தமிழ்த் திரைப்படங்கள் குறித்த ஒரு கட்டுரை எழுதும் நோக்கத்தில், தகவல்களைச் சேகரித்துக் கொண்டு இருக்கின்றேன். நண்பர் தோழமை பதிப்பகம் பூபதி, அலுவலகத்துக்கு வந்தார். அவருடன், திரைப்பட மக்கள் தொடர்பாளர் என். கணேஷ்குமார் வந்து இருந்தார். திரைப்படங்கள் குறித்து உரையாடிக் கொண்டு இருந்தோம். அப்போது நாங்கள் பரிமாறிக்கொண்ட தகவல்கள்:

தமிழ்த் திரைப்பட வரலாறு குறித்து எண்ணற்றோர் நூல்களை எழுதி உள்ளனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கது, ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் எழுதிய ‘தமிழ்த் திரைப்பட வரலாறு’ என்ற நூல்தான். தமிழ் சினிமா குறித்த ஒட்டுமொத்தத் தகவல் திரட்டாகத் திகழ்கிறது. இந்த நூலை வெளியிடுவதற்கு, தமிழக அரசு ஐந்து இலட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தது.

அறந்தை நாராயணன் அவர்கள் எழுதிய ‘சினிமா வரலாறு’ என்ற புத்தகத்தை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டு உள்ளது.

ராண்டார்கை அவர்கள், இந்து ஆங்கில நாளிதழில் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். அவற்றைத் தொகுத்து பல நூல்களையும் வெளியிட்டு உள்ளார்.

பிரபல வரலாற்று ஆய்வாளர் தியோடர் பாஸ்கரன், பல நூல்களை எழுதி உள்ளார்.

தினத்தந்தி நாளிதழ் வெளியிட்ட வரலாற்றுச் சுவடுகள் தொடரில், சண்முகநாதன் அவர்கள் தமிழ்த் திரைப்பட வரலாறு குறித்து, பேசும்படம் இதழ் வந்த காலத்தில் இருந்து நிறையச் செய்திகளை எழுதினார். பேசும்படம் இதழில் பணி ஆற்றிய ஜெ.வி. என்ற புகைப்படக் கலைஞர், அந்த இதழில் வெளிவந்த படங்கள் அனைத்தையும் தொகுத்துத் தம்மிடம் வைத்து உள்ளார்.

சினிமா எக்ஸ்பிரஸ் ராமமூர்த்தி அனுபவம் வாய்ந்தவர். தமிழ் சினிமா குறித்து, பல நூல்களை எழுதி உள்ளார். தற்போது, ஜெயா தொலைக்காட்சியில், ‘தேன் கிண்ணம்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டு இருக்கின்றார்.

சிவன் என்பவர், சினிமா வரலாறு என்று ஒரு நூலை எழுதினார். கற்பகம் புத்தகாலயம், கவிதா பதிப்பகம் வெளியீடுகளாக வெளியிட்டு இருக்கின்றது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள், நான் ஏன் பிறந்தேன்? என்ற தலைப்பில் தமது வாழ்க்கை வரலாறை எழுதினார். அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அவர்கள், எம்.ஜி.ஆர். முதல்வரானபோது, ராணி வார இதழில், ‘என் தம்பி எம்.ஜி.ஆர்.’ என்ற தொடரை எழுதினார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறை, பேராசிரியர் நாராயணசாமி எழுதி, ஒரு புத்தகமாக வெளிவந்து உள்ளது. தாய் வார இதழில், சிவாஜிகணேசனைப் பற்றி, பேராசிரியர் ராமு என்பவர் ஒரு தொடர் எழுதினார்.

சந்தமாமா பப்ளிகேசன்ஸ் சார்பில், ‘பொம்மை’ என்ற சினிமா இதழ் நீண்ட காலம் வெளிவந்தது. அதில் பணிபுரிந்த வீரபத்திரன் என்பவர் பல நூல்களை எழுதி உள்ளார். சிவாஜியின் நெருங்கிய நண்பர். அதே இதழில் பணிபுரிந்த வேம்பட்டு கிருஷ்ணன், தமிழ் சினிமா குறித்து நிறைய எழுதி உள்ளார். சினிமா எக்ஸ்பிரஸ் இதழில், தமிழகத்தில் உள்ள திரை அரங்குகள் குறித்த தகவல்களைத் தொகுத்து ஒருவர் எழுதினார்.

எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இரு துருவங்களாகத் தமிழ்த் திரையில் கோலோச்சிக் கொண்டு இருந்த காலத்தில், எம்.ஜி.ஆருக்காக திரை உலகம் என்ற இதழை துரைராஜ் என்பவரும், மதி ஒளி என்ற ஏட்டை சண்முகம் என்பவரும் நடத்தி வந்தனர்.

ஜூனியர் விகடன் செய்தியாளர் திருவாரூர் குணா, சிவாஜி முதல் சிவாஜி வரை என்ற தொடரை, ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படம் வெளியாகும்போது எழுதினார்.

ஏ.வி.எம். மக்கள் தொடர்பாளர், பெரு. துளசி பழனிவேல், சினிமா கதை விவாதங்களில் கலந்து கொள்பவர். தமிழ் சினிமா குறித்து, பல நூல்களை எழுதி உள்ளார்.

நடிகர் சோ அவர்கள், தமது திரைப்பட அனுபவங்களை, துக்ளக் வார இதழில் எழுதி உள்ளார்.

இயக்குநர் சித்ரா இலட்சுமணன், சினிமா வரலாறு குறித்து ஒரு நூலை எழுதி உள்ளார். தமிழ்த் திரைப்பட இசை அமைப்பாளர்களைப் பற்றிய தகவல்கள், படங்களைத் தொகுத்து, வாமனன் என்பவர் இரண்டு தொகுதிகளாக ஒரு நூலை எழுதி உள்ளார்.

மக்கள் தொடர்பாளர் சுரா என்பவர், மலையாளத்தில் இருந்து வைக்கம் பசீர் அவர்களுடைய நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதி உள்ளார். உலகப் புகழ் பெற்ற ஓவியர் வான்கா அவர்களைப் பற்றி, தமிழில் முதலில் எழுதியவர் அவரே. தமிழ்த் திரைப்படங்கள் குறித்து நிறைய எழுதி உள்ளார்.

இயக்குநர் மகேந்திரன், ‘சினிமாவும், நானும்’ என்று புத்தகம் எழுதி உள்ளார். விடுதலைப்புலிகளின் அழைப்பின்பேரில், தமிழ் ஈழத்துக்குச் சென்று திரைப்படப் பயிற்சி அளித்தபோது, ‘நடிப்பு என்பது..., திரைக்கதை என்பது...’ என இரண்டு நூல்களை எழுதி உள்ளார். எம்.ஜி.ஆரைப் பற்றியும் ஒரு நூல் எழுதி உள்ளார்.

‘வாலி 1000’ என்ற தலைப்பில், அவரது ஆயிரம் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டு உள்ளனர். ஏ.வி.எம். அவர்களைப் பற்றி, இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், எழுத்தாளர் ராணி மைந்தன் உள்ளிட்ட பலர் எழுதி உள்ளனர். சக்திவேல் என்ற செய்தியாளர் எழுதிய பல நூல்களை, நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.

‘உலக சினிமா’ என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன் ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.

திரைப்பட புகைப்படக் கலைஞர் ஸ்டில்ஸ் ரவி, தாம் எடுத்த படங்கள் குறித்து, ஆனந்த விகடனில், ஒரு தொடர் எழுதினார்.

குமுதம் வார இதழில் பணிபுரிந்து வந்த மேஜர் தாசன், ஒரு புத்தகம் எழுதி உள்ளார். நிறையப் படங்கள் வைத்து உள்ளார். ஜெ. பிஸ்மி என்ற எழுத்தாளர், ‘சினிமாவில் சேருவது எப்படி?’ என்று, சினிமா எக்ஸ்பிரஸ் வார இதழில் ஒரு தொடர் எழுதினார்.

குமுதம், ராணி போன்ற பல இதழ்களில் பணி ஆற்றிய சபீதா ஜோசப், ராணி வார இதழில் விஜயகாந்த், சிவகுமார் வாழ்க்கை வரலாறு தொடர்களை எழுதினார். மறைந்த எம்.பி.மணி என்பவர், தினமலர் வார இதழில் நிறைய தொடர்கள் எழுதினார்.

‘இயக்குநர்கள் கே. சங்கர் முதல் ஷங்கர் வரை’ என்ற ஒரு நூலை, தமிழ்மகன் என்பவர் ஒரு தொடராக எழுதி உள்ளார். தினமணி, குமுதம், தினமணி கதிர், வண்ணத்திரை, குங்குமம் போன்ற பல ஏடுகளில் நிறைய கட்டுரைகள் எழுதி உள்ளார்.

சிவகங்கை குமரன்தாஸ், தமிழ்த் திரையின் நிழல் அரசியலும், நிஜ அரசியலும் என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.

தினமலர் வார இதழில், எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் இராமகிருஷ்ணன், இதயக்கனி விஜயன் ஆகியோர் எழுதினர். டி.எஸ்.ஆர். சுபாஷ் (மறைந்த பத்திரிகையாளர் ரவீந்திரதாஸ் மகன்) பாக்யா வார இதழில், பல ஆண்டுகளாக எழுதி வருகிறார்.

பல பதிப்பகங்கள், சினிமா குறித்த புத்தகங்களை வெளியிட்டு உள்ளனர்.

வாழ்க்கை வரலாறு நூல்கள் சில:

ராஜபாட்டை - நடிகர் சிவகுமார் (அல்லயன்ஸ்)

பால் நிலா பாதை - இளையராஜா (அரும்பு மற்றும் குமுதம் வெளியீடு)

இவன்தான் பாலா - பாலா (விகடன் பிரசுரம்)

டூரிங் டாக்கீஸ் - நடிகர் சேரன் (விகடன் பிரசுரம்)

சுட்டாச்சு சுட்டாச்சு - சுதாங்கன் (தினமணி கதிர் தொடர்)

எம். ஆர். ராதா வாழ்வியல் சிந்தனைகள் - விந்தன் (தோழமை பதிப்பகம்)

தமிழ் சினிமா வரலாறு - இராஜேந்திரன் (செம்புலம் வெளியீடு)

கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களைப் பற்றி, தமிழ் அறிஞர்கள் எழுதிய கருத்துகளை எல்லாம் தொகுத்து, ‘கலைவாணர்’ என்ற தலைப்பிலும், ஹாலிவுட்டின் சிறந்த படங்கள் குறித்த விமர்சனங்களைத் தொகுத்து, குருதியில் படிந்த மானுடம் என்ற புத்தகத்தையும், தோழமை வெளியிட்டு உள்ளது.