"பிரேமம் பிரேம்மாதி பிரேம பிரியம்
பிரேம வஷ்ய பிரேமம்
பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம் பிரேமம்
பிரியம் பிரியமாதி ப்ரீதித் பிரேமம்
ப்ரீத்தி வஷ்ய ப்ரீதம்
ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம் ப்ரீதம்
குமம் குங்கும் குங்குமம் தந்தோம்
தந்துனா நம ஜீவனம் நம ஜீவனம்
நம ஜீவனம்
மகம் கலயம் மாங்கல்யம் தந்தோம்
மங்களா மம ஜீவிதம்
மம ஜீவிதம் மம ஜீவிதம்"

என்ன இது வித்தியாசமான சத்தமா இருக்கே என்று தான் இந்தப் பாடல் அறிமுகமான சமயத்தில் தோன்றியது. ஆனாலும் இந்த வார்த்தைக் கோர்வைகள் தலைக்குள் இனம் புரியாத கலவரத்தை சுழல விட்டதை நினைத்துக் கொள்கிறேன். இப்போதும் கூட பாடலின் ஆரம்பம் இப்படி ஆரம்பிக்கையில்.. ஒரு போர்க்களத்துக்கு போவதற்கான ஆயத்தம் இதயத்தில் நிகழும். கவன சிதறல் இல்லாத ஒழுங்கமைவு ஒவ்வொரு வரி கொப்பளிக்கையிலும் உள்ளே உருவாகும். புன்னகை பூத்த மறுநொடி அழுதிடத் தோன்றும், ஆபத்தும் உடன் வரும்.

ஒரு கன்னியாஸ்திரியின் காதலை சமூகக் கோடுகள் கடற்கரையில் விரட்டுகின்றன. அவள் ஓடுகிறாள். அது ஒரு குறியீடு. காதலின் பால் சமூகம் கொண்ட வெளிப்பாடு. கூடவே ராஜாவின் குரல்... நம்மையும் இழுத்தபடி. மூச்சடக்கி, முத்தெடுக்கத் தயாராகிறோம் நாம். மூச்சடைத்து செத்து விடவும் தான், அந்த தயார்.

gangai amaranஒரு ராஜாவையே தாங்க முடியாது. இதில் பல ராஜாக்கள் ஒரே நேரத்தில் ஒரே குரலில் 'ப்ரேமம் ப்ரேமாதி' என்று ஆரம்பிக்கையில்... சரி மனுஷன் கொல்லப் போகிறான். சாவதற்குத் தயாராகி விட வேண்டும்.. என்று தான் ஒவ்வொரு முறை கேட்கையிலும் தோன்றும். என்ன சொல்லி இயக்குனர் G.M குமார் இந்தப் பாடலை வாங்கினார் என்று தெரியவில்லை. வாழ்நாள் வரத்தையும், வாழ்நாள் சாபத்தையும் ஒரே நேரத்தில் வாங்கி நம்மிடையே பொதுவில் வைத்து விட்டார். ஒரு நேரம் வாழ்ந்து, மறு நேரம் செத்து....பாடலின் வழியே இருத்தலை அறிந்து அதே நேரம் இருப்பை மறந்து...

"தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே"

ஒரு கன்னியாஸ்திரியின் காதலை எத்தனை நுட்பமாக ஆரம்பிக்கிறார் எழுதிய கங்கை அமரன். அதன் அடியே இருக்கும் ஆழ்நிலை சோகத்தை அந்த வார்த்தைகள் தான் எத்தனை நடுக்கத்தோடு வெளிப்படுத்துகின்றன. கங்கை அமரனின் பொங்கும் வரிகள் அமரத்துவம்.

"இன்று என் ஜீவன் தேயுதே
என் மனம் ஏனோ சாயுதே"

"இங்கு என் ஜீவன் தேயுதே" என குரல் மேலே போகையில் பிடித்த கைகள் கழுத்தை நெறிப்பது போல.

" என் மனம் ஏனோ சாயுதே" என குரல் கீழே இறங்குகையில்... ஓர் ஒப்புக்கொடுத்தல் நிகழ்ந்து விடுகிறது.

கோயில் மணி ஓசை தேவனின் கோயில் எப்படி இருக்கும் என்று எப்போது நினைத்தாலும் மனக்கண் முன் வரும் காட்சி இந்த பாடலில் வரும்; கோயிலும் மணியோசையும் தான். ஒரு வாழ்நாள் சுமையை இந்தப் பாடல் கொண்டிருக்கிறது என்று தான் ஒவ்வொரு முறை கேட்கையிலும் உணர்கிறேன். காதல் என்றாலே ஒரு மெல்லிய கோட்டில் கிளைவிடத் தவிக்கும் ஈருயிர்களின் கிளைகள் என்றால் தகும்தானே.

"நானொரு சோக சுமைதாங்கி
துன்பம் தாங்கும் இடிதாங்கி
நானொரு சோக சுமைதாங்கி
துன்பம் தாங்கும் இடிதாங்கி
பிறந்தே வாழும் நதிக்கரை போல
தனித்தே வாழும் நாயகி
இணைவது எல்லாம் பிரிவதற்காக"

கடவுளுக்கும் காதலுக்கும் இடையே மாட்டிக் கொள்ளும் கன்னியாஸ்திரி இதயம் வரி வாரியாக நெருப்பில் தோய்ந்து பறக்கிறது.

"பிறந்தே வாழும் நதிக்கரை போல தனித்தே வாழும் நாயகி.." அந்த பாத்திரத்தை ஒரு வரி பிரளயம் போட்டு உடைப்பதை மனம் அதிர உணர்கிறோம்.

"இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக.... மறந்தால்தானே நிம்ம்ம்மதி..."

வரி முடிகையில் எல்லாம் விசும்பல் வந்து சேர்வது எனக்கு மட்டும் தானா? விசும்பலின் உள்ளார்ந்த தவிப்பை தான் பாட்டாக்கி இருக்கிறாரா ராஜா? உடைந்து நொறுங்கிடத் தோன்றும் ஒவ்வொரு முறையும் மனதோரம் இந்தப் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பது... வேறென்ன காதல் தான். காதலைப் போல காலத்துக்குமான தொங்கும் பாலம் ஒன்றுமில்லை.

சித்ராவின் குரல் வழியே ஒரு சோக யாகம் தொடர்ந்து நம்மை தாக்கிக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் அதன் வலியில்... ஒரு நிம்மதி.. ஒரு சன்னதி.

மெழுகுவர்த்திகள் குறியீடுகளாகின்றன. அவளோ மெழுகுவர்த்தி ஆகிறாள். இந்தப் படத்தில் முக்காடிட்ட க்ரே சிலையாக வாழ்ந்திருப்பது...பல்லவி எனும் அழகி. சினிமாவில் முதல் தரிசனம். சிலை அல்ல, கலை என்று நாம் ரசிக்கிறோம்.

"ஏஏ
தந்தன தந்தன தந்தனா..ஆஆஅ..
தந்தான தந்தான தானன்னா நனா
தந்தானா தந்தனா ஹே.."

கன்னியாஸ்திரி பயிற்சி நடக்கிறது. திடுமென உள்ளே புகுந்து.... இல்லை காதலை விட கடவுள் பெரிதல்ல... என்று தன் மொழியில் உச்சஸ்தாயிற்குப் போகிறார் ராஜா. தெம்மாங்கு தேன் சிந்தும் நேரம் இது. உள்ளத்தின் ஆழத்தில் இருந்து உயிரோடு காதல் குழந்தை கத்திக் கொண்டே எட்டிப் பார்க்கிறது. தெளிய வைத்து, தெளிய வைத்து, அடித்து வீழ்த்துவதில் ராஜா ஒரு கால சவுக்கு. மண்டைக்குள் வயது வந்த ரயில் ஓடும் சத்தம். இதயத்தில் கிடார் கொண்டு அறுத்து வீசும் யுத்தம்.

"ஒரு வழிப்பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்
ஒருவழிப்பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்"

கடவுளைத் தேடுவது ஒரு வழிப் பயணம் தானே. கடவுளாய் இருக்கும் காதலில் தான் திரும்பும் பக்கமெல்லாம் வழிகள். எதை மறந்து, எதை நினைக்க இந்த வேஷம். சுய கேள்விகளின் வழியே தன் மீது தானே கொள்ளும் சுயகழிவிரக்கம்... பாதையற்ற பாதையில் தனித்திருக்கும் மைல் கல் போல. மையம் கலையாமல் மாயம் செய்யும் யுக்தியில் அத்தனை துள்ளலிலும் பாடலின் துயரம் துளி விலகவில்லை. மாறாக துக்கத்தை விளக்கும் துலாபாரம் காதலின் வழியே பாடலாகி இருக்கிறது.

"கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா"

இந்தக் கேள்வி யாரிடம்? ரகசியமான உரிமை மறு வரியில் தன்னையே மலர்த்திக் கேட்கிறது. முதல் வரியில்... காதலில் சரணடைதல்... கருணையிடம் கடவுளிடுதல்.

"ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்
நானோர் கண்ணீர் காதலி"

"நானோர் கண்ணீர் காதலி" இந்த வரி போதாதா... மொத்த பத்தியை பற்றிக் கொண்டு எரிய. ஆறுதலுக்கு அலையும் நெஞ்சத்தின் நிறம் காதலின் நீர்க்குமிழ் என்கிறேன். புரிந்தோருக்கு தானே காதல் பூவிதழ் விரிக்கும்.

"தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே
என் மனம் ஏனோ சாயுதே...."

தாள லயத்தில் யாக மயம். சோக களத்தில் யாவும் மாயம்.

சோகப் பாட்டில் கூட ஒரு துள்ளல் சேர்க்க முடியுமா. அழுகையில் கூட அழகூட்ட முடியுமா? இளையராஜா என்ற சிடுமூஞ்சி போட்ட தேவ கானம் இது. ஒரு கோபக்கார மனிதனின் மண்டைக்குள் இருந்து கேட்கும் ஆலயமணி ஓசை நம்மை சாந்தப் படுத்துகிறது.

இசைஞனாய் இருக்கையில் இருளே துவக்கம். பிறகு அவன் காட்டும் வெளிச்சமே நமக்கு. எங்கிருந்தோ நுழைந்து விடும் புல்லாங்குழல் நம்மை எங்கேயோ அழைத்துப் போகும் வார்த்தைகளில் சொல்ல... அது சொல்லாங்குழல். காதலின் விரக்தி அதனூடாக ஓடும் விரகதாபம் என்று தானே போட்டுக் கொண்ட கூண்டில் இருந்து தானே வெளி வரத் துடிப்பது... வலி நிறைந்த வழி மறத்தல். அது தான் இந்த கன்னியாஸ்திரியின் காதல். நெருப்புக்கும் நீருக்கும் இடையே இல்லை, நெருப்புக்கும் நெருப்புக்கும் இடையே நீராக... அவளின் கண்ணீராக.

எங்கள் அமரும் நானும் பேசுகையில் எல்லாம்... இந்தப் பாடலின் வழியே ஒரு பதட்டத்தை பரிமாறிக் கொள்வோம். எழுதுங்க ஜி என்பார். இதோ எழுதி விட்டேன். இத்தனை நாள் எழுதாமல் விட்டதே இதோ இப்போது எழும் இந்த நடுக்கத்தை தவிர்ப்பதற்கு தான். நடுங்கினாலும்... நாம் பிடிக்க இதே பாடல் தான் நம்பிக்கையாக இருக்கிறது. என்ன செய்ய!? இலை போல இதயம் வாய்த்தவன் எல்லாம் இளையராஜாவிடம் தான் தஞ்சம் அடைகிறான்.

இந்த மெட்டுரையை எங்கள் அமருக்கே அர்ப்பணிக்கிறேன்.

"தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே"

- கவிஜி