இயக்குனர் ஆவதற்கு வந்தவர் ஒரு கட்டத்தில் கதாநாயகனான ஆகிறார்.

ramarajanவசீகரிக்கற முகமெல்லாம் இல்லை. ஆனால்... ஒரு கட்டத்தில் மக்கள் நாயகனாக ஆகிறார்.

இளையராஜா காம்போவில் எக்கச்சக்க படங்கள்.... கவுண்டமணி செந்தில் காம்போவில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு ஓடிய படங்கள் எத்தனையோ.

'கரகாட்டகார'னில் இருந்தே ஆரம்பிக்கலாம். சமீபத்திய ஒரு பேட்டியில் கூட சொல்லி இருந்தார். அந்த படத்தில் நடிப்பதற்கு ஒரு கரகாட்டகாரனுக்கான ரெபரென்ஸ் உள்ள முந்தைய படங்கள் எதுவுமே இல்லை. தானாகவே ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்து தான் அந்த பாத்திரத்தை செய்ய முடிந்தது என்று. அதுமட்டுமல்லாமல் கரகாட்டக்காரன் இரண்டாம் பாகம் எடுக்க அந்த டீமே முயன்று கொண்டிருக்கையில்..."இல்லை.. அந்த முத்தையாவாக இப்போது தன்னால் மாற இயலாது. வயது ஒத்து வராது..கிளாஸிக்கை தொட்டு கெடுத்து விடக் கூடாது" என்று டீசெண்டாக விலகிக் கொண்ட சினிமா அறிவுள்ள ஒரு நடிகர் தான் ராமராஜன்.

லிப்ஸ்டிக் யார் தான் போடவில்லை. "அயோக்கியா"வில் விஷால் கூட போட்டிருந்தார். எம் ஜி ஆர் போடாத லிப்ஸ்டிக்கா.. கிட்டத்தட்ட எம்ஜிஆரின் பாணியில் பாதி தூரம் வந்து விட்டவர் ராமராஜன். அந்த பாணியில் சத்யராஜ் பாக்யராஜ் எல்லாம் தோற்று விட்டபோது ராமராஜனுக்கு அது பாதியளவு சாத்தியப்பட்டது. அரசியலில் காணாமல் போன முக்கியமான நடிகர்களில் இவரும் ஒருவர் என்பது கசக்கும் உண்மை.

மதுர மரிக் கொழுந்து வாசம்....
வாசலிலே பூசணிப்பூ வெச்சுபுட்டா...வெச்சுபுட்டா...
ஆத்து மேட்டு தோப்புக்குள்ள...
செண்பகமே...செண்பகமே.....
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா...
ராசாவின் மனசில....
தாலாட்டு கேட்காத......

வாயசைத்த பாடல்கள் எல்லாம் நமக்கு தாலாட்டு தான்.

வயலும் வயல் சார்ந்த கிராமத்து கதைகளில் ராமராஜனின் இயல்பு அத்தனை நெருக்கத்துக்குரியவை. எந்த ஊர் படத்திலும் அவரின் மதுரை பாஷை அவரை ராமராஜனாகவே தான் காட்டியது. அதையும் மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது யாருக்கும் கிடைக்காத சினிமா வரம் என்று தான் சொல்ல வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு பெரிதாக நஷ்டத்தை கொடுக்காத நடிகர்..ஒரு கதாபாத்திரத்தில் ட்ரவுசர் போட்டுக் கொண்டு நடித்தார் என்பதற்காக இன்றும் அவரை "ட்ரவுசர்" என்று சொல்வதையெல்லாம் வன்மையாக வழக்கம் போல கண்டிக்கிறேன்.

கலர் கலராக சட்டை போட்டுக் கொண்டு நடித்த ராமராஜன், இன்று வரை வண்ண வண்ண சட்டைகளுக்கு ராமராஜன் பிராண்ட் என்று ஒன்றை உணர்கிறோம் என்றால் அது அவரின் குறியீடு....முத்திரை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். தனக்கான இடத்தை இன்னும் யாரும் நிரப்பவில்லை என்பதை அவரின் வெற்றியாகத்தான் பார்க்கிறேன். ராமராஜன் ஒரு வெற்றி விழா நாயகன் என்றால் அது தகும் தான். எப்போதும் நம்பிக்கையின் வழி நின்று பேசுவதுதான் ராமராஜனின் வழக்கம். நடனம் சண்டை எதுவுமே தெரியாமல்.. தனக்கு என்ன வருமோ அந்த உடல் மொழி கொண்டு தனக்கான சினிமாவை கண்டெடுத்த சினிமாக்காரன் என்றால் அது சாலப் பொருத்தம்.

ஊரு விட்டு ஊரு வந்து படத்தையெல்லாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. கரகாட்டக்காரனில் அடித்த கூத்தெல்லாம்.... சூப்பர் டூப்பர் மட்டையடி. எங்க ஊர் பாட்டுக்காரன்.....வில்லுப்பாட்டுக்காரன்....தங்கமான ராசா.....பாட்டுக்கு நான் அடிமை...தெம்மாங்கு பாட்டுக்காரன்....இன்னும் சொல்லக் கொண்டே போகலாம். தமிழ் மனம் பாடல் சார்ந்த வாழ்வியல் முறையில் பரிணாமம் அடைந்தவை. அந்த இடத்தில் தான் ராமராஜனும் அவரின் படங்களும் மக்களிடம் ஒரு வகை நெருக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதில் ரசனையும் இருந்தது.

தனித்த உடல் மொழியில்..... சினிமாவை குடிசை வீட்டுக்கார அம்மாவுக்கும் கொண்டு சேர்த்த மக்கள் நாயகன்.

கிராமத்து மாமாவாக, மச்சானாக, எதிர் வீட்டு படித்த பையனாக, கனகாவுக்கும் கவுதமிக்கும் முறை மாமனாக என்று கிராமம் சார்ந்த ஒரு முகம் என்றால் அது கனக் கச்சிதமாக பொருந்துவது ராமராஜனுக்கு. அம்மா பாசத்தை ராமராஜன் காட்டினால் சுலபமாக ஆடியன்ஸ் கன்வின்ஸ் ஆவார்கள். மனோவின் குரலுக்கு சரியான இசைவாக ராமராஜனின் பாவனை இருப்பதை ரசிக்காமல் இருக்க முடியாது. வாய்க்கா வரப்பில் ராமராஜன் நடந்து வந்தாலே.. இளையராஜா இசையில் தனித்த தென்றல் சேர்ந்து விடுவதை உணர முடியும். தனிப்பட்ட வாழ்வுக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை. சினிமாவில் ஒரு ஜெம் என்று தான் சொல்ல முடியும்.

அவர் எதற்கு வந்தாரோ அதில் வெற்றியும் பெற்று விட்டார் என்பதன் சாட்சி...அவர் 5 படங்கள் இயக்கியும் இருக்கிறார் என்பது.

- கவிஜி