அறிமுக படைப்பிலேயே ஆச்சரியங்களைத் தொகுத்து அளிப்பது என்பது என்பது குறிப்பிடத்தக்க இடைவெளிகளில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. முதல் படைப்பின் மூலம் ஒரு புதிய அலையைக் கோருவதென்பது தமிழ் சினிமாவில் எப்பொழுதாவது நிகழும் ஓர் அபூர்வமான நிகழ்வு. இவ்விரண்டுமாகவும் இருப்பதுதான் அருவியின் குறிப்பிடத்தக்க முதல் சிறப்பம்சம்.

aditibalan aruvi

அருவி - தமிழ் சினிமா இயக்குனர்கள் முன்வைத்த பல நாயகிகளைப் போல தனித்த சிறப்புகளை உள்ளடக்கியவளோ, ஆகச் சிறந்த புத்திசாலியோ, கற்பிதங்களை நொறுக்கும் புரட்சிப் பெண்ணோ இல்லை. அருவி ஒரு சராசரிப் பெண். தனக்கு தூரோகம் நிகழ்த்தியவர்களிடம் கூட மன்னிப்பை, அன்பை யாசிக்கும் ஒரு தீவிரவாதி. சமூகம் இயங்குகிற அடிப்படையைப் புரிந்து கொண்டவள். அதைப் பற்றிய விமர்சனம் கூட அவளிடமுண்டு. பேரன்பும், பேரழகும் கொண்டவளான அருவிக்கு இந்தச் சமூகம் தந்த நிராகரிப்பின் மீது இருப்பது வருத்தம் மட்டும்தான். அதுமட்டுமே ஒரேயொரு வருத்தம். தன் வாழ்நாளெல்லாம் நிராகரிப்பை எதிர்கொண்டவள், தன்னை, தான் யாசிப்பதை இந்தச் சமூகத்திற்கு உணர்த்த ஒரு சமயத்தில் என்ன செய்கிறாள் என்பதிலிருந்துதான் இந்தப் படம் துவங்குகிறது. தமிழ் சினிமா இனி காலம் முழுக்க நினைவில் வைத்துக் கொள்ளும் நாயகியான அருவியை பார்வையாளர்களான நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

பாலியல் நோய் பீடித்தவர்களை சொந்த குடும்பங்களே எப்படி கைவிடுகிறது என்பது முதல், பாலியல் நோய்க்குப் பின்னிருக்கும் சர்வதேச நிதி, பெருவணிகம், வியாபாரம் வரை பல நுண்ணரசியல் யதார்த்தங்களைப் பேசும் அருவி, அடிப்படையில் தமிழ் சினிமா இதுவரை கண்டுகொள்ளாத 'எய்ட்ஸ்' என்கிற பாலியால் நோயின் மீது கட்டியெழுப்பட்ட புதிய பார்வையைக் கொண்டது. இந்த நோயின் வயதும், அதில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்றாலும், இத்தனை காலங்களில் இதன்மீது எந்த படைப்பாளியும் வைக்காத அக்கறையை வைத்து, அதை ஒரு நேர்த்தியான படைப்பாக்கி, பார்வையாளர்களிடம் சேர்த்த இயக்குனர் அருண்பிரபு புருசோத்தமன் தமிழ் சினிமாவை பெருமைக்குள்ளாக்கிய, மரியாதைக்குரிய புதுவரவு. போலவே, அருவியாய் விழுந்து, சிதறி, கரைந்து, பார்வையாள மனங்களில் ததும்பத் ததும்ப நிரம்பிய நாயகி அதிதிபாலன் விருதுகளுக்குரிய நல்வரவு.

பழைய சினிமா அடையாளங்களைக் கிழித்தெறிந்து நட்பை கொடையாகத் தரும் கதாபாத்திரமாக திருநங்கை அஞ்சலியின் கதாபாத்திரத்தை வடிவமைத்தது, எளியவர்களின் துயரங்களைக் காசாக்கும் TRP வெறி ஊடகத்தை துப்பாக்கி முனையில் கதறவிட்டது, குற்றமிழைத்த இடத்திலிருந்தாலும், சகபார்ப்பனர் என்ற முறையில் முகத்தில் புன்னகை வழிய பார்க்கின்ற அவர்களுக்கே உரித்தான அந்தச் சிறப்பு குணத்தை காட்சிப்படுத்தியது, பார்ப்பன அதிகாரங்கள் உயிர்ப்பிச்சை கேட்கிற இடத்தில் உதவியாளர் பாப்பாத்தியை நிறுத்தியது. பாலின நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்திடம் எதை எதிர்பார்க்கிறார்கள் எனச் சொன்னது, அவர்களுக்கு இந்த சமூகம் எதைத் தரவேண்டும் எனச் சொல்லித் தருவது என 'அருவி' தமிழ்சினிமாவில் வடிந்த ஒரு மகத்தான அருவி.

சமூகத்திற்கு அத்தியாவசியத் தேவையான பல கருத்துக்களை படம் தன்னகத்தே கொண்டிருந்தாலும், அதை எந்தவித பிரச்சாரத் தொனியுமில்லாமல் திரை முழுக்க நகரும் அருவியின் வாழ்வில், அவளது சுகதுக்கங்களில், பார்வையாளர்களையும் பங்கெடுக்க வைக்கும் கலையம்ச நேர்த்தி அருவியின் இயல்பான வேகத்தில் ஆர்ப்பரித்து விழும் மற்றொரு சிறப்பம்சம். தமிழ் சினிமாவை பெருமைக்குள்ளாக்கும் படைப்புகள் என சொற்ப எண்ணிக்கைகளைத் தாங்கிய ஒரு படைப்புகளின் பட்டியல் உண்டு. அதில் அடிக்கோடிட்டு ஐந்தாறுமுறை அழுத்தமாக எழுதப்பட வேண்டிய படைப்பு அருவி.

- கர்ணாசக்தி