டிசம்பர் 25, 1968ஆம் வருடம். அன்று கீழத்தஞ்சையில் உள்ள வெண்மணியில் நடந்தேறிய கொடூரத்தை பின்னணியாகக் கொண்டு புனையப் பட்டது இத்திரைப்படம். இது காதல், நகைச்சுவை, சண்டைக்காட்சிகள் போன்ற செறுகல்கள் கலந்த சினிமா.

அந்தக் காலகட்டத்தில் நிலப் பண்ணையார்கள் ஆடிய ஆட்டங்கள், அட்டகாசங்கள், தலித் விவசாயத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட ஒடுக்குமுறைகள் மற்றும் அத்துமீறல்களை அப்படியே படம்பிடித்து காட்டுகிறது திரைக்கதை. இதில் இளம்பெண்களுக்கு நேரும் பலாத்காரங்களும் அடங்கும். அன்றைய சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் எப்படி ஆளும் வர்க்கம் - குறிப்பாக காவல்துறை நிலப்பிரபுக்களுக்கு ஏவல் பட்டாளமாகத் திகழ்ந்தது என்பதனையும் ‘நெல்லு’ வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தீண்டாமைத் திமிரும், மேல்ஜாதி வெறியும் தாண்டவமாடுவதைக் காண முடிகிறது.

நீறுபூத்த நெருப்பாய்க் கனன்று கொண்டிருக்கும் குமுறல்கள் நேரடி மோதல்களை உருவாக்குகின்றன. எட்டணா கூலி உயர்வுக் கோரிக்கை நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கும் விவசாயத் தொழிலாளர் சங்கத்திற்கும் இடையே உள்ள உரசலின் வெடித்திரியாக மாறுகிறது.

நிலப்பண்ணையார்களை பிரதிநிதித்துவப்படுத்தித் தலைமை தாங்குவது பெரியதம்பி பண்ணையார் - அடியாள் பலம், அதிகார பலம் படைத்த வெறி நாய். தலித் விவசாயத் தொழிலாளிகளின் கொந்தளிப்பை முன்னின்று நடத்துவது முரட்டுக்காளை கதிர், மோதலின் உச்சக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் ஒரு பூட்டிய ஓலைக் குடிசைக்குள் உயிரோடு பொசுக்கப்படுகின்றனர். கதாநாயகனும், நாயகியும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இத்துடன் திரைப்படம் முடிவடைகிறது.

உண்மையில் கோபாலகிருஷ்ண நாயுடுவை (படத்தில் நல்லதம்பி பண்ணையார்) நீதி மன்றம், இவ்வளவு செல்வம், நிலபுலன்கள், வசதிகள் படைத்தவர் இப் பாதகச் செயலில் ஈடுபட்டிருக்க முடியாது என்று சொல்லி விடுவித்தது! பின்னர் சில வருடங்களுக்குப் பிறகு கொலை செய்யப்பட்டார். இக்கொலைக்குப் பின்னால் அநீதிக்கு எதிரான கோபாவேசம் காரணம் என்று சொல்லப்படுகிறது. இத்தகவலையும் படத்தின் முடிவில் பதிவு செய்திருந்தால் பார்ப்பவர்களின் மனதில் உண்டான கனம் குறைந்திருக்கும் என்று தோன்றுகிறது.

புது இயக்குனர் எம்.சிவசங்கர் ஒரு சிக்கலான கதையை மிகுந்த கவனத்துடன் நகர்த்தி, நேர்த்தியாக வடிவத்திருக்கிறார். இப்பணியில் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் மற்றும் ஒளிப்பதிவாளர் கண்.செந்தில்ராஜ் உறுதுணையாக இருந்துள்ளனர். கதைக்கும், காட்சிக்கும், பாடலுக்கும் ஏற்ற உணர்வை ஏற்றுவதில் இவ்விருவரின் பங்குமே வெகு சிறப்பு.

அறிமுக கதாநாயகன் சத்யா தன் உடலமைப்பாலும், பாவனையாலும் பாத்திரத்திற்கேற்ற முரட்டு கோபத்தையும், அநீதிக்கெதிரான வீரத்தையும் கண்முன் நிறுத்துகிறார். பண்ணையர் பெரிய தம்பி வேடத்திற்காகவே பிறந்தவர்போலவே ஓஏகே நடித்திருக்கிறார். மற்றபடி கதாநாயகி பாக்யாஞ்சலி, எடுபிடி எம்.ஆர்.ஆர்.வாசு விக்ரம், டீக்கடைக்காரர் கார்த்திக் ஜெய்(தயாரிப்பாளர்) ஆகியோர்களும் பாத்திரங்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர். இதைத் தவிர சிறிய பாத்திரங்களை செய்தவர்களும் தேர்ந்த நடிப்பை காட்டியுள்ளனர்.

இதைத்தவிர பல ரசமான கிராமத்துக் கதாபாத்திரங்கள் உலவவிடப்பட்டுள்ளனர். இவர்களின் நகைச்சுவை பங்களிப்பு இப்படத்தின் சிறப்பம்சம். நகைச்சுவை காட்சிகள் திரைக்கதையின் மையப்போக்கினை எவ்விதத்திலும் பாதிக்காமல் அமைந்தது இன்னொரு சிறப்பு. படத்தின் லொகேஷன் மிக அருமை. செயற்கை ஜோடனைகள், சாயங்கள் இல்லாத நிஜ கிராமம், தெருக்கள், வீடுகள், குடிசைகள். இதற்கு ஒரு விசேஷ சபாஷ்.

குறைகள் என்று சொல்லப்போனால், பிற்பகுதியில் திணிக்கப்பட்டுள்ள நீண்ட குழந்தைகளின் நையாண்டி பாட்டு, அதை ஒட்டியே இன்னொரு காதல் -கனவு பாட்டு, மிகுந்த சோர்வை ஏற்படுத்துகிறது. மற்றொன்று உண்மைச் சம்பவங்களுக்கு பின்னால் பாடுபட்ட அரசியல் சக்தியின் அடையாளத்தை காட்டுவதில் உள்ள தயக்கம்.

ஆனால் ஒரு உண்மை நிகழ்ச்சியின் பின்னணியில் உருவாக்கப்படும் திரைக்கதை. உண்மைகளை சிதைக்கக்கூடிய அபாயம் அதிகம். அதற்கான நிர்ப்பந்தங்கள் ஏராளம். ஆனால் அந்த அபாயத்தைத் தவிர்த்து, ரசனையும் குன்றாமல் ‘நெல்லு’வை படைத்ததற்கு இயக்குனரையும், இம்முயற்சிக்கு துணிச்சலாக முன்வந்த தயாரிப்பாளரையும் பாராட்டியே தீரவேண்டும்.

- ஏ.பி.விஸ்வநாதன்

(செம்மலர் ஜனவரி 2011 இதழில் வெளியானது)