கடந்த வாரத்தில் இரண்டு அருமையான திரைப்படங்களைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.ஒன்று மலையாளப் படம்.மற்றொன்று கன்னடப்படம்.

1. கோதி பன்ன சாதாரண மைக்கட்டு (2016) (Wheatish Complexion, Average Built)

இது ஒரு சென்ட்டிமென்ட் கலந்த திரில்லர். அல்ஸீமர் நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் அவருடைய பராமரிப்பு இல்லத்திலிருந்து தொலைந்து போகிறார். அவருடைய மகனும், அந்த பராமரிப்பு இல்லத்தின் பெண் மருத்துவரும் தொலைந்துபோன அந்த முதியவரைத் தேட ஆரம்பிக்கிறார்கள். அந்தத் தேடலில் தந்தைக்கும் மகனுக்குமான உறவு நெருக்கமடைகிறது. இதை இரண்டரை மணிநேரம் சலிப்படையாத வண்ணம், சிறு சிறு திருப்பங்களுடன் அருமையாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஹேமந்த்.

godhi banna sadharna mykattu

படம் பார்த்துக் கொண்டிருந்த பொழுதே மிகப்பெரிய ஒரு ஆச்சரியம் உண்டானது. அது அந்த முதியவராக நடித்திருந்தவரின் நடிப்பு. ஏதேனும் புதுமுகமாக அவர் இருப்பாரோ எனத் தேட ஆரம்பித்தால் அப்பொழுதுதான் தெரிந்தது அவர் கன்னட சினிமாவில் தனது நடிப்பிற்கென தனி இடத்தைப் பிடித்து வைத்திருப்பவர் என்று. அவர் பெயர் ஆனந்த் நாக். இந்த வருடம் கண்டிப்பாக நடிப்பிற்கு தேசியவிருது பெறும் அளவு சிறந்த நடிப்பை அவர் வழங்கியிருக்கிறார். அவரின் மகனாக நடித்திருப்பவர் இயக்குனரும் நடிகருமான ரக்ஷித் ஷெட்டி. வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார்.

பார்க்க வேண்டிய படம்.

2. ஆனந்தம்(2016)

வினித் சீனிவாசனின் தயாரித்து கணேஷ்ராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வெளியான இளமைத் துள்ளலான ஒரு மலையாளப் படம் "ஆனந்தம்".

இயக்குனர் உட்பட நிறையபேர் புதுமுகங்கள். படமோ நூறு நாட்கள் வசூல் சாதனை புரிந்தது.

anandam 600

ஒரு தனியார் பொறியியல் கல்லூரியின் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் நான்குநாட்கள் கல்விச் சுற்றுலாவிற்கு செல்கிறார்கள். அந்த நான்குநாட்களில் மாணவர்களின் முக்கியமான நான்கு கதாப்பாத்திரங்களுக்குள் ஏற்படும் பல்வேறு வகையான அனுபவங்கள்தான் இந்தப் படம்.

படத்தின் கேமிரா கோணங்கள் படத்தை வேறுவிதாமாகக் காட்டுகிறது. பிரேமம் படத்தின் ஒளிப்பதிவாளர் ஆனந்த்.சி.சந்திரன்தான் இதற்கும் ஒளிப்பதிவு.

பல காட்சிகள் நம்முடைய கல்லூரி நாட்களை நினைவுபடுத்தி விடுகிறது. கல்லூரி நாட்களுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய, சில இடங்களில் மட்டும் செயற்கையான அதே சமயம் ஜாலியான படம்.

- சாண்டில்யன் ராஜூ