இன்றைக்கு காலையில் முதல் ஆளாகப் போய் நடுநிசி நாய்களைப் பார்த்து விட வேண்டும் என்பது எனக்கு நாலைந்து நாட்களாகவே மனசுக்குள் உந்திக்கொண்டிருந்தது. பார்த்தும் விட்டேன். ஆனால், என்னால் என் வாழ்கையில் ஏதாவது ஒரு நாளை மீட்டெடுக்க முடியும் எனில், நான் இன்றைக்கு காலை இந்தப் படத்தை பார்த்த அந்த 2 மணி நேரங்களைத் தான் மீட்பேன்.

சமர் என்னும் ஒரு சிறுவன் 13 வயதாகும் பொழுது ஏற்கனவே தாயை இழந்தவனுக்கு தந்தையின் போதைப்பழக்கமும், தவறான உறவுகளும் அறிமுகப் படுத்தப்படுகின்றன. அவனைக் காப்பாற்ற வரும் பக்கத்து வீட்டுப் பெண் மீனாக்ஷி மூலம் காவல்துறைக்கு த்கவல் கிடைக்க தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்து போகின்றார் அவன் தந்தை.

nadunisi_naaykal_350அதன் பின் சமர் என்னும் வீராவை தன் பொறுப்பில் வளர்க்கும் மீனாக்ஷியிடம் 5 வருடங்கள் நல்ல பிள்ளையாக இருக்கும் வீரா, அதன் பின் அவனைத் துரத்தும் பழைய எண்ணங்கள், கனவுகளால் அவளை நிர்பந்தித்து உறவு கொள்கிறான். அவனை தன்னிடமிருந்து விலகும்படி சொல்லும் மீனாக்ஷி, தன் பழய நண்பரொருவரைத் திருமணம் செய்கிறாள். முதலிரவின்பொழுது அந்த கணவனைக் கொன்று விட்டு, மீனாக்ஷியை தன்னுடன் வரும்படி கேட்கிறான் வீரா.

அந்த இரவில் படுக்கையறை தீப்பிடித்து எரிய, இறந்து விடுகிறாள் மீனாக்ஷி. நிஜத்தில். ஆனால் வீராவைப் பொருத்த வரை அவள் கோர உருவத்துடன் அவனை மன்னித்து அவனுடன் சென்னை வந்து ஆளற்ற பண்ணை வீட்டில் வசிக்கிறாள்.

தனக்கு அறிமுகமாகும் பெண்களை மீனாக்ஷிக்காக கொல்வதாக நினைத்து கொன்று விடும் வீரா, கடைசியாக தன்னுடன் படித்த பள்ளி தோழி சமீராவை அவளது காதலனுடன் சினிமா பார்க்கும் போது அவனைக் கொன்று அவளை கடத்தி வருவதும், அவனது மனம் பிறழ்ந்த அட்டகாசங்களுக்கும், அடுத்தடுத்த பல கொலைகளுக்குப் பின் ஒரே ஒரு காவலதிகாரியால் சமீரா கடைசியில் மீட்கப்பட, சமர் என்னும் வீரா மன நோயாளி என்று ஒரு மருத்துவர் அதற்கான காரணம் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை என படத்தை முடிக்கிறார்.

கண்டனங்கள்:

(1) முதலில் இது அபத்தங்களின் குவியல். எதைச் சொல்ல வருகிறோம் என்ற நேர்மையற்ற ஒரு அப-படைப்பு தான் நடுநிசி நாய்கள். மனித மனம் கட்டவிழ்க்கப் படுகிறது..என்ற விளம்பரம் வேறு... இது என்ன சொல்ல வருகிறது..? எல்லாமுமே எதிர்மறையான பாத்திரங்கள். மேலோட்டமான கதை சொல்லல். சம்பவங்கள் எதிலும் நம்பிக்கை வராத அளவுக்கு அபத்தங்களின் தொகுப்பாக வடிவமைக்கப்பட்ட காட்சிகள்.

2) அச்சமுண்டு அச்சமுண்டு எனும் ஒரு படம். அது குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றி எப்படி அழுத்தமாக தனது பதிவுகளை வைத்தது. இயக்குநர் முதலில் அதைப் பார்க்கட்டும்.

3) மன்மதன்-அதற்கு முன்னால் சிகப்பு ரோஜாக்கள்/மூடுபனி.. இவை எல்லாமும் மனநிலைப் பிறழ்வுகளை முன்வைத்த படங்களே. அதே போல அன்னியன்-சந்திரமுகி இரண்டும் ஸ்ப்லிட் பெர்சனாலிட்டி மற்றும் மல்ட்டி பெர்சனாலிட்டி டிசார்டர் எனப்படும் பன்முக மனநிலை-ஆளுமைப் பிறழ்வைப் பேசிய வணிகப் படங்கள்.  அதன் கலவையாக... மிகவும் மேலோட்டமாக இருக்கிறது வீரா/சமர் பாத்திரங்கள். பார்த்திபனின் குடைக்குள் மழையை விடவும் அடாசான படம்தான் இந்த நாய்கள் படம்.

4) மீனாக்ஷி இறப்புக்கு முன்/அவள் கணவன் கொல்லப்பட்ட பின்/அவள் தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட பின், உண்மையில் ஒரு வாக்குமூலம் தந்து ஏன் வீரா என்னும் மிருகத்தைப் பற்றி காவல்துறையினரிடம் எதுவும் சொல்லவில்லை. ஒரு வேளை.. அவளும் அந்த விபத்தில் இறந்து இருந்தால்.. காவல்துறை ஒரு சாதாரண விசாரணை மேற்கொண்டிருந்தாலே போதுமே. வீராவை
விசாரித்து/அவனைப் பிடித்திருக்கலாம். இந்த இடங்களில் தாவிக் குதிக்கிறது திரைக்கதை.

5) மீனாக்ஷியின் வக்கீல் என்ற பாத்திரம் வருவது குழப்பக்கூடியதாகவே உள்ளது. அவர் எப்படி மீனாக்ஷியின் சொத்துக்களை சமர் பெயருக்கு மாற்றுகிறார்..?

6) ஆளற்ற அந்த பண்ணை வீட்டில் தானியங்கிக் கதவு வரை மிக வசதியாக வாழும் சமர்.. அந்த வீட்டில் தான் மட்டும் வாழ்வது எங்ஙனம்..? யாரையும் சாராமல் ஒருவன் வருடக்கணக்கில் வாழ்வதே அவன் மன நிலை பிறழ்வதற்கு போதும் என நினைக்குமளவுக்கு அப்படி ஒரு தனிமை நம்பும் வண்ணம் இல்லை.

7) இரண்டு வருட காலம் இரண்டு பெண்களைக் கொணர்ந்து, நிலவறையில் பூட்டி வைத்து இருக்கிறான் சமர். சில பெண்களைக் கொலையும் செய்து  இருக்கிறான். யாருக்குமே...காவல்துறை உட்பட அவன் மீது சந்தேகமே இல்லை என கதை விடுவது நகைப்புக்குரியது.

8) நடுநிசி நாய்கள் திரைப்படம் முழுக்க செயற்கையாகவும், முழுக்க சம்பவங்கள் அனைத்தும் இயக்குனரின் ஆசைப்படி மட்டும் பயணிக்கிறது. உதாரணத்துக்கு, மீனாக்ஷி திருமண முடிவு எடுத்த பிறகும் புதுக்கணவன் வரக்கூடிய  சந்தர்ப்பத்தில், தன்னை ஏற்கனவே ஒருமுறை பலாத்காரம் செய்த அல்லது விரும்பாமல் தன்னை உறவுகொள்ள வற்புறுத்திய ஒருவனை எப்படி தன்னுடனும் தனது கணவனுடனும் வசிக்க அனுமதிப்பாள்..?

9) அது வரை மீனாக்ஷி உயிருடன் இருப்பதாக காட்டும் இயக்குனர், திடீரென அவளது நினைவு, வீரா என்கிற சமர் தான் அந்த மீனாக்ஷி எனக் காட்டுவது மகா அபத்தங்களின் உச்சம். மந்திரப் புன்னகை படத்தில் கரு.பழனியப்பன் தனது தந்தை இறந்த பிறகும் அவருடன் பேசுவதாகக் காட்டியிருப்பார்.
அதைக்கூட ஏற்க முடியும்.

10) இதில் என்ன நீதி சொல்ல வருகிறார் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன்..? இந்தப் படத்தை மனநிலை பிறழ்ந்த வசதியானவர்கள் பார்த்தால் அவர்களுக்கு மட்டும் தான் பயன் இருக்கும். ஏற்கனவே படம் பார்த்து விட்டுக் கொலை செய்த வரலாறு.. கொள்ளை ஆட்கடத்தல் போன்றவற்றை பாடம் படிப்பது போல சினிமாவைப் பார்த்து முயற்சித்த வரலாறு இதே தமிழ்நாட்டில் உண்டு. நடுநிசி நாய்கள் - மனிதர்களை மனநோயாளி ஆக்கிடும் சந்தர்ப்பம் தான் உள்ளது என்னும் ஒரு காரணத்துக்காகவே இந்தப் படத்தை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்வதைத் தவிர... இந்த விமர்சனத்துக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.

11 )வருத்தத்துக்கு உரிய ஒரு பின் இணைப்பு. நான் கவுதமின் மிகத் தீவிர ரசிகன். அவரது மின்னலே, காக்க காக்க, வாரணம் ஆயிரம் ஆகிய படங்களை என் வாழ்வில் சினிமா மீது நான் கொண்ட காதலைத் தக்க வைக்க கிடைத்த பிராணவாயுவாகவே நான் கருதுபவன். ஆனால்...அவை வேறு. என் நெஞ்சறிவது பொய்யற்க என வாழும் என்னால்.. இந்த ஒரு அபத்தமான திரைக்குப்பையை எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ள முடியவில்லை. எண்பது ரூபாய் செலவழித்தவன் என்ற நுகர்வாளன் அடிப்படையிலும், சினிமாவைக் காதலிப்பவன் என்ற அடிப்படையிலும், நல்ல சினிமாக்கள் வந்தால் அதை இரு கண்களாலும் தாங்கி இதயத்திலிருந்து பாராட்டத் தயங்காதவன் என்ற முறையிலும் நடு நிசி நாய்கள்... கண்டிக்கப்பட வேண்டிய.. புறக்கணிக்கப்பட வேண்டிய.... முடிந்தால் ரீ கால் எனப்படும் திரும்பப் பெற வேண்டிய அபத்தமான, வக்கிரமான படம்.

12) இந்த திரைப்படத்தை சென்சார் செய்த அதிகாரிகளுக்கு.... (அவர்கள் வெட்டியதை நாம் பார்க்கவில்லை.அவர்கள் பார்த்திருப்பார்கள்) எனது மனமார்ந்த வருத்தங்கள்.

13) ஒரு பிரார்த்தனை: மீண்டும் வாழ்த்துமளவுக்கு மீண்டு வர...கௌதம் வாசுதேவ் மேனன் அவர்களுக்காக இருந்த/ இருக்கிற/ இல்லாத தெய்வங்கள்/ அனைத்தையும்/ வேண்டுவோம்.