சின்ன இடைவெளி கிடைத்தால் கூட போதும்.. அதில்.. தன்னை எப்படியாவது நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிப்பார். எனக்கு தெரிந்து.... ஏன் எல்லாருக்கும் தெரிந்து கூட ரெம்ப காலமாக ஹீரோக்களுக்கு நண்பராகவே இருந்தார். அதுவும் அவரின் 40 களில் கூட கல்லூரி மாணவனாக வந்து நம்மை சிரிக்க வைத்தவர். சார்லி நண்பராக இருந்தாலே... நமக்குள் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். ஆழ்மனதில் இனம் புரியாத நம்பிக்கையைத் தரும் அவரின் முகபாவனைகள்.. அலுப்பூட்டாதவை. அரிதாரம் முகத்துக்குத்தான். பாவனைகளுக்கல்ல என்பதை இவரிடம் காணலாம்.

charlieசார்லி சாப்ளியின் ஈர்ப்பால் தன் பெயரை சார்லி என்றே மாற்றி கொண்ட அற்புதமான நடிகர். சில நேரங்களில் கொஞ்சம் ஓவர் ஆக்ட் செய்தாலும்.. அதுவும் நாம் ரசிக்கும் படியாக இருக்கும் என்பது மறுக்கவியலாது. சார்லியின் கதாபாத்திரங்கள் நமக்கு சொல்லும் செய்தி... கிடைக்கும் வாய்ப்பை ஒருபோதும் தவற விட்டு விடாதே. பிறகு தவற விட ஒரு வாய்ப்பு கூட கிடைக்காமல் போகலாம்... என்பது தான்.

"பழமுதிர் சோலை.... எனக்காகத்தான்.... படைத்தவன் படைத்தான்.... அதற்காகத்தான்... " ஹீரோவுடன் சேர்ந்து உடல் அசைவுகளால் உள்ளம் பூரிக்கும் சார்லி ஒரு மகா கலைஞன் என்றால் மிகை இல்லை. சுவை கூடும்.

கல்லூரி நாட்களிலேயே மேடை நடிகராக இருந்திருக்கிறார். மனோகர் என்பது இயற்பெயர்.

இயக்குனர் பாலச்சந்தர் அவர்களால் கண்டெடுக்கப்பட்ட முத்துக்களில் இவரும் ஒருவர். அதனால்தான் "அகரம் இப்போ சிகரம் ஆச்சு... தகரம் இப்போ தங்கம் ஆச்சு... காட்டு மூங்கில் பாட்டு பாடும் புல்லாங்குழல் ஆச்சு.... " என்று......பாட்டுக்கு இவர் வாயசைக்கும் காட்சி அமைப்புகள் வந்தன.

"பிரெண்ட்ஸ்" படத்தில் வரும் அந்த நேசமணி கூட்டணி கதாபாத்திரம் தனக்காகவே இயக்குனர் சித்திக்கிடம் கேட்டு வாங்கி மெருகேற்றிக் கொண்டது என்று ஒரு முறை ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

"நாம எப்பவாவது கேட்டருக்கோமா சார்... நாம கேட்டா தான சார்.. நமக்கு ஒன்னுனா மற்றவங்க கேப்பாங்க" என்று மாநகரம் படத்தில் அவர் பேசும் வசனத்துக்கு அவர் பேசியதால் ஒரு புத்துயிர் வந்ததை நாம் அறிவோம்.

"இந்த ஒரு பருக்கை ஏதோ ஒரு ஊர்ல ஒரு விவசாயி நிலத்துல நெல்லா இருந்திருக்கும். அறுவடை பண்ணும் போது வயல்ல விழுந்திருக்காம்ல....இல்ல களத்துல அடிக்கும் போது சிதறியிருக்கலாம்ல..... அதிலெல்லாம் தப்பிச்சு மூட்டைல ஏறி ரைஸ் மில்லுக்கு போயிருக்கும். அங்க.... அவிச்சு..... அடிச்சு..... புடிச்சு... அதிலயும் தப்பிச்சு... கடைசியில அரிசி ஆகியிருக்கும். அந்த அரிசியை உங்கம்மா கழுவும் போது நழுவாம.. வடிக்கும் போது தெறிக்காம பதமா உனக்கு சோறாக்கி போட்ருக்காங்க. இத்தனையும் தாண்டி உன் தட்டுக்கு வந்த இந்த ஒரு பருக்கை உன் அலட்சிய போக்கால குப்பைக்கு போகணுமாடா... " என்று "பாம்பு சட்டை" படத்தில் ஒரு சோற்று பருக்கையை வீண் செய்ய முயற்சிக்கும் தன் மகளிடம் பேசும்படியான ஒரு வசனம் வரும். வசனத்தை எழுதியது வேண்டுமானால் வசனகர்த்தாவாக இருக்கலாம். ஆனால் வாங்கி பேசி.. நம் செவியின் வயிற்றுக்குள் போட்டது நடிப்பு பசி தீராத சார்லி.

"ராமகிருஷ்ணா" படத்தில்... ஒரு காட்சி.

"இந்த வண்டிக்கு பெட்ரோல் போடாம எப்படி ஓட்டற.." என்று சாரலி அமர்ந்திருக்க தள்ளிக் கொண்டு வரும் சிசர் மனோகர் அல்வா வாசு கூட்டணி கேட்க... "அதுக்கெல்லாம் ஒரு புத்திசாலித்தனம் வேணும்" என்று சொல்வார் சார்லி.

"புத்திசாலிங்கறது யாரு" என்று அவர்கள் கேட்க....சுற்றி வண்டியைத் தள்ளி கொண்டு நடந்து வரும் மூன்று பேரையும் ஒரு முறை பார்த்து விட்டு, "மூணு பேரை முட்டாளா நினைக்கிறான் பாரு அவன் தான் புத்திசாலி" என்று பதில் சொல்வார். அதே நேரம் இல்லாத மாட்டை ஓட்டிக் கொண்டு வந்த முத்துக்காளை அந்த இல்லாத மாட்டை சார்லியிடம் கொடுத்து முட்டாளாக்க நினைப்பதும்... அதன் தொடர்ச்சியாக நடக்கும் மைண்ட் கேம் அட்டகாசமான புத்திசாலித்தனத்தை அடி முட்டாள்தனத்தின் அற்புதத்தோடு காட்சி படுத்தி இருப்பார்கள்.

இந்த காட்சியை மொத்தமாக தன் பாவனைகளில் மட்டுமே தாங்கி நிற்பார் சார்லி. மாற்றி மாற்றி புத்திசாலித்தனத்துக்கும் முட்டாள்தனத்துக்கும் இடையே......இல்லாத மாடு இருக்கையில்... சற்று தூக்கிய நெற்றியில்...... பாதி கண்களில்... பார்த்தபடியே
ஃபெர்பாமென்சில் பிச்சு வாங்குவார். சினிமாவை நடிப்பு தாண்டியும் நிறைய பேசக்கூடியவர். அவர் சினிமா வாழ்வில் ஒரு சீரியஸ்னெஸ் இருக்கும்.

"அல்லி அர்ஜுனா" படத்தில்.... படம் முழுக்க ஊமை கதாபாத்திரம் தான். ஆனால் வையாபுரியின் டப்பிங்கில் ( திரைக்கதையே அப்படித்தான் ) வாயசைத்து நடித்திருப்பார். அதாவது ஹீரோயினுக்கு..... தான் ஊமை என்று தெரிந்து விட கூடாது என்று வையாபுரியின் உதவியில் பேசுவது போல நடித்திருந்தது....காலத்துக்கும் அட போட வைப்பவை. இருமல் உள்பட... பின்னால் மறைந்து கொண்டு வையாபுரி செய்ய அதே நேரத்தில் மிக சரியான டைமிங்கில் சார்லி செய்யும் அலப்பறைகள்... அதி நவீனமானவை.

தற்கொலை செய்ய முயற்சிக்கு செந்திலிடம் வாட்ச்.. செயின் என்று எல்லாவற்றையும் வாங்கி கொண்டு மருவோடு தெத்துப் பல்லோடு பாவமாக பேசும் சார்லியை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. "பாக்கெட்டில் அஞ்சு பத்து இருந்து தண்ணீல நனையவா... " என்று சாக போகிற செந்திலிடம் வாங்கிக் கொண்டு சாக அனுப்பி வைக்கும்... காட்சி... டூயட் பாடுகிறது மனதுக்குள். "பூவே உனக்காக" படத்தில் கையில் மாட்டிக் கொண்ட போஸ்ட் பாக்ஸோடு அல்லாடும்... நண்பனை... நினைத்து நினைத்து சிரிக்கலாம்.

"புதுவசந்தம்" படத்தில்.. நால்வரில் ஒருவராக... இருக்கும் சார்லியின் 'கெலரி'யை எப்படி ரசிக்காமல் இருக்க முடியும். கால ஓட்டத்தில்.... காமெடியில் இருந்து மெல்ல குணச்சித்திரத்துக்குள் வந்த சார்லி அதிலும் தன்னை தானென்ற நிரூபித்தார். நிரூபணம் ஆகி விட்ட ஒன்று திரும்ப திரும்ப தன்னை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் சர்வைவல் விதி. அதை சார்லி அவ்வப்போது செய்து கொண்டே இருக்கிறார். இன்னும் இன்னும் அவரை... தமிழ் சினிமா பெரிதாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். பிரேமில் தனக்கென்ற உடல் மொழியில் தனக்கென்ற நகர்தலை கனக்கச்சிதமாக கொள்ளும் கதாபாத்திரத்துக்குள் எப்போதும் ஓயாது உழைத்துக் கொண்டேயிருக்கும் ஒரு நடிகன் இருக்கிறான்.. என்பதை கூர்ந்து கவனிப்போருக்கு புரியும்.

சினிமா மீது கொண்ட ஆர்வம் துளியளவும் அவருக்கு குறையவில்லை என்பதற்கு சான்று... "Humour in Tamil Cinema" என்ற தலைப்பில் PhD வாங்கி இருக்கிறார் என்பது தான். சார்லி சிரிப்பு கலைஞன் மட்டுமல்ல. ஒரு சிறப்பு கலைஞனும் கூட. நினைத்ததும் சிரிக்கும் எத்தனையோ காமெடிகளை நிகழ்த்திக் காட்டிய சார்லி.. தமிழ் சினிமா நினைவுகளில்.... காலத்துக்கும் இருப்பார் என்பது தான் அவருக்கு அவரே செய்து கொண்ட தகுதி.

"பொய்க்கால் குதிரை"யில் ஆரம்பித்தாலும்... ஓட்டம் என்னவோ... ஓட்டப்பந்தய குதிரையாகத்தான். இந்தக்குதிரை இன்னும் இன்னும் ஓடும்... ஓடுவதில் சுகம் கண்ட குதிரைகள் ஒரு போதும் ஓய்வை விரும்புவதில்லை.

- கவிஜி