சேரித்தமிழர்கள் ஜாதிப் படுகொலைக்கு ஆளாகும்போது, அமைதி காக்கும் தமிழர்களின் ஜாதி உணர்வு, ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாகும்போது மட்டும் தமிழ் உணர்வாகப் பீறிட்டுக் கிளம்பும் முரண்பாட்டை நாம் தொடர்ந்து சந்தித்தே வருகிறோம். ஈழத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்கும் போது மட்டுமே கசிந்துருகுபவர்கள், கடந்த 20 ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் ஈழத்தமிழர்கள் கேட்பாரற்றுக் கிடப்பதை கண்டுகொள்ளாதது ஏன்? கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் போது, அதற்கு இரட்டை அளவுகோல்கள் இருக்க முடியாது. நம் அருகில் நடைபெறும் கொடுமை கண்டு அநீதி காப்பதும், அருகாமையில் நடைபெறும் கொடுமை கண்டு அலறுவதும், செயற்கையான உணர்வின்பாற் பட்டதாகவே கொள்ளப்படும்.

இந்தியா முழுவதும் கிராமப்புறங்களில் மட்டுமே, ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்கின்றனர் என்று "கிராமத் தொழில்களுக்கான தேசிய ஆணையம்' கூறுகிறது. இவர்களில் 45 லட்சம் மக்கள், வெளிமாநிலங்களுக்கு இடம் பெயர்கின்றனர். நாள்தோறும் "தீ விபத்துகள்' என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களின் குடிசைகள் எரிக்கப்படுகின்றன; நடைபாதையில் குடியிருப்போர் "ஆக்கிரமிப்பாளர்கள்' என அடித்து விரட்டப்படுகின்றனர்; உலகமயமாக்கல் போன்ற நவீன பாகுபாட்டால், மாநில எல்லைகள் கடந்து மொழி தெரியாமல் திக்கற்று, நடைபாதைகளையே உறைவிடமாகக் கொண்டு இந்திய நாட்டின் அகதிகளாக இம்மண்ணிலேயே உழலும் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து அக்கறை கொள்ள யாரும் இலர்.

ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் பலரும், இப்பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். ஆனால், இது நடைமுறைச் சாத்தியமற்றதாகவும், ஈழத் தமிழர்களுக்கு எதிரானதாகவுமே இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட விழைகிறோம். இதற்கு முன்பும் இத்தகைய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட "இந்திய - இலங்கை ஒப்பந்த'த்தின் மூலம் நடந்தது என்ன? அமைதிப்படை என்ற பெயரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர், ஈழத் தமிழர்களின் மண்ணையும், மக்களையும் கபளீகரம் செய்தனர். அதனால் ஏற்பட்ட கடும் பாதிப்புகளை அம்மக்கள் இன்றளவும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய ராணுவத்தின் அத்துமீறல்களை, "அம்னஸ்டி இன்டர்நேஷனல்' மறுக்க முடியாத ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளது.

அண்டை நாடான நேபாளத்தில் உள்ள மக்களை இந்துக்களாகப் பார்க்கும் இந்திய ஆளும் வர்க்கம், இலங்கையில் உள்ள மக்களைத் தமிழர்களாகத் தான் பார்க்கிறது. தமிழர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொண்டாலும், இந்திய பார்ப்பன ஆளும் வர்க்கம், அங்குள்ள பவுத்த சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது என்பதை ஈழ ஆதரவாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அண்ணல் அம்பேத்கர் வலியுறுத்திய பவுத்தத்தை, இப்பிரச்சினையுடன் தொடர்புபடுத்தி, இங்குள்ள தலித் மக்கள் தங்களைக் குழப்பிக் கொள்ள வேண்டிய தேவையில்லை. இலங்கையில் உள்ள புத்த மதம், புத்தரை கடவுளாக்கி, இன - மத வெறியுடன் செயல்படுகிறது. ஆனால், அம்பேத்கர் சொன்ன பவுத்த நெறி உலக சகோதரத்துவத்தை அடிநாதமாகக் கொண்டது. அது, புத்தர் கடவுளாக்கப்படுவதையும், பவுத்தம் மதமாக்கப்படுவதையும் முற்றாக எதிர்க்கிறது.

நடுவண் அரசில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது ஈழத் தமிழர்களின் இன்னல்களைத் தீர்த்து வைப்பதற்கு மாறாக, இனவாத சிங்கள அரசுடன் இணைந்து, ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை, பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளுவதிலேயே முனைப்புடன் செயல்படுகிறது. ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரங்களுக்கான எதிர்வினையே ராஜிவ் காந்தியின் மரணம் என்பது அனைவரும் அறிந்ததே. அண்மையில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட "என்.டி.டி.வி.' பேட்டியில், ஆண்டன் பாலசிங்கம், "ராஜிவ் படுகொலை குறித்து வருத்தம் தெரிவித்து, இந்தியா பெருந்தன்மையோடு செயல்பட வேண்டும்' என்று கூறியிருக்கிறார். விடுதலைப் புலிகள் இக்கொலையை செய்ததாக அவர் ஒப்புக் கொள்ளவில்லையெனினும், இப்பேட்டி வெளிவந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, இந்திய அரசு, மன்னிப்பு அளிக்க முடியாது என்று "பெருந்தன்மையாக' மறுத்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பை அளித்த இந்திய அரசை எதிர்த்து, தமிழர்கள் ஒட்டுமொத்தமாக அவர் தமிழ் நாட்டிற்கு வருவதைத் தடுத்தனர். இருப்பினும், தமிழ் உணர்வை அவமதிக்கும் வகையில் இந்தியா, ராணுவ உதவிகளை சிங்கள அரசுக்குத் தொடர்ந்து அளிப்பதை, எப்படிப் புரிந்து கொள்வது? எந்தவொரு சுயநிர்ணய விடுதலைப் போராட்டம் யாருடைய அங்கீகாரத்திற்காகவும் காத்திருப்பதில்லை. மக்களுடைய கடும் போராட்டம், தியாகமே விடுதலையை வென்றெடுக்கும். இந்நிலையில், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய ராணுவமும் - அரசும், அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்று மன்னிப்புக் கோர வேண்டும் என்று தமிழர்கள் கோரிக்கை எழுப்பி, இந்திய அரசு ஈழப் பிரச்சினையில் தலையிட வேண்டாம் என்று வலியுறுத்துவதே நியாயமானது.
Pin It