mihir desaiமக்களின் சனநாயக உரிமைகளுக்காகச்  சமரசமின்றி நேர்மையாகக் களமாடிய மாமனிதர் கே.ஜி.கண்ணபிரான் அவர்கள் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக சமூகக் களத்தில்  கால்பதித்து அவசரகாலநிலை, ஆந்திர நக்சல்பாரி புரட்சிகர விவசாய இயக்கப் பிரச்சனை, ஈழத் தமிழர் பிரச்சனை, வீரப்பன் தேடுதல் வேட்டை, கோவை குண்டுவெடிப்பு,குசராத் படுகொலை, போலி மோதல் சாவுகள்  போன்ற நிகழ்வுகளில் அரசதிகாரத்தால் பாதிப்புற்ற மக்களின் குரலாய் ஓங்கி  ஒலித்து நீதியின் நிலைப்புக்கு உரமூட்டியவர். அவரது நினைவேந்தல் நிகழ்வில் (23.11.2020) மும்பை மூத்த வழக்கறிஞர் மிஹிர் தேசாய் அவர்கள் இந்தியாவில் தடுப்புக் காவல்  பிரச்சனைகள் என்ற தலைப்பில் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்:

வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் அவர்கள் பன்முக ஆளுமை மிக்கவராக இருந்தாலும், தடுப்புக் காவல், சிறப்புக்காவல் போன்றவற்றிற்கு எதிராகத்  தன்னை ஈடுபடுத்திக் கொண்டு  பாதிப்புற்றோரின் நீதிக்காக உதவும் நோக்கில் செயற்பட்டவர் ஆவார். இன்றைய அரசியல் சூழலில் தடுப்புக் காவல் சட்டங்களைத் தேசிய சனநாயகக் கூட்டணி அரசு அதிகமாகப் பயன்படுத்தினாலும் இவற்றைக்  கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு தான் என்பது கண்கூடு. 

இத்தகைய சட்டங்கள் யாவும் குடிமக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுபவைகளாக உள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்க வேண்டிய அரசு சிறப்புச் சட்டங்கள் மூலம் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது.

குறிப்பாக மக்களுக்கான சனநாயக நிறுவனங்களாகக் கருதப்பெறும் தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம், சி.பி.ஐ, லோக் ஆயுக்தா போன்றவற்றின் முக்கியத்துவத்தை இந்த அரசு கடந்த ஆறு ஆண்டுகளாகப் பலவீனப்படுத்தி அவற்றை வெறுமையாக்கிக் கொண்டிருக்கிறது. வெளிப்படைத் தன்மை கொண்ட தேர்தல் நடைமுறை , தகவல்பெறும் உரிமைச் சட்டம் போன்றவை நசுக்கப்படுகின்றன.

மோடியின் தேர்தல் விதிமீறல் வழக்கில் அதற்கு எதிராக ஒருவர் நியாயமாகக் கூறிய கருத்தைக் கூட  பதிவு செய்ய அனுமதிக்காமல்,  அவருடைய வீட்டில் வருமான வரி சோதனை நடத்தி, அதன் மூலம் அவருடைய கருத்தைத் திரும்பப் பெறச் செய்து, அவ்விசாரணையில் இருந்து விலகுவதற்கு அவர் நிர்பந்திக்கப்படுகிறார்.

இதே போன்று இன்னொரு பிரச்சனையில் சி.பி.ஐ இயக்குநர் இரவோடு இரவாக நீக்கப்படுகிறார். நீதிபதிகள் நியமன ஆணையம் ஒன்றை உருவாகி அதன் மூலம் நீதிபதிகளை நியமனம் செய்ய எடுத்த முயற்சியை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

ஊழலைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட லோக் ஆயுக்தாவிற்கு இன்று  வரை பணியாளர்கள் நியமனம் செய்யப்படாமல், செயற்படாத நிலையில் உள்ளது. நிதி மசோதாவிற்குக் கேள்வி நேரம் இல்லை என்று அறிவித்ததன் மூலம்   நாடாளுமன்ற அதிகாரம்  தவறாகப் பயன்படுத்தப்பட்டது.

அலிகார் பல்கலைக்கழகம், ஜாமியா பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற  கல்வி நிறுவனங்கள் மீது  அரச வன்முறை ஏவப்பட்டது.   சட்டவிரோத செயற்பாடுகள் தடுப்புச் சட்டம் (Unlawful Activities Prevention Amendment Bill-ஊபா) தவறாகப் பயன் படுத்தப்படுகிறது.

உதாரணமாக செய்தி  சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் மீதும்,  குடிமைச் சமூக நிறுவனங்கள் மீதும் இச்சட்டம் பாய்கிறது. அவர்களின் சனநாயாக செயற்பாடுகளைத் தடுக்கிறது.

காலனிய இந்தியாவில் 1919 இல் ரௌலட் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி ஒருவரை இரண்டு ஆண்டுகள் வரை விசாரணையின்றி தடுப்புக் காவலில் சிறைப்படுத்த முடியும்.

இதை எதிர்த்து நடந்த போராட்டம் ஜாலியன் வாலாபாக் படுகொலையில் முடிந்தது. இதைக் கண்டித்து அண்ணல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் போன்ற தொடர் போராட்டத்தால் ரௌலட் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

1946 இல் இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையில் தடுப்புக் காவல் சட்டம் வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதம் எழுந்தது. இறுதியில் சட்டப் பிரிவு 22 இன் படி  தடுப்புக்காவல் சட்டம் மூன்று மாதம் வரை நடைமுறையில் இருக்கலாம். அதற்கு மேல் நீட்டிக்க வேண்டுமெனில் நாடாளுமன்றமும், தேர்வுக்கமிட்டியும் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இது தான் இந்தியாவின் முதல் தடுப்ப்புக் காவல் சட்டம்.  1946 முதல் 1967 வரை இச்சட்டம் நடைமுறையில் இருந்தது. அன்றைய காங்கிரஸ் அரசு இதைத் தவறாகப் பயன்படுத்தியதால்  1967 இல் கவிழ்ந்தது.

அடுத்து மிசா (Maintenance of Internal Security Act- உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் -1973) வந்தது. இச்சட்டமும் தவறாகப் பயன்படுத்தப்பட்டதால் அதுவே காங்கிரஸ் வீழ்ச்சிக்குக் காரணமானது.

இதன் பின்னர் 1980 இல் தேசிய பாதுகாப்புச் சட்டம் (National Security Act) நாடாளுமன்ற ஒப்புதலுடன், நிரந்தர சட்டமாக நடைமுறைக்கு வந்தது. இதன்படி ஒருவரை ஓர்ஆண்டு வரை பிணையில் வரமுடியாதபடி தடுப்புக்காவலில் வைக்க முடியும்.

1984 இல் முதன் முதலாகப் பயங்கரவாதிகளை ஒடுக்க பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான (சிறப்பு நீதிமன்றங்கள்) சட்டம் (The Terrorist Affected Areas (Special Courts) Act -1984) கொண்டு வரப்பட்டது. 1985 இல் தடா {Terrorist and Disruptive Activities (Preventive) Act} நாடாளுமன்ற ஒப்புதலுடன் கொண்டு வரப்பட்டது.

இச்சட்டம் குற்றவியல் நடைமுறைச் சட்டங்களுக்கு மாறாக புதிய குற்றவியல் நடைமுறைகளை உள்ளடக்கி இருந்தது. இச்சட்டத்தில் முன்பிணை என்பதற்கு இடமில்லை. குற்றம் சுமத்தப்பட்டவர், குற்றமற்றவர் என்று நீதிமன்றம் முடிவுக்கு வந்தால்  மட்டுமே பிணை வழங்கப்படும்.

வழக்கமாக அறுபது நாட்களில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்படும் ஆனால் தடாவில் ஒரு ஆண்டு வரைக் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யலாம். மேலும் குற்றம் சுமத்தப்பட்டவர் எதற்காக, என்ன காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டார் என்ற விவரம் குற்றம் சாட்டப்பட்டவர்க்கும், அதை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கும் தெரியாது. எனவே ஓர் ஆண்டு வரை சிறையில் வைக்க முடியும். தடாவில் குற்றவாளியின் வாக்குமூலம் சாட்சியமாக எடுத்துக் கொள்ளப்படும்.

சகக் குற்றவாளியின் வாக்குமூலத்தை சாட்சியமாக வைத்துத் தண்டனை வழங்க முடியும். இது குற்றவியல் நடைமுறையில் இல்லை. மேலும்  குற்றம் சுமத்தப்பட்டவர்க்குத் தான் குற்றமற்றவர் என மெய்ப்பிக்கும் பொறுப்பு உள்ளது.

தீர்ப்பு  வழங்கும் முன் சொத்துகளைப் பறிமுதல் செய்ய அதிகாரம் உள்ளது. ஒவ்வொரு மூன்றண்டுகளுக்குப் பின்னரும்  நாடாளுமன்றத்தில் தடா புதுப்பிக்கப் பெறல் வேண்டும் அல்லது எப்போது முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று ஒரு பிரிவு உள்ளது அல்லது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

ஓராண்டு வரைக் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யாமல் இருப்பது, சொத்துகளைப் பறிமுதல் செய்வது,  குற்றமற்றவர் என மெய்ப்பிக்கும் பொறுப்பு ஆகியவற்றை எடுத்துரைத்து தடாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் இதனை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம் தடாவில் சில பகுதிகளை நீக்கி விட்டு தடா தொடர உத்தரவிட்டது.

பொதுவாகக் குற்ற வழக்குகளில் 44% தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் தடா வழக்கில்  1%   தான் தண்டனை வழங்கப்படுகிறது என்பது  இங்கே கவனத்திற் கொள்ளத்தக்கது. 1995-இல் தடா காலாவதியானது.

2000 ம் வரை தடா மாதிரியான சட்டம் இந்தியாவில் இல்லை.  2000 இல் நியூயார்க் நகரில் உலக வர்த்தக மையம் மீது நடந்த  தாக்குதல், இந்திய நாடாளுமன்றம் மீது நடந்த  தாக்குதல் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் “பொடொ”  (Prevention of Terrorism Ordinance-2001) உருவானது.

அதனைத் தொடர்ந்து 2002 இல் அச்சட்டம்  “பொடா” (Prevention of Terrorism Act-2002) என்று மாறியது. மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாததால் மக்களவை, மாநிலங்களவை இரண்டையும் ஒன்றாகக் கூட்டி ஒப்புதல் பெறப்பட்டது. (இதற்கு முன் இரண்டு முறை  1961 & 1978 ஆகிய ஆண்டுகளில் இவ்வாறு இரண்டு அவைகளும் ஒன்றாகக் கூட்டப்பட்டுள்ளது)  மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை “பொடா” புதுப்பிக்கப் பெறல் வேண்டும்.

பொடாவில் காவல்துறை அதிகாரியிடம் அளிக்கப்பெறும் வாக்குமூலம் சாட்சியமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. பொடா வழக்கில் சீராய்வுக் கமிட்டி உள்ளது. இக்கமிட்டி வழக்கில் விசாரணைக்கு எதை எடுப்பது, எடுக்காமல் இருப்பது என்பது பற்றி முடிவு செய்யும்.

தடா மாதிரியே ஓராண்டு வரை பிணை இல்லாமல் சிறையில் வைக்க முடியும். ஓராண்டுக்குப் பின் சாதாரண வழக்குகளில் வழங்கப்பெறும் பிணைக்குரிய நடைமுறைகள் பின்பற்றப்படும்.

மூன்றாண்டுகள் கழித்து “பொடா” புதுப்பிக்கப்படாமல் திரும்பப் பெறப்பட்டது. அதே நேரத்தில் 1967 இல் இருந்தே நடைமுறையில் இருந்த ஊபா (Unlawful Activities Prevention Amendment Bill)  சட்டத்தில் சில மாறுதல்கள் செய்து நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

சட்டவிரோதச்  செயற்பாடுகள், சட்ட விரோதக் கூடுகை ஆகிய இரண்டும் இதில் இணைக்கப்பட்டன. சீராய்வுக் கமிட்டி நீக்கப்பட்டது. ஓர் ஆண்டு வரை பிணை கிடையாது என்ற முறையே தொடர்ந்தது. விசாரணையின்றிக் கைது செய்யலாம். இச்சட்டத்தைப் புதுப்பிக்கத் தேவையில்லை.

ஆனால் ஊபா போன்ற சிறப்புச் சட்டத்தை  இந்த அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. இந்த ஊபா சட்டத்தில் தடா, பொடா ஆகியவற்றின் சட்ட அம்சங்கள் ‘திருத்தங்கள்’ மூலமாக உள்வாங்கப்பட்டுள்ளன.

1975-’76 இல் அவசர காலச் சட்டத்தைத் தனிமனித அரசியல் விருப்பு, வெறுப்புக்காகப் பயன்படுத்தினார்கள். இப்போது ஒரு ஒற்றைக் கருத்தியலை நாடு முழுவதும் சட்ட ரீதியாகவும், கூடுதலாகச் சிறப்புச்  சட்டங்களைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் கொண்டு செல்கிறார்கள். மேலும் கௌரி லங்கேஷ் போன்றோர் மீது தனி மனிதத் தாக்குதல் நடத்துகின்றனர். இவற்றின் மூலமாக அச்சம் மிகுந்த சூழல் உருவாக்கப்படுகிறது.

இது அதிக அளவில் தாக்கத்தையும் அச்சத்தையும்  ஏற்படுத்துகிறது.  இத்தாக்கம் அதிக நாட்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றனர். அடிமட்டத்திலிருந்து வரும் தலைமைக்கு உரிய மரியாதை கொடுக்காமல், புதிய தலைவர்களைத்  தெரிவு செய்து அவர்கள் மூலம் ஒற்றைக் கருத்தியலைப் பரப்புரை செய்கின்றனர்.

இதற்கு விரோதமாகச்  செயற்படும் அனைவர் மீதும் “நகர்ப்புற நக்சல்” என்று முத்திரை குத்துகின்றனர். உதாரணமாக ரொமிலா தாப்பர் வழக்கை நடத்தாமல் தாமதப்படுத்துகின்றனர். பல ஆண்டுகளாக விசாரணையின்றி பலரை சிறையில் அடைத்து வைத்து அச்சத்தை உருவாக்குகின்றனர்.

பயங்கரவாதத்தைத் தடுக்க இந்திய தண்டனைச் சட்டத்தில் அனைத்துப் பிரிவுகளும் உள்ளன. இருப்பினும் தடுப்புக் காவல் அம்சங்களைச்  சிறப்புச் சட்டங்கள் மூலமாகப் பயன்படுத்தி, அரசின்  கொள்கைக்கு எதிர்நிலைப்பாடு கொண்டுள்ளோரை ஒடுக்குவதற்காக நடைமுறைப் படுத்துகின்றனர்.

இந்த நாட்களில் கண்ணபிரான் அவர்களின் தேவை மிக முக்கியமானது ஆகும். எனவே அவரது வழிநடத்தல், கொள்கைகள் ஆகியவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக இத்தகைய ஊபா, சிறப்புச் சட்டங்கள், தேசிய புலனாய்வு முகமை போன்றவற்றை எதிர்கொள்ள முடியும்.

ஆங்கில உரை:மூத்த வழக்கறிஞர் மிகிர் தேசாய்

தமிழாக்கம்: ச.மோகன் & வழக்கறிஞர்  பிரதீப் சாலமன்