாராயம் எதுவும் எடுத்துக் கொள்ள மாட்டார்; கடும் பிரம்மச்சர்ய விரதம் இருப்பார்.

இப்போது நிறைய மாறியிருக்கிறது. IT நிறுவன சாமிகள் வண்ண உடைகளில்தான் அலுவலகம் வருகிறார்கள். சில சாமிகள் செருப்பும் அணிகிறார்கள். பெண்கள் சமைப்பதை தள்ளி வைப்பதில்லை. சில சாமிகள் கேண்டீன் சாப்பாடுகூட சாப்பிடுகிறார்கள். துவைப்பது, சுத்தம் செய்வது எல்லாம் வழக்கம்போல் பெண்கள் கையில்தான். தாம்பத்திய உறவை மட்டும் தவிர்க்க முடிந்தால், அய்யப்ப சாமியாக இருப்பது மிகவும் எளிது; பல வகையில் உபயோகமானதும்கூட. வீட்டில் கூடுதல் மரியாதை கிடைக்கிறது. அதுவரைக்கும் ஒரு மனிதனாகக்கூட மதிக்காதவர்கள் எல்லாம், ‘சாமி’ என்று அழைக்கிறார்கள். சாதாரண சாப்பாடு,  விரதச் சாப்பாடாக மாறி ஒரு விருந்து போல் தினமும் நடக்கிறது. அய்யப்பனுக்குப் பயந்து அலுவலகத்தில்கூட யாரும் ‘சாமி’யைத் திட்டுவதில்லை. நமக்கே அடுத்த வருடம் ஒரு மாலையைப் போட்டுறலாமா என்று தோன்றுகிறது.

பேசிக் கொண்டிருக்கும்போதே, ‘குரு சாமி’யின் துணைச்சாமியிடம் இருந்து அழைப்பு வந்தது. மலைக்குப் போவதற்கான முன்னேற்பாடுகளில் ஒன்றான ‘தேங்காய் உரச’ வரச் சொன்னார்கள். இது கன்னிசாமிகள் கட்டாயம் செய்ய வேண்டிய வேலை; தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று துணைச்சாமி சொன்னார். துணைச்சாமி இரவி, சரவணனின் தாய்மாமா. அவர்தான் அருப்புக்கோட்டை குழுவில் சரவணனைச் சேர்த்தது.

சபரிமலைக்கு செல்வதற்கு ஒவ்வொரு ஊரிலும் பல குழுக்கள் இருக்கின்றன. சாதிவாரியாகவும், குடும்பவாரியாகவும் குழுக்கள் இருக்கும். சாதிவாரியான குழுக்களில் பிற சாதியினர் ஒன்றிரண்டு பேர் சேர்ந்து கொள்ளலாம். குடும்பவாரியானது என்றால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அதே குடும்பத்து குருசாமியுடன் செல்வது. இதில் பெரும்பாலும் மற்றவர்களுக்கு அனுமதி இருக்காது. நாங்கள் சென்றது நாடார் உறவின்முறைக்கு உட்பட்ட குழு. அருப்புக்கோட்டையிலே மிகவும் பக்தியான, கட்டுப்பாடான குழு என்பதால், கன்னிசாமியையும் இதிலேயே இரவி மாமா சேர்த்துவிட்டார். அவர் இதே குழுவுடன் 7 முறை சபரிமலைக்குச் சென்றிருக்கிறார். 17 ஆண்டுகள் ஒருவர் சபரிமலைக்குச் சென்றுவிட்டால், அவர் குரு சாமியாக மாறலாம். அதன்பின் தனது தலைமையில் ஒரு குழுவை அவர் சபரிமலைக்கு அழைத்துச் செல்லலாம்.

தேங்காய் உரச அருப்புக்கோட்டை செல்கிறோம் என்று பெரியம்மாவிடம் (சரவணனின் அம்மா) சொன்னோம். பெரியம்மாவிற்கு நானும் சபரிமலை செல்வதில் ஒரே மகிழ்ச்சி. சின்ன வயதில் இருந்து ஊதாரித்தனமாக இருந்த பிள்ளை, வேலைக்குச் செல்கிறேன் என்று சொன்னால் வீட்டில் எந்தளவுக்கு மகிழ்ச்சியடைவார்களோ, அதேபோன்ற மகிழ்ச்சி அவர்களுக்கு. ‘சின்ன வயசுலே இருந்து சாமியே கும்பிட மாட்டேன்னு இருந்தே.. இப்போது சபரிமலைக்கு செல்ல ஆரம்பிச்சுட்டே. அடுத்த வருஷம் நீயும் மாலை போட்டுக்கிட்டு போக ஆரம்பிச்சுருவே’ என்று நம்பிக்கையாகச் சொன்னார்கள்.

‘இந்த பூமியில் இருப்பது அறுபதோ, எழுபதோ ஆண்டுகள். அதில் திடகாத்திரமாக ஊர் சுற்றும் உடலுடனும், வசதியுடனும் இருப்பது 30 ஆண்டுகள். அந்த 30 ஆண்டுகளிலும், தினம் ஒரு இடம் என்று போனால்கூட பூமியில் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் மிச்சமிருக்கும். இப்போது இருக்கிற விஞ்ஞான வளர்ச்சியில் சந்திரன், செவ்வாய் கிரகமெல்லாம் போய் பார்த்துவர பணக்கார கும்பல் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறது. அப்படி இருக்கும்போது, ஒரு முறை போன இடத்துக்கு மறுபடியும் சென்று நமது நேரத்தையும், பணத்தையும் வீணடிப்பது சரியல்ல’ என்பதைப் பெரியம்மாவிடம் எப்படி விளக்கிச் சொல்வேன்?

லேசாக புன்னகைத்துவிட்டு அருப்புக்கோட்டை கிளம்பினோம். அருப்புக்கோட்டையில் நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட சிவன் கோயில் ஒன்று இருக்கிறது. அதில்தான் எங்களது குழுவிற்கான மாலை போடுவது, தினசரி பஜனை, இருமுடி கட்டுவது எல்லாம் நடைபெற்றன. அங்குதான் தேங்காய் உரசுவதும் நடைபெற இருந்தது.

அதுசரி, தேங்காய் உரசுவது என்றால் என்ன என்று கேட்கிறீர்களா?

(தொடரும்)

- கீற்று நந்தன்