இப்படி ஒரு அவல நிலை தமிழ்நாட்டில் இருக்கும் முற்போக்குவாதிகளுக்கு வந்திருக்கக் கூடாது. எதை எதை எல்லாமோ ஆதரித்துப் பேசவேண்டிய நிலைக்கு இந்த பிஜேபி பாவிகள் அவர்களை தள்ளிவிட்டுவிட்டார்கள். நேற்றுவரை முதுகு சொறிவதற்கும், காது குடைவதற்கும் மட்டுமே பயன்படுத்தி வந்த தங்கள் புரட்சி பேனாக்களை இன்று பல பேர் வாடிவாசலில் துள்ளிக் குதித்து அடங்க மறுத்து ஓடிவரும் மெர்சல் அப்பா விஜயைப் போல பிஜேபிக்கு எதிராக புரட்சிக் காவியம் தீட்ட எடுத்திருக்கின்றார்கள். எடுத்ததோடு மட்டுமல்லாமல் பல நாள் அடக்கி வைத்திருந்த பிஜேபிக்கு எதிரான தங்கள் கோபத்தை எல்லாம் கொட்டி தீர்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். சரி எழுத்தாளர்கள் கொஞ்சநாள் எழுதாமல் இருப்பதும், பிறகு திடீரென பைத்தியம் பிடித்தது போல நினைத்தை எல்லாம் எழுதி மற்றவர்களை அச்சுறுத்துவதும் சகஜம்தான் என்றாலும், நேற்றுவரை கை சூப்பிக் கொண்டிருந்த குழந்தைகள் எல்லாம் இன்று பேஸ்புக், ட்விட்டர்வரை வந்து “எப்படிடா எங்க தலைவரை, வருங்கால முதலமைச்சரை நீங்கள் திட்டலாம்” என்று கண்ட மேனிக்கு கசமுசா கசமுசா என்று எச்சிக்கலை ராஜாவையும், தமிழிசையும் திட்டித் தீர்த்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

mersal vijayதமிழ்நாட்டில் பிஜேபியை அடிப்பதற்கு ஆள் இல்லை என்ற கவலை எல்லாம் எப்போதுமே இருந்தது கிடையாது. பிஜேபி விளம்பரத்துக்காக கோவணத்துடன் நடந்தால் அதை முறியடிக்க அம்மணமாக கூட நடக்க இங்கே பல கட்சிகள் தயாராக இருக்கின்றன. இல்லை என்றால் இப்படி ஒரு மகா மட்டமான மொக்கை படத்துக்கு ஆதரவாக இத்தனை பேர் களத்தில் இறங்குவார்களா? சில இடங்களில் கைப்பிள்ளை விஜய் ரசிகர்களுடன் இணைந்து பிஜேபிக்கு எதிராக புரட்சி முழக்கம் இட்டிருக்கின்றார்கள் சேகுவேராவின் கொள்கை புத்திரர்கள். நாளை சன்னிலியோனுக்கு எதிராகவோ, இல்லை ஷகிலாவுக்கு எதிராகவோ பிஜேபி பாரததேசத்தை அவமதிக்கின்றார்கள் என்று களத்தில் இறங்குமேயானால் சன்னிலியோனோ, இல்லை ஷகிலாவோ சும்மா இருந்தாலும் நம் கொள்கைக் குன்றுகள் அவர்களின் ரசிகமணிகளின் துணையுடன் கருத்துச் சுதந்திரப் போருக்கு அணிதிரள்வார்கள். எள்ளுதான் காய்கின்றதே எலி புழுக்கை எதற்காக காயவேண்டும் என்று யாரும் கேள்வி கேட்கக் கூடாது. அது எதிர்ப்புரட்சி சக்திகளின் சதியாகிவிடும்.

எனக்கு மிக வருத்தமாக இருக்கின்றது. 100 ரூபாய் அநியாயமாக போய்விட்டதே என்று. அட காசு போனால் கூட பரவாயில்லை. எப்படிதான் இந்தக் கருமத்தை எல்லாம் கண்கொண்டு பாக்குறாங்கனே தெரியல. இந்தப் படத்தை தீபாவளி தவிர மற்ற நாட்களில் வெளியிட்டு இருந்தால் நிச்சயம் அட்டர் பிளாப் ஆகியிருக்கும். போதாத குறைக்கு இந்தப் பிஜேபி அயோக்கியர்கள் தேவையே இல்லாமல் ஜி.எஸ்.டி பத்தி தப்பா பேசிட்டாங்க, டிமானிடைசேஷன் பற்றி தப்பா பேசிட்டாங்க என்று விளம்பரத்துக்காக படத்தை எதிர்க்க, விஜய் படத்தை வாழ்நாளில் தியேட்டரில் போய் பாக்காத என்னைப் போன்ற பல பேரை தியேட்டரை நோக்கி அவரச அவரசமாக கிளம்ப வைத்துவிட்டார்கள். கொடும கொடுமனு கோயிலுக்குப் போன அங்க ரெண்டு கொடும அவுத்து போட்டுகிட்டு ஆடுச்சாம். அந்த மாதிரி ஆகிப்போச்சு நம்ம நிலை.

படத்தில இலவச மருத்துவம் வேண்டும் என்பதுதான் மைய கதைக்கரு என்று சொல்கின்றார்கள். இத சொல்றதுக்கு எதுக்குடா அப்பன் விஜய், இரண்டு மகன் விஜய் என்று தெரியவில்லை. மூனு பேரு மூஞ்சும் ஒரே மாதிரிதான் இருக்கு. அப்பன் விஜயின் மூஞ்சில் கொஞ்சம் வெள்ளை மயிர் எட்டிப் பார்க்குது. ஆனா சேட்டை எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு. இரட்டைக் குழந்தைகள் என்றால் ஒரே மாதிரி இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கின்றேன். ஆனால் அண்ணன், தம்பி கூட பார்ப்பதற்கு அதுவும் வெயிட்டு, ஹைட்டு என எல்லாமே ஒரே மாதிரி இருக்குறத இப்பதான் பார்க்கின்றேன். படத்தில ஆயிரத்தெட்டு ஓட்டை. ஒவ்வொரு பாட்டையும் கேட்கும் போதும் எங்க எங்கயோ எரியுது. விஜய் அழுவதைப் பார்த்தால் நமக்கு அடக்க முடியாமல் சிரிப்புதான் வருது. இதை எல்லாம் உண்மையில் விஜய் ரசிகர்கள் மட்டுமே பார்க்க முடியும். உலகில் வேறு எந்த ஜீவராசியும் பார்க்க முடியாது.

இந்தப் படத்தில் மொத்தம் ஒரு பத்து நிமிடம் விஜய் அரசியல் பேசியிருந்தாலே அது பெரிய விடயம்தான். மாறன் விஜய்க்கு வெளிநாட்டில் பரிசு கொடுக்கும் போது சரியா ஒரு நிமிசம் மருத்துவ சேவை பற்றிப் பேசுகின்றார். ஒரு நாட்டில் பணக்காரனுக்கு கிடைக்கும் அதே மருத்துவம் அந்த நாட்டில் உள்ள எல்லா குடிமக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று சொல்கின்றார், அடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு மூன்று நிமிடம் பேசுகின்றார். கடைசியாக ஒரு ஐந்து நிமிடம் அரசியல் பேசுகின்றார். அதில் கூட அரசை நேரடியாக குற்றம் சொல்லத் துப்பில்லாமல் அரசு மருத்துவமனைகள் ஒழுங்கா நடக்காமல் போனதற்கு யாரெல்லாம் காரணமோ அவங்க தான் முக்கிய குற்றவாளி என்றுதான் சொல்கின்றார். யார் அந்தக் குற்றவாளி என்று வெளிப்படையாக சொல்லும் திராணிகூட படத்தை இயக்கிய அட்லிக்கும் இல்லை, வருங்கால முதலமைச்சர் இளைய தளபதி விஜய்க்கும் இல்லை. வடிவேலு டிஜிட்டல் மணி பற்றி பேசும் வசனம் ஒரு பத்து செகண்டுதான் வருது. அதுவும் ஒரு பொறுக்கித்தனமான சண்டையில் வருது. எப்படிப் பார்த்தாலும் ஒரு பதினைந்து நிமிடத்திற்கு மேல் பிஜேபியை ‘குலைநடுங்க வைக்கும்’ காட்சிகள் அதில் இல்லை என்று உறுதியாக சொல்லலாம்.

இந்தக் காட்சிகள் கூட படத்தில் போக்கில் இயல்பாக காட்சிப்படுத்தப்படாமல் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது போல்தான் இருக்கின்றது. மருத்துவ உலகில் நடக்கும் மோசடி பற்றியும், அது எப்படி சாமானிய இந்திய குடிமகனை பாதிக்கின்றது என்பதையும், டிமானிடைசேஷன் போன்றவற்றால் எப்படி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் காட்சியாக பாதிப்புகளைக் காட்டாமல் வடிவேலு கைநக்கிக் காட்டுவதும், விஜய் வசனங்கள் மூலம் சொல்வதும் அதற்குப் பதிலாக படத்தில் 90 சதவீத நேரத்தை விஜய் சண்டை போடுவதற்கும், குத்தாட்டம் ஆடுவதற்கும், குரங்கு சேட்டை பண்ணுவதற்கும் செலவழித்துவிட்டு 'படத்தில் மெசேஜ் சொல்கின்றேன் பேர்வழி' என்று சில செய்திகளை சொல்லி தன்னை புரட்சி வீரனாக காட்டிக்கொள்வதும் தமிழ் சினிமாவை பிடித்திருக்கும் சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும்.

விஜய் போன்ற மொக்கை பேர்வழிகளை வைத்து பணமும் பண்ண வேண்டும், அதே சமயம் இந்த மொக்கைப் பேர்வழியின் அரசில் அரிப்புக்கு உள்ளே ஏதாவது சமூகப் பிரச்சினைகள் பற்றிய செய்திகளை திணித்து விளம்பரமும் தேடிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் படத்தை இயக்கியவன், வசனம் எழுதியவன், தயாரித்தவன் போன்ற அனைவரின் நோக்கமாக இருந்திருக்கின்றது. அதனால்தான் பிரச்சினை வந்தவுடன் பிஜேபி சொன்ன காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டு இருக்கின்றார். இந்தப் பிரச்சினையில் இதுவரை அட்லியோ, இல்லை வருங்கால முதலமைச்சர் இளைய தளபதி விஜய்யோ வாயே திறக்கவில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும். அவர்களின் பணி மிக எளிதாக முடிந்துவிட்டது. போட்ட பணத்திற்கு மேல் பல மடங்கு நிச்சயம் எடுத்திருப்பார்கள். படம் எடுத்ததன் நோக்கம் நிறைவேறிவிட்டது. பிஜேபியின் அதிகப்பிரசங்கித்தனத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது சாமானிய பொது மக்கள்தான்.

இலவச மருத்துவம், ஜி.எஸ்.டி, டிமானிடைசேஷன் போன்ற மிகப்பெரிய பிரச்சினைகளை அல்பத்தனமாக, மொக்கையாக விஜய் போன்ற மொக்கை நடிகர்களை வைத்து குத்தாட்டமும், கும்மாளமும், குரங்கு சேட்டையும் கலந்து சொல்லி அந்தப் பிரச்சனையின் உண்மையான தீவிரத்தன்மையையே கேலிக்கூத்தாக்கி இருகின்றது இந்தக் கூத்தாடி கும்பல். நாம் ஒரு கோரிக்கையாக திரை உலகைச் சேர்ந்தவர்களுக்கு வைக்கின்றோம். உங்களுக்கு பணம் சம்பாதிப்பது மட்டும் தான் நோக்கம் என்றால் நாலுசண்டை, ஒரு அயிட்டம் சாங், ஒரு இன்ரோடெக்சன் சாங், இரண்டு லவ் சாங், அப்புறம் அம்மாவையோ, அக்காவையோ, தங்கச்சியையோ இல்லை பொண்டாட்டியையோ சாகடித்துக் கொஞ்சம் சென்டிமெண்ட், இடைஇடையே பஞ்சு டயலாக் என தங்களின் வழமையான உத்தியைப் பயன்படுத்தி படம் எடுங்கள். அது போன்ற படங்களில் நீங்கள் விஜய்யை வைத்து எடுத்தாலும் சரி, அஜித் ,சூர்யா இல்லை யாரை வேண்டும் என்றாலும் வைத்து எடுத்து பணம் சம்பாதித்து சமூகத்தை குட்டிச் சுவராக மாற்றுங்கள். ஆனால் தயவு செய்து இப்படி சமூகப் பிரச்சினை பற்றி படம் எடுக்கின்றேன் என்று சொல்லி இருப்பவனை எல்லாம் தேவையில்லாமல் பதற்றப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம்.

பிஜேபிக்கு எதிராக போராடுற புரட்சி பாய்ஸ் எல்லாம் கொஞ்சம் இந்த மாதிரி மொக்கைப் படம் எடுக்கிறவன், நடிக்கிறவன் வீட்டு முன்னாடியும் போராடுனா நல்லா இருக்கும். ஏன் என்றால் காவி பயங்கரவாதத்தை ஒழிப்பது போல நாம் கதைப் பயங்கரவாதத்தையும் ஒழிக்க வேண்டும். இரண்டுமே மக்களின் சிந்தனைக்கு எதிரானது.