மன்மதன் படத்திற்குப் பிறகு சிம்புவின் மீது ஒரு விஷேச கவனம் விழுந்திருக்கிறது. அதை உணர்ந்தவராக தொட்டி ஜெயா படத்தை சிம்பு தேர்ந்தெடுத்திருக்கிறார். அதற்கு முதலில் ஒரு சபாஷ்.

தமிழில் தாதா வாழ்க்கையை இயல்பாகக் கையாண்ட படங்களில் முதல் படமாக தாராளமாக இதைக் குறிப்பிடலாம். ஒரு தாதாவிடம் அடியாள் வேலை பார்க்கும் ஒருவன், தாதாவின் மகளை யார் என்று தெரியாமல் காதலிப்பதும் அதனால் தாதாவுக்கும் அவனுக்கும் இடையே ஏற்படும் மோதலும்தான் படத்தின் கதை.

அடியாள் வேடத்தில் சிம்புவும் தாதாவின் மகளாக கோபிகாவும் நடித்திருக்கிறார்கள். சிம்பு அடியாளாக மாறுவது, சிம்புவின் மீது கோபிகாவுக்கு காதல் வருவது, தன்னை 15 வருடமாக வளர்த்த தாதாவை சிம்பு எதிர்த்து நிற்பது முதலியவற்றை பலமான காரணங்களுடன் இயல்பாகப் படமெடுத்து இருக்கிறார் இயக்குநர் துரை.

இந்த இயல்பு நிலை படம் முழுவதும் தொய்வில்லாமல் தொடர்கிறது. படத்தின் பலமே இதுதான்.

படத்தின் முதல் பாதி படுவேகமாக நகர்கிறது. கொல்கத்தா மற்றும் கன்னியாகுமரி ரயில் பயணக் காட்சிகளில் நாமும் அங்கு ஒரு பார்வையாளனாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது, ஆர்.டி. ராஜசேகரின் கேமரா.

பாடல்கள், சண்டையைத் தவிர்த்து விட்டால் படத்தில் எந்த சினிமாத்தனமும் இல்லை. சிம்பு, கோபிகா இருவரும் பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அழகாக அடக்கி வாசித்திருக்கிறார்கள். படத்தின் பல காட்சிகள் டாக்குமென்ட்ரி படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் ஹாரீஸ் ஜெயராஜின் பின்னணி இசை அந்தக் குறையை அபாரமாகத் தவிர்த்திருக்கிறது.

மென்மையான காதல் இழையோடும் காட்சிகளிலும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளிலும் பின்னணி இசை கதைக்கு பெரும் பலமாக நிற்கிறது. அதிலும் குறிப்பாக கொல்கொத்தா ரயில் நிலையத்தில் தவற விட்ட பர்ஸைத் தேடி கோபிகா ஓடும் காட்சியில் ஹாரீஸ் ஜெயராஜ் அசத்தியிருக்கிறார்.

இரண்டாம் பாதியில் வில்லன்கள் சிம்பு-கோபிகா ஜோடியைத் துரத்தும்போது பின்னணி இசையின் ‘பேஸ்’-ஐ கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படத்தின் வேகத்திற்கு பாடல்கள் தடையாகத் தான் அமைந்து உள்ளன. ஒன்றிரண்டு பாடல்களோடு இயக்குநர் நிறுத்தியிருக்கலாம். அதே போல் வில்லன் கோஷ்டியின் காட்டுக் கத்தலையும் கட்டுப்படுத்தி அடக்கி வாசிக்கச் சொல்லியிருக்கலாம்.

மொத்தத்தில் ராம்கோபால் வர்மாவின் இந்திப் படங்களைப் போல தமிழில் படம் எதுவும் வருவதில்லை என்று வருத்தப்படுபவர்களுக்கு தொட்டி ஜெயா நிச்சயம் ஒரு விருந்துதான்.