1. The Migrumpies (Austria)

கதை : இரண்டு நண்பர்கள். அவர்களை கேங்க்ஸ்டர் எனத் தவறுதலாக நினைக்கும் ஒரு ஊடகப் பெண்மனி அவர்களை வைத்து ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தயாரிக்க நினைக்கிறார். பணத்திற்காக அந்த நண்பர்களும் கேங்க்ஸ்டராகவே ஆள்மாறாட்டம் செய்கிறார்கள்.

எண்ணம்:மரண மொக்கையா ஆரம்பிச்சு முடியும்போது ஜாலியா இருந்தது. கிட்டதட்ட ஒரு வெங்கட் பிரபு ஸ்டைல் மூவி இது. மிகப்பெரிய உலகசினிமாவும் கிடையாது.

2. Maracaibo (Argentina)

no date no signatureகதை:ஒரு மகிழ்ச்சியான குடும்பம். தந்தையும் தாயும் மருத்துவர்கள். அவர்களின் ஒரே மகன் கொல்லப்பட தந்தை பழிவாங்கினாரா என்பதே கதை.

எண்ணம் : ஒரு மெத்த படித்த பணக்காரக் குடும்பத்திற்கும் சமூகப் பொருளாதாரத்தில் கீழ்நிலையில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கும் இடையேயான போராட்டம்னு சொல்லலாம். கொஞ்சம் பொறுமையை சோதித்து விட்டது... தூங்கிட்டேன்.. பெருசா ஆக்சன் ப்ளாக் வரும்னு எதிர்பாத்தது நம்ம தப்புதான். வெளிப்படையா சொல்லனும்னா படம் பிடிக்கல.

3. Pure Hearts (Italy)

கதை : ஒரு தீவிரமான கிறித்துவக் குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் மழைக்கு கூட சர்ச் பக்கம் ஒதுங்காத ஒரு ஆணுக்கும் இடையே பூக்கும் காதல் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது.

எண்ணம் : கொன்றுவேன் ரேஸ்கல்ஸ். அலைகள் ஓய்வதில்லை படத்தை அன்-அஃபிசியலா ரீமேக் பண்ணி எடுத்துருக்கானுக. நம்ம தமிழ்சினிமாவுல காலம் காலமாக நம்ம பாக்குற கதைதான் இது. கிட்டத்தட்ட இந்த கதையம்சமுள்ள படங்கள் இங்கே வர்றதெல்லாம் நின்னே போச்சு. அதை ரொம்ப பொறுமையா ஜவ்வுமிட்டாய் கணக்கா எடுத்து வச்சிருக்கானுங்க. ரொம்ப சுமாரான படம்.

4. No Date, No Signature (Iran)

கதை: ஒரு உடற்கூராய்வு மருத்துவர் காரில் சென்று கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் செல்லும் ஒரு சிறிய குடும்பத்தின் மீது விபத்தை ஏற்படுத்தி விடுகிறார். அதன்பின் நடந்தது என்ன. ?

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை காரணகாரியமின்றி நேசிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்வுப்பூர்வமானக் காட்சிகளின் வழியே வலியுறுத்துகிறார்கள். நிறைய சிறு சிறு திருப்பங்களுடன் சுவையான திரைப்படங்களை குறைந்த பட்ஜெட்டில் எப்படி அளிக்கலாம் என்பதற்கு இந்தப் படம் ஒரு சாட்சி. இது ஒரு இஸ்லாமிய நாட்டுத் திரைப்படம் என்பதால், ஒரு உண்மையான முஸ்லீம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாகவே படத்தின் கதாநாயகன் டாக்டர். நரிமனை இயக்குனர் சித்தரித்திருப்பதாகத் தோன்றுகிறது. வாழ்க்கையின் மீது நம்பிக்கையையும் அன்பையும் விதைக்கும் ஒரு படம் இது. கண்டிப்பாக சினிமா விரும்பிகள் பார்க்க வேண்டியப் படமும் கூட.

5. Life is lovely (Turkey)

கதை : தன் வாழ்க்கை முடியப்போவதை மருத்துவரின் மூலம் அறிந்து கொண்ட ஒருவர் அதன்பின் வாழ்க்கையில் தான் செய்ய வேண்டியதைப் பட்டியலிடுகிறார்.

எண்ணம் : உலகசினிமாவென்றால் மெதுவாக கலைத்தன்மையுடன் நகரும் படங்கள் மட்டுமல்ல அதை சுவையாகவும் பக்காவான பொழுதுபோக்கு சினிமாவாகவும் தரலாம் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம். டைரக்டரே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். நகைச்சுவை, எமோசனல் காட்சிகளுடன் சமூகத்துக்குத் தேவையான மெசேஜ், என ஒரு ஸ்பெஷல் ட்ரீட் இந்தப்படம். இது துருக்கி நாட்டுப் படமென்றாலும் இது சொல்லும் செய்தி உலகத்துக்கேப் பொருந்தும். நெட்டில் கிடைக்குமா எனத் தெரியவில்லை. சினிமா ரசிகர்கள் காண வேண்டிய திரைப்படம்.

6. Because I Love You (Korea)

கதை : ஒரு இசைக்கலைஞன்/காதலன் விபத்தில் சிக்கிக்கொள்ள அவனது உடலில் இருந்து பிரியும் ஆன்மா காதலில் தடுமாறும் பல காதலர்களை சேர்த்து வைக்கக் கிளம்புகிறது.

கொரிய சினிமாக்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. நகைச்சுவையோ காதலோ சீரியல் கில்லரோ மனதின் அடி ஆழம் வரை பதம்பார்த்துவிடுவார்கள். இது ஒரு நகைச்சுவை காதல் திரைப்படம். இந்தப்படம் முடிவதிற்குள்ளாகவே கிம்கிடுக்கின் "The Net" திரைப்படத்தைக் காண்பதற்குப் பலர் ஓடினர். படம் முழுக்கப் பல இடங்களில் குதூகலப்படுத்திய ஒரு படத்தை அவர்கள் அவமானப்படுத்தி விட்டதாகவே தோன்றியது. க்ளைமாக்ஸ் பாக்காம ஓடுறதுக்கு எதுக்குயா படத்துக்கு வரனும். இது ஒரு தரமான பொழுதுபோக்குப் படம்.

7. Blossoming in to a Family (Japan)

கதை : ஒரு ஜப்பானிய மலை கிராமத்தில் வாழும் ஒரு குடும்பத்தினுடைய கதை இது. ஒரு தாய் தந்தை. இரண்டு பெண் குழந்தைகள். அவர்களில் ஒரு பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடு நடக்கிறது. குழந்தைகளின் வளர்ச்சியும், தந்தையின் இறப்பிற்குப் பின்னான தாய்-மகள்களின் பாசப் பிணைப்பும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளாக விரிகிறது.

விக்ரம்வேதா போன்ற திரைப்படங்களையெல்லாம் பார்த்துட்டு படம் ஸ்லோ"ன்னு சொல்றவங்களை இந்தப் படத்தை பாக்க வைக்கனும். படம் ஆரம்பிச்சி நத்தை போல நகர்ந்து மெல்ல மெல்ல அப்படியே ஊர்ந்து ரெண்டுமணிநேரம் கழிச்சி பாத்தா அரைகிலோமீட்டர் கூட தாண்டல. நடுவுல தியேட்டர்ல குறட்டை சத்தமெல்லாம் கேட்டுச்சி. அதே சமயம், ஜப்பானின் கலாச்சாரம், சாப்பாட்டு முறைகள், உடை அலங்காரங்கள், சடங்குகள் அனைத்தையும் கண்முன்னே காட்டியது நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. எமோசனலானப் படமும் கூட. ஆனால் டெட் ஸ்லோ.

8. Beauty And the Dogs (Tunisia)

கதை: இரண்டு போலிஸ்காரர்களால் ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறார். அவருக்கு நீதி கிடைக்குமா என்பதைப் பிறகு பார்க்கலாம். முதலில் வழக்குப் பதிய வேண்டுமே. . அது முடிந்ததா.. ?

தமிழில் வந்தப் படங்களிலேயே பிரசங்கம் செய்யாமல் காட்சிகள் வழியே அரசையும் அமைப்பையும் அதிகப்படியாகக் கேள்விகளால் துளைத்தெடுத்தப் படம் விசாரணை தான். இந்த "beauty and the dogs" படம் மூன்று "விசாரணை"களுக்கு சமம். அப்பாவிகளின் மீது அதிகாரத்தைக் காட்டி அழுத்தம் தரும்போது ஒன்று அடங்கிப்போவார்கள் அல்லது வீறுகொண்டு எழுவார்கள். மரியம் பலாத்காரம் செய்யப்படுகிறாள். அவள் அதை காவல் நிலையத்தில் சொல்லும்போது, "நீ ஏன் இது போன்ற ஆபாசமான உடை அணிகிறாய். ?" என்று கேட்கப்படுகிறது. . "போலிஸ்காரர்களால் நீ வன்புணரப்பட்ட இந்த செய்தி வெளியானால் நம் நாட்டின் மானம் போய்விடும். நம் அழகான இந்த நாட்டைப் பற்றி நினைத்துப் பார்த்தாயா. . ?" என்ற கேள்வி எல்லா நாடுகளிலும் போலியான தேசப்பற்று படர்ந்திருப்பதை உணர்த்துகிறது. இந்தத் திரைப்பட விழாவில் பார்த்ததிலேயே பெஸ்ட் திரைப்படமாக இதை சொல்லலாம்.

பி.கு : விடுமுறை கிடைக்காததால் இரண்டுநாட்கள் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது. பல நல்ல படங்களைப் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் பார்த்தவரை நல்ல அனுபவமாக அமைந்தது.

- சாண்டில்யன் ராஜூ