கார்ப்பரேட் மற்றும் அதிகாரக் குடும்பக் கம்பெனிகள் தமிழ் சினிமா உலகில் உருவாக்கி வரும் சீர்கெட்ட நச்சுச் சூழலிலும்கூட அவ்வப் போது அத்திப்பூத்தாற்போல சில அசலான சினிமா முயற்சிகள் நடக்கத்தான் செய்கின்றன. அவ்வகை நல்ல முயற்சிகளில் உண்மையிலேயே நம்மை வியப்பிலாழ்த்தும் கலை முயற்சிதான் அண்மை யில் வெளிவந்து, நல்ல சினிமாவுக்காக ஏங்குவோரின் தாகம் தணித்திருக்கும் சீனு ராமசாமி யின் ‘தென்மேற்குப் பருவக் காற்று’.

தேனி மாவட்டத்து கிராமத்தில், ஒரு குறிப் பிட்ட சமூகப் பின்னணியில் இயங்கும் கதை. அதன் மையமாக வீராயி என்ற ஒரு பெண். அவள் வியர்வை சிந்தி உழைக்கும் ஒரு தாய். கிராமத்தில் பெரிய அளவு படிப்போ, பொறுப்போ இல்லா மல் ஊரைச் சுற்றும் மகன் முருகையன் மீது பாசத்தை உயிராக வைத்திருக்கும் ஒரு தாய். கணவனை இழந்த வீராயியிக்கு ஆதாரமாக ஒரு துக்காணி நிலம். சதா அந்த நிலத்தில் வேலை செய்வதும் தன் மகனுக்காக ஊராரிடம் சண்டைக்குப் போவதுமே வாழ்க்கையாகிப் போன அவளின் பாசத்தின் நடுவே அதனைப் பங்கு போட வருகிறாள் பக்கத்து ஊரின் ஆடு களவாடும் குடும்பத்தைச் சேர்ந்த இளம் நாயகி பேச்சி. தாயின் சம்மதம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவளையே மணப்பது என்ற உறுதியுடன் நாயகன். இப்படி மட்டுமே ஒரு கதை பின்னப்பட்டிருந்தால் இதுவும் ஒரு சராசரி தமிழ்க் காதல் சினிமாவாக பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும். ஆனால், அன்பும் முரட்டுத்தனமும் சுபாவமாகிப் போன ஒரு சமூகத்தின் மனசாட்சியாகவே இந்தப் படத்தைத் தரம் உயர்த்தியிருக்கிற பெருமை இதன் இளம் இயக்குநரையே சாரும்.

காதலுக்கும் காமத்துக்கும் அதிக வேறுபாடில் லாமல் விரச சமாச்சாரங்களுக்கு மட்டுமே பெண் ணையும் அவளது உடலையும் உபயோகப் படுத்திக் கொள்கிற தமிழ் சினிமாவில் ஒரு துளியும் ஆபாச மில்லாமல், ஒரு குத்துப் பாட்டில்லாமல், கிராமத்துக் காதலர்கள் ஒருவரை யொருவர் நினைத்துக்கொள்வதாகக் காட்டி, வயலோர பம்ப் செட் தொட்டிக்குள் நாயகியை ஈரம் சொட்டச் சொட்ட நனைய விடும் கனவுப் பாட்டில்லாமல் இப்படியும் ஒரு தமிழ்ப் படமா! இத்தனைக்கும் படம் முழுவதும் பெண்ணே முன்நிற்கிறாள். அவள் உழைக்கிறாள். அவளது அன்பு தூயதாக இருக் கிறது. ஆம், அது தாய் என்ற பெண்ணின் அன்பாக இருக்கட்டும், காதலி என்ற பெண்ணின் அன்பாக இருக்கட்டும். இரண்டுமே அப்பழுக்கில்லாமல் இருக்கின்றன. இப்படி யொரு தமிழ்ப்படத்தை இந்த வியாபார யுகத்தில் எடுக்கத் துணிவு வேண்டும். சீனு ராமசாமியிடம் அந்தத் துணிவைப் பார்க்கமுடிகிறது. சபாஷ்! தயாரிப்பாளர் கேப்டன் சிபு ஐசக்கிற்கு நன்றி.

படத்தின் கதாப்பாத்திரங்கள் எல்லாருமே வெகு எளிமை. காரணம் கதையும் அத்தனை எளிமையாக இருக்கிறது. கணவனை இழந்த வீராயியாகவே சரண்யா பொன்வண்ணன் வாழ்ந் திருக்கிறார். தூரத்துச் சொந்தத்தில் மகனுக்கு தான் பார்த்த பெண்ணை விட்டுவிட்டு வேறொரு பெண் மீது அவனுக்குக் காதல் என்று அறிகிற இடத்தில் அவர் காட்டும் கோபமும் இயலாமையுமான நடிப்பு அபாரம். அதிலும் குறிப்பாக, “என்னை மீறி அவளைத்தான் நீ கட்டிக்குவேன்னு சொன்னே உங்க ரெண்டுபேரோட சங்கையும் அறுத்துப்புடுவேன்” என்று பல்லைக்கடிக்கும் இடம் கூடுதல் அழுத்தம்.

இருட்டில் ஆடு திருட வருகிற கூட்டத்தை அடையாளம் காண முயற்சிக்கிறபோது தன் கைக்கு அகப்பட்டது யார் என்பதை முகமூடியை நீக்கிப் பார்க்கிற கதாநாயகனுக்கு அது ஒரு பெண் என்று தெரிந்ததும் அந்த முகத்தை மறக்கமுடியாமல் அவன் படும் அவஸ்தை படு இயல்பு. நாயகன் முருகையனாக வரும் விஜய் சேதுபதி நல்ல தேர்வு. தான் காவல் காக்கும் ஆட்டுப் பட்டியில் ஆடு திருடி யவர்களைக் காவல்துறையினரிடம் அடையாளம் காட்டும் சாக்கில் அந்தக் கூட்டத்தில் வந்து தனது மனதையும் சேர்த்துத் திருடிச் சென்ற பேச்சியை காவல்துறையின் வாகனத்திலேயே போய் ஊர் ஊராகத் தேடுவது, மினிபஸ் பிடித்து, மாற்றுத் திறனாளியான தனது நண்பன் உதவியுடன் அவளைத் தேடி அலைகிறபோது எதிர்பாராத விதமாக அவள் அவன் கண்ணில் பட்டுவிட, தூங்கிக் கொண்டிருக்கும் நண்பனைக்கூடப் பொருட்படுத்தாமல் பஸ்ஸிலிருந்து இறங்கி அவளைப்பிடிக்கத் தலைதெறிக்க ஓடுவது, அவனிடமிருந்து தப்பிக்கும் பேச்சி, தான் ஓட்டிவந்த சைக்கிளைத் தூக்கி ஊர்ப் பள்ளிக் கூடத்துக்குள் அனாயசமாக வீசியெறிந்து விட்டு, சுவரேறிக் குதித்துத் தப்பிவிட, பள்ளியின் காவலர் என்னப்பா பெண்பிள்ளைகள் படிக்கிற பள்ளிக்கூடத்துக்கு முன்னால் வந்து என்ன செய்கிறாய் என்று கேட்கும் போது, இந்தப் பள்ளிக்கூடம்தான் என் முன்னால் நிற்கிறது என்று சொல்வதும், அவள் அகப்பட்ட போது அவளிடம் பேச்சுக் கொடுக்க, அவன் அசந்த நேரத்தில் அவன் கண்களில் அவள் மண்ணள்ளிப் போட்டுவிட்டுத் தப்பியோட, மண் அப்பிய கண் களோடு நட்ட நடு கண்மாயில் நின்று கொண்டு அவள் போன திசை தெரியாமல் விழிப்பது, ஒரு புறம் தாயின் பாசத்தாலும், மறுபுறம் தான் விரும்புகிற பெண்ணை அடைய முடியுமா என்ற தவிப்பாலும் படாத பாடு படுவது என்று படத்தின் ஒவ் வொரு ஃபிரேமிலும் மிடுக்கோடு, தேனி பக்கத்து கிராமமொன்றின் இளைஞனையே நம் கண்முன் காட்டிவிடுகிறார் புதுமுகம் விஜய் சேதுபதி. அவருக்கு நண்பனாக வரும் அந்த மாற்றுத் திறனாளி இளைஞர் ‘தீப்பெட்டி’ கணேசன் ஒரு அற்புதம். ஊனத்தை வைத்து தரம் தாழ்ந்த காமெடி பண்ணவில்லை இயக்குநர். அதே சமயம் மெல் லிய நகைச்சுவையுணர்வு இழையோட அந்த இளைஞர் நடத்துவது பாசம் நிறைந்த ஒரு சாம் ராஜ்யம். அதில் கலகலப்பும் இருக்கிறது, பொறுப்பும் இருக்கிறது.

ஆடு திருடுவதையே தொழிலாகக் கொண்ட அந்தக் குடும்பத்தின் சகோதரர்கள் படு முரடு. அதிலும் அந்தத் தாடிக்காரருடையது அசத்தலான நடிப்பு.

அவர் தன் தங்கை பேச்சியிடம்,“இந்தா பார் பேச்சி, நீ அவனக் கட்டிக்கிட்டே, அப்புறம் நான் உன்னை ஒன்னும் செய்ய மாட்டேன். ஏன்னா நீ நாங்க வளர்த்த செல்லம். ஆனா அந்தப் பயலக் கண்டந்துண்டமா வெட்டாம விடமாட்டேன்” என்று சொல்லுமிடத்தில் அவர் காட்டும் முக பாவம் தேர்ந்த நடிகருக்குரியதாகவே இருக்கிறது.

காதலில் உறுதியாக இருக்கும் நாயகி பேச்சி, தன் காதலனை அண்ணன் கொன்றுவிடுவதாகச் சொன்னதைக் கேட்டபின் அவனது தாயிடம் வந்து, “உன் புள்ளய நீயே வச்சுக்க. நான் கட்டிக்கிடல. நான் கட்டிக்கிட்டா என் அண்ணன் அவரைக் கொன்னுபோட்டுரும்... உனக்கு உன் மகன் உசிரு எப்படி ஒசத்தியோ அப்படித்தான் எனக்கும் அவரோட உசிரு ஒசத்தி” என்று சொல்லும் காட்சி புதியது. பேச்சியாக வரும் புதுமுகம் வசுந்தராவின் கண்கள்கூட நல்ல நடிப்பைக் காட்டுகின்றன. அதைக் கேட்கும் சரண்யா அலட்டிக் கொள்ளாமல் அவளை வீட்டுக்குள்ளே போகச் சொல்வதும், “எங்கே வறாங்கெ உன் னொண்ணங்கெ?” எனக் கேட்பதும் அருமை. படத்தில் இப்படி நிறைய எதிர்பாராத தருணங்கள்.

கதைக்கு எஃக்கு உறுதி சேர்க்கின்றன வசனங்களும், பாடல்களும். படத்தின் கதையோடு லாவகமாகக் குழைந்து அதன் ஆன்மா வாகவே ஒலிக்கின்றன வைர முத்துவின் பாடல் வரிகள். ரொம்ப நாளைக்குப்பின் இப்படியொரு சுகானுபவம். அதன் உயிர் உணர்ந்து இசையமைத் திருக்கிறார் என்.ஆர். ரஹ்நந்தன். சரண்யாவின் சுருக்குப் பையைக் கண்டெடுத்து அதை அவரிடமே சேர்க்க வரும் பேச்சியிடம் “திருட்டு முண்டே, நான் வெட்டுடைய காளி கோயிலில் காசு வெட்டிப் போட்டுடுவேன் என்ற பயத்தால தான நீ திருடின இந்தச் சுருக்குப் பையைத் திருப்பிக் கொடுக்க வந்தே?” என சரண்யா கேட்க, “இதபாரு, எனக்கு வெட்டுடைய காளியெல்லாம் தெரியாது. இந்தக் காசு என்னோடதில்ல... அதான் கொடுத் துட்டுப் போகலாம்னு வந்தேன்” என்று நாயகி சொல்வது நயம் மட்டுமல்ல... உழைப்பாளி மக்களின் வெள்ளை மனசைக் காட்டும் நல்ல காட்சியும்கூட.

அதேபோல, நாயகி நாயகனிடம்,“நான் களவாணி குடும்பத்தச்சேர்ந்தவள் என்பதால என்னை லேசா எடுத்துறலாம்னு நினைச்சிடாதே” என்று சொல்லுமிடத்தில் மண் மணக்கிறது.

சரண்யாவைத் தவிர படத்தில் எல்லோருமே புதியர்கள். அவர்களிடமிருந்து வெளிப்படும் பண் பட்ட நடிப்பு இயக்குநரின் உழைப்பை பறை சாற்றுகிறது.

எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறது அந்தக் கடைசி காட்சிகள். வயிற்றிலே கத்திக் குத்துப்பட்டும் கலங்காமல் தானே பஸ்ஸில் போய் பெரிய ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிற தைரியமும் உறுதியும் வேறு யாருக்கு இயலும்? அதிலும், வீராயி சாவதற்கு முன்னால் மகனுக்குச் சொல்லும் அறிவுரை மகனுக்கு மட்டுமானதா? “போதும்டா... பழி உணர்ச்சியால நாம வாழாமலே போயிட்டோம்...” என அந்தத் தாய் சொல்வது அனுபவத் தின் குரல்.

படத்தின் துவக்கத்தில் கிடாய்ச் சண்டையின் போது அடித்துக்கொள்கிற இளைஞர்களைப் பார்த்து ஒரு கிழவி ‘இவங்கெ திருந்தவே மாட்டாங்கெ’ என்று போகிறபோக்கில் சொல் கிறாள். இறுதியில், ‘இல்லை... அனுபவங்கள் எதிலும் மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிக்கும்’ என்று சொல்லாமல் சொல்கிறது படம்.

ஒரு அசலான தமிழ்ப்படமாக இந்தத் தென்மேற்குப் பருவக்காற்று நம்மை வருடச் செய்த இயக்குநர் சீனு ராமசாமி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் திருப்பரங்குன்றம் கிளையின் விளைச்சல் என்பதுவும் நம் பெருமைக்குரியதுதானே? தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக இருகரம் கொண்டு வரவேற்க வேண்டும். குடும்பத் தோடு சென்று பார்க்க வேண்டும்.

- சோழ.நாகராஜன்

(செம்மலர் ஜனவரி 2011 இதழில் வெளியானது)