இந்த 2022 ஆம் வருடத்தில் வெளியான இரண்டு மலையாளத்திரைப்படங்கள் ஜனரஞ்சகமாகவும் சிந்திக்க தூண்டும் விதமாகவும் அமைந்தன. இரண்டு திரைப்படங்களும் மலையாள மொழியில் வெளியாகி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை. குறிப்பாக 2022 ஆம் வருடம் ‘ஜன கன மண “ -என துவங்கி ஜெய ஜெய ஜெய ஹே - என தேசிய கீதமாய் திரையுலகில் மலர்ந்திருக்கிறது.

குறிப்பாக வருட இறுதியில் வெளியான 'ஜெய ஜெய ஜெய ஹே' - என்ற பெயர் கொண்ட மலையாள திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான திரைக்கதை காட்சி அமைப்புகளுடன் பின்னி பெடல் எடுக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இத்திரைப்படம் முதலில் வழக்கமான அழுகுனி திரைப்படம் போல இருக்கும் என நினைக்கும் தருணத்தில் நடக்கும் திருப்பங்கள் மற்றும் காட்சி அமைப்புகள் நம்மை (ஆண்,பெண் அனைவரையும் ) உற்சாகத்தில் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. திகில் திரைப்படங்களில்தான் அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் அதிகமாய் இருக்கும். ஆனால் குடும்ப உறவு அதிலும் குறிப்பாக கணவன் - மனைவியின் தினசரி வாழ்க்கை முறையை இவ்வளவு சுவாரசியமாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும் காட்சிகளை அமைத்து நம்மை அசர வைத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குநர்.jaya jaya jaya jaya heyஒருவரை பலவீனப்படுத்த அவரை திட்டலாம், எளியவராக இருந்தால் அடிக்கலாம், என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற மனநிலை குடும்பங்கள் முதல் டிஜிட்டல் இந்திய ஒட்டுமொத்த சமூகம் வரை வேரூன்றி நிற்கும் காலமிது. இத்தகைய ஏகாதிபத்திய மனநிலையை (ஆம் குடும்பத்தில் ஏகாதிபத்தியம்) ஒரே உதையில் உடைத்து நொறுக்கி விடுகிறாள் இத்திரைப்படத்தின் கதாநாயகி ஜெயபாரதி.

அடுத்த கட்டமாக பின்னணி வர்ணனையுடன் வீட்டிற்குள் நடக்கும் (கணவன் - மனைவிக்குள்) அதிரடி கராத்தே சண்டை காட்சிகள் படம் பார்க்கும் அனைவரையும் குடும்ப வேலைச்சுமைகளை மறந்து விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

அடித்தால் திருப்பி அடி - என்ற வகையில் சிந்திக்கவும் வைக்கிறது இத்திரைப்படம். அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்ற வழக்கு மொழியை ஞாபகப்படுத்துகிறது இப்படத்தின் காட்சிகள்.

திரைப்படத்தின் ஒரு காட்சியில் கணவனை தன் கண் இமைக்கு மை தீட்டி விடுமாறு கூறுகிறாள் மனைவி . அப்போது கண் மை பென்சிலை வைத்துக்கொண்டு வியர்க்க விறுவிறுக்க அந்த கணவன் படும்பாடு இருக்கிறதே அதை காணும்போது சிரிப்பு அள்ளும்.

இப்படத்தின் இறுதியில் கணவன் செய்யும் அதே கோழிப்பண்ணை தொழிலை தானும் செய்து மனைவியாலும் எல்லாம் முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைத்திருக்கிறார் படத்தின் இயக்குர் விபின் தாஸ். குடும்ப வேலைச்சுமைகளே மனைவிகளை அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் செய்து விடுவதை அருமையாக எடுத்துக்காட்டும் காட்சி அமைப்புகளுக்காக இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கதையின் நாயகி ஜெயபாரதியாக தர்சனா இராஜேந்திரன், கதையின் நாயகன் ராஜேஷ் ஆக பசில் ஜோசப்.

கறிகோழி வியாபாரியாக வீட்டில் தொட்டதெற்கெல்லாம் எரிச்சல்படும் இளம் கணவனாக, மனைவியை அடக்கநினைத்து, பெண்களின் பலவீனம் என்று ஆண்கள் நினைக்கும் விஷயங்களைத்தேடும் 99 சதவீதம் கணவன்மார்களில் ஒருவனாக திரையில் வலம் வருகிறார் பசில் ஜோசப்.

தனது மனைவியை தனக்கு அடிமையாக்க அடக்கி வைக்க ஒரு வழிமுறையை தேடும் கணவன், மனைவியை கர்ப்பமாக்கிவிட்டால் போதும் என்று முடிவு செய்வதில் பல ஆண்களின் மனவோட்டத்தை அம்பலப்படுத்துகிறது இத்திரைப்படம்.

யூ- டியூப்பில் சமையல் குறிப்பு மட்டும் பார்க்காமல், சண்டை குறிப்புகளும் இன்னும் பல உருப்படியான தகவல்களை பார்த்தால் அது இளம் மனைவிகளுக்கு உதவும் என்பதை ஜெயபாரதி – கராத்தே பயிற்சி செய்யும் காட்சிகள் மூலம் நயமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

படத்தின் துவக்கத்தில் கல்லூரியில் ஜெயபாரதிக்கு பாடம் நடத்தும் ஆசிரியர் பாடத்தின் வாயிலாக பேசும் முற்போக்கு சிந்தனைகளைக்கேட்டு அவர்மீது காதல் வயப்படுகிறார் கதையின் நாயகி ஜெயபாரதி.

ஆனால் அதன்பின்னர் அந்த ஆசிரியரிடம் பழகும்போதுதான் அவரும் ஒரு சராசரியான ஆண் மனோபாவம் கொண்ட வாய்ச்சொல் நபர் என்பதை புரிந்து கொள்கிறார்.

திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் எங்கெங்கும் முந்திரி காய்க்கும் கொல்லாமரங்கள் நிறைந்து அழகுபடுத்துகிறது. கதாநாயகன் வீட்டிற்குள்ளும் சிவப்பு பழம் காய்க்கும் கொல்லாமரங்கள் சூழ்ந்து நிற்பது அழகோ அழகு.

நமது தமிழகத்தில் தென்மாவட்டங்களில் உள்ள வீடுகளில் கொல்லாமரம் வளர்த்தால் பாம்பு வரும் என்று பயப்படக்கூடிய மூடநம்பிக்கை நிலவுவது குறிப்பிடத்தக்கது.

ஒரு காட்சியில் கொல்லாமரத்தில் தலையணையை கட்டிவைத்து, அதில் காலை வைத்து உதைத்து தற்காப்பு பயிற்சியினை பயில்கிறார் ஜெயபாரதி.

தன் கையே தனக்கு உதவி என்ற பழமொழியை பல இடங்களில் நமக்கு உணர்த்துகிறது இத்திரைப்படக்காட்சிகள்.

வீட்டில் என்ன சண்டை போட்டாலும், அடித்தாலும், உதைத்தாலும் சண்டை முடிந்த பின்னர், மனைவியின் மனம் புண்பட வைத்த பின்னர், சிறிது நேரம் கழித்து மனைவியை வெளியே கூட்டிச்சென்று ஹோட்டலில் சாப்பிட்டு, சினிமா பார்த்தால் மனைவியை சமாதானப்படுத்திவிடலாம் என்ற அற்பமான மனநிலைக்கு மரண அடி கொடுத்திருக்கிறது இத்திரைப்படத்தின் காட்சிகள்.

பலரும் சில திரைப்படங்களை ஜனரஞ்சகமான திரைப்படம் என்று சொல்வதைக்கேட்டிருப்போம். இப்படம் ஜனரஞ்சகமான திரைப்படம் மட்டுமல்ல, பொதுஜனத்தின் பொதுப்புத்தியில் பதிந்திருக்கும் பல தவறான எண்ணங்களை போக்கி, ஒரு உற்சாகமான மனநிலையைத்தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஜெயபாரதி கதாபாத்திரத்திற்கு ஜெய ஜெய ஜெய ஹே.....

மேலும் என்னதான் புரட்சிகரமான பெண்களைக் காட்டும் ஒருசில திரைப்படங்கள் அக்காலம் முதல் இக்காலம் வரை வெளிவந்தாலும், நிஜத்தில் தனது உரிமைக்கான போராட்ட களத்தில் பெண்களின் பங்களிப்பு சொற்பமே. அதற்கு முக்கிய காரணம் நமது குடும்ப அமைப்பு முறை மற்றும் அனைத்து குடும்ப பொறுப்புகளும் பெண்களிடம் தள்ளப்படுவதும் முக்கிய காரணமாக இருந்தாலும் கூட பல இளம்பெண்களும், குறிப்பாக அரசு பணிகளில் இன்று உள்ள இலட்சக்கணக்கான பெண் ஊழியர்களும், இன்னும் பல துறைகளில் பணியாற்றும் பெண்களும் தங்களது உரிமைகளைப்பேண போராட்ட களத்திற்கு வர தயங்கியே நிற்கின்றனர் என்பதே கண்கூடான உண்மை. இன்னும் சில அமைப்புகள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்றவை தனது மாநில மாநாடுகளில் குறைந்தது 20 சதவீதம் பெண்கள் பிரதிநிதிகளாக வர வேண்டும் என்று அறிவித்து அதனை செயல்படுத்த எண்ணினாலும், அடிப்படை உறுப்பினர் எண்ணிக்கையிலேயே பெண்கள் குறைவாக உள்ள சூழ்நிலையில் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும் சிரமமான நிலையிலேயே உள்ளது என்பதை அந்த அமைப்புகளும் உணர்வார்கள்.

இத்திரைப்படத்தின் காட்சிகள் கோவில்பட்டி எழுத்தாளர் தோழர். லி.பார்த்தசாரதி எழுதிய கண்ணாடியுள் விரியும் ஸ்தெப்பி வெளி என்ற சிறுகதைத்தொகுப்பில் உள்ள ஒரு பகுதியை நினைத்துப்பார்க்க வைத்தது.

“அவளுக்கு அதன்பின்னர் தான் நீதிமன்றத்தில் தட்டச்சர் பணி கிடைத்தது. அவள் கோர்ட்டில் விசாரணை நடைபெறும்போது அதை உடனுக்குடன் தட்டச்சு செய்யும் பணி. நீதிமன்றத்தில் விடுமுறை கிடைப்பது என்பதெல்லாம் முடியாத காரியம். அவளுக்கு முடியாத அந்த மூன்று நாளும் தன் வேலையை பாதுகாத்துக்கொள்ள வேறு வழியில்லாமல் என்ன நிலையில் இருந்தாலும் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு பணி செய்வாள். அப்படி ஒரு தடவை பணிநேரத்தில் அவளுக்கு இரத்தப்போக்கு அதிகமாகி வலி உச்சத்துக்கு சென்று மயங்கி விழுந்து விட்டாள். அந்த நேரத்தில் நீதிபதி நீதியைக்காப்பாற்ற மேசையின் மேல் விழுந்த அவளை கோபத்தில் உரத்த சத்தத்தில் அவள் முகத்தில் தண்ணீர் அடிக்கச்சொல்லி, மயக்கத்தில் உள்ள அவளிடம் இம்ம் .. டைப் அடி என்றாராம்.

- பவித்ரா பாலகணேஷ், மாதவன்குறிச்சி