theatre screenதினத்தந்தியை புரட்டினால் உப்புமா பட போஸ்டர்களை காணலாம். இதன் பின்னணியில் இயக்குனர் என்கிற ஆர்வக் கோளாறின் ஆசைக்கு எப்படியும் அறுபது பேர் பலியாகியிருக்கும் சோகக்கதை இருக்கும்.

படத்தின் தயாரிப்பாளர் என்பவர் சினிமா என்கிற வெளி ஜிகினாவை நம்பி பணத்தை இறக்கியிருப்பார் இல்லையேல் சினிமா ஆசையில் ஹீரோவின் மண்டை கழுவப்பட்டு இருக்கும்.

அல்லது தயாரிப்பாளர் மகன், தங்கை மகன் ஹீரோவாக களமிறக்கப்பட்டு இருப்பார். அவர் சினிமா தயாரிக்க கிளம்பியது விஜய், அஜீத்தை மனதில் வைத்து இருக்கும். இறுதியில் ஹீரோவாக கிடைத்தது ரஜினி படத்தில் மின்னல் வேகத்தில் வந்துவிட்டு போன ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக இருக்கும்.

எங்கள் ஊரில் ஒரு குடிசை தொழில் ஆரம்பித்து பின்னர் வெற்றிகரமான தொழிலதிபராக மாறிய ஒருவரை சினிமா ஆசை பீடித்திருந்தது. வெள்ளிக்கிழமை என்றாலே ஒரு திரையரங்கில் இவரை காணலாம்.

சினிமாவை பற்றி இவருக்கு பெரிதும் தெரியாது. இருந்தாலும் சினிமா எனும் ஜிகினாவில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கி கொண்டிருந்தார். எதோ ஒரு படத்திற்கு போகும் போது டைடில் கார்டில் இவரது பெயரை கொண்ட தயாரிப்பாளர் பெயர் இடியோசையோடு வந்து விழ இவர் மனதில் மின்னலடித்து தயாரிப்பாளர் விருப்பம் துளிர் விட்டிருக்கிறது. 

இவரது விருப்பம் ஆசையாக மாறுவதை அறிந்த ஒரு சென்னையை சேர்ந்த ஒரு குரூப் இவரை அப்படியே வாரி தன் பிடிக்குள் போட்டுக் கொண்டது. உச்ச கட்டமாக நீங்கள்தான் படத்தின் வில்லன், உங்கள் போன்ற முகவெட்டு கொண்ட வில்லனை இதுவரை தமிழ் திரையுலகம் கண்டதில்லை. இனியும் காணப் போவதில்லை என்று போட்ட மயக்கமருந்தில் மனிதர் எழவே இல்லை.

டைரக்டர் தான் ஒரு பெரிய ஜாம்பாவான் இயக்குனரிடத்தில் வேலை பார்த்ததாகவும் அந்த இயக்குனர் தனது கம்பெனிக்கு ஒரு படம் செய்யச் சொல்லி வற்புறுத்தியதால் தான் வெளியே வந்து விட்டதாக சொல்லியிருக்கிறார்.

தன் முதல் படம் நல்ல தயாரிப்பாளரிடம் மட்டும்தான். அந்த தயாரிப்பாளர் நீங்கள்தான் என்றது. இந்த காலத்துல இப்படி ஒரு மனுசனா என்று நம்ம தொழிலதிபருக்கு நாள் கணக்கில் புல்லரித்திருக்கிறது. 

நல்லதோர் ராகு காலத்தில் சென்னையின் பிரதான ஏரியாவில் ஆபீஸ் திறந்திருக்கிறார்கள். அந்த அலுவலக அட்வான்ஸ் தொகை தொழிலதிபரின் இருதய சிகிச்சைக்கு செய்த தொகைக்கு அருகில் இருந்திருக்கிறது.

சிறப்பான மற்றொரு நாளில் டிஸ்கசன் எனும் கதை விவாதம் தொடங்கியது. கதை விவாதம் என்றதும் நம் தொழிலதிபர் பேப்பர், பேனாவோடு கதை குறித்து பேசி, சூடாக விவாதித்து ஸ்கிரிப்ட் எழுதுவார்கள் என்று நினைத்திருக்கிறார். நடந்தது வேறு.

குடௌனில் இருந்து சில்லறை விலை டாஸ்மாக்கில் இறங்க வேண்டிய சரக்கு நேரிடையாக இவரது சினிமா அலுவலகத்தில் வந்து இறங்கியிருக்கிறது. விபரம் கேட்டபோது, அப்போதுதான் ஸீன் வரும் என்ற சொல்லியிருகிறார்கள்.

ஸீன் நல்லா வந்தாதான் படம் நல்லா வரும் என்று தனக்குதானே சமாதானம் சொன்னதோடு தன் வில்லன் கதாபாத்திரத்தை இன்னும் வலிமைப் படுத்துமாறு அவர்களிடம் கோரிக்கையும் வைத்திருக்கிறார். அதுக்கென்ன பிரமாதப்படுத்திருவோம் இயக்குனர் குழு உற்சாகம் காட்டியிருக்கிறது.

இரண்டுநாள் அலுவலகத்திற்கு வாராதவர் மூன்றாம் நாள் இரவு எதோ ஒரு யோசனையில் அங்கு வர சிகரெட்டை புகையை வைத்து சாம்பிராணி போட்டது போல புகை மூட்டம். புகை மூட்டத்தை கடந்து சென்று விவாதம் நடக்கும் அறையை தட்டியிருக்கிறார்.

பேரதிர்ச்சி இரண்டு புறமும் இரு பெண்கள் பயப்படும் படி ஏதும் நடக்கவில்லை என்றாலும் கதவை தட்டாமல் வந்ததற்காக இயக்குனர் நம் தொழிலதிபரை ஆங்கிலத்தில் திட்டியிருக்கிறார். பின்பு சுதாரித்துக் கொண்ட இயக்குனர் “ஸாரி ஸார்” என்று தப்பித்து அந்த பெண்களை தன் பெண் உதவி இயக்குனர் என்று அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

அந்த பெண்கள் முகத்தில் உதவி இயக்குனர்கள் களை தென்படாததை வைத்து அப்பொழுதே முழித்திருக்க வேண்டியவர் அப்போதும் சினிமாவில் இதெல்லாம் சகஜம் என்று கடந்திருக்கிறார். 

நாட்கள் செல்ல விவாத அறையில் அல்லக்கைகள் எண்ணிக்கை அதிகரித்ததே ஒழிய கதை வளராமல் சவலை பிள்ளையாக இருந்திருக்கிறது. செலவும் கிட்டத்தட்ட இவர் வீட்டுக்கு மாடி எடுத்த செலவுக்கு இணையாக வர கொஞ்சம் முழித்திருக்கிறார்.

இதை இப்படியே விட்டால் சரி வராது என்று ஒரு நாள் கோபமாக கணக்கு கேட்க அவர்கள் அவரை அழைத்து சென்று ஒரு பெரிய இசையமைப்பாளரை தூரத்தில் இருந்து காட்டி இவர்தான் நம் படத்திற்கு இசை என்று தெம்பூட்டி அனுப்பியிருக்கிறர்கள்.

இருந்தாலும் மனதிற்குள் ஒரு உறுத்தல் தொடரவே தன் நண்பர் மூலமாக சினிமாவில் ப்ரோடக்ஷன் மேனேஜராக பணிபுரிந்த ஓய்வு பெற்ற ஒருவரின் உதவியை நாடியிருக்கிறார். அவர் வந்து கண்காணித்து இரண்டே நாளில் வாய்வழி அறிக்கை சொல்ல தொழிலதிபருக்கு நெஞ்சுவலி வராத குறை.

சரிவர விசாரிக்காமல் சினிமாவில் இறங்கியது தன் தவறு என்பதையும் உணர்ந்த அவர் இயக்குனரை “மரியாதையாக” அனுப்பி வைத்து விட்டு அலுவலக அட்வான்ஸ் தொகையுடன் ஊர் வந்து சேர்ந்தார்.

உட்காந்து கணக்கு போட்டு பார்த்ததில் தன் ஒருவருட உழைப்பில் சேர்ந்த பணத்தை இழந்தது தெரியவந்திருக்கிறது. இப்போது இவர் கே டிவியில் கூட சினிமா பார்ப்பதில்லை.            

காசை வைத்துக்கொண்டு கோடம்பாக்கத்தில் கால் வைக்கும்போது இதை எதிர்பார்த்து காத்தித்திருக்கும் ஒருசில சினிமா புரோக்கர்கள் எனக்கு ஏ ஆர்.ரஹ்மானை தெரியும், விஜய் சேதுபதி என் ஃப்ரெண்ட், நயன்தாரா மேனேஜர் நமக்கு பழக்கம் என்று கூறி மேற்கண்ட கம்பெனியை லேசாக சுரண்ட ஆரம்பிக்கும். இறுதியில் போண்டா மணி, அல்வா வாசு, நெல்லை சிவா போன்ற ஆட்களை இறக்கி படத்தை ஆரம்பிப்பார்கள். 

எந்த திட்டமிடலும் இல்லாமல் சினிமா ஷூட்டிங் ஆரம்பிக்கும். பொதுவாக ஷூட்டிங் தயாரிப்பாளர் சொந்த ஊர் அல்லது இயக்குனர் சொந்த ஊரில் ஆரம்பிப்பார்கள். இது அட்மாஸ்பியர் க்ரௌட்க்கு உதவும் என்றாலும் தன்னை சொந்த ஊரில் நிலைநிறுத்த இயக்குனர், தயாரிப்பாளர் செய்யும் வழக்கமான வேலை.

சினிமா தொழில் என்பது எத்தகைய கொடூரமானது என்று ஷூட்டிங் நடக்கும்போதே பணம் போட்டவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியும். 

இறுதியாக தட்டுத் தடுமாறி எல்லாம் முடிந்து படம் எடிட்டர் டேபிளுக்கு போகும் போது எடிட்டர் சற்று நகைச்சுவை உணர்வு உள்ளவராக இருந்தால் பிரச்சனை இல்லை.

இல்லையேல் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவது நிச்சயம். கொடுத்த காசுக்கு எடிட்டர் எப்படியோ படத்தை உருவாக்கி கொடுப்பார். எனக்கு தெரிந்த ஒரு எடிட்டர் இது போன்ற ஒரு உப்புமா படத்தை எடிட் செய்து கொடுத்த பிறகு கரக்ஷன் செய்ய சொல்லி வந்த இயக்குனரை செருப்பால் அடித்து விரட்டிய கதையெல்லாம் இருக்கிறது. 

எல்லாம் முடிந்து பிறகு படத்தை வாங்க ஒரு நாயும் இருக்காது என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம் என்றாலும் பணம் போட்டவர் படத்தை ஃப்ரிவியூ பார்த்த பின்பு பாதி நடை பிணமாக மாறியிருப்பார்.

இன்னும் கொஞ்சம் சினிமா தெரிந்தவர் என்றால் சொந்த பந்தங்களுக்கு இப்படி ஒரு காவியம் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார். 

இறுதியில் படம் யூடியூப்பில் வெளியாகும் அல்லது பாழடைந்த ஒரே ஒரு லோக்கல் தியேட்டரில் வெளியாகும். அதிகபட்சம் ரெண்டு ஷோ ஓடும். படத்தை எடுத்துட்டு ஓடு ஸார், நாளைக்கு ஒரு பிட்டு படம் ஓட்டணும் என்று ஆப்ரேட்டர் சொல்லும்போது ஏறக்குறைய பணம் போட்டவர்  மனத்தால் செத்தே போயிருப்பார்.

சினிமாவின் உப்புமா இயக்குனர்களை மூன்று வகைகளாக பிரிக்கலாம். இளம் உப்புமா இயக்குனர், முற்றிய உப்புமா இயக்குனர், கொரிய உப்புமா இயக்குனர். முதலில் முற்றிய உப்புமா இயக்குனரை பார்க்கலாம். காரணம் இவர்கள் அழிந்து வரும் அபூர்வ இனம். அரசாங்கம் பாதுகாக்கப்பட்ட பட்டியலில் சேர்க்கவும் ஆவண செய்யலாம். 

இவர்கள் ஏறத்தாழ 50 வயதை தாண்டிய 70s கிட்ஸ்கள். பாரதிராஜா, பாக்யராஜ், பாலசந்தர் போன்ற பெரும் ஆளுமைகளால் உந்தப்பட்டு தமிழ் சினிமாவிற்கு வந்தவர்கள். இயக்குனருக்கு வயது தடையில்லை என்றாலும் இவர்களின் நோக்கம் முழுக்க முழுக்க அபத்தமான மேலோட்டாமானது.

பல இரவுகள் உறங்காமல் சிந்தித்தன் விளைவாக தலைக்கு மேல் உள்ளதை மயிரே போச்சு என்று எண்ணி இழந்தவர்கள். இவர்கள் வலையில் விழும் வாலிபர்களை கைகளாலே போட்டோஷூட் எடுத்து நீதான் என் படத்திற்கான நாயகன் என்று சொல்லிவிட்டு மூன்று தீபாவளிக்கு முடி வெட்ட விடாமல் தடுத்து விடுவார்கள். ஆரம்பத்தில் சினிமா கனவில் இருக்கும் நபருக்கு வளர்ந்த முடி, தாடி பெருமையாகவும் பின்பு கடுமையான அரிப்பையும் கொடுக்க வல்லது. 

பெரும்பாலும் இதுபோன்ற இயக்குனர்களில் சரிபாதி யாரையும் ஏமாற்றும் எண்ணம் இருக்காது என்றாலும் ஆர்வக் கோளாரில் செய்யும் கருப்பு நகைச்சுவைதான் பலரின் வாழ்க்கையை நரகமாக்கிவிடுகிறது.

கூடவே எப்போதும் சினிமா தெரியாத அதே நேரத்தில் திரை கட்டி எந்த படம் ஓட்டினாலும் அதை விடிய விடிய பார்த்து ரசிக்கும் மணமுடைய இரண்டு உதவி இயக்குனர்களை வைத்திருப்பார்கள். 

இவர்கள் சிந்தித்து வைத்திருக்கும் சினிமா கதைகள் ஏற்கனவே ஏழாயிரம்முறை சினிமாவாக எடுக்கப்பட்டிருக்கும். இதை அறிந்தோ அறியாமலோ ஆஸ்கரை எதிர்பார்த்து காத்திருப்பார்கள்.

கதையை அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் சொல்ல மாட்டார்கள். அப்படி சொன்னால் லீக் ஆகிவிடும் என்று திடமாக நம்புவார்கள். இப்படி லீக் ஆகி எடுக்கப்பட்ட படங்களை சிலநேரங்களில் அவர்களே பட்டியல் போடுவார்கள்.

அதை சொல்லும்போது நம்மிடம் சரியான எதிர்வினையுடன் கூடிய அதிர்ச்சியையும் எதிர்பார்ப்பார்கள். இத்தகைய அற்புதமான காவியத்திற்கு கேட்டவுடன் களுக்கென்று சிரிக்கும் படியான தலைப்பையும் வைத்திருப்பார்கள்.

பெரும்பாலும் இவர்களுடைய உண்மையான பெயரை மறைத்து புனை பெயரில் வலம் வருவார்கள். எனக்கு தெரிந்த ஒருவரின் பெயர் பாக்யசந்தர். பெயற் காரணம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. கண்களை மூடியபடிதான் கதையை சொல்லுவார். அவர் கண்களை மூடியதால் நாம் காதுகளை மூட வசதியாக இருக்கும்.

எல்லாவற்றையும் விட இவர்கள் கதையில் வைத்திருக்கும் அபார நம்பிக்கை நமக்கு நகைச்சுவையும் தாண்டி வியப்பளிக்கும். அஜித்துக்கு ஒரு கதை, விஜய்க்கு ஒரு கதை, தனுஸுக்கு தான் ரெடி பண்ணனும்.

ரஜினி நம்ம கதைக்கு செட்டாக மாட்டார் என்று சாதாரணமாக வார்த்தைகள் வந்து விழும். இந்த கதையை சம்பந்தப்பட்ட யார்கிட்டயாவது சொல்லிருக்கீங்களா என்றால், "சொல்லல ஆனால் என் அக்கா பசங்ககிட்ட சொன்னேன். கதையை கேட்டு ஏந்துருச்சு நின்னு கை தட்டுனாங்க, அவங்களுக்கு வயசு 15" என்று என்ன கேள்வி கேட்டாலும் உலகம் இடிந்து விழும் ஒரு பதில் வைத்திருப்பார்கள்.

இவர்களில் பாவம் பாதி அப்பாவிகள் என்று ஒதுக்கினாலும் மீதி இருக்கும் இயக்குனர் சிகரங்கள் ஆபத்தானவை. சினிமா எதார்த்தம் நன்கு புரிந்தும் தான் இறங்கும் கடலுக்குள் நீச்சல் தெரியாத பல அப்பாவிகளை தள்ளிவிட்ட பின்பு கையை பிசையும் ரெண்டுங்கெட்டான்கள். இவர்கள் பெரும்பாலும் திரைப்படத்தை உருவாகும் அடுத்தகட்ட நகர்வுக்கு செல்வதில்லை. அப்படியே சென்றாலும் சினிமாவாக முழுமையடையாது. 

இந்த அமளிதுமளிக்கு காரணமான இயக்குனர் அதிகபட்சம் பெயரை மாற்றிக் கொண்டு தனது ஏழாவது அறிவை பயன்படுத்தி தமிழ் சினிமா இதுவரை கண்டிராத அடுத்த படத்தின் கதையை உருவாக்கி கொண்டிருப்பார்.

அல்லது பெயருக்கு முன்னால் ஏதாவது ஒரு பட்டத்தை போட்டுக் கொண்டு தன் உயிர் பிரியும் வரை இயக்குனர் என்கிற போர்வையில் இந்த சமூகத்தில் உலாவுவார். இதுபோன்ற உப்புமா கதைகள் கோடம்பாக்கத்திற்கு புதிதில்லை என்றாலும் இதில் பின்னால் வரும் சோகக்கதைகள் ஏராளம்.

- கா.ரபீக் ராஜா