இயற்கை அற்புதமானது. பல்லாயிரம் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வோர் உயிரும் இயற்கையோடு தொடர்பானவை. ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. பல அதிசயமானவை. சில ஆச்சிரியமானவை. ஏராளமானவை அரிதாகி வருகின்றன. அவைகளில் ஒன்று ‘சிட்டு’.

‘மயிலு’ என்னும் ஆவணப்படத்தின் மு்லம் ‘மயிலு’ மீதான தன் பிரியத்தை, அக்கறையைக் காட்டிய கோவை சாதாசிவம் ‘சிட்டு’வை படம் பிடித்துத் தந்துள்ளார். ‘ஒவ்வொரு பொழுதும் பறவையின் பாடலுடன் தொடங்குகிறது’ என்னும் குரலுடனே தொடங்குகிறது ‘சிட்டு’.

மனிதர்களின் வாழ்வுநிலை மாறிவிட்டது. வாழ்க்கை மனிதர்களை வாழ்ந்து கொண்டிருக்கிறது; விழுங்கிக் கொண்டிருக்கிறது. அவசரத்தில் எழுந்து அவசரத்திலே உறங்கச் செல்கிறான் மனிதன். தலைக்கு மேலே இருக்கும் வானத்தை ஒரு விநாடி அண்ணாந்து பார்க்கவும் இயலாத ஓர் அவரச வாழ்க்கை ‘சிட்டு’வின் வாயிலாக இயற்கையை ரசிக்கக் கூறுகிறார்.

சிட்டுகளில் பல வகை உண்டு. வீட்டுக் குருவி, அடைக்கலக் குருவி, ஊர்க்குருவி, காட்டுக் குருவி என குறிப்பிடுகிறார் . பேசர் டெமஸ் புக்கர் என்பது சிட்டுக்குருவியின் அறிவியல் பெயர் என்கிறார். இதன் பிறப்பிடம் ஐரோப்பா, ஆசியா என்னும் தகவல்களும் உண்டு.

கோவை சதாசிவம் வசிப்பிடம் திருப்பூர். ஆனால் கோவை மாநகரில் 72 வார்டுகளில் 18 வார்டுகளில் மட்டுமே சிட்டுகள் உள்ளன என்கிறார். பெருமளவில் குறைந்து வருவதற்குக் காரணம் மின்கதிர் வீச்சும் கைபேசியின் அதிர்வுகளுமே என குற்றம் சாட்டுகிறார். இயற்கைச் சூழலிருந்து மனிதன் விடுபட்டு செயற்கைக்குத் தன்னை தயார்படுத்திக் கொள்வதே சிட்டுப் போன்ற பறவையினங்கள் விட்டு விலகி விடுகின்றன என்றும் எடுத்துக் காட்டுகிறார்.

சிட்டுகளுடனான சிறுவயது அனுபவங்களை நினைவு கூர்ந்துள்ளார். முறத்தை வைத்து தானியத்தை உணவாக்கி சிட்டுவைப் பிடிக்கும் கலையைக் காட்டியுள்ளார். பாட்டி தானியம் குத்தும் போது சிதறும் தானியத்துக்காக சிட்டுகள் வருவதையும் கூறியுள்ளார். தற்போது உரலும் இல்லை உலக்கையும் இல்லை என வருந்தியுள்ளார். தானியம் புடைத்தலை தால லயத்துடன் புடைப்பதாக நயத்துடன் கூறியுள்ளார்.

சிட்டுக் குருவியின் உடை 30 கிராம், ஆயுள் 13 வருடங்கள் என்பவைத் தகவல்களாக இடம் பெற்றுள்ளன. சிட்டுகளுக்கு எதிரிகள் பூனை, அணில் என்கிறார். ஆனால் இன்று மனிதர்களே முதன்மையாக உள்ளனர். ஓர் இலேகியத்தின் பெயர் சிட்டுக்குருவி என்றும் இதனால் ஆண்மைப் பெருகும் என சிட்டுக் குருவியை வேட்டையாடுவர்களைக் கண்டிக்கவும் தவறவில்லை. ஆனால் சிட்டுவை வேட்டையாடுதல் தண்டனைக்குரியது என எச்சரித்துமுள்ளது. சிட்டுக் குருவி கூடு கட்டும் அழகையும் விவரிக்கிறார். இன்று இருபது மி. மீ. க்கும் குறைவான மைக்ரான் கொண்ட ஞெகிழிகளைக் கொண்டு கூடு கட்டும் அவலத்தையும் குறிப்பிட்டுள்ளார். ஞெகிழி சிட்டுவையும் விட்டுவைக்கவில்லை என்பது கவலையளிக்கவே செய்கிறது. பயிர்களுக்கு இடப்படும் செயற்கை உரங்களும் சிட்டுவை அழித்து வருகின்றன என்றும் குறிப்பிடுகிறார்.

‘குருவிற்கு பேசத் தெரியும்,பொய் சொல்லத் தெரியாது’ என்னும் பாரதியின் கூற்றை மேற்கோளாக்கி மனிதர்களைச் சாடியுள்ளார். மேலும் சிட்டுகளில் ஆண், பெண் இருந்தாலும் பெண்ணடிமைத் தனம் இல்லையென ஆண்களை விசாரணைக்குட்படுத்துகிறார். சிட்டுகள் மனிதர் போலன்றி சுதந்திரமானவை என்கிறார்.

சிட்டுகள் அழிந்து வருவதை, அழிக்கப்பட்டு வருவதை கோவை சதாசிவம் அவர்களால் ஏற்க முடியவில்லை. அதன் விளைவே இச் ‘சிட்டு’. சிட்டுகளை அழகாக, அருமையாக கண்முன் கொண்டு வந்து காட்டியுள்ள விதம் பாராட்டுக்குரியது. சிட்டுகள் சிறகடிக்கும் போது இதயம் சிறகடிப்பதை உணர முடிகிறது. காட்சிக்கு ஏற்ப பின்னணியில் ஒலிக்கும் கோவை சதாசிவத்தின் குரலில் சிட்டுகளின் மீதான பிரியமும் அக்கறையும் ஒரு கவிதையாக ஒரு சேர வெளிப்பட்டுள்ளது. இருப்பதைக் காக்கவும் இனத்தைப் பெருக்கவும் ‘குரல்’ கொடுத்துள்ளார். இவரின் இம்முயற்சி சிட்டுகளுடன் சினேகம் கொள்ளச் செய்கிறது. ‘சிட்டுகளைத் தொலைத்த மனிதர்களின் கதை’ என மனிதர்களை அறிவுரைத்துள்ளார். ‘சிட்டு’வைப் போல் மென்மையாக உள்ளது. ஒலி, ஒளியும் நன்று. ‘சிட்டு’ க்களைப் பிடிப்பதும் கடினம். படம் பிடிப்பதும் மிக சிரமம். கோவை சதாசிவம் திறம்பட ‘படம்’ பிடித்துத் தந்துள்ளார். அவரின் ‘உணர்வும் உயிரும்’ ‘சிட்டு’வாகி உள்ளது. ‘மயிலு’வைத் தொடர்ந்து வந்துள்ளது ‘சிட்டு’. அடுத்து என்ன, எது என ஆலுடன் எதிர்பார்க்கச் செய்கிறது.

 சிட்டு, வெளியீடு: சக்கரம் திரைமொழி ஊடகம் 4-610 குறிஞ்சி நகர் வீரபாண்டி(அ) திருப்பூர்-641 605.

- பொன்.குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)