மரபணு மாற்றம் அல்லது திணிப்பு என்பது நவீன(?) உயிரித் தொழில்நுட்பத்தின் மூலம் இயற்கையில் நடக்கவியலாத, இயற்கை நடந்திடக் கூடாது என்பதற்காக உள்ள தடைகளை உடைத்து வேறுவேறு வகை உயிரினங்களின் மரபணு மூலக்கூறுகளைத் திணித்து கலப்படம் செய்தவதாகும்.

மரபணுக்களே ஓர் உயிரின் மூல ஆதாரம். ஒவ்வொரு உயிரினமும் அதற்கென தனித்துவம் கொண்ட மரபணுக்கள் தொகுப்பைக் கொண்டி ருக்கும். இத்தனித்துவம் சிதைக்கப்படக் கூடாது என்பது இயற்கையின் விதி. வேறு வேறு உயிரினங்களின் மரபணுக் கலப்பு நடந்தால் பூமியில் குழப்பங்கள் தான் குடியிருக்கும். அத்தகைய நிலைமை ஏற்படாமல் இருக்கவே, நிறைய தடைகளை இயற்கை உருவாக்கியுள்ளது. ஆனால் நம் அறிவுத்திறத்தால் (?) இத்தடைகள் தகர்த்து மரபணுக் கலப்படம் செய்யப்படுகிறது.

ஓர் உயிரினம் என்பது ஜடமான இயந்திரம் போன்றது அல்ல. தன் இனத்தைப் பெருக்கிக் கொள்ளும் சக்தியுள்ளது. தான் வாழும் சூழலுடன் தொடர்ந்து உறவாடிக்கொண்டு, சூழ்நிலைக்குத் தக்கபடி தன்னை மாற்றிக் கொள்ளும் சக்தி படைத்தது. ஆகவே இங்கு உயிரித் தொழில்நுட்பம் உயிருள்ள தொழில்நுட்பமாகவே உருப்பெறுகிறது. வேறு எத்தொழில்நுட்பமும் உயிர் பெறும் தொழில் நுட்பமல்ல.

 மனிதர்களின் கட்டுப்பாடின்றி தம்மைப் பெருக்கிக் கொள்ளும் திறன் கொண்டவைகளின் மரபணுக்கள் மாற்றியமைக்கப்படுவதால் என்ன நடக்கும் என்பது இன்னமும் முழுமையாக ஆராயப்படவில்லை. தனக்குள் ஒரு வகையான சமநிலையை வைத்துள்ள இயற்கைக்கு இவற்றால் என்னென்ன தாக்கங்கள் ஏற்படும் என்பது குறித்தும் முழுமையான ஆய்வுகள் இல்லை. மண்ணில், மனிதரிடம் ஏற்படும் தாக்கமும் முழுமையாக அறியப்படவில்லை என்பதாலும் உயிரினத்தின் அடிப்படை மூல ஆதாரத்தில் கை வைப்பதால் என்னென்ன நடக்கும் என்பது தெரியாததாலும் உலகமெங்கும் எதிர்ப்பு உள்ளது.

உயர் விளைச்சல் இரக விதைகள் வணிக நோக்கில் உருவாக்கப்பட்டிருப்பினும், மரபணுக்களைச் சிதைத்து, வெட்டி, ஒட்டி செய்யப்பட்டவைகளல்ல, காப்புரிமைச் சட்ட வரம்பிற்குள்ளும் இல்லாதவை. ஒரே மாதிரியான உயர் விளைச்சல் இரகத்தை எத்தனை நிறுவனங்களும் தயாரிக்கலாம் நிலை பெறும் விதை வணிக நிறுவனங்களின் நோக்கங்களுக்கு ஏற்றதாக இல்லை. உலகில் தங்களுடைய விதைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற வெறியை நிறைவேற்றிக் கொள்ள இயற்கையின் விதிகளைத் தகர்த்து, மரபணு மாற்றங்கள் திணிக்கப்பட்ட விதைகள் உருவாயின. விதைகள் காப்புரிமை செய்யப்பட்டு தனிச் சொத்துக்களாயின.

மரபணுக்கள் திணிப்பு விதைகளுக்கு ஆய்வுகள் போதுமான அளவில் இல்லாமலேயே அனுமதி பெறுவதற்கு ஏற்ற வகையில் தங்களின் அரசியல், வணிகச் செல்வாக்கால் ஆய்வுகள் அமைத்துக் கொண்டு அவற்றையும்கூட முழுமையாக செய்யாமல் அரைகுறையான ஆய்வு அறிக்கை கொடுத்து அனுமதி பெற்றுக் கொள்கின்றன.

இன்று இந்தியாவிலும்,தமிழகத்தில் பி.ட்டி பருத்தியின் பரப்பு மொத்த பரப்பில் சுமார் 85 சதமளவிற்கு உயர்ந்தாலும் பி.ட்டி பருத்தி திணிக்கப்பட்ட பின்பும் பருத்தியில் தெளிக்கப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் அளவு மட்டும் குறையவேயில்லை என்கிறது தமிழக வேளாண்துறை புள்ளி விவரம். தமிழகம் மட்டுமல்ல இந்திய அளவிலும் இதுதான் நிலை. பி.ட்டி. பருத்தி வந்த பின் இந்தியாவில் தற்கொலை மிகுந்துவிட்டது. நடந்த தற்கொலையில் மிகப் பெரும்பான்மையானவை பி.ட்டி. இரகப் பருத்தி விளைவித்ததால் இன்னொரு பக்கம் உலகில் இங்கும் அங்குமாக மரபணு மாற்றுப் பயிர்களில் நடந்த சில சுதந்திரமான ஆய்வுகள் மரபணு மாற்றுப் பயிர்கள், விளைபொருட்கள் ஆபத்தானவை என்பதை உலகறியச் செய்தன. (மிக அண்மையில் வந்த ஆய்வு முடிவு, மாற்றி வைக்கப்பட்ட நஞ்சு உருவாக்கும் மரபணு கருவுற்றத் தாயின் கருப்பையில் கண்டறியப்பட்டுள்ளது என்பதாகும்.)

இப்படிப்பட்ட சூழலில்தான் நம் நாட்டில் Bt. கத்தரியை அனுமதிக்கக் கேட்டது மான்சாண்டோமகிஹோ. விவசாயிகள் மற்றும் மக்களின் உணவின் மீது ஒட்டுமொத்தமாக ஆதிக்கம் செலுத்தப்படும் என்பதை உணர்ந்த இந்திய மக்கள் இதனை எதிர்த்தனர். 13 மாநிலங்கள் தாமாகவே தடை விதித்தன.

நாடு தழுவிய அளவில் கருத்துக்கேட்பு நடத்திப் பெற்ற விவரங்களின் அடிப்படையில் மைய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2010 பிப்.09ல் பி.ட்டி.கத்தரிக்கு விதித்த தடை உத்தரவில் முக்கிய காரணங்களாகத் தெரிவிக்கப்பட்டவை:

எல்லா மாநிலங்களிடமும் கருத்து கேட்கப்பட்டது. அவை பதிலில் தங்களது அச்சத்தைத் தெரிவித்துள்ளன. உயர்ந்தபட்ச எச்சரிக்கை தேவை என்கின்றன. 13 மாநிலங்கள் தடைசெய்துள்ளன.(மாநிலங்கள் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கவும், ஒரு நிலைப்பாடு எடுக்கவும் இடமிருந்தது).

தற்சமயம் தனியார் கம்பெனிகள் அதிகப்படியான முன்னுரிமை கொடுக்குமளவுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும் நிலையோ, விளைச்சல் குறைந்துள்ள நிலையோ, விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற நிலையோ நாட்டில் இல்லை. பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு குறையும் என்கிற வாதம் தவிர பிற கருத்தில் கொள்ளத்தக்கதல்ல. Bt.நுட்ப வழி ஒன்றுதான் பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைக்கும் வழியல்ல. பூச்சிக்கொல்லிகள் இல்லா பூச்சிக் கட்டுப்பாட்டு முறை பூச்சிக்கொல்லிகளை முற்றிலும் நீக்குகிறது. Bt. நுட்பமோ பூச்சிக்கொல்லி பயன்பாட்டை குறைக்க மட்டுமே.

Bt.கத்தரியை உருவாக்கியவர்களே அதன் தாக்கம், உயிரிப் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளை நடத்தியது தார்மீக சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

 மான்சாண்டோ நாட்டின் உணவு உற்பத்தியை கட்டுப்படுத்துவது என்பது தேசத்தின் இறையாண்மையை குறித்த ஒன்றாகும்.

Bt.பருத்தியின் அனுபவங்களை, குறிப்பாக பூச்சிகள் எதிர்ப்பு சக்தி பெறுவது குறித்தும் பரிசீலனை செய்ய வேண்டும்.

பெரும்பாலான நாடுகள் மரபணு மாற்றுப் பயிர்களுக்குள் செல்லவில்லை. அமெரிக்காவில் பரவலாக இருக்கிறது. அதற்காக அமெரிக்காவைப் பின்பற்ற வேண்டும் என்ற பெருங்கட்டாயம் நமக்கு இல்லை.

உச்ச நீதிமன்றம் முந்தைய காலத்தில் ‘பாதுகாப்பு எச்சரிக்கையுணர்வு கொள்கையின்” (Precatuionary Principle) அடிப்படையில் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உலகின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட முதல் காய்கறியான Bt.கத்தரியை அனுமதித்தாக வேண்டிய அத்தியாவசியக் கட்டாயம் எதுவும் எழவில்லை.

மரபணு மாற்று தொழில் நுட்ப அங்கீகாரக் குழுவின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளும் அறிவியல் அடிப்படையிலான நம்பகத்தன்மையும், சார்பு நிலையில்லாத, நடுநிலையான, சுதந்திரமான ஆய்வுகள் நடத்துவதற்காகவே தேசிய உயிரித் தொழில் நுட்ப ஒழுங்காற்று ஆணையம் ழிஙிஸிகி தேவை.

மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் எல்லா மரபணு மாற்றுப் பயிர்களுக்கும் பொருத்தமானவை. மேலும் இன்றும் பொருந்தக் கூடியவை.

பி.ட்டி கத்திரி தடை செய்யப்படும் அதே தருணத்தில் இந்தியாவில் 73 வகையான உணவுப்பயிர்களை மரபணு மாற்றம் செய்யும் வேலை தொடங்கிவிட்டது. இவைகளுக்கும் Bt.கத்தரி நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அனுமதி பெறுவது மிக எளிமையான முறையாக்கப்பட வேண்டியும் உயிரித் தொழில் நுட்ப ஒழுங்காற்று ஆணையம் (Biotechnology Regulatory Authority of India- BRAI) என்ற அமைப்பை உருவாக்கும் முயற்சி நடக்கிறது.

இத்தகு ஆணையம் தேவை என்று முதலில் பரிந்துரைத்தது எம்.எஸ்.சுவாமிநாதன். தன் தலைமையில் அமைக்கப்பட்ட உயிரித் தொழில்நுட்பங்கள் குறித்த பணிக்குழுவின் பரிந்துரையில்‘சுதந்திரமான கட்டுப்பாட்டுக் குழு தேவை’ எனக் கூறி தேசிய உயிரித் தொழில் நுட்ப ஒழுங்காற்று ஆணையம் (NBRA) அமைக்கலாம் என்று பரிந்துரைத்தது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு, விவசாயக் குழுமங்களின் நலன், விவசாயச் சூழலின் இயற்கை நிலை, நிலைத்த பொருளாதார நிலை, நுகர்வோரின் உணவு மற்றும் உடல்நலன், உள்நாட்டு மற்றும் வெளிநாடு வணிகத்தை பாதுகாப்பது, நாட்டின் உயிரின வளமைப் பாதுகாப்பு ஆகியவற்றை அடிநாதமாகக் கொண்டு அக்குழு தனது பரிந்துரைகளை 2004ல் சமர்ப்பித்தது. வேளாண்மை அமைச்சகம் இக்குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதுடன், ‘தேவைப்படும் குறிக்கோளை அடைய வேறு எந்த வழிமுறைகளும் இல்லாமல் போகும் என்ற நிலை வரும்போது மட்டுமே மரபணு மாற்று உயிரினங்களுக்குச் செல்ல வேண்டும்’, என்றும் பரிந்துரைத்தது.

வேளாண் அமைச்சகத்திடம் ஆணையம் அமைக்க குழு பரிந்துரைத்தாலும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில் நுட்பத்துறை 2008ல் ‘தேசிய உயிரித்தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணையம்‘ அமைக்க முடிவு செய்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் உயிரித் தொழில் நுட்பத்தைக் குறிப்பாக மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்திற்கு வக்காலத்து வாங்கி, மான்சான்டோ போன்ற நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்யும் அமைச்சகம் தன் கைகளைக் கட்டிப் போடக் கூடிய எந்த விதிகளையும் உருவாக்குமா?

மரபணு மாற்று உயிரினங்களை கட்டுப்படுத்தும், முறைப்படுத்தும் எந்த அமைப்பாயினும் அதன் தலையாய கடமை மக்களின் ஆரோக்கியம் மற்றும் இயற்கை சூழலை நவீன உயிர்த் தொழில்நுட்பத்தின் ஆபத்துக்களில் இருந்து காப்பதே ஆகும். அதாவது அது உயிரிப் பாதுகாப்புக்கான சட்டமாக இருக்க வேண்டும். ஆனால் உருவாக்கப்பட்ட சட்ட வரைவு அதற்கு நேர்மாறாக இருந்தது, இருக்கிறது. கடும் விமர்சனங்கள் காரணமாக 2009ல் புதிய வரைவு உருவாக்கப்பட்டு இரகசிய ஆவணமாக வைக்கப்பட்டிருந்த வரைவு 2010 மார்ச்சில் கசிந்து வெளியானது. அது முந்தையதை விட மோசமானதாக இருந்தது. உதாரணமாக இதில் இருந்த பிரிவு 63 மரபணு மாற்றுத் தொழில் நுட்பத்தை எதிர்ப்பவர்களுக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்’ என்றது. கம்பெனிகளின் நலன்களுக்காக உருவாக்கும் எதையும் எதிர்ப்பதே சட்டவிரோதம் என்ற சட்டத்தை உருவாக்குவதே அதிகார மட்டத்தில் உள்ளோரின் நோக்கமாக உள்ளது, இன்றளவிலும்..

2009ன் வரைவில் மாற்றங்களை அதிகம் செய்யாமல் 2011 ஆகஸ்டு 17ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத்தால் இது தாக்கலாகவில்லை. தற்போது நடக்கும் குளிர்காலத் தொடரின் முதல் நாளன்றே தாக்கல் செய்ய முடிவு செய்தது மைய அரசு. ஆயினும், அன்றும் தாக்கல் செய்ய இயலவில்லை. நாடாளுமன்றம் ஒழுங்காக நடக்காமல் இருப்பதால் இப்படியரு நன்மை!!

வரைவின் முதல் அத்தியாயம் 2வது பாராவில் ‘பொது நலனைக் கருதி மத்திய அரசே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்கிறது இப்பிரிவு. 13 மாநிலங்கள் Bt.கத்தரியை தடை செய்தது, 4 மாநிலங்கள் வயல்வெளி ஆய்வுகளுக்குத் தடை விதித்தது ஆகியவற்றுக்கு மாறாக இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களுக்கு விவசாயம், மக்களின் ஆரோக்கியம் ஆகியவற்றில் அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மறுக்கிறது. ஏனெனில் 13 மாநிலங்களின் பி.ட்டி. கத்திரி தடை, மரபணு மாற்றுப் பயிர் வயல்வெளி ஆய்வுகளுக்கு 4 மாநிலங்கள் விதித்துள்ள தடை ஆகியவற்றை மனதில் நிறுத்தியே இப்பிரிவு. அதாவது மறைமுகமாக மாநில அரசுகளின் உரிமையைப் பிடுங்குகிறது. மாநில அளவில் அமைக்கப்படும் மாநில உயிரித் தொழில் நுட்ப ஆலோசனைக் குழுவைக்கூட மாநிலத்தின் வேளாண்மை அல்லது சுகாதாரத்துறை தலைமையில் இருக்க அனுமதிக்கவில்லை..

 ‘உயிரிப்பாதுகாப்பு சோதனைகள் கம்பெனிகளின் வணிகம் சார்ந்த இரகசியம் அல்ல. உடனே வெளியிட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவு அமைய இருக்கும் நிலையில், ஒழுங்காற்று ஆணையம் இது போன்ற விவரங்களை வெளியிட மறுக்க பிரிவு எண் 28 புகுத்தப்பட்டுள்ளது.

கம்பெனிகளின் வணிக நலன்கள் காக்கப்பட ஆணையத்தின் உறுப்பினர்கள் இரகசியம் காப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டுமாம் (பிரிவு9ல்2). வணிக நோக்கில் இயங்கும் கம்பெனிகள் தரும் வணிகம் சாராத ஆய்வுகளை இது பரிசீலிக்கிறது. இதற்கெதற்கு இரகசியம் காக்கும் உறுதிமொழி?

தற்போதுள்ள 31 பேர் கொண்ட மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக் குழுவே சரியானதாக இல்லை என்று விமர்சிக்கப்படும்போது 3 பேரைக் கொண்ட அதிகாரம் குவிக்கப்பட்ட அதனினும் மோசமான தலைமைக் குழுவே ஆணையம் என்கிறது சட்ட முன்வரைவு.

 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கண்டனத்திற்குப் பிறகு சேர்க்கப்பட்ட சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழு (பிரிவு 26) அமைக்கப்பட்டாலும், அது பல் இல்லாத கிழட்டு மாடு போலவே உள்ளது. ஆணையம் பரிந்துரைக்காமல் இந்த மதிப்பீட்டுக் குழு சுயமாகவே மதிப்பீடு செய்ய முடியாது. மேலும் இது அளிக்கும் அறிக்கை மீது, ‘ஆணையத்தின் குழு உறுப்பினர்களிடம் கருத்து முரண்பாடு ஏற்பட்டால் சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக் குழுவின் அறிக்கையை புறந்தள்ளிவிட்டு முடிவு எடுக்கலாம்,’ என்கிறது வரைவு.                            

தலைமைக் குழுவில் 3 நிரந்தர உறுப்பினர்கள். ஏதேனும், ஒரிரு இடம் காலியாகி புது உறுப்பினர் நியமனம் செய்யப்படாவிட்டாலும் இக்குழு எடுக்கும் முடிவுகள் ஏற்கத்தக்கவையாம்.

அத்தியாயம் 10பிரிவு 42ல் அரசு அங்கீகாரம் இல்லாத ஆய்வுக் கூடங்களிலும் உயிரி பாதுகாப்பு பரிசோதனைகளைச் செய்ய அனுமதி அளிக்கிறது.

ஏற்பட்ட தவறுகள், பாதிப்பு எத்தகையதாக இருந்தாலும் “எனது கவனத்திற்கு வராமல் நடந்தது” என்று தெரிவித்துவிட்டால், அவரை எவ்வித நடவடிக்கையும் இன்றி விடுவிக்கலாம் என்கிறது வரைவுச் சட்டத்தின் விதிகள் 67,68,69.”    

பாதிப்புக்களுக்கு எதிராக இந்தியாவில் உள்ள எந்த வகை நீதி மன்றத்திலும் வழக்கு பதிய முடியாது. இழப்பீட்டைப் பெறவோ, பாதிப்பை ஏற்படுத்துபவருக்கு உரிய தண்டனைக்காகவோ சிவில், கிரிமினல் நீதிமன்றங்களில் வழக்கு பதிவு செய்யும் உரிமை வழங்கப்படவில்லை. இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றமும் மரபணு மாற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சனையில் தண்டணை வழங்க முடியாது. ஆணையமோ, அதன் அலுவலரோ வழக்கு தொடுத்தால் மட்டுமே தண்டனை வழங்க முடியும் என்கிறது பிரிவு 70. ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு எந்த நீதி மன்றமும் தடைவிதிக்க முடியாது (பிரிவு 77). மேலும் இந்த விதியின்படி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் வரையறைக்குள் சிவில் கோர்ட்டுகளும் தலையிட முடியாது.

‘அனுமதிக்காக வந்த கடிதங்களில், அனுமதிக்கப்பட்டது என்று முத்திரையிடும்’ அலுவலகம் போன்றதொரு ஆணையத்தை அமைப்பதற்காக அரசியல் சட்டம் வழங்கிய மாநிலத்தின் உரிமைகள் பலியிடுடப்படுகின்றன. இத்தகு சட்டத்தை பிகார், ம.பி ஆகிய அரசுகள் எதிர்த்துள்ளன. பிகார், மேற்கு வங்கம், ஒரிசா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், கேரளம், கர்நாடகம் ஆகிய 7 மாநிலங்கள் மரபணு மாற்றுப் பயிர்களின் வயல்வெளி ஆய்வுக்கு மறுப்பு தெரிவித்தன சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க உள்ளிட்ட சில கட்சிகள் மாநிலங்களின் உரிமையைப் மத்திய அரசு பறிக்கிறது என எதிர்த்துள்ளன.

கம்பெனிகள் தாங்கள் சாதிக்க விரும்புவதை அரசு மூலம் செய்ய விரும்புகின்றன. அரசோ மக்கள் நலனுக்காக எனக் கூறி அதற்காக சட்டங்கள் இயற்றி காரியம் செய்து தரப் பார்க்கிறது. பெரும்பாலான மக்களோ அரசு மீது நம்பிக்கையற்று இருப்பதுடன் செயலற்றும் இருக்கின்றனர், நம்மால் என்ன செய்துவிட முடியும் என்று, தன் பலம் அறியாத யானை போல.

மக்கள் மீதும், இயற்கை மீதும் அக்கறை கொண்டுள்ள நம்முன்னுள்ள முதல் பணியே யானைக்கு தன் பலமறியச் செய்வதுதான். அது நடக்கா வரை இந்தியாவின் 120 கோடி மக்களும் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களுக்கு அடமானம் வைக்கப்படுவதை தடுக்க இயலாது.

நம்மால் அன்றி வேறு யாரால் முடியும்?

(பூவுலகு ஜூலை 2012 இதழில் வெளியானது)