எளிய மக்களின் நேரடி அதிகார வர்க்கமான காவல்துறையை விசாரணை போன்ற சினிமாக்கள் அவ்வப்போது நுட்பமாக குறுக்கு விசாரணை செய்தாலும், அதுபோன்ற முயற்சிகளை மீண்டும் பின்னிழுத்து பார்வையாளர்களிடம் அதிகார வர்க்கத்தினை அதிசிறப்பு மிக்க தீரன்களாக கட்டமைக்கும் பணியை நம் தமிழ் சினிமா படைப்பாளிகள் எப்போதும் கைவிடுவதாய் இல்லை. தன் முந்தைய படமான சதுரங்க வேட்டையின் மூலம் சாதுர்ய திருடர்களை ஹீரோயிசப்படுத்திய இயக்னர் வினோத், அடுத்த முயற்சியான தீரனில் அந்தச் சிறப்புமிக்க பணியைச் செய்யும் படைப்பாளிகளின் பட்டியலில் சேர்ந்திருக்கிறார்.

karthi theeran

தமிழக நெடுஞ்சாலைக்கருகே உள்ள வீடுகளில் பல தொடர் கொலை, கொள்ளைச் சம்பவங்களை நிகழ்த்திய ஒரு வட இந்தியக் குழுவினை வேட்டையாடக் கிளம்பிய தமிழக காவல்துறையினரைப் பற்றிய திரைப்படம்தான் தீரன்; ஒரு மாசாலா திரைப்படமாக போலிசாரின் நடவடிக்கைகள் மற்றும் அந்தக் கொள்ளைக்கார கும்பலைப் பற்றிய டிடெயில்கள்தான் இந்தப் படத்தின் பலமாக அமைந்திருக்கின்றன. ஆனால், எளிய மக்களின் பக்கம் எந்த நியாயத்தினையும் முன்வைக்காமல், முழுக்க முழுக்க அதிகார வர்க்கத்தின் சார்பாகவே சொறிந்து கொடுக்கப்பட்டிருப்பதுதான் இந்தப் படைப்பின் நெருடலான பலவீனம்.

மன்னர் ஆட்சிக் காலத்தில் தங்கள் பெருமைகளை இழந்த ஹவரியா என்ற இனம் தொடர் புறக்கணிப்புகள் மற்றும் ஆதிக்க சாதியினரின் துரத்தல்களால் காடுகளுக்குள் புகுந்து தங்கள் வாழ்வாதரத்திற்காக வேட்டையாடிச் சமூகமாக மாறிப் போகிறது. ஒரு கட்டத்திற்குப் பிறகு விலங்குகளை வேட்டையாட தடை நேர்ந்ததால் அவர்கள் மனிதர்களை வேட்டையாடுகிறார்கள். பிரிட்டீஸ் அரசாங்கம் ஹவாரியா உள்ளிட்ட நிறைய சாதி மக்களை பட்டியலில் சேர்த்து குற்றப் பரம்பரையாக்குகிறது. அவர்களின் பரம்பரை வழிவந்தவர்கள் தொடர்ந்து மனித வேட்டையாடிகளாக வாழ்ந்து வந்ததாகவும், அவர்களே தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாகவும் படம் அவர்களின் வரலாற்றை வலது பார்வையுடன் சொல்கிறது.

பிரிட்டீசாருக்குப் பிறகு ஐம்பது ஆண்டு காலம் ஆள்கிற இந்திய அரசு அக்குழு மக்களுக்கு கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட எந்த வசதியும் செய்து தராத புறக்கணிப்பைப் பற்றி படம் எந்தவொரு கேள்வியும் எழுப்புவதில்லை. மாறாக, படத்தின் நாயகன் அந்த ஒடுக்கப்பட்ட இனத்தில் கல்வியறிவு பெற்ற ஒரே ஒருவரைப் பார்த்து "பரவாயில்லையே.. உங்க இனத்திலும் படிச்சவன்லாம் இருக்கீங்களா?" என்று எகத்தாளமாக கேட்கிறார். இந்திய அரசின் நிர்வாகக்கேட்டைப் பற்றிய எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் பார்வையாள மனம் இந்தக் காட்சிகளை ரசிக்கும் வண்ணம் படம் ஒரு சாகச கதையாக திரையில் நிகழ்கிறது.

'தீரன் அதிகாரம் ஒன்று' என்ற பெயருக்குப் பதிலாக சதுரங்கவேட்டை 2 எனக்கூட இந்தத் திரைப்படத்திற்கு பெயர் சூட்டியிருக்கலாம். இரண்டு திரைப்படங்களும் தகுதியற்றவர்களை ஹீரோயிசப்படுத்தும் ஒரே வேலையைத்தான் திறமையாகச் செய்திருக்கிறது. "நேர்மையான அதிகாரிகளே இல்லையா? நேர்மையான வழக்குகளே இல்லையா? இந்தத் திரைப்படம் உண்மை வழக்கை அடிப்படையாகக் கொண்டது. அதன் டீடெயில்களோடே இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது" என சிலர் எதிர்வினை வைக்ககூடும். இந்தியாவில் ஒரு வழக்கினைப் பற்றி அல்லது ஒரு வழக்கை எதிர்கொண்ட சம்பந்தப்பட்ட துறையினரைப் பற்றி அவர்களிடம் நாம் விசாரித்தோமேயானால் விருமாண்டி படத்தினைப் போல நமக்கு ஒருபக்க சார்பான தகவல்களே கிடைக்கும். அப்படிக் கிடைத்த கொத்தாளத்தேவரின் வெர்ஷன்களோடு கட்டியெழுப்பட்ட படமாகவே இப்படைப்பு நிகழ்கிறது.

உதாரணத்திற்கு, ஒரு கிராமத்தைச் சார்ந்த ஒரு குற்றவாளிக்காக போலீசார் கூட்டத்தையே அடிக்கப் பாய்ந்த கிராமத்து மக்களைப் பற்றி எங்கேனும் கேள்விப்பட்டிருக்கிறோமா? மாறாக சந்தேகத்தின் பெயரால் போலிசாரால் சூறையாடப்பட்ட இந்தியக் கிராமங்கள் மற்றும் பழங்குடி இனங்களின் கணக்குகள் வெளிப்படையானது. மனித உரிமைக் கமிஷன்கள் என்பவை களங்கமற்ற காவல்துறையில் ஒரு குறுக்கீடு உள்ள துறை என்பதாக ஒரு பிம்பம் வைக்கப்படுகிறது. ஆனால் மனித உரிமைக் கமிஷன்களால், செயல்பாட்டாளர்களால் வெளிக்கொண்டு வரப்பட்ட லாக்கப் மரணங்கள், போலி என்கவுண்டர்கள், போலீஸ் நிகழ்த்திய சூறையாடல்களின் கணக்குகள் வெளிப்படையானது. இப்படி என்கவுண்டர்களுக்கு நியாயம், விசாரணைக் கைதியை அடித்துத் துவைப்பதன் நியாயம் என ஒரு தரப்பு நியாங்கள் மட்டுமே திணிக்கப்பட்ட இந்த இடத்தில்தான் 'தீரன் அதிகாரம் ஒன்று' அத்தனை டீடெயில்களைக் திரட்டியிருந்தும் வெறுமனே ஒரு சாகச மசாலா திரைப்படமாக அல்லது பேண்டசி திரைப்படமாக மட்டும் மாறிப்போகிறது.

- கர்ணாசக்தி