6 பாட்டு (அதில் ஒன்று குத்துபாட்டு) 5 சண்டைக்காட்சிகள், கதைக்கு சம்பந்தமில்லாத காமெடி அல்லது சற்று முற்போக்காக கதையோடு சம்பந்தப்பட்ட காமெடி, கண்ணகி வசனம் பேசும் அரைக்கால் சட்டை போட்ட ஹீரோயின், நாட்டு மக்களை, ஊர்மக்களை, நியாய-தர்மத்தை, குறைந்த பட்சம் ஹீரோயினையாவது காப்பாற்றத் துடிக்கும் ஹீரோ என இந்த வழக்கமான பார்முலாவிலிருந்து தமிழ் சினிமா மீளாதா............ என கண்கள் கலங்க ஏங்கியவர்கள் அனைவரும் சங்கம் அமைத்து பாராட்ட வேண்டிய படம் நடுநிசி நாய்கள். கௌதம் மேனனை திட்டுவதாய் இருந்தால் ஒரே ஒரு விஷயத்துக்குத்தான் திட்ட வேண்டும். இப்படி ஒரு கட்டுடைத்தலுக்கான தைரியம் தனது 10வது படத்தில் தான் அவருக்கு வந்திருக்கிறது என்றால் அவரை திட்டித் தீர்க்கத் தான் வேண்டும். எனக்குத் தெரிந்து விவேகானந்தர் உயிருடன் வந்து வேதவியாக்யானம் செய்தாலும் அதையும் விமர்சனம் செய்வதற்கு இங்கு நூறு பேர் இருக்கத்தான் செய்வார்கள்.


முதலாவதாக சமுதாயத்திற்கு பாடம் நடத்துபவர்களாக இயக்குனர்கள் ஆக்கப்படுவதை வன்மையாக கண்டிக்க வேண்டும்.  சமுதாயம் என்பது எதையாவது, யாரிடமிருந்தாவது கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் எதிர்பார்ப்பது அவர்களது சொந்த மனநோய். அந்த மனநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதை விட்டு, சமுதாயத்தின் மீது அதன் அனுமதி இல்லாமல் தங்கள் சொந்தக் கருத்துக்களை திணிப்பதை, இதே சமுதாயத்தில் பிறந்த கருத்து சுதந்திரம் மிக்க அல்லது அதற்கு அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட நானோ, மற்ற யாரோ எதிர்ப்பு தெரிவிப்பதை  எந்த வித ஹிட்லர் மனோபாவமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். வன்முறை என்ற வரையறைக்குள் ஒழுக்கத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் போராட்டங்களும், கருத்துப் பரிமாற்றம் என்கிற பெயரால் நிகழ்த்தப்படும் வசவுகளும் நிச்சயமாய் அடங்கும்.

சமுதாயம் சினிமாவை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இல்லை என்பதையும். சமுதாயத்திற்கென சொந்தமான ஆறாவது அறிவு உள்ளது என்பதையும், மக்கள் தங்கள் அனுபவங்களிலிலிருந்தும், வடுக்களிலிருந்துமே தங்களது வாழ்க்கை முறையை நிர்ணயித்துக் கொள்கிறார்கள் என்பதையும் தாழ்மையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன். குறைந்த பட்சம் பீடிங் பாட்டிலில் பாலை ஊற்றி குடிக்கும் குழந்தைகளைப் போல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் ஆறாவது அறிவை மதிக்கக் கூடாது என்பதையும், சினிமா பார்த்து வாழ்க்கையை வாழத் துடிக்கும் ஆட்டுமந்தைகளாய் அவர்களை நினைக்கக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஒரு திரைப்படத்தை அதன் கதையை மட்டுமே வைத்து மதிப்பிடப்பட வேண்டுமென்பதில்லை. அதன் ஸ்கீரின் ப்ளே, கதையை சொல்லும்முறை, எடுத்தாளப்பட்டிருக்கும் எதார்த்தமுறை, ஒலிக்கலவை, ஒளிப்பதிவு, நேர்த்தியான காட்சியமைப்பு, காட்சியமைப்பில் செய்யப்பட்டிருக்கும் புதுமை, இவை அனைத்தும் கவனிக்கப்பட வேண்டியவையே, படத்தின் அடிப்படை ஜீவனான உயிரோட்டம் இல்லையென்றால் அதை மக்களின் ரசனை என்னும் அணிச்சை அமைப்பு தானாகவே ஒதுக்கித் தள்ளிவிடும். அதனால் யாரும் புறக்கணியுங்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஒருவேளை படத்தில் ரசனை சிறிதளவேனும் இருக்கும் பட்சத்தில் என்னதான் கரடியாய் கத்தினாலும் படம் ஓடுவதை யாராலும் தடுக்க முடியாது. கமல் போன்ற மேதைகள் ரஜினியிடம் தோற்றுப் போனதையும், விஜய் போன்ற நடிகர்களிடம் இன்றைய கதையமைப்பு கொண்ட திரைப்படங்கள் தோற்றுக் கொண்டிருப்பதையும் கவனிக்கமால் புறந்தள்ளக் கூடாது. ரசனை என்னும் அடிப்படை அமைப்பை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்த மக்கள் எல்லாம் முட்டாள்கள் என்கிற ரீதியில் மேதமைத்தனத்தை காட்ட நினைக்கும் பொழுது மண்ணைக் கவ்வுவது தமிழக சினிமாத்துறையில் மிகச் சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

கௌதம் மேனனின் நடுநிசி நாய்கள் அப்படியானதொரு மேதமைத்தனத்தை வெளிப்படுத்தும்  படம் இல்லையென்று அடித்துச் சொல்லலாம். திரு.கமல்ஹாசன் அவர்களின் சில திரைப்படங்களில் கையாளப்பட்டுள்ள லைவ் ரிக்கார்டிங் எனப்படும் ஒலிப்பதிவு தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியிருக்கும் (அதிர்ச்சி) அலைகளிலிருந்து மீள்வதற்கு ஒரு வாய்ப்பாக நடுநிசிநாய்கள் படத்தை எடுத்துக் கொள்ளலாம். இப்படத்தின் ஒலி அமைப்பு சிறப்பான  அடுத்தக்கட்ட முயற்சிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும்; இல்லை.

ரீ ரிக்கார்டிங்கே இல்லாத ஒரு படம் கலைஞர் டி.வியில் வரும் குறும்படங்களைப் போல் இருக்கப் போகிறது என்கிற  சிறிய பயத்துடனேயே தான் படம் பார்க்கச் சென்றேன்.  முதல் காட்சியிலேயே நிமிர்ந்து உட்கார வைத்து விட்டார் இயக்குனர். மனோஜ் பரமஹம்சா......... பி.சி. ஸ்ரீராம், ரவி. கே. சந்திரன், ராஜிவ் மேனன் வரிசையில் உலகத்தரமான போட்டோகிராபியை நிரூபித்துக் கொண்டிருக்கும் மற்றொரு கேமராமேன். தமிழகத்திற்கு கிடைத்த மற்றொரு அருமையான கேமராமேன். ஹைஸ்பீடு கேமராவை கொண்டு இயக்கப்பட்ட முதல் காட்சியிலேயே தனது தரத்தை நிரூபித்துக் காட்டிவிட்டார். புகைப்பட மொழி தெரிந்தவர்களால் மட்டுமே உணர முடிந்த அற்புதமான காட்சி அது. இவை போன்ற சேலஞ்சான காட்சியமைப்புகளை வடிவமைப்பதில் இயக்குனரின் ரசனையும், கேமராமேனுடன் ஒன்றிப் போக வேண்டும். இருவரும் இருகண்கள் போல் செயல்பட்டால் ஒழிய கவனத்தை ஈர்க்கக் கூடிய காட்சிகளை உருவாக்க முடியாது.

 

கிறிஸ்டோபர் நோலனனின் மெமண்டோ  திரைப்படத்தின் முதற் காட்சியும் கிட்டத்தட்ட இக்காட்சியைப் போன்றே அமைக்கப்பட்டிருக்கும். (அக்காட்சி ரிவர்சில் அமைக்கப்பட்டிருக்கும்,) வீரா என்கிற சமர் நடுரோட்டில் ஒரு போலீஸ் காரரை சுட்டுத் தள்ளும் காட்சி அது. படத்தின் மையப்பகுதியில் நடைபெறும் ஒரு காட்சியிலிருந்து படம் தொடங்குகிறது.

பின் சில போலீஸ்காரர்களை சுட்டுக் கொன்றதற்காகவும், பெண்களை வன்கொடுமை மற்றும் கொலை செய்ததற்காகவும் வீரா கைது செய்யப்பட்டு வாக்குமூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறான். இதுதான் படத்தின் இறுதிக் காட்சியும் கூட. இறுதிக்காட்சியிலிருந்து ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ப்பது போல திரைக்கதை அமைத்து ஒவ்வொரு காட்சியாக எடுத்துக் காட்டப்படுகிறது.

வீரா என்கிற சமர் தனது குழந்தைப் பருவத்திலிருந்து கதையை ஆரம்பிக்கிறான். சமரின் தந்தை பிரிட்டிஷ் இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்கின் ‘ஐஸ் வைட் ஷட’; திரைப்படத்தை திருட்டு வி.சி.டி.யில் பார்த்திருப்பார் போல. அப்படத்தில் வரும் காட்சிகளைப் போலவே சில விஷயங்களை தனது வீட்டில் செய்கிறார். தந்தையின் பாலுணர்வு வன்முறைகளை பார்த்து வெதும்பிப் போன சமர் பள்ளியிலும், மற்ற இடங்களில் பிறரிடமிருந்து தன்னை ஒதுக்கிக் கொள்கிறான். மனநிலை பிறழ்ந்த நிலையில் திரிகிறான்.

சமரின் பக்கத்து வீட்டுப் பெண்ணான மீனாட்சி குழந்தையான சமரின் வித்தியாசமான நடவடிக்கைகளை பார்த்து விட்டு அவன் மேல் பரிதாபப்படுகிறாள். அவனிடம் பேச முற்படுகிறாள். அவன் பேசாமல் விலகிச் செல்லவே, அவனது வீட்டில் ஏதோ தவறு நடைபெறுகிறது என்பதை யு+கித்து உளவு வேலையில் ஈடுபடுகிறாள். சமர் வீட்டின் சுவர் ஏறிக்குதித்து அவன் வீட்டில் நடக்கும் அத்தனை விஷயங்களையும் பார்த்துவிடுகிறாள். உடனே போலீஸ் மூலம் அனைவரும் கைது செய்யப்படுகிறார்கள். அப்போது நடைபெறும் சண்டையில் சமரின் தந்தை தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்துவிடுகிறார். சமர் வீரா எனப் பெயர்மாற்றப்பட்டு மீனாட்சியின் பாதுகாப்பில் வளர்க்கப்படுகிறான்.

13 வயதில் மீனாட்சியின் மீது சமருக்கு காதல் வருகிறது. இது சற்று ஜீரணிக்க முடியாமல் இருந்தாலும் எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. பின் 18 வயதில் ஒருநாள் தூங்கிக் கொண்டிருக்கும் மீனாட்சியை வற்புறுத்தி உறவுகொள்கிறான். முறையற்ற இந்த உறவிலிருந்து தப்பிக்க நினைக்கும் மீனாட்சி தனது கல்லூரி காலத்திலிருந்து காதலிப்பதாக துரத்திக் கொண்டிருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்கிறாள். தனக்கென இருந்த மீனாட்சி இன்னொருவனுடன் முதலிரவில் இருப்பதை ஜீரணிக்க முடியாத வீரா முதலிரவின் போது மீனாட்சியின் கணவனை குத்திக் கொள்கிறான். அப்போது ஏற்பட்ட தீவிபத்தில் மீனாட்சியின் கணவன் இறந்துவிடுகிறான். மீனாட்சி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உயிர் துறக்கிறாள்.

மருத்துவமனையிலிருந்து வீராவின் கற்பனைகள் தொடர்கின்றன.

மருத்துவமனையில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருக்கும் மீனாட்சி தனது வழக்கறிஞருடன் பேசுவது, வீராவுடன் பேசுவது, டிம் லைட்டிங், ஒரேகோணத்தில் கதையை நகர்த்துதல் என இக்காட்சி புதுமையாக அமைந்திருந்தது.

கௌதம் விண்ணைத்தாண்டி வருவாயாவில் இதுபோன்றதொரு காட்சியை அமைத்திருப்பார். கடைசி காட்சியில் தனது மிக நீண்ட கற்பனை காட்சியான அந்த காட்சியில் சிம்பு, த்ரிஷாவிடம் தன்னுடைய தேக்கி வைக்கப்பட்ட காதலை நேரடியாக சொல்லாமல் கன்வே செய்வார். மிகநீண்ட க்ளோசப் காட்சியான அந்த காட்சியும், வசனமும். அற்புதமாக அமைந்திருந்தது. படம் பார்ப்பவர்களுக்கு ஒரு ஒன்றுதலையும், டெப்தான உணர்வையும் கொடுத்து அற்புதமான பதிவை விட்டுச் சென்றது

இதுபோன்ற காட்சிகளை உலகப் புகழ்பெற்ற இயக்குனர்கள் தங்கள் படங்களில் உபயோகிப்பது உண்டு. மார்ட்டின் ஸ்கார்செஸி தன்னுடை பல படங்களில் இதைப் போன்ற காட்சிகளை பயன்படுத்தியிருப்பார். கேப் பியர், கேங்ஸ் ஆப் நியு+யார்க், ரெய்ஜிங் புல், ஹுஸ் தேட் நாக்கிங் அட் மை டோர், டிபார்ட்டட் போன்ற திரைப்படங்களில் இதுபோன்ற மிக நீண்டி காட்சிகளை பயன்படுத்தியிருப்பார். ஒரு பிரேமில் தொடர்ச்சியாக ஒருசீன் முழுவதுமாக கதை சொல்லும் இதுபோன்றதொரு காட்சியை மிஸ்கின் கூட தனது யுத்தம்செய் படத்தில் பயன்படுத்தியிருப்பார்.

வீரா தனது கற்பனைக்குள் செல்லும் அந்த காட்சிக்கு இதுபோன்றதொரு வித்தியாசமான ஸ்கிரீன்ப்ளே நன்றாக அமைந்திருந்தது. கௌதம் தன்னை நிறையவே அப்டேட் செய்திருக்கிறார். பெரும்பாலும் கேமரா கோணங்கள், கலரிங், சில்நெஸ், எடிட்டிங் என கவனம் செலுத்துபவர்கள், ஒன்றுதலுடன் கூடிய கதையமைப்பில் கோட்டை விட்டுவிடுவார்கள், அல்லது நல்ல கதையை உருவாக்கி விடுவார்கள், ஆனால் காட்சிகளை அமைப்பதில் உள்ள நேர்த்தியை விட்டுவிடுவார்கள். இவை இரண்டையுமே நேர்த்தியாக கையாளும் திறமையுடன் கௌதம் இருக்கிறார். தன்னுடைய கதையை தானே உருவாக்குகிறார். அல்லது ஒரு ரைட்டருடன் சில மாதங்களை செலவிடுகிறார். இதனாலேயே திரைக்கதையுடன் படம் பார்ப்பவர்களை ஒன்றச்செய்யும் கலையில் தேர்ச்சி பெற்று காணப்படுகிறார். ராஜிவ் மேனனிடம் கற்றுக் கொண்ட புகைப்படக்கலையை மிக நேர்த்தியாக உபயோகித்து எந்த ஒரு இடத்திலும் சோடை போகாமல் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்.

ஆனால், இந்த டயலாக் என்கிற விஷயத்தில் தனது முன்னோடியாக திரு. மணிரத்தினத்தை நினைத்துக் கொள்கிறார் போல. ஆங்கிலத்தில் எழுதி தமிழில் மொழி பெயர்த்தால் இப்படித்தான் வசனம்  வெளிப்படும் என்று நன்றாக தெரிந்திருந்தும், அவரால் அதிலிருந்த மீள முடியவில்லை. அவரே அவரை கிண்டலும் செய்து கொள்கிறார். 

மீனாட்சியம்மாளின் சொத்துக்கள் அனைத்தும் வீராவை வந்தடைய அவன் தன் இருப்பிடத்தை மும்பையிலிருந்து சென்னைக்கு மாற்றிக் கொள்கிறான். சென்னை என்றாலே ஈ.சி.ஆர். ரோடுதான் கொளதம் மேனனுக்கு. அந்த இடம் கௌதம்மை மிகவும் கவர்ந்து விட்டதுபோல. ஈ.சி.ஆர். ரோட்டில் உள்ள ஏதோ ஒரு போர்ட் கிளப்பை காட்டி வீடு என்கிறார். மீனாட்சியம்மாள் அவ்வளவு பெரிய பணக்காரி என்று அப்பொழுதுதான் தெரிகிறது. நியாயமாக ஆளும் கட்சியில் உள்ள எம்.எல்.ஏ.வோ, எம்.பி.க்கோ மட்டும் தான் அப்படிப்பட்டதொரு பிரமாண்ட பங்களா இருக்கும். அப்படியே வேறு யாராவது தனி நபர் ஒருவர் வைத்திருந்தாலும், மிரட்டி பிடுங்கி விட மாட்டார்களா என்ன?

வீட்டிற்குள் நுழையும் வீரா, வேறு கெட்டப்பிற்கு மாறியிருப்பதன் மூலம் சில ஆண்டுகளை கடந்திருக்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும். அந்த விக்கை கழற்றிய பிறகுதான் வீராவுக்கு இயல்பாக இருந்தது. பழைய சிவாஜி படங்களில் உபயோகப்படுத்திய விக்கை கவுதம் ஏன் உபயோகப்படுத்துகிறார் என்கிற யோசனையில் சில காட்சிகளை தவறவிட்டுவிட்டேன். ஒரு காட்சிக்கு இவ்வளவு நேர்த்தி பார்க்கும் கவுதம் இதை எப்படி கவனிக்காமல் விட்டார் என்று தெரியவில்லை.

மீனாட்சியம்மாள் வீராவுக்குள் இருக்கும் சமருக்கு மட்டுமே உருவமாக காட்சி தருகிறாள். இது ஸ்பிலிட் பெர்சனாலிட்டி இல்லை. ஆனால் கிட்டத்தட்ட அப்படித்தான். அந்நியன் படம் பார்த்து தெளிவாக இருந்த பலர் இதைப் பார்த்து குழப்பிக் கொள்வார்கள் என்றே தோன்றுகிறது. வீராவுக்குள் சமர் என்கிற ஒருவன் இருக்கிறான் என்பது ஸ்பிலிட் பெர்சனாலிட்டி, சமருக்கு ஒரு உருவம் காட்சி தருகிறது என்பது என்னவிதமான மனநோய் என்று தெரியவில்லை. அந்த உருவத்துடன் பேசுகிறான். அந்த உருவம் அவனுக்கு பதில் தருகிறது. அந்த உருவம் தீயில் கருகிப் போய், தலைமுடியெல்லாம் இல்லாமல் மொட்டையாக காட்சித் தருகிறது. அதனால் அந்த உருவத்திற்கு அழகான தலைமுடி மீது ஒருவித மோகம் ஏற்பட்டுவிடுகிறது.

இளம் வயதினான வீராவுக்கு பெண்கள் மீதான மோகம் எல்லை கடந்து போக பல பெண்களை காதலித்து தனது வீட்டிற்கு அழைத்து வந்து கத்தியால் குத்தி கொள்கிறான். ஆனால் அவனது மனதில் கொலை செய்வது எல்லாம் மீனாட்சியம்மாள் தான் எனத் தெரிகிறது. மீனாட்சியம்மாளுக்கு அவர்களது முடியை கத்தரித்து காணிக்கையாக கொடுக்கிறான். அது அவனது தாழ்வு மனப்பான்மை. தன்னால் தான் மீனாட்சியம்மாளுக்கு தலைமுடி இல்லாமல் போனது என்ற அவனது உள்மன தாழ்வு மனப்பான்மையே இறந்து போன பெண்களின் தலைமுடியை அவளுக்கு காணிக்கையாக்குவதாகக் காட்டப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் தன்னையே அறியாமல் கொலை செய்கிறான் என்பது சற்று நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது.

இப்படிப் பல பெண்களை கொலை செய்து, சில பெண்களை நிலவறையில் அடைத்து வைத்து சித்ரவதைசெய்து என கதை நகர்ந்து கொண்டிருக்கையில் சமீரா ரெட்டி வருகிறார். இதுவரை தன்னிடம் இருந்ததெல்லாம் இன்பாக்சுவேஷன், இப்பொழுது வந்தது தான் காதல் என்று சமீரா ரெட்டியை கண்டதும் உணர்கிறான் வீரா. அவளுடன் உண்மையாக வாழ நினைக்கிறான். ஆனால் சமீரா ஏற்கனவே வேறு ஒருவனை காதலிக்கிறாள். சில நாட்களாக சமீராவையும், அவளது காதலனையும் பின்தொடரும் வீரா, ஒருநாள் சத்யம் தியேட்டருக்கு காதலனுடன் படம் பார்க்கச் செல்கையில் பின் தொடர்கிறான். சமீராவின் காதலனை தியேட்டரிலிருந்து மொபைல் மூலமாக வெளியே அழைத்து அவனது கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, அவனைக் காணாமல் தேடி வரும் சமீராவை நயமாக பேசி கடத்திச் செல்கிறான். கடத்திச் செல்லும் போது ஏற்பட்ட கைகலப்பில் சமீராவை கத்தியால் வயிற்றில் குத்தி விடுகிறான். ஆனால் குத்தியது வீரா இல்லை, சமர் என்று விடும் கதை, சாரி சொல்லும் கதை சற்று நம்ப முடியாததாக உள்ளது. குத்திய சமர் மயக்கம்போட்டு விழுந்துவிடுகிறான்.

நைட் பாரா வரும் போலீஸ் அதிகாரி ஒருவர் ஒரு கார் சாலையோரமாக நின்றிருப்பதைப் பார்த்து தட்டுகிறார். அப்பொழுதுதான் தூக்கத்தில் இருந்து எழுவது போல வீரா மயக்கத்தில் இருந்து எழுகிறான். போலீசிடம் மாட்டிக் கொள்கிறான். அப்போது வீரா தப்பிக்க முயற்சி செய்கிறான். தப்பிக்கும் முயற்சியில் 2 போலீஸ்காரர்களை சுட்டுவிடுகிறான். போலீசை சுடும் அந்தக் காட்சிதான் படத்தின் முதல் காட்சி.

பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமீராவை போலீஸ் உடையணிந்து சென்று கடத்திச்செல்கிறான். வயிற்றில் காயத்துடன் இருக்கும் சமீராவை தோளில் துண்டை போட்டுச்செல்வது போல்தனது வீட்டிற்குள் தூக்கிச்செல்கிறான் வீரா. சமீராவும் ஏதோ வயிற்றுவலி வந்தது போல் வயிற்றைப் பிடித்துக் கொண்டு தப்பிக்க முயற்சிக்கிறார். கௌதம் இந்தக் காட்சியில் தான் படத்தின் மொத்த கட்டமைப்பையும் வெளிப்படுத்துகிறார். இவ்வளவு நாள் மீனாட்சியம்மாளிடம் பேசிக் கொண்டிருந்தது எல்லாம் வீராவின் கற்பனை என்பதை இந்தக்காட்சியில் தான் கௌதம் பகிரங்கப்படுத்துகிறார். சமீரா தான் மாட்டிக் கொண்டிருப்பது ஒரு மனநோயாளியிடம் என தெரிந்து கொண்டு தப்பிக்க முயற்சிக்கிறாள்.

டகாஷி மைக் என்கிற ஜப்பானிய  இயக்குனரின் புகழ்பெற்ற திரைப்படமான ஆடிஷன் என்ற திரைப்படத்தின் இறுதிக்காட்சி, வீரா தன் கற்பனைக் கதாபாத்திரத்துடன் பேசும்போது அமைக்கப்பட்ட காட்சியோடு ஒப்பிடத்தக்கது. ஆண்டனியின் எடிட்டிங் இந்த இடத்தில் மொழியால் சொல்ல முடியாத வார்த்தைகளை அழகாக பேசிச் செல்லும். சில விஷயங்களை உணர மட்டுமே முடியும். அது போன்றதொரு அற்புதமான காட்சியமைப்பு அது.

இறுதிக்காட்சியில் நிலவறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்கள் காட்டப்படுகிறார்கள். வீராவின் அத்தனை கொடூரங்களும் பகிரங்கப்படுத்தப்படுகிறது. போலீஸ் அதிகாரி ஒருவரின் முயற்சியின் பெயரில் சமீரா காப்பாற்றப்படுகிறாள்.

சற்று மொக்கையான விஷயம், இறுதிக்காட்சியில், மனநோயாளிகள் கொலைசெய்யும் பொழுது தங்கள் நிலையில் இருப்பதில்லை என்று கூறுவது. அவர்களால் செய்யப்படும் கொலைகளுக்குஅவர்கள் பொறுப்பல்ல என்று சொல்வது மட்டுமல்ல, வீரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் பொழுது மற்றொரு பெண் மனநோயாளியைப் பார்த்து வினோதமாக சிரித்துக்கொள்வது. ஏலியன் திரைப்படத்தில் தான் இதுபோன்ற காட்சிகளை பார்த்திருக்கிறேன். ஏலியன்கள் மனித உருவத்தில் இருக்கும். பெண் உருவத்தில் இருக்கும் ஏலியன், மற்றொரு ஆண் ஏலியனை தனக்குள் அடையாளம் கண்டு கொண்டு அவனைப் பார்த்து வினோதமாகச் சிரிக்கும். காதலர்கள் தங்கள் இனத்தை தேடி கண்டுபிடித்துக் கொள்கிறார்கள் என்ற கருத்தை மனநிலை பாதிக்கப்பட்டவர்களிடையே எடுத்துக்காட்ட நினைத்தது மொக்கையாக இருந்தது.

கௌதம் மேனனின் மேக்கிங் அவரது மற்ற படங்களை விட சிறப்பாக அமைந்திருக்கிறது. கதையை பொறுத்தவரை தமிழகத்திற்கு சற்று பொருந்தாததாக மட்டுமல்லாமல், யார் மனதிலும் ஒட்டாமல் சென்று விடுகிறது. படம் ஒரு மோசமான உணர்வை ஏற்படுத்துவது உண்மைதான் என கௌதமே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். கதையின் மையம் அப்படிப்பட்ட காட்சிகளை அமைக்கவே உதவியாக இருந்திருக்கும் போல. ஆனால், நடுநிசிநாய்கள்போன்ற புதுமையான மேக்கிங் கொண்ட திரைப்படங்கள் தான் திரைப்படங்களை அடுத்தக்கட்டத்துக்கு அழைத்துச்செல்வதற்கான துணிவையும், உற்சாகத்தையும் கொடுக்கும். பல இளம் இயக்குனர்கள் உத்வேகம் அடைந்திருப்பார்கள் என்பது மட்டும் உண்மை.

கட்டுடைக்கும் ஆர்வம் யாருக்கேனும் எங்காவது, எப்பொழுதாவதுதான் ஞானம் உண்டானது போல் ஏற்படும். அதையும் தட்டிக் கழித்து, சமுதாயம், பாரம்பரியம், ஒழுக்கம் என்று கூறி அமுக்கி விடக்கூடாது என்பது தான் என் வேண்டுகோள்.