உயர்நீதிமன்றத்தில் தமிழ் - கருத்தரங்கம்

மேற்சொன்ன தலைப்பில் 14.8.2014 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் திரு.சுந்தரேஷ் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

வெற்றி விழாவில் நிறைவேற்றப்பட்ட‌ தீர்மானங்கள்:

1. கீழமை நீதிமன்றங்களில் தமிழில் தீர்ப்பளிக்கக்கோரி போராடிய வழக்குரைஞர்கள் மற்றும் இக்கோரிக்கைக்கு ஆதரவளித்த நீதியரசர்கள், அரசியல் கட்சிகள், தமிழ் அறிஞர்கள், அமைப்புகளுக்கு இக்கூட்டம் நன்றியினையும், பாராட்டினையும் தெரிவிக்கின்றது.

2. 2002லிருந்து உயர்நீதிமன்றத்தில் தமிழ் கொண்டுவருவதற்கு முயன்றும், 2010இல் இந்திய நீதிபதிகள், முதல்வர்கள் மாநாட்டில் உச்சநீதிமன்றத்தை வற்புறுத்தியும் 2014இல் இந்தியப் பிரதமரை நேரில் சந்தித்தும், உயர்நீதிமன்றத்தில் தமிழைக் கொண்டுவர போராடிவரும் தமிழக அரசிற்கு மகிழ்ச்சியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

3. நீதியரசர் திரு. ராமசுப்ரமணியம், நீதியரசர் திருமதி வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வின் தீர்ப்பின்படி உயர்நீதிமன்றப் பதிவாளர் கீழமை நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பி மேற்கண்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்த கோருகிறோம்.

4. கீழமை நீதிமன்றங்களிலும், உயர்நீதிமன்றத்திலும் தமிழைக் கொண்டு வர உள்கட்டமைப்பு வசதியைப் பெருக்குவதற்காக தலா 100 கோடி என 200 கோடியை ஒதுக்கும்படி தமிழக அரசையும், மத்திய அரசையும் கோருகிறோம்.

5. மத்திய அரசிற்கு மேலும் அழுத்தம் கொடுத்து உயர்நீதிமன்றத்தில் தமிழ் சட்ட வரைவில் குடியரசுத் தலைவரின் ஒப்பம் பெற்றுத் தரும்படி தமிழக அரசைக் கோருகிறோம்.

6. உயர்நீதி மன்ற இருவர் ஆயத்தீர்ப்பின்படி 300 மொழி பெயர்ப்பாளர்களையும் கீழமை நீதிமன்றத்திற்கு தமிழ் தட்டச்சு உதவியாளர்கள் 500 பேரையும் தமிழக அரசு பணியாளர்களாக நியமிக்கக் கோருகிறோம்.

7. தமிழில் எழுதப்பட்ட, மொழிபெயர்க்கப்பட்ட நூற்றுக்கும் மேலான‌ சட்ட நூல்கள் மற்றும் சட்டங்களை உடனே மறுபதிப்பு செய்யும்படி இக்கூட்டம் கோரிக்கை வைக்கிறது.

8. சட்ட ஆட்சி மொழி ஆணையம் அமைத்து அதன் மூலம் சட்டச்சொற்களைத் தரப்படுத்தக் கோருகிறோம்.

9. சட்ட ஏடுகள் நடத்த அரசு மானியம் வழங்க தமிழக மற்றும் மத்திய அரசுகளைக் கோருகிறோம்.

10. அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் தமிழ் வழிப் பாடத்திட்டத்தை கொண்டுவர அரசாணை வெளியிட தமிழக அரசைக் கோருகிறோம்.

11. பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் அடிப்படை சட்டங்களைப் பாடமாக தமிழில் கொண்டுவரக் கோருகிறோம்.

12. சட்டப் புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்க எழுத்தாளர் குழு அமைக்க தமிழக மற்றும் மத்திய அரசுகளைக் கோருகிறோம்.

13. சட்டத்தமிழ் மென்பொருள் உருவாக்கக் கணினிப் பொறியாளர்களை நியமிக்க தமிழக அரசைக் கோருகிறோம்.

14. சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை, பட்டய மொழிபெயப்ப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது, தற்பொழுது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க அரசை கோருகிறோம்.

சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சங்கம்
உயர்நீதிமன்றத்தில் தமிழ் - போராட்டக் குழு
தொடர்புக்கு வழக்குரைஞர் பாரி, கைப்பேசி 9444117722