இந்த உலகம் விளிம்பு நிலை மனிதனை ஒரு போதும் கவனிப்பதில்லை. விளிம்பு நிலை என்பது சொல்லுக்கு பழகிய சொற்றொடர் என்ற போதிலும். சொல்லில் அடங்காத பெரும்பாலும் வகைமையில் வரும் மனிதர்களுக்கும் அதே கதிதான். இந்த உலகம் விளிம்பில் நிற்கும் மனிதனையும் ஒருபோதும் கவனிப்பதில்லை.

மூன்று பக்கம் மக்களால் சூழப்பட்டிருந்தாலும்.. ஒரு பக்கம் புறக்கணிப்பாலும்....வெறுமையாலும்... வெற்றிடமாகவுமே இந்த மானுட பிழைப்பு இருக்கிறது.

'Trapped' ஒரு சினிமா படம் தான். ஆனால்.. பார்க்க பார்க்கவே....பயம் தொற்றிக் கொள்ள ஆரம்பிக்கும் சக மனிதன் ஒருவனின் உச்ச பட்ச தவிப்பு. இரண்டு நாட்களில் காதலிக்கு கல்யாணம் என்ற பதட்டம்.. பரிதவிப்பு.

"சீக்கிரம் தனி வீடு பார்.. கல்யாணத்தை நிறுத்தி விட்டு வந்து விடுகிறேன்" என்கிறாள் காதலி. காதல் கண்ணை கட்டிக் கொண்டு கடலில் குதிக்க செய்யும். வானம் வரைந்து விட்டு பூமி என்று பிதற்றும். எல்லாம் செய்யும் காதலுக்கு எல்லைகள் தான் காதலின் குட்டிச்சுவர் என்றால்.... காதலுற்றோர் சிரிக்கலாம். காதலற்றோர் வெறுக்கலாம்.

trapped movieஅவன் ஒரு முப்பது மாடி கட்டத்தில் முப்பதாவது மாடியில் ஒரு பிளாட்டை அவசரத்துக்கு பிடிக்க வேண்டி இருக்கிறது. அது பாதி கட்டப்பட்ட கட்டடம். தற்போதைக்கு வேலையை நிறுத்தியிருக்கிற....... இன்னும் யாரும் குடி வராத அப்பார்ட்மெண்ட். இப்போதைக்கு தங்கி கொள்ளலாம் என்ற அளவில் அந்த பிளாட் மட்டும் இருக்க...அங்கே குடி வருகிறான்.

அன்றிரவு...அங்கிருந்து காணும் உலகம் அத்தனை வண்ணமயமாக இருக்கிறது. புது மனைவியின் முன் கோபம்... ரசனைக்குரியது.. என்பது போல. மேலே மேலே உயர்ந்து நிற்கையில்... உலகம் மிக அருகாமையில் தனக்காக சுற்றுவது போன்ற பிரமிப்பு. அவன் ஆழ்மனதில் ஒரு நம்பிக்கை அரும்புகிறது. இந்த வீட்டில் அவளோடு வாழப் போகும் எதிர்காலம் மிக மெல்லிய கோட்டில் தொடுவானம் செய்கிறது.

காலையில் எழுந்து குளிக்க செல்கையில் தான் தெரிகிறது. அரை குறை பிளம்பர் வேலையால் தண்ணீர் வரவில்லை என்று. இரவு அலைபேசியை சார்ஜ்-ல் போட்டும் சார்ஜ் ஏறாமல் இருப்பதை உணர்கிறான். ஆக, மின்சார இணைப்பும் சரி வர இல்லை என்பது புரிகிறது. நொந்து கொண்டு வாட்டர்கேனில் இருக்கும் நீர் கொண்டு பல் விளக்கி முகம் கழுவி வெளியே செல்கிறான். உள்ளே இருந்து அலைபேசி சிணுங்குகிறது. அவசரத்தில் செல்போனை வீட்டுக்குள் வைத்து விட்டதை உணர்ந்து உள்ளே சென்று அலைபேசியை எடுத்து காதில் வைக்கிறான்.

எதிர்முனையில் காதலி.

"இதோ கிளம்பிட்டிருக்கேன் " என்று சொல்லும் போதே.. கதவு தானாக காற்றுக்கு அடைத்துக் கொள்கிறது. அதே நேரம் செல்போனில் இருந்த கடைசி சொட்டு சார்ஜும் தீர்ந்து போகிறது. விதியின் திட்டமிட்ட மாதாந்திர விளையாட்டு போல.

கதவு வெளியிருந்து லாக் ஆகிக் கொண்டது. எத்தனை முயன்றும் கதவைத் திறக்க முடிவதில்லை. இங்கு தான் கதையே ஆரம்பிக்கிறது.

அதன் பிறகு நடப்பவை எல்லாம் ஒரு சராசரி வாழ்வை புரட்டி போடும் அக்மார்க் விதியின் விரல்களின் தகிடுதத்தங்கள். மிக அருகே அவனால் பார்க்க முடிந்த உலகத்திலிருந்து அவன் தனித்து விடப்படுகிறான். கத்துகிறான். தொண்டை கிழிய. தொண்டை நெளிய. குரல் கம்ம. குரலின் வன்மம். அவன் இருத்தல் யார் காதிலும் விழுவதில்லை. தன்னால் பார்க்க முடிகின்ற உலகில் இருந்து தன்னை யாருக்கும் பார்க்க முடியவில்லை என்ற தவிப்பு.... சொற்களுள் அடங்குவதில்லை. சொல்லி விடவும் முடிவதில்லை. ஊன் உருக செய்யும் ஊமை அழுகையைத் தவிர அவனிடம் வெளிப்படுத்த போதாமைதான் மிச்சமிருக்கிறது.

இருக்கும் பிஸ்கட்டை ஒவ்வொரு துணுக்காக தின்று கேனில் இருக்கும் நீரைக் குடித்து இரண்டு நாட்களை ஓட்டி விடுகிறான். வியர்த்து ஒழுகுகிறது.....இயலாமை. கதவை எட்டி உதைத்து...... இருக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி கதவின் மீது விட்டெறிய செய்கிறது நடுக்கம். திடும்மென மிக உயரத்திற்கு செல்பவனை இந்த உலகம் கண்டு கொள்ளாமல் கை விடும் போல. அவன் கை விடப் பட்டவனாகிறான்.

பாத்திரம் கொண்டு ஜன்னலில் அடித்து ஒலி எழுப்புகிறான். அட்டைப்பெட்டியை கிழித்து அபார்ட்மெண்ட் எண்ணோடு ஹெல்ப் என்று டூத்
பேஸ்ட் கொண்டு எழுதி ஜன்னல் வழியே வீசுகிறான். அது காற்றில் அசைந்து அசைந்து கை விடப்பட்ட பட்டமென செல்கையில்... அசையாமல் நின்று கண்கள் சிமிட்டவும் மறந்து உயிரை பிடித்துக் கொண்டு நிற்கிறான். அது ஒரு வீட்டு டெர்ரசில் விழுகிறது. மீண்டும் மீண்டும் "காப்பாற்றுங்கள்" என்றெழுதி பறக்க விடுகிறான். பேஸ்ட் தீர்ந்து விடுகிறது. ஒரு கட்டத்தில் கதவு திறக்க செய்யும் முயற்சியில் அடிபட்ட பெருவிரலில் இருந்து கசியும் ரத்தம் கொண்டு எழுதி மீண்டும் கீழே வீசுகிறான். அது ஒரு வீட்டு மொட்டை மாடியில் விழுகிறது. அந்த வீட்டுப் பெண் அங்கே காயப் போட்ட துணி எடுக்க வருகிறாள். அப்போது....அந்த அட்டை காகிதத்தை அவள் பார்க்க வேண்டும் என்று அத்தனை உயரத்தில்.. உலக கம்பிகளுக்கிடையே மாட்டிக் கொண்டு அவன் படும் பாடு..... அய்யயோ....கூண்டு கிளியின் முதல் நாள் தவிப்பு. ஒரு தனி மனிதனின் தவிப்பை....கண்டு கொள்ளாத சூழலுக்குள் இந்த உலகம் வந்து விட்டதை நினைத்து நாமும் நொந்து கொள்ளத்தான் வேண்டும். அவள் கவனம் கொள்ளாமல் நகர்ந்து விடுகிறாள். அடிமனதில் பீறிடும் துக்கத்தை சீட்டின் நுனியில் அமர வைத்து விடும் காட்சி சினிமாவாக இருப்பினும்... திகைப்பு கூட்டும் அச்சத்தை நுனி புல்லில் அசையும் புழுவென உணர்ந்தேன்.

மீண்டும் அடுத்த நாள்...

ஜட்டியின் எலாஸ்டிக்கில் வில் செய்து சிறு சிறு சிமிண்ட் கற்கள் கொண்டு அந்த மொட்டைமாடிக்கு விட்டெறிகிறான். அது பட் பட்டென்று விழுந்து அந்த பெண்ணின் கவனத்தை திருப்புகிறது. ஆனாலும் அவளால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

இன்னொரு முறை அதே போல எழுதி கீழே வீசுகிறான். அது அந்த வாட்ச்மேன் கண்ணில் படுகிறது. வாட்ச்மேன் அதை எடுத்து பார்க்கிறார். ஆனால் தலை கீழாக பார்க்கிறார். அப்போது தான் நமக்கு புரிகிறது அவருக்கு படிக்க தெரியாது...என்று. வாட்ச்மேன்கள் படிக்க தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் உணர்கையில்... ஒப்புக்கு சப்பான் வேலை இல்லை வாட்ச்மேன் வேலை என்று புரிகிறது. சிறு சிறு வளைவுகள் கூட வாழ்வின் பெரும் பயணத்தை திசை மாற்றி விடும் என்பது உண்மையின் அருகாமை.

அடுத்த நாள் அந்த பெண் கண்ணில் அந்த அட்டை படுகிறது. நமக்கு அப்பாடா என்றிருக்கிறது.

அவள் யோசித்துக் கொண்டே கையில் அட்டையோடு சுற்றி சுற்றி மேலே பார்க்கிறாள். கட்டட பூதங்கள் சுற்றிலும் வானம் அடைத்துக் கொண்டு நிற்கின்றன. சிறு சிறு சவப்பெட்டிகளை சித்திரம் வரைந்திருக்கிறது... மனிதனின் அலங்காரத் தேவை. பிரிந்த அம்மாவை காணும் ஒரு சிறு பிள்ளையின் குதூகலத்தோடு....." இங்க.... நான்........ இங்க இருக்கேன்......" என கத்துகிறான். கீழே நின்று சுழலும் அப்பெண்ணின் கண்களில்....வெற்று கட்டடங்கள் தான் தெரிகின்றன. மானுட குரல் தெரிவதில்லை. அளவுக்கு மீறிய உயரம் குரலற்றவையாகி விடுகிறது. முகமற்றவர்களாக்கி விடுகிறது.

அந்த பெண் ஒரு வழியாக ஏதோ உள்ளுணர்வில் யோசித்து கொண்டே அந்த அப்பார்ட்மெண்ட்க்கு வந்து விடுகிறாள். அவள் வருவதை ஜன்னல் வழியே நாமும் பார்க்கிறோம். கம்பி மேல் நடக்கும் காட்சி. கம்பியே நடக்கும் காட்சி. அட்டையைக் காட்டி வாட்ச்மேனிடம் விசாரிக்கிறாள். வாழ்வின் எல்லா கட்டைகளும் உதிர்ந்து பீஸ் போன மனநிலை கொண்ட அவர்... திரும்ப திரும்ப என்ன என்று கேட்கிறார். அவருக்கு காதும் கேட்காது என்று தெரியப்படுத்துகிறது திரைக்கதை. கண் காது என்று உடல்நிலை திடமான ஆட்கள்தான் வாட்ச்மேனாக இருக்க வேண்டும் என்ற வீட்டுக்கு வீடு வாசல்படி உண்மையை இன்னொரு முறை நாம் மிக அருகே உணரும் தருணம்.

அவருக்குத்.....தெரியாமல்......அவளாகவே உள்ளே செல்கிறாள். நமக்கு இதயம் கண்ணில் துடிக்கிறது.

அவன் புரிந்து கொண்டு கதவை போட்டு அடித்து சத்தம் எழுப்புகிறான். கதவின் ஓட்டை வழியே அடிக்கடி பார்த்துக் கொள்கிறான். அவன் இருக்கும் தளத்துக்கு முந்திய தளம் வரை வந்தவள்.... ஏதோ சந்தேகத்தோடு நிற்கிறாள். அங்கே நிலவும் அமைதி அவளை என்னவோ செய்கிறது. பட்டென்று திரும்பி கீழே சென்று விடுகிறாள். இன்னமும் அவள் வரவில்லை என்பதை உணர்ந்து மீண்டும் ஜன்னல் பக்கம் ஓடி எட்டிப் பார்க்கிறான். அவள் சாலையைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறாள். இருந்த ஒரே நம்பிக்கையும் அற்று விடுகிறது. அழுகவும் முடியாத பெருந்துயரத்தில்.... கண்களில்.... வெறுமை ஒழுக.......தாகத்துக்கு தன் சிறுநீரையே குடிக்கிறான். 'தான்' எல்லாம் நொறுங்கும் இடம். மனித கொம்புகள் எல்லாம் பொடிபடும் இடம். வெறுமையின் குரலில் கத்துகிறான். இயலாமைக்கு ஈனக்குரல் தான்.

ஒரே ஒரு கதவு அவனை இந்த பூமியிலிருந்து வெளியே தள்ளி அடைத்து விட்டதை அவன் மிக நடுக்கத்தோடு உணர்கிறான். எப்பவும் போல எதற்கோ மழை வருகிறது.

நீரின் தேவையை நீரற்ற இரண்டாவது நாளே உணர முடியும். அவனுக்கு நான்கு நாளைக்கு மேல் ஆகி விட்டது. ஜன்னல் வழியே கையை விட்டு நீரை பிடித்து பிடித்து வாய்க்குள் திணிக்கிறான். வெறி கொண்ட தாகத்தில் உடல் படும் பாட்டில்... உண்மையை பறித்து பறித்து வாய்க்குள் போடுகிறான். இருக்கும் பழைய கேன்களில்... பாத்திரங்களில்... எல்லாம் பிடித்து வைக்கிறான். கிளாஸ் கிளாசாக எடுத்து குடிக்கையில்.... அமுதம் நீரில் உண்டு......அகிலம் நீரில் உண்டு என்று நம் பின் மண்டையில் ஸ்கொரோலிங் ஓடுகிறது.

அவன் உடலில் கொஞ்சம் தெம்பு வருகிறது.

முதல் முறையாக அவனுள் இருக்கும் ஆதி மிருகம் வெளி வருகிறது. ஜன்னலில் வந்தமரும் பறவையை நடுங்கிக் கொண்டே கொல்கிறான். தீயில் வாட்டி தின்கின்றன. பூச்சி... எறும்பு என்று அவன் நவீன குகைக்குள் இருந்தபடியே ஒரு வேட்டை வாழ்வை ஆடத் தொடங்குகிறான். "Survival of the fittest" மானுட தியரி வேலை செய்கிறது. அவனோடு ஒரு எலியும் இருக்கிறது. அவன் தின்பதை எலிக்கும் பகிர்ந்தளிக்கிறான். ஆரம்பத்தில் அந்த எலியை கண்டு மிரண்டவன்... நாட்போக்கில் அவர்களுக்குள் ஓர் இணைப்பு ஏற்படுகிறது. அதோடு பேசுகிறான். அவனுள் ஒரு மாய உலகம் உருவாகிறது. கற்பனையில் பாகு பாஜி தின்கிறான். ஜன்னலில் துணிகளை ஹெல்ப் வடிவில் கட்டி வைத்துப் பார்க்கிறான். அதில் தீ இட்டும் பார்க்கிறான். அப்போதும் இந்த உலகம் தலை நிமிர்ந்து பார்ப்பதில்லை. கால்களின் ஓட்டத்தையே கவனித்துக் கொண்டு ஓடும் ச்சீ... பொழப்பு தான் அதற்கு.

அவனுள் தனித்த உலகம் சுற்றுகிறது. அவனுக்கு பூமி இல்லை. வானம் மட்டுமே. அவனுள் எதுவுமற்ற ஒரு நிலை உருவாகிறது. அவன் ஒரு ஆதி வாசியின் அற்புதத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். படம் முடிய 15 நிமிடங்களே இருக்கிறது. இனி எப்படித்தான் தப்பிப்பான் என்று பயந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் நாம்.

அது நிகழ்கிறது. யாருமற்ற உலகத்தில் நமக்குள்ளும் ஒரு கதவு இருக்கிறது. அது தேவையில்லாத போதும் தம்மோடு போட்டிக் போட்டுக் கொண்டே தம்மையே அடைத்துக் கொள்கிறது. அதிலிருந்து அவன் வெளியே வந்தானா இல்லையா என்பது தான் படத்தின் சிலிர்க்க வைக்கும் க்ளைமாக்ஸ்.

படம் முடிந்ததுமே நான் என் அறை கதவை ஒருமுறை திறந்து பார்த்தேன். பதட்டம் குறையவில்லை. தனிமையில் இனிமை என்பதெல்லாம் கவிதைக்கு வாக்கப் பட்ட சொற்றொடர். தனிமையில்... தவம் கூட சாத்தியமில்லை. தவித்த வாய்க்கு நீர் இல்லாத போது மானுடம் தானற்று போய் விடும்.

ஒரு கதவு. ஒரே ஒரு கதவு போதுமானதாக இருக்கிறது இவ்வுலகில் இருந்து நம்மை பிரித்து விட. இவ்வுலகுக்குள் நம்மை அடைத்து விட.

Film : Trapped
Language : Hindi
Year : 2016
Director : Vikramaditya Motwane

- கவிஜி