பேரன்பு மிக்க ரசிகப்பெருமக்களே. நகைச்சுவைப் படமென்றால் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது கற்பிதங்களில் ஒன்று. அதே சமயத்தில் நகைச்சுவைப் படத்தில் இன்னொரு விதி படத்தின் எந்தக் காட்சியிலும் பார்த்துக்கொண்டிருக்கிறவர்களை அழாச்சி பண்ணவும் கூடாது என்பதும் கற்பிதங்களில் மற்றொன்று. அவன் இவன் என்பது நாம் காசு கொடுத்து தலைவலியை வாங்கிக்கொள்ளும் இடம். ச்சீ படம்.

இந்தப் படத்தில் வரும் ஊரைப் போன்ற எந்த ஊரையும் எந்த மனிதர்களையும், எந்த காட்சியையும் எந்த சம்பவத்தையும் நீங்கள் இயல்புவாழ்க்கையில் பார்க்கவே முடியாது. அப்படியானால் இப்படம் ஈ.டீ மாதிரி ஒரு சயன்ஸ் ஃபிக்ஷன் படமா என்று கேட்கிறவர்களுக்கு, 'தெரியவில்லை'. ஒரு வேளை இப்படத்தை பார்த்துவிட்டு நம் பக்கத்து வீட்டுக்காரனே வெறி கொண்டு நம் மீது பாய்ந்துவிடும் அபாயம் உள்ளது. அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள ஒரு 10 நாளைக்கு ஹெல்மெட் இத்யாதிகளை போட்டுக்கொண்டு வாழ்க்கையை நகர்த்தவும்.

avan_ivan_400ஒரு ஊர். அந்த ஊரில் ஒரு வாழ்ந்து கெட்ட (இப்படத்தை கண்டு திரும்பும் அனைவரும் வாழ்ந்து கெட்டவர்கள் தாம்) ஜமீன்தார். (நந்தா படத்தில் வரும் ராஜ்கிரணின் கோமாளி பதிப்பொன்றை நினைவில் கொள்க.). அவர் ஒரு அநாதை. அதே ஊரில் இருக்கும் பண்பட்ட குடும்பம் (அதாவது ஒருவருக்கு இரண்டு மனைவிகள். இருவருமே அவரை மிதிப்பர். அவர் மாவாட்டுவார். இரண்டு மனைவியருமே சரளமாக கெட்ட வார்த்தைகள் பேசிக்கொள்வர். சரக்கு முழுக்க நீ அடிச்சிராத, அம்மாக்கு கொஞ்சம் வை என்பார் அன்னை. அதே அன்னை பீடி குடிப்பார்.)

அந்த இரண்டு பேருக்கும் தலா ஒரு குறைபிரவசங்கள். விஷால் மற்றும் ஆர்யா. (அவர்களே ஒருவரை ஒருவர் விளித்துக் கொள்வது...போடா வண்டு பீ மண்டையா, டோரிக்கண்ணா) அவர்கள் இரண்டு பேரும் தான் அவன் இவன்.

அந்த ஊரில் ஒரு காவல் நிலையம் இருக்கும். அதில் இருக்கும் அண்ணன் சீ அவர் தாங்க இன்ஸ்பெக்டர். அவர் ஒரு டம்மி பீசு. யாரும் எந்த களவு திருடு பண்ணாமல் இருக்க அவர் காவல் நிலையத்தில் கறிச்சோறு போடுவார். அதைத் தின்ற பின் யாரும் அதன் பிறகு தப்பு செய்ய மாட்டார்களாம். கொடுமைடா சாமி. இயக்குநருக்கு எதெல்லாம் நகைச்சுவை என்பதைப் பற்றிய தெளிவுக்கு இது பதம்.

அடிக்கடி குடிக்கிறார்கள். இதில் வருகின்ற ஜட்ஜ் வழக்கம் போலவே பாலா படங்களிலெல்லாமும் ஒரு ஜட்ஜ் கேணைத்தனமாக சித்தரிக்கப்படுவதைப் போன்றே இதிலும்.100கிலோ பழைய பீரோவின் சாவி தொலைந்து போகிறதாம். அதைத் திறக்க ஒரு பூட்டு ரிப்பேர்காரனைக் கூப்பிடலாமே  என நீங்கள் கேட்கலாம். பகவான் பாலா படமாயிற்றே. அதெல்லாம் நடக்குமா..?

அதை திறக்க வரிசையாக குற்றவாளிகள். முதலில் அவனால் முடியாமல் போன பிறகு இவன் அதாவது ஆர்யா... அவர் வந்து திறந்து கொடுக்க அதற்கு கைம்மாறாக நீதிபதியின் அரசாங்க ஊர்தியில் அதுவும் சரக்கடித்துக்கொண்டே வருவாராம். அவரது வெற்றியை வரவேற்று அவரும் அவரது பெற்ற தாயுமே தலை கிறுகிறுக்க குத்தாட்டம் போடுவார்களாம். ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட எல்லா பிரச்சினையும் எனக்கு மறந்து விட்டது.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வனச்செல்வத்தை ஒரு 10 அரசு ஊழியர்களை அடித்து நொறுக்கிவிட்டு எடுத்து செல்வார் விஷால். ஆனால் அவர்கள் வசிப்பது அவர்களது சொந்த நாட்டில் அல்லவா..? அதற்காக பிடிபட்ட ஆர்யாவும் விடுவிக்கப் படுகிறார். கேட்டால் நகைச்சுவையாம். கண்களில் ரத்தம் வழிகிறது.

ஒரு பெண் பிள்ளையை நடுரோட்டில் நாலு பேர் பார்க்க குட்டிக்கரணம் போடச்செய்கிறார் ஆர்யா. அவளுக்கு அவர் மீது காதல் வருமே சாமி. பகவான் பாலா அருள்புரிந்து விட்டாரல்லவா..?

இன்னொரு பெண் கான்ஸ்டபிள் ஜனனி ஐயர் அவளிடம் விஷால் கேட்பார். பெண் போலீசுக்கு தரப்படும் பேண்டில் ஜிப் இருக்குமா..? இருந்தால் அதன் உபயோகம் என்ன..? எனக் கேட்பார். அந்த பெண்ணும் அதே விஷாலை காதலிப்பார்.. பின்னே பகவான் பாலா கோபிப்பாரல்லவா..?

என்னடா இவன்...(அது நாந்தாங்க) விமர்சனம் என்கிற பெயரில் பிட் பிட்டாக எதையெல்லாமோ சொல்கிறான் என நினைக்காதீர்கள். படமே அந்த மாதிரி தான் இருக்கிறது. அடிப்படையற்ற கதை. ஆழமற்ற அங்கங்கே தொங்கக் கூடிய திரைக்கதை. நம்பகத் தன்மையற்ற கதாபாத்திரங்கள், திணிக்கப்பட்ட வன்முறை. எதற்கென்றே தெரியாமல் ஒழுங்கற்ற முறையில் கோர்க்கப்பட்ட காட்சிகள்.

மேலும்:

1.மாடு உண்பதை அரசாங்கம் அனுமதிக்கிறதே. ஆட்டிறைச்சி விலையுடன் ஒப்பிடுகையில் ஏழைகளின் உணவு மாட்டிறைச்சி. அதை கண்டுபிடித்து அவ்வளவு பெரிய்ய குற்றம் போல ஆர்.கே .வை பிடித்து செல்ல அத்தனை அதிகாரிகள் வந்து... இதெல்லாம் எதற்காக... உடனே அவர் வெளியே வந்து கொலை செய்வதற்கு வசதியாகவா..? அவர் கேட்கிறார்...குர்பானி என்கிற பெயரில் ஒட்டகத்தை அறுத்து உண்பவர்களை போய் கேட்க வேண்டியது தானே என்று. அது இஸ்லாமியர்களின் மத நம்பிக்கை. அதைப் பேசுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லாமல் வலிய திணிக்கப் பெற்றாற்போல் இருக்கிறது.

2. நவரசங்களையும் அல்லது நவ குழம்புகளையும் தன் முகத்தில் காட்டுகிறார் விஷால். இந்தப் படத்திலேயே சிறந்த நகைச்சுவைக் காட்சி அது தான். நன்றி பாலா.

3. இந்தப் படத்தில் குறிப்பிட வேண்டியவர்கள். ஜீ.எம்.குமார். ஆர்தர் வில்சன். வாசுகி பாஸ்கர். நடன இயக்குநர் சுசித்ரா.

4. எஸ்.ராமகிருஷ்ணன் தன் இலக்கியப் புகழுக்கு தானே தீ வைத்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.

5.இரண்டாம் காந்தி என்று அழைக்கப்படுகிறவர் யார்..?

இது ஒரு கேள்வி. இக்கேள்வியை ட்யூடோரியல் கல்லூரியில் ஆசிரியர் கேட்டு விட்டு சாய்ஸ் தருகிறார் 1.நெல்சன் மண்டேலா 2.ராஜபக்ஷே. இக்கேள்விக்கு யோசனைக்கு பின் நெல்சன் மண்டேலா என்ற பதில் வந்த உடன் உணர்ச்சி பெருக்கில் ஏசப்பா..ஏசப்பா உமக்கு கோடான கோடி நன்றிகள் ஏசப்பா கோடான கோடி நன்றிகள் என்று உருகுகிறார். இது போன்ற சாய்ஸ்கள் பாலா அல்லது எஸ் ராமகிருஷ்ணன் என்கிற மேதைகளுக்கு தான் தோன்றும்.

6. வலிய வரவழைத்துக் கொண்ட வன்முறைக் காட்சிகளைத் தவிர்த்தால் இப்படத்தை தொலைக்காட்சியில் ஓசியில் ஒளிபரப்புகையில் பார்த்துக் கொள்ளலாம்.

படம் முடிகிறது. a film by bala என்று பிசு பிசு வென கண்களில் இருந்து ரத்தக்கண்ணீர் கசிகிறது. குதித்து குதித்து செல்லும் திரைக்கதை, நம்பகத் தன்மையற்ற கதாபாத்திரங்கள்,வலியத் திணிக்கப்பட்ட காட்சிகளின் கோர்வை, அருவருப்பான வசனங்கள், அதீத வன்முறை, மொத்தத்தில், அவன் இவன்... புறக்கணிக்கப்பட வேண்டிய கோரதாண்டவம்