1

மணிரத்னத்தின் கதைக்களம் எப்போதுமே பற்றி எரியும் நாளிதழில் வெளிவரும் பரபரப்பான செய்திகள் அல்லது இதிகாசங்கள்தான். இவற்றை தேர்ந்தெடுப்பதற்கு ஏதாவது காரணங்கள் உண்டா? இந்த இரு கதைக்களங்கள்தான் பணம் கொட்டுவதற்கான வழிமுறைகளாக உள்ளன. இதை விட்டு விட்டு அவர் வேறு எதையும் தேர்தெடுப்பது அபூர்வம். திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு புராணங்களும் இதிகாசங்களும் எப்போதுமே அமுத சுரபிகளாக உள்ளவை. என்னதான் புராணங்களையும் இதிகாசங்களையும் தழுவி திரைப்படங்களை எடுத்தாலும் அவை சந்தை என்ற அளவில் இந்து மக்கள் மட்டுமே பார்த்து தொலையக் கூடிய படங்களாக உள்ளன. எனவே அவற்றை விட்டு விடுவோம்.

raavanan_340பற்றி எரியும் சமூகப்பிரச்சினைகளை திரைப்படமாக எடுத்தால் அவை அனைத்து தரப்பினராலும் பார்க்கப்படும். போதாக்குறைக்கு முற்போக்கு முகமும் கிடைக்கும். இதே பாணியில் மதக் கலவரங்கள் மற்றும் காஷ்மீர் பிரச்சினையை மையமாகக் கொண்டு தமிழக சந்தையிலிருந்து அகில இந்திய சந்தை வரை விரிவுபடுத்த திட்டமிட்டு முதன்முதலில் எடுத்த படம் தான் ரோஜா. அதனைத் தொடர்ந்தது பம்பாய். ஆனால் இப்போது யாரும் இந்திய சந்தையோடு நின்று விடுவதில்லை. அகில உலக சந்தையை குறி வைத்துதான் படங்கள் எடுக்கப்படுகின்றன.  அதனால்தான் சந்தைக்காகவும் பணத்தை அள்ளுவதற்காகவும் படத்திற்கு கதையை தேர்வு செய்வதில் மணிரத்னத்திற்கு கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

காஷ்மீர் பிரச்சினை குறித்து நாளிதழில் வந்த செய்தி கத்தரிப்புகளின் ஆழமான பொது அறிவுடன்தான் ரோஜா எடுக்கப்பட்டது. பம்பாயும் அப்படித்தான் எடுக்கப்பட்டது, கூடுதலாக அவருக்கு படம் ஓட கை கொடுத்தது மனிஷா கொய்ராலாவின் கவர்ச்சியும் வட இந்திய இந்துக்களின் மத உணர்வும்தான். பல ஆயிரம் பேர் கொத்து கொத்தாக செத்து மடியும் பிரச்சினைகள்தான் மணிரத்னத்திற்கு இந்திய அளவில் கோடி கோடியாக பணம் சம்பாதிப்பதற்கான வழிமுறைகள். இதில் வெளிப்படும் அனுதாபத்தில் ஆதாயம் தேடுவதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

 2

.இந்தியாவின் தரம் மிக்க இயக்குனரை இப்படி பேசலாமா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் வடகிழக்கில் அன்றாடம் கொல்லப்படும் மக்களிடையே நீங்கள் இருக்க நேர்ந்தால், அங்குள்ள பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாவதற்கு சாட்சியாக நீங்கள் இருந்தால், உங்கள் குடும்பமே இராணுவத்தினால் சுட்டு கொல்லப்படும் சூழ்நிலை இருந்தால் நீங்கள் எப்படி மனிஷா கொய்ராலாவுடன் டூயட் பாடுவதை ரசிக்க முடியும்? கன்னத்தில் முத்தமிட்டால் இரக்கமே இல்லாத போராளிகளாக ஈழப்போராளிகளை சித்தரிக்கவில்லை. அவர்களின் இரக்கமின்மையால் குழந்தை அனாதையாவதை வைத்தே கதை பின்னப்பட்டிருக்கும். எதை வைத்து அனுதாபத்தை உருவாக்குகிறார்? அந்த அனுதாபத்தில் எப்படி குளிர்காய்கிறார் என்பதுதான் இங்குள்ள முக்கிய பிரச்சினையே.

அஞ்சலியில் கேவலமான முறையில் மனவளர்ச்சி குன்றிய குழந்தையை வைத்து ஆதாயம் தேடினார். இது எப்படி ஆதாயமாகும் என்ற கேள்வி எழுப்பவர்கள் அந்தப் படத்தை மனதில் ஒரு முறை ஓட விட்டு பாருங்கள். கதையின் களம் உயர் தர நடுத்தர வர்க்கம். மிக அழகான குழந்தை. அனைவரின் கவனத்தையும் பரிதாபத்தையும் ஈர்க்கும் ஒரு குழந்தை மரணிப்பதை யார்தான் பொறுத்துக்கொள்வார்? திரையரங்குகளில் அனுதாபத்தால் கூட்டம் குவிந்தது. மணிரத்னத்திற்கும் காசு குவிந்தது. ரோஜாவின் இந்திய தரப்பு (அ)நியாயத்தையே ஒரு அழகிய கதாநாயகியின் மூலம் எடுத்து வைத்தார். பம்பாயில் யார் குற்றவாளி என்பதையே பூடகமாகக் கூட தெரிவிக்காமல் மூடி மறைத்து குற்றவாளியையும் (இந்து மதவெறி அமைப்பினரையும்) தாக்குதலுக்குள்ளான சிறுபான்மையினரையும் சமப்படுத்தினார்.

அவருடைய பெண்கள் குறித்த பாலியல் பார்வையோ ஆண்களின் மீது பரிதாபத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். இரண்டு பொண்டாட்டிக்காரர்களின் மன அழுத்தத்தை அவர்களின் மீது பரிதாபம் வரும்படி அக்னி நட்சத்திரத்தில் சித்தரித்தார். திராவிட இயக்கக்களின் வரலாற்றையே மோசடியாக இருவரில் காட்டினார். இதனைத் தொடர்ந்து தளபதியும் இப்போதைய ராவணனும் இதிகாசங்களின் உல்டாக்கள். அதுவும் மணிரத்னம் பிராண்டு முற்போக்கு உல்ட்டாக்களாக வந்துள்ளன. அவரின் அறிவு ஆழத்தின் ஒரு பக்கத்தைப் பார்த்தோம். கிராமங்கள் குறித்த இன்னொரு பார்வையையம் பார்ப்போம். அமெரிக்கா ரிட்டர்ன் மயிலாப்பூர் மாமியையும் அம்பியையும் திருநெல்வேலிக்காரர் மாதிரி பேச வைத்தால் என்ன நடக்கும்? ஏதாவது ஒட்டோ உறவோ இருக்குமா? செயற்கையான பாவனைகள்தான் மிஞ்சி நிற்கும். செயற்கைகளின் மொத்த உருவமாகத்தான் ஏற்கனவே ரோஜா இருந்தது, இப்போது ராவணன் உள்ளது.

3.

இதிகாசமான ராமாயணத்தை எடுக்கிறேன் என்று எடுத்துத் தொலைந்தாலும் பரவாயில்லை, அதில் ராவணன் பாத்திரத்திற்கு மனதில் இரக்கம் உள்ளதாகவும் இராமனுக்கு இரக்கமே இல்லாதவனாகவும் பாத்திரப்படைப்பு வேறு. சூர்ப்பனகையாக பிரியாமணியை பாலியல் வன்முறைக்குள்ளாகி உள்ளார். இதைத் தவிர அனுமனாக கார்த்திக்கையும் நிராயுதபாணியில் ராவணன் சாவதாகவும் பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன, இல்லை சிதைக்கபட்டுள்ளன.

திருநெல்வேலி மக்கள் அவ்வளவு கருப்பாகவும் அவர்கள் ஏதோ காட்டில் வசிக்கும் பழங்குடி மக்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். இது மிக வன்மையாக கண்டிக்கத்தக்க வேண்டிய வக்கிரமாக வெளிப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இப்படிப்பட்ட இடம் எங்கே உள்ளது? ரிலையன்ஸ் அம்பானியின் பணத்தில் நாயகன் விக்ரமும் பிரபுவும் மேட்டுக்குடித் திமிர் பற்றி அடிக்கடி வசனம் பேசுகிறார்கள். இதில் சுகாசினி மாமியின் வசனம் வேறு.

raavanan_500

மணிரத்னத்தின் படங்களில் எல்லாமே செயற்கையாக இருக்கும் என்பதற்கு இந்த படத்தில் பல இடங்களைக் கூறலாம். கதாபாத்திரங்கள் காட்சிகளில் அறிமுகவாவதும்,  பாடல்களும் திடீரென்று குதிப்பதாக உள்ளன. வீரய்யாவும் அவர்களது கூட்டாளிகளும் எங்கிருந்து வருகிறார்கள், என்ன செய்கிறார்கள்? திருநெல்வேலி தமிழ் பேசுபவர்கள் காட்டுக்குள் வாழ்கிறார்கள். அங்கு திடீரென்று பங்களாக்கள் முளைக்கின்றன. வீரய்யா அதாவது ராவணனின் தங்கை சூர்ப்பனகை பாலியல் வன்முறைக்குள்ளாவதால் அதற்குக் காரணமான போலீஸ் அதிகாரி பிருத்விராஜ் அதாவது ராமரின் மனைவி ஐஸ்வர்யாராயை கடத்தி பழி வாங்குகிறார். இந்தக் கடத்தல் படம் முழுவதும் ஓடுகிறது.

கடத்தல் காட்சிகளில் இருந்த விறுவிறுப்பு பின்னர் படிப்படியாகக் குறைந்து இடைவேளைக்கு முன்னரே படம்பார்ப்பவர்களுக்கு சோதனையாகி விடுகிறது. பின்னர் மனம் திருந்தி மனிதாபிமானத்துடன் வீரய்யா போலீஸ் அதிகாரியின் மனைவியை அவரிடம் விட்டு விடுகிறான். அவன் மனைவியை சந்தேகப்பட மனைவி திரும்பி வீரய்யாவிடம் திரும்பி வந்து சேருகிறாள். அப்போது பின்தொடர்ந்து வரும் போலீஸ் அதிகாரி வீரய்யாவை சுட்டுக் கொல்கிறான். அவனிடம் காதலா அல்லது பச்சாதாபமா என்ற இனம் காண முடியாத குரலில் வீரய்யா என்று கத்துவதோடு படம் முடிகிறது. இந்தக் கதையை எடுப்பதற்கு பல இடங்களில் சுற்றி அலைந்துள்ளனர். பல நட்சத்திரங்கள் என பெரும் படையே உள்ளது. மணிரத்னம் என்ற மாபெரும் இயக்குனர் இதற்காக இவ்வளவு ஏன் மெனக்கெட்டார் என்பது கடைசி வரை புரியவில்லை.

 4

கதைக்காக குப்பையைக் கிளறியுள்ளார். அதற்காக மட்டும் மக்கள் இந்தப் படத்தை நிராகரிக்கவில்லை. படம் முழுவதும் உள்ள சுகாசினி மாமியின் மேட்டுக் குடிமைத்தனம் பாணியிலான வசனங்கள். ஆனால் திருநெல்வேலி வழக்கில் பேசுகிறார்கள். சில இடங்களில் முணுமுணுக்கிறார்கள். இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக செயற்கையை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். ஒரு பாடலில் மாவை அப்பிக்கொண்டு ஆடுகிறார்கள். அதில் இடையிடையே மீன்களை எடுத்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடுகிறார்கள். எதற்காக என்று தெரியவில்லை.

சாதாரணமான வணிகப்படத்தில் இருக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லை. அப்படங்களில் இருக்கும் நேர்த்தியும் கூட இதில் இல்லை. இப்படம் மக்களால் இயல்பாகவே நிராகரிக்கப்பட்டிருக்கிறது. திருநெல்வேலி மக்களின் மொழியில் கூற வேண்டுமானால் 'என்னலே கோட்டித்தனமாக எடுத்திருக்கே!'

கடைசியாக ஒரு விடயத்தை கூறியே ஆக வேண்டும். இதுவரை மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படங்களில் அவர் மிக உயர்தர மேட்டுகுடியாக வாழ்ந்தாலும் ஆளும் வர்க்கங்களின் பார்வையிலேதான் எல்லா திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. அவரது திரைப்படங்களிலுள்ள பாத்திரப்படைப்புகள் எப்போதும் அவரது கதையைப் போலவே ஒட்டாமல் படு செயற்கையாக அமைந்திருக்கும். இனிமேலும் பிரச்சினைகளுடன் அய்க்கியப்படவோ அவரால் மக்களையோ அவர்களின் வாழ்க்கையின் நுணுக்கங்களையோ பார்க்க முடியாது. ஒரு கலைஞனைப் போல முன்னரும் சரி இப்போதும் சரி பார்க்க முடியாது. இதுபோன்ற கலைச்சேவையை விட்டுவிட்டு மாம்பலத்தில் ஏதாவது ஓட்டல் துவங்கி நடத்தினால் தமிழக மக்கள் தப்பிக்க வாய்ப்புண்டு.

- சேது ராமலிங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)